ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

உதவலாம்...வாருங்கள் !

உதவலாம்...வாருங்கள் !

'ஆசாரக் கோவை’ எனும் புத்தகத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். பல கடைகள் மற்றும் பதிப்பகங்களில் கேட்டும் கிடைக்கவில்லை. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த அன்பர்கள், விவரம் தந்து உதவுங்களேன்.

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61

உதவலாம்...வாருங்கள் !
##~##

பொள்ளாச்சி- ஆனைமலையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமாசானியம்மனின் பக்தை நான். இந்த அம்மனின் ஸ்லோகம், அஷ்டோத்திரம் மற்றும் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாராயணம் செய்து, ஸ்ரீமாசானியம்மனைப் பிரார்த்தனை செய்து வழிபட ஆவலாக உள்ளேன். இந்த ஸ்லோகங்கள் எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- நா.உமா, சென்னை-73

எங்களின் குலதெய்வம் ஸ்ரீகொப்பாட்டியம்மன் என்றும், திருச்சி மற்றும் தாத்தையங்கார்பேட்டை பகுதிகளில் இவளுக்கு ஆலயம் உள்ளது என்றும் சிலர் சொல்கின்றனர். கடந்த 50 வருடங்களாக குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கிற எங்களுக்கு குலதெய்வத்தின் இருப்பிடம் எது என்று தெரிந்தால், வழிபட்டுப் பலன் பெற பேருதவியாக இருக்கும். விவரம் தெரிந்த அன்பர்கள் உதவினால் மகிழ்வோம்.

- ஜி.திருஞானம், கிச்சிப்பாளையம்

என்னுடைய சிறுவயதில், 'ஜய ஜய ஆரத்தி விக்ன விநாயக, விக்ன விநாயக ஸ்ரீகணேசா, ஜய ஜய ஆரத்தி சுப்ரமணியா, சுப்ரமணியா கார்த்திகேயா’ என்கிற ஆரத்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறேன். தற்போது அந்தப் பாடல் மறந்துவிட்டது. அந்தப் பாடல் வரிகள் முழுவதும் தெரிந்த அன்பர்கள் எழுதி அனுப்பி உதவினால், மகிழ்வேன்.

- ஆர்.ராஜலட்சுமி, சென்னை-93

உதவலாம்...வாருங்கள் !

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளது சரித்திரத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். பல இடங்களில் தேடியும், இதுவரை கிடைக்கவில்லை, எங்கு கிடைக்கும் என்று விவரம் தெரிந்த அன்பர்கள் கூறினால் மகிழ்வேன். மேலும், ஸ்ரீஉடுப்பி கிருஷ்ணர் பற்றிய ஸ்லோகங்கள் கன்னடத்தில்தான் கிடைக்கின்றன. அன்பர்கள் யாரிடமாவது அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால், தந்து உதவுங்களேன்.

- பி.இராமச்சந்திரன், செம்பூர்-89

என்னுடைய பள்ளிக்காலத்தில் 'சிவகங்கா நகரில் வாழும் ராஜராஜேஸ்வரி’ என்ற பாடலை காலை இறைவணக்கத்தில் பாடுவோம். அந்தப் பாடல் தற்போது மறந்துவிட்டது. சிவகங்கை மன்னன் வணங்கிய ராஜராஜேஸ்வரி அம்மனைப் பற்றிய அந்த பாடல், சுத்தானந்த பாரதி இயற்றியது என்று நினைக்கிறேன். தகவல் தெரிந்த அன்பர்கள் அந்தப் பாடலை முழுமையாகத் தந்து உதவினால், நன்றியுடையவனாக இருப்பேன்.

- எஸ்.திருமலை, மதுரை-7          

'வாதித்த சூரரை வடிவேல் எடுத்து...’ எனத் தொடங்கி, 'ஆதித்த வரம் வருவாய் ஆவினக்குடி பெருமானே’ என்று முடியும் பாடலை, சிறு வயதில் பாடியுள்ளேன். தற்போது இந்தப் பாடல் மறந்துவிட்டது. எந்தப் புத்தகத்தில் இது உள்ளது என்றும் தெரியவில்லை. மேலும், ஒவ்வொரு கிழமையிலும் முருகப்பெருமானை வழிபடுவதற்கான துதிப்பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன? அல்லது, எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- ஆர்.கலாவதி, சென்னை-83

'அஷ்டபதி’யை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அது பற்றிய சி.டி அல்லது புத்தகம் எங்கு கிடைக்கும்? அஷ்டபதியைப் போதிக்கிற வகுப்புகள் உள்ளனவா?  

- மீனா கணபதி, கும்மிடிப்பூண்டி

 உதவிக்கரம் நீட்டியவர்கள்...

'திருமணம் மற்றும் விழாக்களுக்குச் செல்கிற வேளையில், அந்தந்த ஊர் ஆலயங்களைத் தரிசிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். தமிழகத் தில் உள்ள புராதன- புராணப் பெருமைகள் மிக்க ஆலயங்கள் பற்றிய விவரங்கள் குறித்த புத்தகம் ஏதும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?'' என்று பெங்களூரு வாசகர் சுகவனம் கேட்டிருந்தார்.

'வேங்கடம் முதல் குமரி வரை’ எனும் தலைப்பில் தமிழ் நிலையம் (எண் 40, சரோஜினி தெரு, சென்னை-17) எனும் பதிப்பகத்தார், புத்தகம் வெளியிட்டுள்ளனர். காஞ்சித் திருமடம், 'திருமுறைத் தலங்கள்’ எனும் நூலையும் (வர்த்தமானன் பதிப்பகம், 141, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17)படித்துப் பயன்பெறலாம் என்று உடையார்பாளையம் வாசகர் ம.மணி தெரிவித்துள்ளார்.

உதவலாம்...வாருங்கள் !

தேவாரத் தலங்கள், திவ்விய தேசங்கள், சக்தி பீடங்கள், திருப்புகழ் திருத்தலங்கள், அபிமான க்ஷேத்திரங்கள், வைப்புத் தலங்கள் ஆகிய புத்தகங்களை சாய் குமார் என்பவர் (93828 72358) வெளியிட்டுள்ளார். இந்த நூல்களைப் படித்தால், அனைத்து ஊர்களின் ஆலயங் களையும் அறியலாம் என்று சென்னை வாசகர் சுயம்பு தெரிவித்துள்ளார். தமிழகக் கோயில்களின் முகவரிகளை பல்லடம் வாசகர் சி.கதிர்வேல் அனுப்பி வைத்துள்ளார். இது வாசகர் சுகவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

''ஏக தந்த ஸ்தோத்திரம் கொண்ட புத்த கம் எங்கு கிடைக்கும்? அல்லது, அன்பர்கள் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்'' என்று வாசகி மாலினி நடராஜன் 12.7.11 இதழில் கேட்டிருந்தார்.

சென்னை வாசகர் கே.நாராயணன் அந்த ஸ்தோத்திரத்தைப் பிரதி எடுத்து அனுப்பியுள்ளார். வாசகி மாலினிக்கு அது அனுப்பி வைக்கப்படுகிறது.

'மனநோயில் இருந்து மீண்டு பத்து வருடங்களாகிவிட்டன. ஆனாலும், இப்போதும் மாத்திரை- மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். முழுவதுமாக இதிலிருந்து மீள்வதற்குத் தலங்கள், பதிகங்கள் ஏதேனும் உள்ளதா?'' என்று 12.7.11 இதழில், பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

ஸ்ரீமந்த்ராலயம் சென்று, ஸ்ரீராகவேந்திரரை நெய் தீபமேற்றி வணங்கி வழிபடலாம். மேலும், இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள நவபிருந்தாவனம் (பெல்லாரி மாவட்டம்) சென்று, அங்கே திருச்சமாதி கொண்டுள்ள ஒன்பது மகான்களையும் பிரதட்சிணம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் மனம் தெளிவுறும்; நிம்மதி பெறலாம் என்று கும்பகோணம் வாசகர் கூந்தலூர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்க நாதரையும் ஸ்ரீபரிமள நாயகியையும் வழிபடுவது விசேஷம். பெருமாளின் திருமுகத்தில் சூரியன்; நாபியில் ஸ்ரீபிரம்மன்; திருவடியில் சந்திரன் ஆகியோர் இருந்து அவரை வழிபடுவதாக ஐதீகம். மேலும், சந்திரன் மனோகாரகன் என்பதால், கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் சந்திரன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம் என்று பல்லடம் வாசகர் சி.கதிர்வேல் தெரி வித்துள்ளார். மேலும் வாசகர் கதிர்வேல், மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாக்கும் மாணிக்கவாசகர் பதிகத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.