Published:Updated:

கலகல கடைசி பக்கம்

துறவின் பயன்!வீயெஸ்வி

கலகல கடைசி பக்கம்

துறவின் பயன்!வீயெஸ்வி

Published:Updated:

சில நாட்களாக எதிர்வீட்டு அங்கிளின் தோற்றத்தில் நிறையவே மாறுதல்கள். தட்டுச்சுற்று வேட்டியிலிருந்து பத்தாறு பஞ்சகச்சத்துக்கு மாறியிருக்கிறார். சட்டைக்குப் பதிலாக, அங்கவஸ்திரத்தை கிராஸாகப் போட்டுக்கொள்கிறார். இடது புஜம் மட்டும் 'ஸ்வீவ்லெஸ்’ மாதிரியாகத் தெரியும். எப்போதும் நெற்றி நிறைய விபூதிக் கோடுகளுடன் சிவப்பழமாகக் காட்சியளிக்கிறார். ஆன்ம விசாரத்தில் மூழ்கித் திளைக்கும் அவரிடம் ஒரு மாலை நேரத்தில் சிக்கினேன். 

''எதன் மீதும் பற்று வைக்கக்கூடாது; எல்லாத்தையும் துறந்துடணும்'' என்றார்.

''ஏன் அங்கிள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆசை வச்சு, அது நிறைவேறலேன்னா ஏமாற்றம் வரும்; ஏமாற்றம் வந்தா துயரம் வரும்; துயரம் வந்தா...''

''தாடி வளர்க்கணும்!'' என்றேன்.

''இப்படி எடக்குமடக்கா எதிராளி என்ன சொன்னாலும், இப்பெல்லாம் எனக்குக் கோபமே வர்றது கிடையாது. அதெல்லாத்தையும் நான் எப்பவோ கடந்துட்டேன். போகட்டும், மேலே மேலே பணம் சேர்க்கறதுல குறியா இருப்பவனா நீ?'' என்று கேட்டார்.

''நான் மட்டுமில்லே அங்கிள், இந்தப் பூமியில் மனுஷனாப் பிறந்த எல்லோருமே அப்படித்தானே? பணம் இல்லேன்னா ஒண்ணுமே பண்ண முடியாதே!''

''அப்படியா... சரி, நான் ஒரு கதை சொல்றேன், கேளு...'' என்று அவர் ஆரம்பித்தவுடன், எனக்கு சுவாரஸ்யம் அதிகமானது.

''குழந்தைப் பருவத்திலேர்ந்து ஃப்ரெண்ட்ஸா இருந்த ரெண்டு பேர் ரொம்ப நாளைக்கப்புறம்

கலகல கடைசி பக்கம்

சந்திச்சுக்கிட்டாங்க. ஒருத்தர் தொழிலதிபர்; இன்னொருத்தர் சந்நியாசி. பேசிக்கிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியலை. இருட்டின நேரத்துல நதிக்கரைக்கு வந்து சேர்ந்தாங்க. அக்கரைக்குப் போகணும். டியூட்டி நேரம் முடிஞ்சுடுச்சுன்னு, படகோட்டி இவங்களைத் தன் படகில் ஏத்திக்கிட்டுப் போக மறுத்துட்டான். சுற்றிலும் நிறைய கொடிய விலங்குகள் அலைஞ்சுட்டிருக்கிற வனாந்திரம் கிறதால, படகோட்டிக்கு நிறையவே பணம் கொடுக்க தொழிலதிபர் முன்வர, அவனும் சம்மதிச்சான். ரெண்டு பேரும் அக்கரைக்கு பத்திரமா வந்து சேர்ந்தாங்க.

தொழிலதிபர் கேட்டார்... 'நண்பா! நீ எல்லாத்தையும் துறந்துட்டேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுல என்ன பிரயோஜனம்? எங்கிட்டே மட்டும் பணம் இருந்திருக்கலேன்னா, நாம இந்நேரம் இப்படிப் பேசிட்டிருக்க முடியுமா? ஆக, உன்னுடைய துறவு வாழ்க்கையால எந்தப் பயனும் இல்லைன்னு ஒப்புக்கிறியா?’

அதற்கு சந்நியாசி அமைதியாகச் சொன்னார்... 'நண்பரே! உம் பணம் நமக்கு உதவியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பணத்தை உம்மிடமே வைத்திருந்தது நம்மைக் காப்பாற்றியதா, அல்லது அந்தப் பணத்தை நீர் துறந்ததா?!''’

கதையைச் சொல்லி முடித்த அங்கிளிடம், ''எப்படி உங்களால பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் இத்தனை எளிமையா விளக்கமுடியுது?'' என்று வியப்புடன் கேட்டேன்.

''எல்லாப் புகழும் அர்ஜுனனின் தேரோட்டிக்கே!'' என்றார் அங்கிள்.

'அர்ஜுனனின் தேரோட்டி’ என்று அவர் குறிப்பிட்டது சுவாமி பார்த்தசாரதி அவர்களை! சரிதான், சொற்பொழிவில் கேட்டு எனக்குச் சொல்லியிருக்கிறார்.