Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

கரம் அல்லது கும்ப ராசியில் லக்னம் (பிறந்த வேளை), அல்லது சந்திரன் (நட்சத்திர பாதம்) இருக்கும்போது, குருவின் த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள், கணவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு மகிழ்ச்சியோடு வாழ்வாள். அவள், எல்லாவிதமான செளபாக்கியங்களையும் பெற்று மாதரசியாகத் திகழ்வாள் என்கிறது ஜோதிடம். 

கணவன் என்பவன், மனைவியின் பரிணாம வளர்ச்சியில் வெளிவரும் ஆசைகளை, அன்போடும் ஆதரவோடும் முழுமை பெறச் செய்து மகிழ்விப்பவன். அதை ஏற்று உணர்ந்த மனைவி இறுக்கமான அன்புடன் இறுதிவரையி லும் அவனுடன் இணைந்து மகிழ்பவளாகத் திகழ்வாள். ஆணவம், அதட்டல், மிரட்டல், பயமுறுத்தல், செல்வாக்கு, ஏவல் போன்றவற்றால் மிரண்டு, அவனுடைய கட்டுப்பாட்டில் மாட்டிக்கொண்டிருப்பவள் அல்ல மனைவி. அவனது ஈர்ப்பில் தனது ஆசைகளை நிறைவு செய்ய, மனமுவந்து ஈடுபடும் கணவனுக்கு இடமளித்து துணைபுரிபவள் மனைவி. இயற்கை யாகவே ஒருவருக்கொருவர் இடையில் ஏற்படும் ஈர்ப்பினால் நிறைவை எட்டிய பூரிப்பில், கணவனுக்குக்  கட்டுப்படுபவள் மனைவி.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணம் என்பது...

'செளபாக்கியவதி’ என்ற அடைமொழியுடன் மணமகளை அறிமுகம் செய்வோம். பெண்ணின் பெருமையை அவளுடைய நற்பண்புகள் நிறைவுசெய்யும். கணவன் வாயிலாக முழுமை பெற வேண்டிய விருப்பங்கள், நல்வாழ்வுக்கு ஒத்துழைக்கும் நடைமுறைகள் ஆகியவற்றுடன் ஐஸ்வரியத்தோடு இணைந்திருப்பவள் 'செளபாக்கியவதி’ என்கிறது சாஸ்திரம் (ஐச்வர்யஸ்யஸ மக்ரஸ்ய... ஷண்ணாப்பக இதீரணா). அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்று சொல்லாமல், 'அவனுக்கு அவளோடு திருமணம்’ என்று பண்டைய நாளில் சொல்வார்கள். திருமணத்தில் முக்கியப் பங்கு மனைவிக்கு இருக்கும். திருமணம் என்ற சொல் சுட்டிக்காட்டுவது இருவரின் இணைப்பை அல்ல; மனைவியின் தொடர்பால் ஏற்பட்ட 'மணம்’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, அதுவரையில் அவனுக்கு இல்லாத வாசனை மணம் அவளுடைய தொடர்பால் உண்டாகும்.

கண்ணனின் ராதை, ராமனின் சீதை, நளனின் தமயந்தி, சத்யவானின் சாவித்திரி ஆகியோர் இதில் அடங்குவார்கள். சீதாராமன், ராதாகிருஷ்ணன் என்று மனைவிக்கு முன்னுரிமை இருக்கும். அருந்ததிவசிஷ்டர், அனசூயாஅத்ரி என்று முனிவர்களின் மனைவிகளும் இதில் அடக்கம்.

இறுதி மூச்சு வரையிலும் பிரியாமல் வாழ்வது மணத்தின் கரு. திருமணத்தில் விருப்பப்படி இணையலாம், விலகலாம் என்ற புதுச் சிந்தனை யாளர்களின் கணிப்பில், திருமணம் மணம் வீசாது. இணைப்பில் மட்டுமே புலப்படும் பெருமையை இடையில் துண்டிப்பதை இழுக்காகப் பார்த்தார்கள் முன்னோர்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

அன்பின் இணைப்பும், இன்றைய சிந்தனையும்!

அன்றாடம் வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த, ஐஸ்வரியம் பயன்படுகிறது. அன்பில் இணைந்த திருமணம் மனமகிழ்ச்சியை நிறைவு செய்கிறது. லோகாயத வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் முழுமைபெறும் வகையில், குரு த்ரிம்சாம்சத்தில் பிறந்தவளின் இயல்பு சிறப்புப் பெற்று இருக்கும் என்கிறது ஜோதிடம். வாழ்க்கையின் செழிப்புக்கு அடித்தளமான அன்பின் இணைப்பை மறந்து, கூடி வாழ்வதை மட்டுமே இணைப்பாகப் பார்க்கும் இன்றைய சிந்தனை, மகிழ்ச்சியையும் பண்பையும் இழக்கவைக்கிறது. அன்றாட அலுவல்களை நிறைவேற்ற ஐஸ்வர்யமும் வேண்டும்; வருங்கால குடிமகன்களை ஈன்றெடுக்க இணைப்பும் வேண்டும். இதை உணர்ந்த உயர்ந்த சிந்தனையாளர்கள், திருமணத்தை அறிமுகம் செய்தார்கள். இணைந்தால் பிரிய முடியாது என்ற அவர்களது உறுதி, சமுதாயத்தின் கட்டுக்கோப்பைப் பாதுகாக்க உதவியது.

மகான்களைத் தந்த மாதரசிகள்

குரு த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள், சுயநலத்துடன் நில்லாமல், சமுதாயத்தையும் பாதுகாத்தாள். ராமர், கிருஷ்ணர், வியாசர், சங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்ய ப்ரபு போன்றவர்களை உலகுக்கு அளித்த மாதரசிகள் சமுதாயக் கட்டுக்கோப்பையும், பண்பையும் பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்தவர்கள். வாழ்வின் அடித்தளம் திருமணம் என்பதை மறந்து, தேவைப்படும்போது சுவைக்கும் நுகர்பொருளாகப் பார்க்கும் போக்கு, கட்டுக் கோப்பை சிதறடித்துவிடும். திருமணம் தனி மனிதனின் நிறைவில் முழுமை பெற்றுவிடுகிறது என்று நினைக்காமல், சமுதாயத்துடன் இணைத்து அதன் பங்கை உணரவேண்டும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

குரு த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் அத்தனையையும் உணர்ந்தவளாக இருப்பாள். அப்படி இருந்தால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியைச் சந்திக்க இயலும். இணைப்பின் குறிக்கோளையும், அதற்கு உதவியளிக்கும் பொருத்தத்தின் ஆழத்தையும் புரிந்துகொண்டு, தான் சமூகத்தொண்டு செய்பவன் என்பதையும் உணர்ந்து, திருமணப் பொருத்தத்தின் முடிவை ஜோதிட மேதைகள் இறுதி செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள் மாதரசிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ இயலும். சமுதாயத்தின் உயர்வுக்கு உரம் ஊட்டும் சமூக சேவகர்களும் தோன்றுவார்கள். நாம் இன்று காணும் சமுதாயப் பெருமைகளுக்கு அன்று தோன்றிய மகான்களும், அவர்களை ஈன்றெடுத்த மாதரசி களுமே காரணம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஜனனீ ஈன்றவள், ஜன்பூமி நாம் வாழும் நாடு இவை இரண்டும் சொர்க்கத்தைவிடவும் உயர்ந்தவை எனும் வழக்குச் சொல், இந்த மாதரசிகளையே சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், அவர்கள் அளித்த மகான்களின் பங்களிப்பில் உயர்ந்த சமுதாயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. இப்படியிருக்க, ஆண் பெண் இருவரின் இணைப்பு என்ற கோணத்தில் மட்டுமே திருமணப் பொருத்தத்தைப் பார்க்கும் துணிவு ஜோதிட மேதைகளுக்கு இருக்கக்கூடாது. கடல்போல் பரந்து விரிந்து தென்படும் ஜோதிட சாஸ்திரத்தை, கடைந்தெடுத்த வெண்ணெய் போன்று... பெயர் ராசியும், பத்துப் பொருத்தங்களும் பார்த்து முடிவெடுப்பவர்கள், ஜோதிட சாஸ்திரத்துக்கு அனுகூல சத்ருக்களாக மாறிவிடுகிறார்கள்.

எது உண்மையான ஜோதிட சேவை?

கஜகேசரி யோகம் உள்ளது; எனவே, பொருளாதாரத்தில் நிறைவு இருக்கும். ஸமஸப்தகம் என்ற ராசிப்பொருத்தம் உள்ளது; ஆகவே, நெருக்கம் நிலைத்து இருக்கும் என்றெல்லாம் விளக்கி, பாமரர்களைத் திருப்திப்படுத்தும் எண்ணம் இருக்கக்கூடாது. லேசான செவ்வாய் தோஷம், கடுமையான செவ்வாய் தோஷம் என்ற வார்த்தைகளில் லேசான, கடுமையான ஆகிய சொற்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் பயமுறுத்தி, பாமரர்களை ஈர்க்கும் நடைமுறை, ஜோதிட சாஸ்திரத்தின் சேவையாகாது. தற்போது, மக்களுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. மூட நம்பிக்கை என்று சொன்னவர்களும், தவற்றை உணர்ந்து அதில் இணைந்திருக்கிறார்கள். எனவே, இப்போது ஜோதிடர்கள் செய்யும் சேவை முறையாக இருப்பின், ஜோதிடம் உயர்வை எட்டும். தருணத்தைப் பயன்படுத்தி, இழந்த தகுதியை மீண்டும் பெறலாம்.

குரு த்ரிம்சாம்சகம்

மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் முழுமையாக சனி பகவானின் பங்கு இருக்கும். ஹோரையில் ஒற்றைப்படை ராசியில் 10 பாகைகளுக்கு மேல் 5 பாகைகள் சூரியனின்பங்கு இருக்கும். அதற்கு மேல் 3 பாகைகள் சந்திரனின் பங்கும் இணைந்திருக்கும். அதாவது, முதல் பத்து பாகைகளுக்கு மேல் 8 பாகைகள் பரவியிருக்கும். குரு த்ரிம்சாம்சகத்தில் முதல் 5 பாகைகள் சூரிய ஹோரையும், மிச்சமிருக்கும் 3 பாகைகளில் சந்திரனும் இணைந்திருப்பார்கள். இரட்டைப்படை ராசியில், 12 பாகைகளுக்கு மேல் 8 பாகைகளுக்கு குரு த்ரிம்சாம்சகம் இருக்கும். அதில் சந்திர ஹோரை 12க்கு மேல் 3 பாகைகளும், மிச்சமிருக்கும் 5 பாகைகளில் சூரியனின் பங்கு இருக்கும்.

ஒற்றைப்படை ராசியில், இரண்டாவது த்ரேக்காணத்தில் 10 பாகைகளுக்கு மேல் 8 பாகைகளுக்கு 5வது ராசிக்குடைய புதனின் பங்கு இருக்கும். மிஞ்சிய இரண்டு பாகைகளில் 9க்கு உடைய சுக்கிரனின் பங்கு இருக்கும். இரட்டைப்படை ராசியில் 12 பாகைகளுக்கு மேல் 8 பாகைகளில் சுக்கிர பகவானின் இணைப்பு இருக்கும்.

குருவின் த்ரிம்சாம்சகம் ஒற்றைப் படை ராசியில் 10 பாகைகளுக்கு மேல் 18 பாகைகள் வரை பரவியிருக்கும்; இரட்டைப்படை ராசியில் 12 பாகைகளுக்கு மேல் 20 பாகைகள் வரை பரவியிருக்கும். சனி, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் அத்தனை கிரகங்களுக்கும் விகிதாசாரப்படி பங்கு இருக்கும். அவற்றுடன் இணைந்த குரு த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், தன்னில் உதயமானவளை மாதரசியாகவும், கணவனுக்கு இணங்கினவளாகவும், தனது

பிறவிக்கு உகந்த பெருமையை எட்டுபவளாகவும், எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற்று நிறைவை எட்டியவளாகவும், தன்னைத் தேடி வந்த கணவனை அன்போடு மகிழ்விப் பவளாகவும் இருப்பாள் என்கிறது இந்தச் செய்யுள் (ஸ்வச்சந்தா...).

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

கிரகங்களின் ஒத்துழைப்பு

பெண்ணாகப் பிறக்கும் அவளிடம் பெருமையைச் சேர்த்தவன் குரு. புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய தட்பக்கிரகங்களின் ஒத்துழைப்பும், சனி, சூரியன் ஆகிய வெப்பக் கிரகங்களின் ஒத்துழைப்பும் அவளை இப்படி உருவாக்க, குருவுக்கு ஊக்கம் அளித்தன. சூரியனும் சந்திரனும் ஹோரையில் மட்டும்  பங்கேற்க வில்லை; ஆன்மா மனம் என்ற நிலையில், இந்தப் பெண்மணிகள் குணக்குன்றாக உருவெடுக்க உதவியர்கள் ஆவார்கள். புதன் அறிவையும், சுக்கிரன் செல்வத்தையும் நிறைவோடு அளிக்கிறார்கள். மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்குத் தன்னை அர்ப்பணிக்கும் எண்ணம், புதனின் பங்காக மாறிவிடுகிறது. வாழ்க்கை வளம்பெற சுக்கிரனின் பங்கு தேவைப்படுகிறது.

அறிவு முதிர்ச்சியின் மூலம் செயல்பாடுகளை அறவழியில் செயல்படவைத்து, அதன் மூலம் அவளும் அவளுடன் இணைந்தவனும் சமுதாயத்துக்குத் தங்களின் பங்கைச் செலுத்திப் பெருமைப்படும் தகுதியைப் பெற்றுக்கொடுக்கும் குரு த்ரிம்சாம்சகத்தின் பங்கு சிறப்பானது.

சனி பொறுமை, உழைப்பு ஆகியவற்றை அளித்து இலக்கை எட்ட உதவுகிறான். சூரியன், சுய கெளரவத்தையும் தெளிவான சிந்தனை யையும் புகட்டி, மனதை ஒருநிலைப்படுத்தும் எண்ணத்துடன் இணைத்து, இறுதிவரை பிரியாமல் இருக்கும் பக்குவத்தை அளிக்கிறான். சந்திரன், சூழலுக்கு உகந்தபடி நீக்குப்போக்கோடு செயல்படும் திறனில் நிலைத்து நிற்க உதவுகிறான். ராசியில் ஒட்டுமொத்தமாக இணைந்த சனி, அர்ப்பணிப்பு எண்ணத்தோடு பணிந்து செயல்படுவதில் ஆர்வத்தை வளர்த்திருக் கிறான். பிறர் விருப்பத்தை நிறைவேற்றும் தாட்சண்யத்தை குரு உண்டுபண்ணுகிறார். இப்படி, அத்தனை கிரகங்களும் ஒத்துழைத்து, குரு விரும்பும் மாதரசியை உருவாக்க தட்பவெட்பம் பாராமல் அடிபணிந்து விடுகிறார்கள்.

சந்தர்ப்பத்துக்கு உகந்த சிந்தனை மாற்றம்!

ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் போன்ற ராசிப்பிரிவுகளில் அமைந்த தட்பவெட்ப கிரகங்களின் பங்கும் குருவோடு இணையும்போது, அதில் பிறந்தவளின் உருவாக்கம் சிறப்புப் பெற்றுவிடுகிறது. நுகர்பொருள்களின் ஈர்ப்பு, ஆன்ம குணங்களின் வெளிப்பாடு  இப்படி இருவகையான திறமைகளும் இந்த இருவகையான திறமைகளையும் வெளிக்கொண்டு வருவது, கிரகங்களின் கூட்டுமுயற்சியால்தான் முடியும்.

மனித சிந்தனையின் மாறுபாட் டுக்கு உகந்த வகையில், அதாவது இலக்கை எட்டுவதற்காக ஏற்படும் சிந்தனை மாற்றத்தை உருவாக்க, மாறுபட்ட கிரகங்களின் விகிதாசார பங்கு மிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை. விளையாட்டுப் போட்டியிலும், வாதப் பிரதிவாதங்களிலும், பட்டிமன்றங்களிலும், நீதிமன்ற வாதங்களிலும் அந்தந்தச் சூழலுக்கு உகந்த வகையில் ஏற்படும் சிந்தனை மாற்றம் வெற்றிக்கு வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறோம். வாழ்க்கை யிலும் இன்பத்தைச் சந்திக்கும் போதும், இன்னலை எதிர்கொள்ளும்போதும் சந்தர்ப்பத்துக்கு உகந்த வகையி லான சிந்தனை மாற்றம் வெற்றியை ஈட்டித்தருவது உண்டு. குடும்ப வாழ்விலும் அறவழியில் செயல்படவேண்டிய கட்டுப்பாடு இருப்பதால், எதிர்பாராத இன்னல்களை எளிதாகச் சமாளிக்க, சந்தர்ப்பத்துக்கு உகந்த சிந்தனை மாற்றம் தேவைப்படும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

தேவை... யூக அறிவு!

தாம்பத்தியத்தில் இணையப் பரிந்துரைக்கும் வேளையில், அவர்களின் இயல்பை, திறமையைத் துல்லியமாக நிர்ணயிக்க இந்த த்ரிம்சாம்சக பலன் ஒத்துழைக்கும். இரு மனங்களின் போக்குதான் இணைப்பின் தொடர்பை இறுக்கமாக்கவோ, தளர்த்தவோ செய்யும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் இரண்டுக்கும் ஒத்துழைக்கும். எதை ஏற்பது, எதைத் தவிர்ப்பது என்ற முடிவில் அவர்களது இயல்பு முன்னுரிமை பெற்றுவிடும் இணைப்புக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் ஜோதிடத் தகவல்கள் இறுதி முடிவைச் சுட்டிக்காட்டாது. எனவே, இருவரது மன ஓட்டத்தின் துணையோடு தகவலை ஆராய்ந்து, முடிவை அறிவிக்க வேண்டும்.

ஒரே வேளையில் பிறந்தவர் களின் இரு ஜாதகங்களின் தகவல்கள் ஒன்றாக இருக்கும். அதை முடிவாக எடுத்துக் கூறினால் ஏமாற்றம் ஏற்படும். ஏனெனில், அவர்கள் இருவரது வாழ்க்கை அனுபவங்களும் இரு துருவங்களாக இருக்கும். அவர்களின் பூர்வ புண்ணியத்தின் மாறுபாடு (முன்ஜன்ம கர்மவினை) இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இரு மனங்களின் ஆராய்ச்சியில் அந்த பூர்வபுண்யத்தின் செயல்பாட்டை யூகித்து அறிய முடியும். அப்படி யூக அறிவு ஜோதிடரிடம் இருக்கவேண்டும் என்கிறது ஜோதிடம் (ஊஹாபோஹபடு; ஸித்தமந்திரோ ஜானாதி ஜாதகம்).

இயல்பை ஒட்டிய சிந்தனை மாற்றத்தைத் தெரிந்துகொள்ள த்ரிம்சாம்சக பலன் ஜோதிடருக்கு ஒத்துழைக்கும். ஜோதிடத் தகவல்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அவை இந்த மனப்போக்கு இருப்பவனிடம் செயல்படுமா என்பதை நிர்ணயிக்கும் திறனும் ஜோதிடருக்கு வேண்டும்.

முதியோர் கல்வியிலும், தபால் வழிக் கல்வியிலும், ஜோதிடக் கையேடுகள் மூலமாக ஜோதிடத் தகவல் களைத் திரட்டி அசைபோட்டு, ஆராயாமல் பலனாக வெளியிட்டு பெருமைப்படுவதில் சுரத்து இல்லை. பலன் சொல்வதில் ஜோதிடரின் திறமை வலுப்பெற்றிருக்க வேண்டும். அப்போது, ஜோதிட சாஸ்திரமும் வளர்ந்தோங்கி, மக்களுக்குப் பயன்படும். மக்களும் அதன் வழிகாட்டுதலில் துயரம் தொடாத இன்பத்தைச் சுவைத்து மகிழ்வார்கள்.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism