Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

கரம் அல்லது கும்ப ராசியில் பிறந்தவேளை (லக்னம்), நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்) இருக்கும் தறுவாயில், செவ்வாயின் த்ரிம்சாம் சகத்தில் பிறந்தவள் தாஸியாகவும், குழந்தைச் செல்வம் இல்லாதவளாகவும் இருப்பாள். பலருக்கு அடிமையாகவும், மகப்பேறு இல்லாமலும் இருப்பதை சமுதாயம் குறையாகப் பார்க்கும். 

'தாசி’ என்ற சொல் அடிமை, விலைமாது, ஏவலாள் போன்றோரைக் குறிக்கும். பண்டைய நாளில் அடிமைப் பெண்களையும், விலைமாதரையும், கோயில் ஆராதனையில் நடனமாடும் நங்கையரையும் 'தாசி' என்று குறிப்பிட்டார்கள். பண்டைய அரச பரம்பரையில் அரசகுமாரியை மணம் முடித்துக் கொடுக்கும்போது, அவளுக்குப் பணிவிடை செய்து பழக்கப்பட்ட பெண்ணையும் சேர்த்து அளிப்பார்கள். அரச பரம்பரையில் குழந்தைகளை வளர்க்கும் பணியில் தாசிகள் அமர்த்தப் பட்டிருந்தார்கள். தாசியைக் கொடையாகவும் அளித்தனர். அவளைக் கொடையாக அளிக்கும்போது, அவளுடைய கேசத்தைப் பிடித்து அளிக்க வேண்டும் என்ற தகவல் தென்படுகிறது. அடிமையானாலும் அரச போகத்தோடு வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். ஆகவே, தாசி என்றதும் உடலை விலைபேசுபவளாக மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடாது. 'மனைவியானவள், கணவனுக்கான பணிவிடையில் தாசியாக செயல்பட வேண்டும்’ என்ற தகவல் உண்டு (கரணஷுதாசீ). பணிவிடையின் தரத்தை நிர்ணயம் செய்ய, 'தாசிபோல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைச் செல்வக் குறைபாடுகள்

தாசிகளில், தங்களுடைய வேலைக்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணி, மக்கள் பேற்றைத் தவிர்த்தவர்களும் உண்டு. இன்றைக்கும் வேலையில் அமர்ந்த ஆணும் பெண்ணும் தம்பதியான பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்; அல்லது, தள்ளிப்போடுகிறார்கள். சுதந்திரத்தையும், பொருளாதார தன்னிறைவையும் வாழ்வின் குறிக்கோளாக ஏற்றவர்கள் மகப்பேற்றைத் தவிர்ப்பது உண்டு. இந்த நிலையில் செயற்கையான குழந்தையின்மை தென்படுகிறது. பண்டைய நாளில், தாசிகள் பெண் குழந்தையை ஏற்பார்கள்; ஆண் குழந்தையை விரும்பமாட்டார்கள். இதுவும், தற்காலத்தைப் போன்று வியாபார நோக்கில் செயல்பட்ட இயல்பு. இங்கு, செவ்வாயின் த்ரிம்சாம்சத்தில் பிறந்தவள் குழந்தை பிறக்கும் தகுதியை இழந்தவள் என்று குறிப்பிடுகிறது ஜோதிடம். கர்ப்ப பாத்ரம், சினைமுட்டை தகுதி இருந்தும், பெண்மையும் இருந்தும் குழந்தை பாக்கியம் இருக்காது என்கிறது. தம்பதிகளில், குழந்தையை ஈன்றெடுக்கும் தகுதி இருந்தும், குழந்தை இல்லாதவர்கள் இருந்தார்கள்.

முற்பிறவி கர்மவினையின் காரணமாக குழந்தைச் செல்வம் இழக்கப்படலாம். இன்றைக்கும், முழுத் தகுதி இருந்தும் குழந்தை யின்மைக்குக் காரணம் சொல்லமுடியாத நிலை, புதிய மருத்துவ விஞ்ஞானத்திலும் தென்படுகிறது. சொகுசு வாழ்க்கையில் ஆர்வம் கொண்ட புதுத் தலைமுறையினரிடம் குழந்தையை ஈன்றெடுக்கும் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. அதேநேரம், அதிக ஆர்வத்துடன் செயற்கை முறையில் குழந்தையை ஈன்றெடுக்கத் தயங்காதவர்களும் இருக்கிறார்கள். கலாசாரத்தின் ஆர்வத்தைவிட ஆசையின் ஆர்வம்தான் மேலோங்கியிருக்கிறது. பண்டைய நாளில் செயற்கையில் நுழையாமல் 'தத்து’ எடுத்து, நிறைவை ஏற்றார்கள். குழந்தைகள் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை சூழலுக்கு உகந்த முறையில் முடிவெடுக்கும் இயல்பு, பண்டைய கலாசார சீரழிவுக்கு வழிவகுத்தது. லோகாயத வாழ்வில் ஆர்வம் மேலோங்கியிருக்கும் தறுவாயில், பண்டைய கலாசாரக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்துவது, தவிர்க்கமுடியாததாகிவிடும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சந்தானாரிஷ்டம்

பிறப்பில் அடையவேண்டிய அத்தனை பெருமைகளையும் ஈட்டித் தருவதற்கு ஒத்துழைக்கும் விதத்தில் ஜோதிடம் செயல் படும். அது, மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும். பண்டைய முனிவர்களின் சிந்தனை வளம், மக்களின் மன வளத்தை வளர்க்கவும், செழிப்புற்று விளங்கவும் ஒத்துழைக்கும். 'குழந்தை இருக்காது’ என்ற முடிவை எட்டிவிட்டால், தத்து எடுப்பதைப் பரிந்துரைத்து, குறையை அகற்றிவிடும்.

குழந்தையின்மை, கர்ப்பச்சிதைவு, பிறக்கும் தறுவாயில் உயிர் பிரிதல், சில மாதங்கள் தங்கி இறப்பு, பால வயதிலேயே ஏற்படும் மரணத்தால் இழப்பு, ஊனமுற்ற குழந்தைகளால் வாழ்நாள் முழுதும் துயரத்தைத் தாங்கவேண்டிய நிலை, வளர்ந்து பெரியவர்களாகிய பிறகும் தாய் தந்தைக்கு துன்பத்தைத் தரும் குழந்தைகள், பெற்றோருக்கு எதிராகச் செயல்பட்டுத் துன்பத்தை விளைவிக்கும் குழந்தைகள், வீட்டைவிட்டு வெளியேறி அவர்களுக்கு நிரந்தர துன்பத்தை அளிக்கும் வாரிசுகள், பிள்ளைகள் இருந்தும் அநாதைகளாக பெற்றோர் துன்பப்படும் நிலைக்குக் காரணமாகும் வாரிசுகள்... இப்படி குழந்தைகளால் ஏற்படும் இடையூறுகளைச் சுட்டிக்காட்டி 'சந்தானாரிஷ்டம்’ என்கிற தலைப்பில் ஜோதிடம் விளக்கும். 'அனுபவ சந்தானம்’ மகன் போல் செயல்பட்டு, பெற்றோருக்கு உதவும் வாரிசுகளும் சந்தானாரிஷ்டத்தில் அடங்கும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஜோதிடர்கள் கவனத்துக்கு...

திருமண முறிவுக்குப் பிறகு, மாதம் ஒருமுறை குழந்தையைப் பார்க்க வரும் பெற்றோர்களிலும், ஆசையிலும் பாசத்திலும் பார்க்கும் விருப்பம் எல்லோரிடமும் இல்லை. நீதிமன்றம் தந்த சலுகையைப் பயன்படுத்தும் எண்ணம் இருப்பவர்களும் உண்டு. திருமணத்தில் இணைந்து குழந்தையை ஈன்று, முறிவை ஏற்று, குழந்தைகளைப் பார்க்கும் ஆர்வத்தை நடைமுறைப்படுத்தும் அவலம் தென்படுகிறது. இதுவும் சந்தானாரிஷ்டத்தில் அடங்கும். இப்படியிருக்க, குழந்தைச் செல்வம் பெற எளிமையான பரிகாரங்களைப் பரிந்துரைத்து, அவர்களில் நம்பிக்கையை ஊட்டி அலைக்கழிக்கும் துணிவு, ஜோதிட மேதைகளிடம் இருக்கக்கூடாது.

'தத்த புத்ர யோகம்’ என்று ஜோதிடமே பரிந்துரைக்கும்போது, அதை ஒதுக்கிவிட்டு, பல சிறப்பு வழிபாடுகளை எடுத்துரைத்து, மக்களை திசைதிருப்பும் போக்கு ஜோதிடர்களிடம் இருக்கக்கூடாது. மக்கள் கள்ளம் கபடம் அறியாதவர்கள். எதையும் எளிதில் நம்பி விடுவார்கள். தங்களுக்கு விருப்பமானதைச் சொன்னால், உடனே ஏற்றுக்கொள்வார்கள். தனக்கு உதவுபவர்களை உயர்வாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு எல்லோரும் நல்லவர்களாகவே படுவார்கள். சீர்திருத்தவாதிகளின் சொல்வளம் அவர்களை எளிதில் ஈர்த்துவிடும். பாமரர்கள் அவர்களிடம் அடைக்கலமாகிவிடுவார்கள். அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகப் பார்ப்பார்கள். அதுபோல், ஜோதிட மேதைகளையும் கடவுளாகப் பார்ப்பார்கள். அவர்களின் இயல்பைப் புரிந்துகொண்டு ஆதரவோடு நல்வழிப்படுத்தும் எண்ணம் ஜோதிட மேதைகளிடம் வளர வேண்டும்.

செவ்வாய் த்ரிம்சாம்சகம்

ராசி முழுதும் சனி பகவானின் ஆதிக்யத்தில் இருக்கும். ஒற்றைப்படை ராசியில் முதல் ஹோரை யிலும், இரட்டைப்படை ராசியில் 2வது ஹோரையிலும் சூரியன் இருப்பான். முதல் த்ரேக்காணத்தில் சனியின் ஆதிக்யமும், 3வது த்ரேக்காணத்துக்கு 9க்கு உடையவனின் பங்கும் இருக்கும். ஒற்றைப்படை ராசியில், முதல் ஐந்து பாகைகள் செவ்வாயின் த்ரிம்சாம்சகம். இரட்டைப்படை ராசியில் கடைசி ஐந்து பாகைகள் செவ்வாயின் த்ரிம்சாம்சகம். சனி, சூரியன் இருவரும் வெப்பக் கிரகங்கள். இவற்றுடன் இணைந்த செவ்வாயின் த்ரிம்சாம்சகம், தன்னில் உருவானவளை தாசியாகவும், குழந்தை ஈன்றெடுக்காதவளாகவும் உருவெடுக்க வைத்தது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

இரட்டைப்படை ராசியில், கடைசி த்ரேக்காணத்தோடு இணைந்திருக்கும் செவ்வாயின் த்ரிம்சாம்சகம், 9க்கு உடைய புதனோடு சேர்ந்திருக்கும். புதன் சுபக் கிரகமானாலும், பாபக் கிரகத்தின் சேர்க்கையால் தனது இயல்பை இழந்துவிடுகிறான். புதனுக்கு பெண் அலி என்ற தகுதியும் உண்டு. அதன் சேர்க்கை, மகப்பேறு இல்லாமல் போக செவ்வாய் த்ரிம்சாம்சகத்துக்கு உதவியாக மாறிவிடுகிறது. ஒற்றைப்படை ராசியில் முதல் த்ரேக்காணத்துக்கு சனி அதிபதியாக இருப்பதால், அங்கு சந்தானக் குறைவுக்குக் காரணமாகிவிடுகிறான். சனியை 'ஆண் அலி’ என்று சுட்டிக்காட்டும் ஜோதிடம். அதன் தொடர்பில், முற்றிலும் சந்தானத்தை முளைக்காமல் செய்ய, செவ்வாயின் த்ரிம்சாம் சகத்துக்கு ஒத்துழைக்கிறது.

வெப்பத்தின் ஆதிக்கம்

வெப்பம் மேலோங்கியிருக்கும் தறுவாயில், 'சுக்கிலம்’ (ஆண் பிந்து) தகுதியை இழந்துவிடும். நீர்த்துப்போகும் அல்லது சுணங்கி விடும். இவை இரண்டும் குழந்தையை உருவாக்கும் தகுதியை இழக்கச் செய்யும். பெண்ணின் சோணிதமும் அப்படித்தான். ஆயுர்வேதக் கண்ணோட்டத்திலும் உடல் வெப்பத்தின் ஆதிக்கம் மகப்பேற்றை பாதிப்பது உண்டு.

சூரியனின் புதல்வன் சனி. அதாவது, வெப்பத்தின் சாரம். செவ்வாய் பூமியின் புதல்வன். அதுவும் வெப்பம் மேலிட்டு இருப்பதைக் குறிக்கும். சூரியனின் கிரணத்தை ஏற்று, பூமி வெப்ப குணத்தை உமிழும். பூமியைப் பிளந்து உள் புகுந்தால், வெப்பத்தின் தாக்கம் அனுபவத்துக்கு வரும். இப்படி, வெப்பக் கிரகத்தின் தாக்கம் தூக்கலாக இருப்பதால், அதனுடன் இணைந்த செவ்வாயின் த்ரிம்சாம்சகம், அவளை குழந்தை இல்லாதவளாக உருவாக்கியது. விண்வெளியில் கிரஹங்களின் சுற்றுவட்டப் பாதையில், சூரியனுக்கு அடுத்தபடியாக செவ்வாயின் பயணப்பாதை இருக்கும். அதற்குப் பிறகு குருவின் பயணப்பாதை; அதன் பிறகு, கடைசியில் சனியின் பாதை அமைந்திருக்கும். சூரியனின் நெருக்கம் சனியை விட செவ்வாய்க்கு அதிகம் இருப்பதால், வெப்பத்தின் தாக்கத்தில் தனது இயல்பை வெப்பமயமாக மாற்ற இடம் அளித்துவிடுகிறது. மேல் நோக்கிய சூரிய கிரணங்கள் செவ்வாயிலும் சனியிலும் முழுமையாகப் படுவதால், எப்போதும் வெப்பம் குறையாத தன்மை இரண்டு கிரகங்களுக்கும் கிடைத்துவிடும். சனியை சூரிய கோளத்திலிருந்து வெளிவந்த கிரகமாக ஜோதிடம் சொல்லும்.

செவ்வாயும் சனியும்

செவ்வாய், சனி இரண்டிலும் வெப்பம் இருந்தாலும், இயல்பில் இரண்டும் மாறுபட்டவை. செவ்வாய், சுறுசுறுப்போடு செயல்படும் தகுதியைப் பெற்றவன். சனி, சோம்பலோடு தென் படுபவன். சனி உடலுழைப்போடு நின்றுவிடுபவன்; செவ்வாய் உற்சாகத்தோடு உழைப்பை ஏற்பவன். இந்தப் பாகுபாடு வெப்ப மாறுதலில் அவர்களில் தென்படும் மாற்றங்களாக உருவெடுத்திருக்கிறது.

அக்னிமாருத யோகம்

செவ்வாயின் உடலுழைப்பை, போரில் செயல்படும் போராளி யோடு ஒப்பிடும் ஜோதிடம். சனியின் உடலுழைப்பை பாரத்தைச் சுமக்கும் உடலுழைப் போடு ஒப்பிடும். சனியை உழைக்கும் வர்க்கமாகச் சுட்டிக் காட்டும் ஜோதிடம். சுறுசுறுப்பு அற்றவன் அடிமையாகிவிடுவான். சோம்பலும் அதற்குத் துணை போகும். சனியின் ஆதிக்கம் வலுக்கும்போது, அவள் அடிமையாக அதாவது தாசியாக உருவாகிவிடுகிறாள். அவளுக்குச் செவ்வாயின் இணைப்பு மகப்பேற்றை இல்லாமல் செய்துவிட ஒத்துழைத்தது. செவ்வாய், சனி இருவரின் சேர்க்கையை 'அக்னிமாருத யோகம்’ என்கிறது ஜோதிடம். நெருப்புக்கு காற்று ஒத்துழைப்பு அளிப்பதுபோல், இருவரின் சேர்க்கையில் ஒன்றின் ஒத்துழைப்பில் மற்றது வென்றுவிடும். இங்கு, செவ்வாயின் த்ரிம்சாம்சகம் தன்னில் பிறந்தவளை அடிமையாகவும், மகப்பேறு இல்லாதவளாகவும் உருவாக்க, சனியின் பங்கு ஒத்துழைத்தது.

ஆகவே, ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, இறுதிப் பலனை எட்டவேண்டும். விண்வெளியில் பரவிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பைப் பெற்றிருக்கும். வெட்பம், தட்பம் என்ற பாகுபாடும் விண்வெளியில் பரவியிருக்கும். இரண்டின் கலவையில் உருவாகும் சூழலை அறிந்து, அதற்கு உகந்த வகையில்

பலனை இறுதிசெய்ய வேண்டும்.

வெட்ப தட்பங்கள், காலை, மதியம், மாலை, முன்னிரவு, நடுநிசி, அதிகாலை ஆகிய பாகுபாட்டில் அதன் கலவைகள் மாறுபட்டிருக்கும். அதுபோல், வெப்பக் கிரகம் தட்பக் கிரகம் இரண்டின் சேர்க்கையிலும் கலவை மாறுபட்டிருக்கும். அதை நன்கு உணர்ந்து செயல்படும் நடைமுறைகளை ஜோதிடம் விளக்கும். அதை அறிந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவை எட்டும் பொறுப்பை ஜோதிட மேதைகள் ஏற்க வேண்டும். தகவலை மட்டும் இறுதி முடிவாக வைத்து, ஆராய்ச்சிக்கு இடமளிக்காமல் பலனை இறுதிசெய்வது சிறப்பல்ல. ஜோதிடம் வளர, செழிப்புற, ஆராய்ச்சிக் கண்ணோட்டம் அவசியம்.

  சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism