மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 51

இதோ... எந்தன் தெய்வம்! - 51

''இன்றைக்கு எத்தனையோ விதம்விதமான உணவு வகைகள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான ருசியில், உடனுக்குடன் சுடச்சுட சாப்பிடக் கிடைத்தாலும், அவை நம் அம்மாவின் கைப்பக்குவத்துக்கும் ருசிக்கும் ஈடாகுமா? மற்ற உணவுகளில் ருசி இருக்கலாம்; சத்தும் இருக்கலாம். ஆனால், நம் அம்மாவின் கையால் சமைத்த உணவில் மட்டுமே அன்பும் பிரியமும் கலந்திருக்கும்;  பாசமும் வாஞ்சையும் சேர்ந்திருக்கும். 

காஞ்சி அன்னையாம் காமாட்சி தேவியின் அருளும் அவ்விதம்தான்! அறியாமல் நாம் செய்கிற அத்தனை பிழைகளையும் பொறுத்துக்கொண்டு, பேரன்புடனும் பெருங்கருணையுடனும் நம்மை அரவணைத்து அருள்பாலிப்பதில், காமாட்சி அன்னைக்கு நிகர் வேறு யாருமில்லை.

மனித வாழ்க்கையில் பிணக்குகளும் பிரச்னைகளும் எல்லோருக்கும் உண்டு. நம்மையறியாமல் எவரையேனும் காயப்படுத்தியிருந்தால், எவராலேனும் துக்கப்பட்டுக் கிடந்தால், ஏதோ ஒரு காரணத்துக்காக உறவை முறித்துக்கொள்ள நேர்ந்திருந்தால், காமாட்சி அம்மையிடம் வந்து முறையிட்டு, மனதில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கி வைத்தால் போதும்... வெட்டிக்கொண்டு பிரிந்த உறவுகளும் துளிர்க்கும்; முறித்துக்கொண்டு விலகிய நட்புகளும் தழைக்கும்.

''நாம் கேட்டதையெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கிற கற்பக விருட்சம்தான் காமாட்சி அம்பாள். அவளின் சந்நிதிக்கு வந்து முறையிட்டால் போதும்... நமக்கு வந்திருக்கிற சோதனைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, சந்தோஷங்களைத் தந்திடுவாள் அன்னை. நாம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால், நினைத்தது நடக்க வேண்டும் என்றால், நம்மிடம் இருக்கிற அகம் பாவம், ஆணவம் போன்ற மன அழுக்குகளை அப்படியே மொத்தமாக மூட்டைகட்டி வைத்துவிட்டு, முழுவதுமாக அவளிடம் சரணடைய வேண்டும்.

இதோ... எந்தன் தெய்வம்! - 51

ஏனென்றால், அகம்பாவத்துடன் இருப்பவர்களை, அலட்டலும் கர்வமுமாக வருபவர்களை ஏறெடுத் தும் பார்க்கமாட்டாள் தேவி. அவர்களுக்கு கிஞ்சித்தும் தன் அருளைத் தரமாட்டாள் அன்னை!'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

''நாம் இதைச் சாதித்தோம், அதைச் செய்து முடித்தோம் என்று அகம்பாவம் கொள்ள கொஞ்சம் கூட நியாயமே இல்லை. நாமா சாதித்தோம்? எந்த ஒன்றையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ நமக்கு எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்ற ஒரு மகா சக்தியிடமிருந்தே நம்முடைய சக்தியெல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால், நம்மால் அடுத்த மூச்சுக்காற்றையாவது வெளியேற்ற முடியுமா? அம்பாளின் அனுக்கிரகத்தில் நடக்கிற காரியங்களை நமது சாதனைகளாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம் என்பது, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அனுபவத்தில் தெரிந்துகொண்டு, அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ, அத்தனைக்கத்தனை அவள் அனுக்கிரகமும் அதிகம் கிடைக்கும்'' என்கிறார் காஞ்சி மகான்.

இந்திய அளவில் மிகப் பெரிய மருத்துவர் எனப் பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரதாப் ரெட்டியையும், அவரின் அப்போலோ மருத்துவ மனையையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.  

இதோ... எந்தன் தெய்வம்! - 51

''டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் காமாட்சி அம்பாளின் தீவிர பக்தர். மருத்துவத் துறையில் அவருக்கு ஏதேனும் உச்சபட்ச பாராட்டு கிடைத்தாலோ, கொஞ்சம் சிக்கலான ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தாலோ, அவர் உடனே காமாட்சி அம்பாளை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்வார். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததும், 'இந்த வெற்றிக்குக் காரணம் நானல்ல; இந்த உயிரைக் காப்பாற்றிக் கொடுத்ததும் நானல்ல; தாயே, உனதருள்தான்!’ என்று மனத்துள் சொல்லியபடி, அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்வார். பிறகு, இங்கு சந்நிதிக்கு வந்து, தரிசித்துச் செல்வார்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

காயத்ரி மண்டபம், உள்பிராகாரப் பகுதி, கொலு மண்டபம் எனக் கோயிலில் பல இடங்களையும் மண்டபங்களையும் தன் சொந்தச் செலவில் புதுப்பித்துத் தந்துள்ளாராம் டாக்டர். ''மக்கள் பலரும் என்னை நம்புகிறார்கள். நான் காமாட்சியை நம்புகிறேன். நோய் நீங்கிச் செல்லும்போது, அவர்கள் எனக்குத் தந்ததை, நான் என் அன்னைக்குத் தந்து மகிழ்கிறேன், அவ்வளவுதான்! நம் கடமையை நாம் ஒழுங்காகச் செய்தால், அன்னை அவர் கடமையைச் செவ்வனே செய்வார்’ என்று சொல்லிப் புன்னகைப்பாராம் டாக்டர் ரெட்டி.

இதோ... எந்தன் தெய்வம்! - 51

''இவர் மட்டுமா... இவரைப்போல் எத்தனையோ டாக்டர்களும் மிகப் பெரிய துறைகளில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் காமாட்சி அம்பாளே கதியென்று சரண டைந்துள்ளார்கள். பட்டுக்குப் பெயர்பெற்ற காஞ்சி மாநகரில், கல்யாணப் பட்டுப் புடவை உள்ளிட்ட ஆடைகளை வடிவமைக்கும் அன்பர்கள் பலரும், தினசரி காமாட்சி அன்னையை வணங்கிவிட்டே அந்த வேலையில் ஈடுபடுவதை அன்றாட வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஒரு விரதம் போல இருந்து அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு, பட்டாடைகளைத் தயார் செய்கிறார்கள். கிடைக்கிற லாபத்தில் இருந்து ஒரு பகுதியை காமாட்சி அம்பாளுக்குச் சமர்ப்பித்து, அவளையே முதலாளியாக நினைத்துச் செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள்'' என்கிறார்கள் ஆலயப் பணியில் உள்ளவர்கள்.

'''சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்’ என்கிறார் ஆச்சார்யாள். அதாவது, ராமேஸ்வரத்துக்குப் போனால், சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது, பூஜா அங்கமாக சமுத்திரத்துக்கு அபிஷேகம் பண்ணுவார்கள். அந்தப் பெரிய சமுத்திரத்தில் இருந்தே துளி போல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்துத் துதி செய்வதாக ஆச்்சார்யாள் சொல்கிறார். அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று, ஈஸ்வர அவதாரமான ஆச்சார்யாள் ஆதிசங்கரர் அடக்கத்துடன் சொல்கிறார்'' என அருள்கிறார் மகா பெரியவா.

இதை உணர்ந்து தெளிந்து, அன்னையிடம் சரணடைந்த அன்பர்கள் ஏராளம். அவளின் பேரருளைப் பெற்று ஞானமும் யோகமும் அடைந்தவர்கள் பல்லாயிரம்.

''எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்கு கிடைத்தால்கூட, நம்மையறியாமல் நம்முள்ளே அகம்பாவம் புகுந்துவிடும்.இப்படி நம்முள் படியும் அகம்பாவம் அகலவும் ஒரே வழி அம்பாளின் அருளே! நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணித்துவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல், குழந்தையைப் போல் பாதுகாப்பாள்!'' என்பது காஞ்சி மகானின் அருள்வாக்கு.

  மகாபெரியவா அருளியபடி, அகம்பாவம் இல்லாமல் நடப்போம்; காஞ்சி அன்னையின் பேரருளுக்குப் பாத்திரமாவோம்!

அடுத்த இதழில் நிறைவுறும்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்