Published:Updated:

திருமகளே, வருக !

உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க...

திருமகளே, வருக !

உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க...

Published:Updated:

கேட்கும் வரம் அனைத்தையும் வாரி வழங்குபவள், திருமகள். பாற்கடலில் அவள் அவதரித்த நன்னாளே, வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள்... அதாவது, பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையே, வரலட்சுமி பூஜைக்கு உரிய நாளாகும். இந்த வருடம், 28.8.15 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம். 

எப்படி வழிபடுவது?

தூய ஆடை உடுத்தி, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிறைந்த மனமும் மகிழ்ச்சியும் மேலிட, திருமகளை ஆராதிக்க வேண்டும். சிலர், வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீ மகாலட்சுமியின் திருவுருவை வரைந்து வழிபடுவர். சிலர், கலச வழிபாடு செய்வார்கள். இந்த முறைப்படி, கலசத்தில் அவளின் திருமுகத்தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான தூய்மையான பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைக்கவேண்டும்.

திருமகளே, வருக !

பின்னர், பூஜையில் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் ஆகிய இனிப்புகளைப் படைத்து, தாமரை, துளசி, வில்வம் ஆகியவற்றால் அவளை அர்ச்சித்து, நம் அம்மையாகிய அவளை அன்போடு அழைத்து வழி பட்டால், நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள் திருமகள்; நாம் கேட்பனவற்றையெல்லாம் தட்டாமல் தந்தருள்வாள். அப்போது, நமக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி, பாடல்கள் பாடி, மகாலட்சுமியை பூஜிப்பது விசேஷம்.

குறிப்பாக, 'ஓம் மஹா தேவ்யை சவித்மஹே விஷ்ணு பத்ந்யை தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’ எனும் மகா லட்சுமி காயத்ரீ மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அவளை ஆராதித்தால் சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம்.

நோன்புச் சரடு

இந்த பூஜையில், வெண்மையான சில இழைகள் கொண்ட நூலில், மங்கலங்களை அள்ளித் தருகிற மஞ்சளைத் தடவி, நவ சக்திகளின் வடிவமாக, ஒன்பது முடிச்சுகளை அதில் இட்டு, நடுவில் ஒரு பூவையும் வைத்து, தேவியின் அம்சமாகவே திகழ்கிற கலசத்தின் மீது சாற்றி, பிறகு பூஜை முடிந்ததும், வீட்டில் உள்ள பெரியோர் முதலில் கையில் கட்டிக் கொள்ளவேண்டும். அடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது, ஸ்ரீ வரலட்சுமி பூஜையை நிறைவு செய்ததையும் ஒளிமயமான வாழ்வின் துவக்கத்தையும் குறிக்கிறது.

புவனேஸ்வரி,

சென்னை - 14