மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 50

ரஜினியின் குரு பக்தி...லதாவின் இறை பக்தி!வி.ராம்ஜி

வர் ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்துக்கும் குறைவான அளவு வசதிகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இன்றைக்கு அவரைத் தெரியாதவர்கள் இல்லை. அகிலம் முழுக்க அவர் புகழ் பரவியிருக்கிறது. உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அவரை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரிக்க ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். 

இத்தனை பெரிய உச்சத்தில் இருந்தாலும், அதை புத்தியிலோ மனதிலோ ஏற்றிக்கொள்ளாமல், 'எல்லாம் இறையருள்’ என்று ஒற்றை வரியில் சொல்லிப் புன்னகைக்கிற ஆன்மிக நெறியாளர் அவர். பகட்டில் லாத பண்பும், பொய்யற்ற ஆன்மிகமுமே அவரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்து வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

''மூணு வருஷத்துக்கு முன்னாடி, உடம்பு சரியில்லை அவருக்கு. இங்கே சிகிச்சை எடுத்துக்கறதைவிட, வெளிநாட்ல போய் எடுத்துக்கிட்டா சீக்கிரமே குணமாகிடலாம்னு டாக்டர் சொன்னாங்க. அதன்படி, வெளிநாட்ல சிகிச்சை எடுத்துக்கறதுனு முடிவாச்சு. அப்ப அவரோட மனைவியும் மகளும் இங்கே வந்து, மனமுருக வேண்டிக்கிட்டாங்க. 'யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காதவர் அவர். எல்லாரும் நல்லாருக் கணும்னு ஆசைப்படறவர். அவர் பரிபூரணமா குணமாகணும்’னு வேண்டிக்கிட்டாங்க. அதன்படியே, சீக்கிரமே அவர் குணமாகி, இந்தியா திரும்பினார். பழையபடி சுறுசுறுப்பா நடமாடத் துவங்கினார். இப்ப, ரெண்டு மாசத்துக்கு முன்னாடிகூட அவர் பொண்ணு வந்து, அம்பாளை தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க'' என்கிறார் காஞ்சி காமாட்சி ஆலயத்தின் நடராஜ சாஸ்திரிகள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 50

அந்தப் பிரபலம் யார் என்பது இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம்... அவர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

''ரஜினிகாந்த்தின் மனைவி லதா மேடம், காஞ்சிபுரம் காமாட்சி அம்பாளைத் தரிசிக்க வருவது இன்றைக்கு நேற்றைக்கான விஷயம் இல்லை. ரஜினியின் நூறாவது படம் ராகவேந்திரர். அந்தப் படம் ரிலீஸாகும்போது, லதா மேடம் வந்தாங்க. 'ரஜினி சாரோட ஆன்மிக குரு, மகான் ராகவேந்திரர். அவரோட சரிதத்தைப் படமா எடுக்கறதும், அந்தக் கதாபாத்திரத்துல என் கணவர் நடிக்கறதும் எந்த ஜென்மத்துப் புண்ணியமோ! இந்தப் படம் எங்களுக்குக் காசு பணம்னு சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு அவசியமில்லை. ராகவேந்திரர் மகிமையை உலகுக்குச் சொல்லணும். அதான் அவரோட நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறினா போதும்’னு வந்து வேண்டிக்கிட்டாங்க. அந்த வேண்டுதல் அமோகமாக பலிச்சுது, நம்ம எல்லாருக்குமே தெரியும்தானே!'' என்று உணர்ச்சிபூர்வமாகச் சொல்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

பெரும்பாலும் காமாட்சி அம்பாளுக்கு பச்சைக் கலர் பட்டுப் புடவைதான் வாங்கி வருவாராம் லதா ரஜினிகாந்த். ஆளுயர அளவில் தாமரைப்பூமாலைகள் கொண்டு வருவார். தட்டுத் தட்டாகப் பழங்களும், உலர்ந்த பழ வகைகளும் கொண்டு வந்து சமர்ப்பிப்பார். சிறப்பு அபிஷேகங்களும் நைவேத்தியங்களும் செய்து வழிபடுவார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 50

''இந்தக் கிழமைதான், இன்ன நாள்தான் என்றெல்லாம் இல்லாமல், எப்போது தோன்று கிறதோ உடனே கிளம்பி இங்கே வந்துடுவார் லதா ரஜினிகாந்த். 'ஆஸ்ரம்’ பள்ளியை ஆரம்பிக் கறதுக்கு முன்னாடியும், 'பாட்சா’ சமயத்துலயும், 'பாபா’ படத்தின்போதும் வந்து காமாட்சி அம்பாளுக்குப் பூஜை பண்ணினார். அம்பாளைக் கெட்டியா பிடிச்சுண்டுட்டாப் போதும்... நம்ம வாழ்க்கைக்கு என்னெல்லாம் வேணுமோ, அது மொத்தத்தையும் காமாட்சி பார்த்துப்பா!'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 50

''குரு ஸ்வரூபமாக வருகிறவளும் அவள்தான். இந்த மாயாலோகம் அவளால்தான் நடக்கிறது. அதிலிருந்து கைதூக்கி விடுவதற்காக அவளே குருவாக வருகிறாள். குண்டலினி யோக சாதகர்கள் தங்கள் சிரஸின் உச்சியில் பிராண சக்தியைக் கொண்டுவந்து, அங்கே பூரண சந்திரனில் அம்பாள் பாதத்தைத் தரிசிக்கிறார்கள். இதையே குரு பாதுகை என்றும் சொல்கிறார்கள். காளிதாஸரும் 'தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்’ என்கிறார். அதாவது, 'ஆச்சார்ய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பாளை துதிக்கிறார்.

'ஈஸ்வரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும். பேய் பிசாசுகளோடு கூத்தடிக்கிறாரா, அடிக்கட்டும். சம்ஹார தாண்டவம் பண்ணு கிறாரா, பண்ணட்டும். ஊர் ஊராகப் பிச்சை எடுக்கிறாரா, எடுக்கட்டும். அவர் எப்படி இருந்தாலும், அவருக்கே இருதயத்தை அர்ப்பணம் செய்வேன்’ என்று அவரிடமே தீவிரமாக அன்பு வைத்து, தட்ச யக்ஞத்தில் தன் பிராணனையே தியாகம் செய்த அம்பாள்தான், இப்படிப்பட்ட பதிபக்தியை, குருபக்தியை அநுக்கிரகம் செய்கிறாள்'' என அருள்கிறார் காஞ்சி மகான்.

இந்த உலகில் யாருக்கு, எப்போது, என்ன தேவையோ... அதை ஈடேற்றித் தரும் அன்னை அல்லவா காமாட்சி?!

    வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்