மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தாயே நீயே துணை!

இதோ... எந்தன் தெய்வம்! - 52

ற்றிலோ கடலிலோ நின்றுகொண்டு, அந்தத் தண்ணீரைக் கைகளில் ஏந்தி, மனதார வேண்டிக்கொண்டு, பிறகு கைகளில் உள்ள தண்ணீரை மீண்டும் அந்த ஆற்றிலோ கடலிலோ விடுவோமே... அப்படித்தான் நம்முடைய பக்தியும் பரிகாரங்களும்! நம்மிடம் இருப்பவை எல்லாமே சர்வ சக்தியான அம்பாள் கொடுத்தவைதான். ஆனாலும், அவளுக்கு நாம் அன்புடனும் பக்தியுடனும் புடவை சாத்தி மகிழ்கிறோம்; மூக்குத்தியோ, கால் கொலுசோ கொடுத்துச் சந்தோஷப்படுகிறோம். 

அம்பாளின் பெயரைச் சொல்லி, நம்மால் இயன்ற அளவுக்கு நூறு பேருக்கோ ஆயிரம் பேருக்கோ அன்னதானம் செய்கிறோம். அல்லது, அது போன்ற கைங்கர்யங்களை யாரேனும் செய்தால், அதில் அணில் பங்காக நம்மையும் இணைத்துக் கொண்டு, நம் பக்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

சக்தியில் சின்னது பெருசு என்று எப்படி இல்லையோ, அப்படித்தான் பக்தி யிலும் சின்னவர், பெரியவர் என்கிற பேதமெல்லாம் கிடையாது. நாம்தான் பேதம் பார்க்கி றோம். அம்பாள் எனும் பெரும்சக்தி பேதம் பார்ப்பதில்லை. விருப்பு வெறுப்பு என்பதெல் லாம் அவளுக்கு இல்லை. ஒருவர் எந்த அளவுக்கு ஒழுக்கமானவர், உள்ளத் தூய்மை உள்ளவர் என்பதை மட்டுமே பார்த்து, அவர்களையும் அவர்தம் குடும்பங்களையும் கண்ணெனக் கட்டிக் காக்கும் தாயுள்ளம் கொண்டவள் அவள்.

சென்னை அப்போலோ மருத்துவமனை யின் பிரதாப் ரெட்டி, அவரின் மகள் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, அவருடைய கணவர் விஜய குமார் ரெட்டி, அவரின் தந்தையார் ஓபுல் ரெட்டி என அனைவருமே காமாட்சி அன்னையின் பக்தர்கள். அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். நவராத்திரி மண்டபம், அன்னதான மண்டபம் முதலானவற்றைச் செப்பனிட்டுப் புதுப்பித்து, விஸ்தரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

தாயே நீயே துணை!

''ஆதிசங்கரர் துவங்கி எத்தனையோ மகான்கள் இங்கே காமாட்சி அம்பாளின் அனுக்கிரகத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம்மிடையே நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி மகாபெரியவா, காமாட்சி அம்பாள் கோயிலில் எத்தனையோ முறை தபஸ் செய்திருக்கிறார். அமர்ந்து அருளாசி

வழங்கியிருக்கிறார். கோயிலைப் பராமரிக் கவும் பாதுகாக்கவும் வழிவகைகள் செய்திருக் கிறார். இங்கே, இந்தக் கோயிலில் அவர் நடக்காத இடமில்லை. ஒவ்வொரு தூணையும் தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறார். இந்த ஆலயம் முழுவதும் அவரின் கடாட்சம் வியாபித்திருக்கிறது.

நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும் ச், மிகப்பெரிய புண்ணிய பூமி. காசி போல, ராமேஸ்வரம் போல, பத்ரிநாத், கேதார்நாத், கயிலாயம் போல இந்தக் காஞ்சி தேசமும் புண்ணிய தேசம். இங்கே, காமாட்சி அன்னையை தரிசிக்க வேண்டும் என்றோ, அல்லது வேறு என்ன காரணத்துக்காகவோ இந்த மண்ணை மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி... அவர்களைச் சட்டென்று கவனிக்கிறாள் காமாட்சி அம்பாள். 'என் வாழ்க்கையில் இப்படி இப்படியான குறை களும் வேதனைகளும் இருக்கின்றன. நீதான் தீர்த்து வைக்கணும், அம்மா!’ என்று நாம் அவளிடம் முறையிடாவிட்டால்கூட, நம்முடைய வேதனைகளை அவள் அறிவாள். துக்கங்களை உணர்வாள். பிள்ளையின் கலக்கம், பெற்றவளுக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? எனவே, நாம் வேண்டாமலேயே நம் கவலைகளையும் கஷ்டங்களையும் துக்கங் களையும் வேதனைகளையும் சடுதியில் தீர்த்து அருள்வாள் அன்னை!'' என்று சிலிர்த்துச் சொல்கிறார்கள் அம்பிகையின் பக்தர்கள்.

''மாசி முடிந்து பங்குனி துவங்கும் வேளையில், ஒவ்வொரு பெண்ணும் தீர்க்கசுமங்கலியா இருக்கணுங்கறதுக்காக, ஸ்ரீ காமாட்சி அம்பாளைப் பூஜிப்பது வழக்கம். இதை 'காரடையான் நோன்பு’ என்பார்கள். காமாட்சி அம்பாளின் உத்ஸவ விக்கிரகத்துக்கு முன்னாடி ஒரு கலசம் வைச்சு, அதில் மஞ்சள் சரடுகளைக்கட்டி, தீபமேற்றி பூஜை நடைபெறும்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

காமாட்சி அம்பாளின் திருவுருவப் படத்தை வைத்துக் கொண்டு. ஒரு தீபமேற்றி, அதற்கு அருகில் மஞ்சள் சரடு வைத்து, வீட்டிலேயே பூஜிக்கிற பெண்களும் இருக்கிறார்கள்.

'நமோ தேவ்யை மஹா தேவ்யை

      லோகமாத்ரே நமோ நம:

சிவாயை சிவரூபிண்யை

      பக்தாபீஷ்ட ப்ரதாபவ

காமாக்ஷீ காஞ்சி நிலயே

      மம மாங்கல்ய வ்ருத்தயே

நமஸ்கரோமி தேவேஸி மஹ்யம் குரு

     தயாம்ஸுவே’ என்று சொல்லியபடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

'தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம்  

    தராம்யஹம்

பர்த்துராயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா  

    பவ ஸர்வதா’  என்று சொல்லியபடி, மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொள்ளவேண்டும். காரரிசியும் துவரை அல்லது காராமணியும் கொண்டு அடை நைவேத்தியம் செய்வார்கள்.

'உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் வைத்தேன். ஒருக்காலும் என் கணவர் பிரியக்கூடாது’ என்று வேண்டி நமஸ்கரித்து வழிபடுங் கள். அந்த காமாட்சி அன்னை நிச்சயம் நம் இல்லத்தையும் கணவரையும் வம்சத்தையும் காத்தருள்வாள்.

லலிதா சகஸ்ரநாமத்தில், 'அவ்யாஜ கருணாமூர்த்தி’ என்று ஒரு வரி வரும். அதாவது, 'ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்’ எனும் அர்த்தத்தில் அப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும், 'இன்னலைத் தருபவளும் அவளே! இன்பத்தை வழங்கி அருள் பவளும் அவளே!’ என்று நாம் சொல்கிறோம்.

தாயே நீயே துணை!

காஞ்சி மகான் இப்படிச் சொல்கிறார்...

''நாம் இப்போது செய்கிற நல்லதை மட்டும் நினைத்துப் பார்த்து, நமக்குக் கஷ்டம் வருவது நியாயமா என்று கேட்கிறோம். தெய்வத்தை நொந்துகொள்கிறோம். ஆனால், யோசித்துப் பாருங்கள்; நாம் ஒவ்வொருத்தரும் நல்லது மட்டும்தானா செய்திருக் கிறோம்?

காரியத்தில் கெட்டது செய்யாவிட்டால்கூட, மனசால் எத்தனை மகாபாவங் களைப் பண்ணியிருக் கிறோம்! இதெல்லாமாவது இந்த ஜன்மத்து விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்று நமக்குத் தெரி யாது. இந்த விதையைப் போட்டால் இன்ன பயிர் வளரும் என்பது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம். அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம்.

இத்தனை கஷ்டத்துக்கு இடையேயும், அவளை நினைத்துக் கதி மோட்சம் தேடிக் கொள்கிற வழியைக்கொடுத் திருக்கிறாளே! இது அதிகப்படி கருணை அல்லவா?'' என்று கேட்கிறார் காஞ்சி மகா பெரியவா.

தாயன்பைப் போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியாது. நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், இத்தனை ஜீவராசிகளிடமும் வியாபித்து, துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது. எனவே, நமக்குக் கிடைத்தவை எல்லாமே அவளின் சக்தியில் இருந்தும் அருளில் இருந்தும் கிடைத்தவைதான். அதேபோல், நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் கொடுக்கிற மனம் கொண்டவள் அவள். கொடுத்தே தீருவாள்.

சகல லோகமும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வளமுடனும் வாழ, காமாட்சித் தாயை, கருணாம்பிகையை எப்போதும் வேண்டுவோம். இனிதே வாழ்வோம்!

தாயே நீயே துணை!

(நிறைவுற்றது)

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்