வாசகர்களே! 

இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான  பிடித்தமான பகுதி என்பதை அறிவோம்.  எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை அமையாது இல்லையா? அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம்.  அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள் !

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில்

பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம்.

சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

சக்தி விகடனில் 'உதவலாம் வாருங்கள்!’ பகுதி மீண்டும் இடம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓவியர் வினு அவர்கள் வரைந்த 'ஸ்ரீ ஜெயஹனுமான்’ வண்ணப்படம் எனக்கு வேண்டும். எவரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்களேன். அல்லது அந்தப் படம் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் அறிந்தவர்கள், அதுபற்றிப் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நா.வசந்தா, சென்னை - 47

'ஸ்ரீ மல்லிகார்ஜுன சுப்ரபாதம்’ தமிழ் அர்த்தத்துடன் கூடிய புத்தகம் எங்கு கிடைக்கும்? பல இடங்களில் முயற்சித்தும் எனக்குக் கிடைக்கவில்லை. சக்தி விகடன் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால், அனுப்பிவைத்து உதவுங்களேன்.

வெ.சியாமளா ரமணி, செகந்திராபாத்

எனக்கு வயது 72. தினமும் என்னால் இயன்றவரை கடவுள் ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம். ஆர்யாத்விசதி என்கிற ஸ்தோத்திர புத்தகமும், சப்தரிஷி ராமாயணமும் எனக்குத் தேவைப்படுகிறது.

வாசக நண்பர்கள் எவரிடமேனும் இந்தப் புத்தகங்கள் இருந்தால் தந்து உதவமுடியுமா?

கே.ஆர்.அனந்தலக்ஷ்மி, சென்னை - 5

எங்கள் மூதாதையர் வாழ்ந்த ஊர், திருச்சி அருகிலுள்ள சிந்தாமணி. என் தாத்தாவின் காலத்திலேயே எங்கள் குடும்பம் பட்டுக்கோட்டைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அதனால், எங்களின் குல தெய்வம் எதுவென்று தெரியாமல் போய்விட்டது. எங்கள் குலதெய்வம் பெண் தெய்வம் என்றும், அந்தத் தெய்வத்துக்குக் கரும்பால் கால் நட்டு,

வெற்றிலையால் பந்தல் போட்டு, பொங்கலிட்டுப் படைத்ததாக, எனது ஆத்தா கூறியிருக்கிறார்கள். இப்படியான வழிபாடு நடக்கும் பெண் தெய்வம் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவினால், நாங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர ஏதுவாக இருக்கும்.

எம்.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை

கந்த சஷ்டி கவசத்தில் டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண...,  ரரரர ரரரர, ரிரிரிரி ரிரிரிரி, டுடுடுடு டுடுடுடு... எனப்போன்ற வரிகள் வரும். இவற்றுக்குப் பொருள் உண்டா? இந்த வரிகளைப் பயன்படுத்தியதற்கான தாத்பரியம் என்ன? விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

இயற்கைதாசன், கொட்டாகுளம்

ஓர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, ஒரு வருடம் கழித்து அதாவது முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் வருஷாபிஷேக வைபவங்களை எந்த நாளில் நடத்தவேண்டும்? கும்பாபிஷேகம் நடந்த ஆங்கில தேதியைக் கணக்கில் கொள்ளவேண்டுமா அல்லது தமிழ் மாதம், திதி, நட்சத்திரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

ச.குருசாமி, அருப்புக்கோட்டை

உதவிக்கரம் நீட்டியவர்கள்

கடந்த இதழில், சனிபகவான் குடும்பத்தோடு அருளும் ஆலயம் எங்குள்ளது என்று வள்ளியூர் வாசகர் லிங்கேஸ்வரன் கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு, 'கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது திருநரையூர். இங்குள்ள சிவாலயத்தில் மனைவியர் மந்தாதேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடனும் மகன்கள் குளிகன் மற்றும் மாந்தியுடனும் அருள்கிறார் மங்கள சனிபகவான்’ என்று பதில் அளித்திருக்கிறார், சென்னைபம்மலைச் சேர்ந்த வாசகர் ஹரிஹரன்.

சக்தி விகடன் 4.8.15 தேதியிட்ட இதழில், இந்திரன் மற்றும் வருண பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் வேண்டும் என்று பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாசகர்                        ஆர்.சத்தியமூர்த்தி கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட தேவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை, சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சியாமளா ராஜகோபால், திருச்சி வாசகி சரோஜா சுதர்சன், ஆற்காடு வாசகி கேதாரகெளரி ரேகா ஆகியோர் அனுப்பிவைத்திருந்தனர். அது வாசகர் சத்தியமூர்த்திக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த காயத்ரி மந்திரங்கள் இங்கே உங்களுக்காகவும்...

இந்திரனுக்கான காயத்ரி மந்திரங்கள்:

ஓம் தத்புருஷாய வித்மஹே சகஸ்ராக்ஷாய தீமஹி

  தன்னோ இந்திர: ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி

  தன்னோ சகஸ்ர: ப்ரசோதயாத்

வருண பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்:

ஓம் பஸ்சிமேசாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி

தன்னோ வருண: ப்ரசோதயாத்

ஓம் ஜீம்பகாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி

தன்னோ வருண: ப்ரசோதயாத்

சக்தி விகடன் 4.8.15 தேதியிட்ட இதழில், காமாட்சியம்மன் விருத்தம் எனும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சென்னை வாசகி புவனேஸ்வரி கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட இந்த நூல் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில் அருகில் உள்ள 'கிரி டிரேடிங்’ புத்தக நிலையம், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகிய இடங்களில் கிடைக்கும் எனும் தகவலைத் தந்து உதவிய வாசகியர்கள்: பொன்னேரி சு.நவீனாதாமு, சென்னை ஜெபகௌரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு