Published:Updated:

தமிழ்க்கடவுள் முருகன் ஈழத்து மாப்பிள்ளையான கதை! #Thaipusam

தமிழ்க்கடவுள் முருகன் ஈழத்து மாப்பிள்ளையான கதை! #Thaipusam
தமிழ்க்கடவுள் முருகன் ஈழத்து மாப்பிள்ளையான கதை! #Thaipusam

ழகன், குமரன், கந்தன், கடம்பன், கார்த்திகேயன், கதிர்வேலன், கதிர்காமன் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தைப்பூசம். மாதம்தோறும் வரும் பூசம் சிறப்புதான் என்றாலும் தைப்பூச நாளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. சூரியன் வட திசைப் பயணம் முடித்து, தென் திசைப் பயணம் தொடங்கும் உத்தராயன காலத்தின் தொடக்கமான தை மாதத்தில் வரும் முதல் பூசம்.

தைப்பூசத்துக்கும், தமிழ்க்கடவுள் முருகனுக்கும் என்ன தொடர்பு?

வைகாசி விசாகத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து அவதரித்த முருகக் கடவுள்.

கார்த்திகை மாதத்தில் அன்னை சக்தியின் அணைப்பால் ஒருவராகி, தைப்பூசத்தில் தன் அன்னையிடம் வேல்வாங்கி( புராணத்தில் பார்வதி என்றும், சில சங்க இலக்கிய நூல்களில் கொற்றவை என்றும் சொல்லப்படுகிறது) ஐப்பசி சஷ்டியில் அசுரனை அழித்து, பங்குனி உத்திரத்தில் வள்ளியை மணம் முடித்தான் நம் வேலன்.

இந்தத் தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுடைய வேலின் ஒளியாகத் திகழும் கதிர்காமத்தில் இருக்கும் கந்தக் கடவுளின் திருக்கோயிலை தரிசிப்போமே...

முருகன் வள்ளியைச் சந்தித்து காதல் கொண்டு, கரம் பற்றிய இடம் தொண்டை மண்டலத்தில் உள்ள வள்ளிமலை என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஈழத்தமிழர்களின் நம்பிக்கையோ வேறு மாதிரியாக இருக்கிறது.

'முருகன் பிறந்தது வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கலாம். ஆனால், மணம் முடித்தது கதிர்காமத்தில்தான். எனவே, முருகன் ஈழத்து மாப்பிள்ளை' என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

கதிர் என்றால் ஒளி; காம என்பது கிராமத்தின் திரிபு. வேலவனின் வேலின் ஒளியாகத் திகழும் கிராமம்தான் கதிர்காமம்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் அம்பாந்தோட்டையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கதிர்காமம். வேட்டுவ குலப் பெண்ணான வள்ளியை காதலித்துக் கரம் பிடித்த இடமாகச் சொல்லப்படுகிறது. கதிர்காமம் முருகன் கோயிலில் சிங்களர்களும் வழிபடுகிறார்கள்.

இது குறித்து வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் விரிவாக விளக்குகிறார்

"ஈழச்சமய வரலாற்றில் அப்படித்தான் சொல்லப்படுகிறது. கதிர்காமத்தில் வேட்டுவ குலத்தில் பிறந்தவள் தான் வள்ளி என்றும், சூரனை வதம் செய்ய வந்தபோது வள்ளியைச் சந்தித்து முருகன் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. திருப்புகழில் (பாடல் 441) அருணகிரிநாதர் " வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே" என்று பாடியிருக்கிறார்.

அங்கேயும் சூரன்மலை, வள்ளிமலை இருக்கிறது. அதையொட்டிதான் கதிர்காமம் மலை இருக்கிறது. திருக்கயிலை மலையும், கதிர்காமம் மலையும் ஒரே நேர்க்கோட்டில்(தீர்க்கரேகை) வரும். மிகவும் புகழ் வாய்ந்த திருத்தலம் இது. ஒரு காலத்தில் விக்கிரகங்கள் வைத்து வழிப்பட்ட திருத்தலம்தான் இது. 'கனகமாணிக்க வடிவேலனே' என்று அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். ஆனால், தற்போது விக்கிரகம் இல்லை. ஓவியங்களாகத்தான் வழிபடப்படுகிறது. மகான் ஒருவர் மந்திரப்பூர்வமாக விக்கிரகத்தை ஒரு பெட்டியில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். கோயிலில் ஏழு திரைகள் இருக்கும் . முதல் திரையில் முருகனின் ஓவியம் இருக்கும். அதைத் தாண்டி மற்ற திரைகளில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஏழாவது திரைக்குப் பின்னால்தான் அந்தப் பெட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்போதுள்ள ஆலயத்தை 1634 - ம் ஆண்டு இரண்டாம் ராஜசிங்கன் என்னும் அரசன் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் சிறிய கோயிலாக வேடர்கள் கையில் இருந்த இந்தக் கோயில், தற்போது சிங்களவர்கள் கைகளில் இருக்கிறது. அவர்கள்தான் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்வதற்கு முன்பாக முகத்தை துணியால் மூடிக்கொள்கிறார்கள் கோயிலில் ராஜகோபுரம் , கர்ப்பகிரகம் எல்லாம் கிடையாது. முருகனுக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காட்டுவார்கள். பழத்தை நறுக்கித்தான் பூஜை செய்வார்கள். மலை மீது 'கதிர்வேல்' இருக்கும் திசையை நோக்கியும் தீபாராதனை காட்டுவார்கள். பொதுவாக விபூதி வழங்கப்படுவதில்லை, தமிழர்களைக் கண்டால் விபூதி கொடுப்பார்கள்.

காலையில் பத்து மணிக்கு மேல்தான் கோயிலைத் திறப்பார்கள். வழிபாடு முடிந்த சில மணி நேரத்திலேயே கோயிலை மூடிவிடுவார்கள்.சரியான பராமரிப்பில்லாமல் கோயில் இருக்கிறது. அருகிலேயே விநாயகர், தெய்வானைக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. அருகில் வள்ளிக்கும் கோயில் இருக்கிறது. காஷ்மீரிலிருந்து கதிர்காமத்துக்கு வந்து முருகனை வழிபட்டு நாளடைவில் சமாதியடைந்த கல்யாணகிரி என்பவரின் ஜீவ சமாதி அருகிலேயே உள்ளது.

கதிர்காமம் முருகனுக்கு உண்டியலில் காசோலை எழுதிப் போடுகிறார்கள். கதிர்காம முருகன் பெயருக்கு செக் எழுதிப் போட்டால், செல்லுபடியாகும் என்கிறார்கள். எந்தவித பக்தியும் இல்லாமல் முழுக்க பணத்துக்காக மட்டுமே கோயில் பராமரிக்கப்படுவதாகவே தெரிகிறது." என்கிறார் வலையப்பேட்டை கிருஷ்ணன்.