சிறப்பு கட்டுரை
Published:Updated:

நண்பரும் நாமதேவரும் !

கலகல கடைசி பக்கம்வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

ண்பர் பைரவனுடன் நாற்பது வருட நட்பு எனக்கு. அனைத்துவிதமான நல்லது கெட்டது களிலும் ஜோடி பிரியாமல் கலந்துகொள்ளும் எங்களை உடன்பிறவா சகோதரர்கள் என்றே ஊர் அழைக்கும். 

ஒருமுறை, அலுவலக நிமித்தமாக ஜபல்பூர் சென்றிருந்த பைரவன், திரும்பி வரும்போது ஒரு நாய்க்குட்டியுடன் வந்தார். சிறிது நாட்களில், அது அவரது செல்லமாகிவிட்டது. மடியில் எடுத்துவைத்துக் கொஞ்சுவதும், உச்சி முகர்வதும், முத்தம் கொடுப்பதுமாக தன் செல்லத்தைச் சீராட்டி வளர்த்தார் பைரவன்.

ஒரு சுபயோக சுபதினத்தில் தன் செல்லத்துக்கு 'பெப்பர்’ என்று நாமகரணமும் சூட்டினார். நானும் அந்தப் பெயர்சூட்டு விழாவில் தவறாமல் கலந்துகொண்டேன். வெறுங்கையுடன் போக மனமில்லாமல், பெல்ட் ஒன்று வாங்கி, பெப்பருக்குப் பரிசளித்தேன். அடுத்து, பெரியதொரு வீட்டுக்கு ஜாகை மாறிய பைரவன், பெப்பருக்கென்று தனி பெட்ரூமையே ஒதுக்கித் தந்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்! பெப்பரும், காலையில் வீட்டு வாசலில் கிடக்கும் பேப்பரை எடுத்துவந்து கொடுப்பதில் துவங்கி, வாக்கிங் போகும்போது துணைக்குச் செல்வது வரை பலவிதங்களில் நண்பருக்கு உதவியாக இருந்தது. நாட்கள் நகர்ந்தன. தினமும் தலைவாழை இலையில் பெப்பருக்குச் சாப்பாடு, பெப்பருக்கென்றே தனி குளியல் சோப்பு, ஷாம்பு வகையறாக்கள், மாதம் தவறாமல் மருத்துவச் செக்கப், பண்டிகைக் காலங்களில் புதுத்துணி, ஓட்டலுக்குச் சென்று திரும்பினால் பெப்பருக்காக தனி பார்சல் வாங்கிவருவது... என நாளொரு பொழுதும் பொழுதொரு நேசமுமாக பைரவன் பெப்பர் நட்பு இறுகிக்கொண்டிருந்தது.

நண்பரும் நாமதேவரும் !

பார்க்க வேடிக்கையாகத் தோன்றினாலும், இவர்களின் இந்த அன்புப் பரிமாற்றம், பண்டரிபுரத்தின் அருளாளர் நாமதேவரை எனக்கு ஞாபகப்படுத்தியது.

பண்டரிபுரத்தில் பசியுடன் தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருந்த நாய் ஒன்று, பூஜைக்கென்று பக்தர்கள் எடுத்து வரும் பொருட்களைக் கவ்விச் சென்று சாப்பிடும். தெய்வத்துக்கென எடுத்து வரும் பண்டங்களில் நாய் வாய் வைப்பதை அபசாரமாகக் கருதிய பக்தர்கள், கோபம் கொண்டு அந்த நாயைக் கற்களால் தாக்கி, விரட்டியடிக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் உணவு எதுவும் கிடைக்காமல் வாடி வதங்கிப் போனது அந்த நாய். இதை நாமதேவர் கவனித்தார். 'நாயும் கடவுளின் குழந்தைதான்...’ என்று அவர் கூறியதை பக்தர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரு நாள்... வாயில் ஒரு ரொட்டித் துண்டுடன் அந்த நாய் ஓடிக்கொண்டிருக்க, கையில் ஒரு கிண்ணத்துடன் அதன் பின்னால் ஓடினார் நாமதேவர். ''ஓடாதே! நீ வாயில் வைத்திருப்பது உலர்ந்துபோன ரொட்டி. உன்னால் அதைக் கடித்துத் தின்ன முடியாது. நில். இந்தக் கிண்ணத்திலுள்ள நெய்யில் அதைத் தோய்த்துத் தருகிறேன்...'' என்று அவர் உரத்த குரலில் சொல்லியதைக் கேட்டு, ஓடுவதை நிறுத்தியது நாய். அருகில் சென்று, அந்தத் தெரு நாயை தன் மடி மீது அமர்த்தி, வாஞ்சையுடன் அதை வருடினார் நாமதேவர். ரொட்டியைத் துண்டங்களாக்கி நெய்யில் ஊற வைத்து, நாய்க்கு அன்புடன் ஊட்டிவிட்டார். அதன் பிறகு, நாயும் அவருடனே ஒட்டிக் கொண்டது.

உயிர்கள் அனைத்திலும் இறைவனைக் கண்டவர்கள் நம் அருளாளர்கள். அவர்களை அடியொற்றியதே, நண்பர் பைரவன் போன்றோர் காட்டும் பரிவும்!