Published:Updated:

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா? - #SaiBaba

சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா? - #SaiBaba
சாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா? - #SaiBaba

னம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறுபவர். 

நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார்.

பின்வரும் சம்பவம் அந்தப் பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது.

ஷீரடிக்கு நானூறு மைல் தொலைவில் வாழ்ந்தவர் திருமதி சாந்தா என்னும் பெண்மணி. இவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவுக்கு விரதமிருந்து, நைவேத்தியம் செய்து அவரின் திருவுருவப் படத்துக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம்.

ஒருநாள் வியாழக்கிழமை...

அன்று விடுமுறை என்பதால், அவளின் மகன் பாபு வீட்டில் இருந்தான். தன் தாய் பலவிதமான பலகாரங்களைச் செய்வதைக் கண்டு, அவளிடம், ''அம்மா! இன்று நம் வீட்டுக்கு விருந்தினர் யாராவது வரவிருக்கிறார்களா? ஏன் இத்தனை விதமான இனிப்புகளும் பட்சணங்களும் செய்கிறீர்கள்?'' என்று கேட்டான்.

அவனுக்கு பதில் அளிக்கும்விதமாக சாய் பாபாவின் புகைப்படத்தைக் காட்டி, "இவர் ஷீரடியில் வசிக்கிறார். இவருக்கு நைவேத்தியம் செய்வதற்காகவே அதிரசம், பாயசம் முதலியவற்றைச் செய்துவைத்திருக்கிறேன்" என்றாள்.

இதைக் கேட்ட பாபு ஆச்சர்யத்துடன், ``அம்மா! படத்துக்கு முன்னாடி வைத்தால், இவர் எப்படி சாப்பிடுவார்?’’ என்று கேள்வி எழுப்பினான். மேலும், ``ஷீரடி ரொம்பத் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவரால் எப்படி வர முடியும்?’’ என்றான்.

தன் பூஜை வேளைகளில் மும்முரமாக இருந்த சாந்தா அவனைச் சமாதானப்படுத்தும்விதமாக, "சரியாகப் பன்னிரண்டு மணிக்கு பாபா நம் வீட்டிற்கு வருவார். நீ பொறுமையாக இரு. நிச்சயம் அவர் வருவார்" என்றாள். 

அப்போது விளக்கில் எண்ணெய் இல்லாததைக் கவனித்தவள், தன் மகனிடம், ''கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்கொள். நான் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டுக் கடைக்குச் சென்றாள்.

பாபுவின் கண்கள் வாசலை நோக்கியே இருந்தது. படத்தில் இருக்கும் சாய் பாபாவை நேரில் காண அவன் மனம் விரும்பியது. அவன் மணி பன்னிரண்டு ஆவதற்காகக் காத்திருந்தான்.

அதே நேரம் - 

ஷீரடியில் மதிய ஆரத்தி முடிந்து அனைவரும் பாபாவிடம் கற்கண்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
ஆனால், கற்கண்டை விட மிகவும் சுவையானது அவரின் அருளுரை. கல்கண்டின் இனிமையைப்போலவே அவர் பேசத் தொடங்கினார்.

"உங்களுக்கு எந்த வகையிலும் உறவில்லாத ஒருவர், ஆறறிவு உள்ள மனிதராக இருக்கட்டும், பிராணிகள், விலங்குகள் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை அன்புடன் நடத்துங்கள். உங்களை நாடி வருவோரை அன்புடன் வரவேற்று, உபசரியுங்கள். அவர்களிடத்தில் வெறுப்பினைக் காட்டாதீர்கள். அவர்கள் வேண்டியதை உங்களால் கொடுக்க இயன்றால் அளியுங்கள். இல்லையேல் அமைதியாயிருங்கள். அதை விடுத்து அவர்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். உலகமே தலைகீழாக மாறட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய நல்ல குணத்தை மாற்றாதீர்கள். கடவுள் ஒருவரே நமக்கு மேலானவர். அவரின் செயல்கள் அனைத்தும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நம்முடைய ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் அவரே. அவரின் அருளாசியினால் மட்டுமே நாம் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும்" என்று கூறினார்.

இத்தகைய சிறப்பான அமுதமொழிகளை பாபா கூறி முடித்ததும், பக்தர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அந்தத் தருணத்தில் பாபுவின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்ப்பதற்கு கதவைத் திறந்தான் பாபு. வெளியே வெள்ளை உடையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து சாயிநாதர் நின்றிருந்தார்!

கடையிலிருந்து தன் தாய் திரும்பி வந்ததும், ''அம்மா, நீ சொன்னதுபோல் பாபா நம் வீட்டுக்கு வந்தார். அதுவும் சரியாக பன்னிரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினார்.  திறந்து பார்த்தால் பாபா நின்றுகொண்டிருந்தார். 'நீ என்னை நினைத்து அழைத்தால், நான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வந்துவிடுவேன்' என்று கூறி, ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்'' என்று கூறினான்.

பாபாவின் லீலைகள் அந்தத் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்பதால், மகன் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனவளாக, பாபாவின் திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் செய்தாள்.

தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் சென்று சாயிநாதர் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார். இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்

இன்னொரு சம்பவம்...

பாபாவின் மீது பக்தி அதிகம் கொண்ட ஒரு பெண், தினமும் தான் சமைத்த உணவினை பாபாவுக்கு நைவேத்தியமாக வைத்துவிட்டு, அதன் பிறகே அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். 

ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால், பாபாவிற்கு அன்றாடம் செய்யும் நைவேத்தியத்தைச் செய்ய இயலவில்லை. அதைப் பற்றி அவள் யோசித்து மனம் வருந்திக்கொண்டிருக்கும்போது, அவள் வீட்டின் வாசலில் ஒரு நாய் நிற்பதைக் கண்டாள். அதற்கு அளிப்பதற்காக திண்பண்டம் எடுக்க வீட்டிற்குள் விரைந்தாள். 

ஆனால், அவள் திரும்பி வருவதற்குள் அந்த நாய் சிறிது தொலைவு சென்றுவிட்டது. அந்தப் பெண் ஏமாற்றத்துடன் பின்வருமாறு வேண்டலானாள், 'சாயிநாதா! தாங்கள்தான் அந்த நாயின் வடிவில் என்னிடம் உணவு பெற வந்தீர்கள் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். நான் நினைத்தது உண்மையானால் அந்த நாய் இங்கு வந்து நான் கொடுக்கும் திண்பண்டத்தை உண்ண வேண்டும்' என்று வேண்டினாள்.

அதிசயிக்கும் விதமாக தொலைவில் இருந்த நாய் ஓடி வந்து, அவள் வைத்த தின்பண்டத்தைச் சாப்பிட்டது. 

ஷீரடி சாய் பாபா பற்றி முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....