Published:Updated:

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து... ஆகமங்கள் வழிகாட்டல் என்ன?

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து... ஆகமங்கள் வழிகாட்டல் என்ன?
மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து... ஆகமங்கள் வழிகாட்டல் என்ன?

உலகமே வியந்து பார்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், அரிய பல கலைகளின் பொக்கிஷமாகவும் திகழ்கிறது. உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்றுதான் (2-2-18) மாசி மண்டல உற்சவ விழாவினையொட்டி கொடியற்ற விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி மீனாட்சியையும் சொக்கரையும் தரிசித்து ஆனந்தப்பட்டனர். அந்த சந்தோஷம் முழுக்க வடியாத அதே நாளின் இரவில்தான் கிழக்குக் கோபுர வாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமானதுடன், பெருமளவு புறாக்களும் தீயில் கருகியதுதான் தாங்க முடியாத துயரம். தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்தத் தீவிபத்தால் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து என்று தகவல்கள் பரப்பப்படுகின்றன. பல்வேறு சாந்தி பூஜைகளைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த நம்முடைய சந்தேகங்களை குமார சிவாசாரியாரிடம் கேட்டோம்.


``மனிதர்களின் அஜாக்கிரதையாலும், விஷமிகளின் தீய செயல்களாலும்தான் இதுபோன்ற தீ விபத்துகள் நடைபெறுகின்றன. எப்படி நடந்தாலும் கோயிலுக்குள் நடக்கும் இது போன்ற விபத்து தீய சகுனமாகவே காலம் காலமாகக் கருதப்படுகிறது. மன்னர்களால் உருவாக்கப்பட்ட பழைமையான கோயில்கள் ஆகம விதிப்படி, எல்லாவித இயற்கை சீற்றங்களையும் தாங்கும்விதமாகவே அமைக்கப்பட்டன.

முக்கியமாக எந்தக் காரணத்துக்காகவும் ஆண்டவனின் தெய்விக சாந்நித்யம் மாசுபட்டுவிடக் கூடாது என்று கருதியே கருவறையில் இருக்கும் தெய்வ மூர்த்தங்களின் பீடத்துக்கு அடியிலும், கோபுரக் கலசங்களின் உள்ளேயும் யந்திரங்களையும் வைத்துப் பாதுகாத்தார்கள். எனினும், இது போன்ற விபத்துகள் நடந்தால் அது அசுப சகுனமாகவே கருதப்பட்டது. 
முக்கியமாக ஆலயங்களில் தீ விபத்துகள் உண்டானால், அது ஆட்சியாளர்களுக்கும் ஆட்சிக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும். மக்களுக்கும் நிம்மதியில்லாத சூழலை உருவாக்கும். விளைச்சல் பாதிக்கும். எதிரி நாடுகளால் பிரச்னைகள் தோன்றும் என்றே சொல்லப்பட்டுவருகிறது. அதற்கேற்றாற்போல பல சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. எனவே, கோயிலைப் பராமரிப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதைப் போன்றதுதான். 

பேராசையின் காரணமாக கோயில்களை வணிக வளாகம்போல மாற்றி பக்தர்களுக்கும், வழிபாடுகளுக்கும் இடையூறு செய்வது நல்லதல்ல. ஆண்டவன் உறையும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். தியானிக்கும் இடம் சந்தைக்கடையாக மாறுவது நல்லது அல்ல. எங்கே இரைச்சலும் பொய்யும் அதிகமாகிறதோ அங்கு இயற்கைச் சீற்றம் உருவாகத்தான் செய்யும். மீனாட்சி அம்மன் கோயிலைப்போல ஸ்ரீரங்கம், காளையார்கோவில் போன்ற இடங்களிலும் இப்படி தீ விபத்து உண்டானதைப் பார்த்திருக்கிறோம். எனவே, இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கும் அரசுக்கும் இந்தத் தீ விபத்தால் தீங்கு ஏதும் விளையாமல் இருக்க நமது ஆகமங்கள் வழிகாட்டியுள்ளன. முக்கியமாக வாதுளம், காரணம், சுப்ரபேதம் போன்ற ஆகமங்கள் தீ விபத்துக்குப் பரிகாரங்களைச் சொல்லியிருக்கின்றன. 


ஆவாஹந்தி ஹோமம், நவகிரக அனுகூல யாகம் போன்றவற்றை தீ விபத்து நடைபெற்ற ஆலயங்களில் 48 நாள்களுக்குள் நடத்த வேண்டும். அப்போதுதான் அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டதைப்போல மீண்டும் தெய்வ சாந்நித்யம் பெறும். சிவாகம மூர்த்தி ரகசியத்தில் பலவித பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஆவாஹந்தி ஹோமம் என்பது அன்னபூரணி, மகாவிஷ்ணு, இந்திரன், பகன், தாதா ஆகிய ஐந்து கடவுளர்களையும் பாதிக்கப்பட்ட கோயில் மகா மண்டபத்தில் கலச வடிவில் ஆவாஹணம் செய்து, அந்தக் கலசங்களை யானைகளின் மீது வைத்து, கொண்டு செல்ல வேண்டும். கலச தீர்த்தத்தை அந்தக் கோயிலின் கடவுளர்களுக்கு அபிஷேகம் செய்விப்பதுடன், சிறிது தீர்த்தத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் தெளித்து சாந்தி செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. இப்படிச் செய்தால் யாருக்கும் எந்தவிதக் கெடுதல்களும் வராது" என்றார்.

எல்லாக் குறைகளும் நீங்கி பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று எண்ணித்தான் மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலே இப்படிப் பாதுகாப்பில்லாமல் இருந்தால், அவர்கள் எங்கேதான் போவார்கள்? ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான், ஆலயம் பாதுகாப்போடு இருப்பது அதனினும் நன்று!