Published:Updated:

157-வது திருவிளக்கு பூஜை! - திருவையாறு

‘டெல்டா பகுதியில் விவசாயம் தழைக்கணும்!’வி.ராம்ஜி

157-வது திருவிளக்கு பூஜை! - திருவையாறு

‘டெல்டா பகுதியில் விவசாயம் தழைக்கணும்!’வி.ராம்ஜி

Published:Updated:

''திருவிளக்கின் மகிமை பற்றியும், திருவிளக்கை ஏற்றி வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் பெண்களாகிய உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சொல்லப் போனால், விளக்கின் மேன்மையை ஆண்களுக்குத்தான் விளக்கவேண்டும்'' என்று குறள்நெறிச் செல்வர் புனிதா கணேசன் பேசத் தொடங்கியதுமே ஆரவாரித்து, பலத்த கரகோஷம் எழுப்பினார்கள் பெண்கள். 

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, பிரசித்தி பெற்ற திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில், கடந்த 27.1.15 அன்று விமரிசையாக நடைபெற்றது. சக்திவிகடனின் 157வது விளக்குபூஜை இது.

ஸ்ரீஅறம் வளர்த்த நாயகியின் சந்நிதி பிராகாரத்தில் விளக்கு பூஜை நடந்தது. அரியலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருச்சி முதலான பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக, அம்பாள் சந்நிதியில் இருந்து அம்பாளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கை ஏற்றி, மேளதாளம் முழங்க, பிராகார வலமாக எடுத்து வந்தனர். யோகவன குருக்கள், முத்துக்குமார் குருக்கள், சங்கர குருக்கள், விக்னேஸ்வர குருக்கள் ஆகியோர் திருவிளக்கு பூஜையைச் செய்தனர்.உத்ஸவருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைத்திருக்க, அதற்கு எதிரில் நீண்ட பிராகாரத்தில் விளக் குடன் அமர்ந்து, பூஜையில் ஈடு பட்டனர் வாசகிகள்.

157-வது திருவிளக்கு பூஜை! - திருவையாறு

'குறள்நெறிச் செல்வர்’ புனிதா கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

''விளக்கு பூஜை என்பதும், விளக்கேற்றி வழிபடுவதும் பெண்கள் மட்டுமே செய்யவேண்டிய விஷயம் என்று பெரும்பாலான ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டு பூஜையறையில் பெண்கள் விளக்கேற்றும்போது, கணவன்மார்களும் உடன் இருந்து தம்பதி சமேதராக பூஜை செய்தால், அந்த பூஜைக்குத் தனிப்பெரும் சக்தி கிடைக்கும். குடும்பம் தழைக்கவும், சந்ததி சிறக்கவும், தம்பதியாக இருந்து வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

157-வது திருவிளக்கு பூஜை! - திருவையாறு

தவிர, இப்படிக் கூட்டாகச் சேர்ந்து பெண்கள் விளக்கேற்றி வழிபட்டால், அந்த ஊரே செழிக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? எங்கெல்லாம் இதுபோன்ற விளக்குபூஜைகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் கலந்துகொள்ள முயற்சி செய்யுங் கள். அந்த வாய்ப்பை எப்படியேனும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் பூஜையால் உங்கள் உற்றாரும் சுற்றாரும் மட்டுமல்ல; ஊரும் பயன்பெறும். முக்கியமாக, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்'' என்று புனிதா கணேசன் பேச, அமைதியாகக் கேட்டு உள்வாங்கிக் கொண்டது கூட்டம்.

157-வது திருவிளக்கு பூஜை! - திருவையாறு

முதல்முறை விளக்குபூஜையில் கலந்து கொண்டவர்களை அழைத்து, சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வாசகி மதுரமொழி, ''எத்தனையோ விளக்குபூஜையில் கலந்துகொண்டி ருந்தாலும் இந்த விளக்குபூஜை, மனசுக்கு அமைதியையும் நிறைவையும் கொடுத்திருக்கு. இதை மறக்கவே மாட்டேன்'' என்றார்.

''சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். ஆனால், அந்தக் காலம் மலையேறிவிட்டது. டெல்டா பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டும். முன்னெல்லாம் தஞ்சாவூர் ஜில்லாவில் எங்கு போனாலும், நெல் வாசம் மூக்கைத் துளைக்கும். அந்த நிலை திரும்பவேண்டும். அதுவே என் பிரார்த்தனை!'' என்றார் வாசகி தேன்மொழி. நிறைவாக, ஓதுவாரால் தேவாரம் பாடப்பட்டது கூடுதல் மன நிறைவையும் நிம்மதியையும் தந்தது, வாசகியருக்கு.

அறம் வளர்த்த நாயகியின் அருளால், அனைவர்க்கும் அருள் கிடைக்கட்டும்!

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism