ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

'இது செட்டிநாட்டு ஸ்டைல்!'

கொலு பார்க்க வாங்க...

##~##

ரந்து விரிந்த வீடுகளுக்கும், பாசத்துடன் நடத்துகிற விருந்தோம்பலுக்கும் பிரசித்திபெற்ற செட்டிநாட்டார், கொலு விஷயத்தில் சும்மா விட்டுவிடுவார்களா, என்ன? நவராத்திரி காலங்களில், செட்டிநாடு எனப்படும் காரைக் குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் எங்கு திரும்பினாலும் வீட்டுக்கு வீடு... பிரமாண்ட கொலுவைக் காணலாம்! 

'ஏதோ காரணங்களால், வேறு வழியில்லாமல் சொந்த ஊரை விட்டுட்டு வந்துட்டாலும், சொந்த ஊருக்கே உண்டான பாரம்பரியத்தையும், அதைக் கடைப்பிடிக்கும் போது கிடைக்கற நிம்மதியையும் விட்டுட முடியுமா?’ -

உற்சாகத்துடன் கேட்கிறார், சென்னை அடையாரில் வசிக்கும் சிவகாமி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்று கிறார், இவர். ''சின்ன வயசுல பொம்மை வாங்கித் தரச் சொல்லி, எவ்வளவு அடம் பண்ணியிருப்போம்! நவராத்திரி வந்தால் போதும்... எத்தனை விதமான பொம்மைகளைப் பார்க்க முடியுது! அதனால, சின்ன வயசுலேர்ந்தே கொலுவும் எனக்குள்ளே மிகப் பெரிய இஷ்டமான விஷயமா ஆகிப்போச்சு!'' என்று பால்யத்தையும் பொம்மைகளையும் மறக்காமல் பேசுகிற சிவகாமி, அந்தப் பகுதியின் கொலு ஸ்பெஷலிஸ்ட்! வருடம் தவறாமல் கொலு வைக்கிறார்; பரிசுகளையும் அள்ளிச் செல்கிறார்.

'இது செட்டிநாட்டு ஸ்டைல்!'
'இது செட்டிநாட்டு ஸ்டைல்!'

''கல்யாணமாகி சென்னை வரும்போது, என் கணவர்கிட்ட நான் வைச்ச கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான்... 'வருஷா வருஷம்  நவராத்திரிக்கு, வீட்டுல கொலு வைக்கணும்!’ உடனே சம்மதம் சொன்னார். அப்புறமென்ன... 94-ஆம் வருஷத்துலேருந்து, இதோ இந்த வருஷம் வரைக்கும் தொடருது... கொலுவுக்கும் எனக்குமான அற்புத பந்தம்! முதல்ல, மூணே மூணு படிகள்; சின்னச் சின்ன

'இது செட்டிநாட்டு ஸ்டைல்!'

பொம்மைகள்! அப்படியே பொம்மைகளைச் சேர்க்க ஆரம்பிச்சு இப்ப 11 படி வரைக்கும் வந்துட்டேன்னா, பாருங்களேன்!'' என்று விழிகள் விரிய, தான் சேகரித்து வைத்திருக்கும் பொம்மைகளைக் காட்டுகிறார் சிவகாமி.

''நான் எங்கே, எந்த ஊருக்குப் போனாலும், கொலுவுல வைக்க அங்கே நல்ல பொம்மைகள் கிடைக்குமானு தேடித் தேடி, பார்த்துப் பார்த்து வாங்கிட்டு வருவேன். இப்படி ரசிச்சு ரசிச்சு வாங்க ஆரம்பிக்கும்போதே, என் மனசுக்குள்ள இன்னொண்ணும் தோண ஆரம்பிச்சுது. அதாவது, ஒரு பொம்மை இப்படியிருந்தா நல்லாருக்குமேனு யோசிச்சு, ஒரு கட்டத்துல, நானே புதுசு புதுசா பொம்மைகளைத் தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன்!'' - பெருமிதத்துடன் சொல்கிறார் சிவகாமி. தற்போது இவர் வீட்டுக் கொலுவில் வைக்கப்படும் பெரும்பான்மையான பொம்மைகளை வடிவமைத்தவர் இவர்தானாம்!  

''என் பொண்ணுங்களுக்கும் கொலு வைக்கறதுலயும் பொம்மைகள் சேகரிக்கறதுலயும் ரொம்பவே ஆர்வம். பாரம்பரிய விழாவை, அடுத்த தலைமுறை மறக்காம இருக்காங்களேங்கற நிம்மதியும் சந்தோஷமும் எனக்குள்ளே!'' என்றவர், ஸ்ரீநடராஜரின் ஐந்து சபைகள், சிவனாரின் திருவிளையாடல்கள் என புராண- புராதனங்களை மட்டுமின்றி, நதி நீர் இணைப்பு போன்ற தற்போதைய பரபரப்பு களையும் தேவைகளையும் கருவாக்கி, உருவாக்கி, கொலுவாக்கி வைக்கிறாராம்!

''இதோ... இந்த வருஷம் அண்ணா ஹஜாரேவின் உண்ணாவிரதம்தான் கொலு தீம்! எப்படி என் செலக்ஷன்?''’ என்று கேட்டுவிட்டு, பொம்மைகளை சுத்தப்படுத்தத் தயாரானார் சிவகாமி.

கொலு வைக்க ஆச்சி ரெடி; கொலுவைப் பார்க்க நாமும் ரெடிதானே?!

- இரா.மங்கையர்கரசி

படங்கள்: ப.சரவணகுமார்