Published:Updated:

‘யோகா - ஒரு துளி ஆன்மிகம்!’

‘யோகா - ஒரு துளி ஆன்மிகம்!’

''அன்பான, அமைதியான, ஆரோக்கியமான உலகை உருவாக்குவோம். அதற்கான நேரம் இதுதான்.

 யோகா என்றால், ஒன்றியிருத்தல். நாம் மனம் ஒன்றி ஒன்றைச் செய்யும்போதுதான், அது பரிணமிக்கும். மன ஒருமையானது இறைவனை தியானிப்பதற்கு மிகவும் அவசியமாகும். அப்போதுதான் தெய்விக சக்தியை நம்மால் உணர முடியும். யோகா என்பதும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறைதான். யோகா ஒரு மருத்துவமுறையும்கூட! பல உடல் பிணிகளைப் போக்கி, மனதுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த யோகா மூலம் 'ஒரு துளி ஆன்மிக’மாவது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!''  யோகா குறித்து சத்குரு, திரையில் நிகழ்த்திய அறிமுக உரையைக் கேட்ட வாசகர்கள் அனைவரும் பரவசத்துடன் பயிற்சியைத் தொடங்கத் தயாராகிவிட்டனர்.

சக்தி விகடனும் ஈஷாவும் இணைந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வாசகர்கள் உடல்நலமும் மனவளமும் பெற்றுச் சிறப்புற்று வாழவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் நடத்தி வரும் இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 12.4.15 ஞாயிறன்று, நெய்வேலியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யோகா நமஸ்காரம் மற்றும் கிரியா யோகா குறித்து திரையில் சத்குரு சொல்லச் சொல்ல, மிகுந்த ஈடுபாட்டுடன் வாசகர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள். பிறகு, சத்குருவின் வழிகாட்டுதலின்படி, நெய்வேலி ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர் செந்தில்நாதன் செய்து காண்பிக்க, அதை அப்படியே வாசகர்களும் சிரத்தையுடன் செய்தனர்.

‘யோகா - ஒரு துளி ஆன்மிகம்!’

பயிற்சியின் இறுதியில் வாசகர்கள் தங்களுக்கு எழுந்த பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். வயிறு நிறைய உண்ட நிலையில், ஒருவர் யோகா பயிற்சி செய்யக்கூடாது; குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்கவேண்டும் என்பது போன்ற பல பயனுள்ள விளக்கங்கள் வாசகர்களுக்குக் கிடைத்தன.

''கொஞ்ச நாளாவே என் மனசுல ஏதோ ஒரு குழப்பம். அதனால எதுலேயுமே சரியா கவனம் செலுத்த முடியாம சிரமப்பட்டேன். இந்தப் பயிற்சிக்குக்கூட எங்க அம்மா வற்புறுத்திச் சொன்னதால்தான் இங்கே வந்தேன். இப்ப என் மனசு ரொம்ப லேசா ஆயிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்'' என்று மாணவி ஷைலஜா உணர்ச்சிப் பொங்கப் பேசினார்.

''இந்த யோகாவுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கலாமேன்னு சும்மாதான் வந்தேன். ஆனா, இந்த இரண்டு மணி நேரப் பயிற்சிக்கு அப்புறம் என் மனசு முழுக்க சந்தோஷம்தான் நிறைஞ்சிருக்கு. சக்தி விகடனுக்கும், ஈஷாவுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்!'' என்று உற்சாகம் பொங்கப் பேசினார் வாசகி லதா.

''யோகா செய்ததால், என் மனைவிக்கு சுகப் பிரசவம் நடந்தது. அப்பேர்ப்பட்ட மருத்துவ முறையா இந்த யோகாவுல இருக்குன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், சக்தி விகடன்ல வந்த அறிவிப்பைப் பார்த்தேன். உடனே வந்து கலந்துக்கிட்டேன். உண்மைதான்..! யோகா செய்யறதுனால உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கத்தான் செய்யுது. இதை அனுபவபூர்வமா உணர்றேன். இதை ஆன்மிகம்னு சொல்றதா, இல்லே மருத்துவமுறைன்னு சொல்றதான்னு எனக்குப் புரியலை. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். யோகாவை தினமும் செய்தால், நோய்நொடி இல்லாம சந்தோஷமா வாழமுடியும்!'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் டாக்டர் முருகன்.

உடலுக்குப் புத்துணர்ச்சி மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையையும் இந்தப் பயிற்சி வழங்கியதில் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி!  

முகாமின் இறுதியில், சத்குருவின் உரையாடல் கொண்ட சி.டி.அனைவருக்கும் வழங்கப்பட்டது. வாசகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி விடைபெற்றனர்.

படங்கள்: எஸ்.தேவராஜன்