Published:Updated:

திருமூலர் சட்டைமுனியின் நூலைக் கிழித்தெறிந்தது ஏன்? - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 12

திருமூலர் சட்டைமுனியின் நூலைக் கிழித்தெறிந்தது ஏன்? - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 12
திருமூலர் சட்டைமுனியின் நூலைக் கிழித்தெறிந்தது ஏன்? - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 12

பொய் என்றே எண்ணி எண்ணி

உலகம் கெட்டுப் போச்சு.

போச்சு அதனாலே அகத்தின் பேதமாச்சு

-சட்டைமுனி ஞானம்

பொருள்:

உலகத் துன்பங்களுக்கும், மன பேதங்களுக்கும், மனிதர்கள் பகைவர்களானதற்கும் காரணம் பொய்யே!
 

சட்டைமுனியின் 'வாதகாவியம்' நூலை அற்புதமான வேதியியல் நூல் என்கின்றனர். துத்தநாகத்தை வங்கமாக்குவது, வங்கத்தை வெள்ளியாக்குவது, வெள்ளியை இரும்பாக்குவது, இரும்பைச் செம்பாக்குவது, செம்பைத் தங்கமாக்குவது என ரசவாத வித்தையைப் பற்றி (ALCAMY) இந்த நூலில் விவரிக்கிறார் சட்டைமுனி.

ஆனால், இந்த ரசவாதம் செய்வதற்கு முன், ஒருவர் எத்தகைய கடமைகளைச் செய்ய வேண்டும் என விதிகளையும் கூறுகிறார். அவற்றைப் பின்பற்றுவதிலேயே 90 சதவிதம் பேர் தோற்றுவிடுவார்களாம். தங்கம் செய்தல் என்றால் சாதாரணமா? 

இந்த நூலில் ரசமணிகளின் வகைகள், அவற்றின் ஆற்றல் பற்றி சட்டைமுனி விவரிக்கிறார். சொரூபமணி, ஸ்தம்பனமணி, கமலினிமணி போன்ற அபூர்வ ஆற்றல் கொண்ட ரசமணிகளை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் இந்த நூலில் அவர் கூறுகிறார்.

எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க, ஆகாயத்தில் சஞ்சரிக்க, சகல செல்வங்களையும் பெற, பெண் வசியம் செய்ய, எதிரிகளை அழிக்க எனப் பல்வேறு ரசமணிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவையன்றி உலோகங்கள், ரத்தினங்கள், பாஷாணங்கள் ஆகியவற்றை சுண்ணமாகவும், செந்தூரமாகவும், பஸ்பமாகவும் செய்யும் முறைகளைப் பற்றியும் தெளிவாகக் கூறுகிறார் சட்டைமுனி.

இந்த முறைப்படி செய்யப்படும் மருந்துகள், நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நரை, திரை, மூப்பின்றி மனிதன் நீண்டகாலம் இளமை குன்றாமல் வாழச் செய்யும் ஆற்றலைக் கொண்டவை என்கிறார். சட்டைமுனியைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் குறைவாகவே கிடைக்கின்றன.

அவர் சிறிது காலம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார் என்றாலும், இல்லற வாழ்க்கையில் அவருடைய மனம் ஒன்றவில்லை என்று அகஸ்தியர் குறிப்பிடுகிறார். ஒரு நாள் கோயில் வாசலில் யாசகம் கேட்டு சட்டைமுனி நிற்கும் போது, வட நாட்டைச் சேர்ந்த ஒரு தவசி அங்கு வருகிறார். அவரால் ஈர்க்கப்பட்ட சட்டைமுனி, அவருடனேயே புறப்பட்டு விடுகிறார்.

அந்த தவசியிடம் உபதேசம் பெற்றபடி, அவருடனே சத்த சாகரங்களையும் சுற்றி வந்தார் எனக் குறிப்பிடுகிறார் அகத்தியர். பல கடல்கள், மலைகள் எனச் சுற்றித் திரிந்த சட்டைமுனி, போகரைச் சந்தித்து அவருடன் சித்தர் மார்க்கத்தில் இணைகிறார். போகரின் சீடராக தவப்பயிற்சி மேற்கொண்டபோது கொங்கணவர், கருவூரார் முதலிய பல சித்தர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. சிறிது காலம் அகத்தியரிடமும் சீடராக இருக்கிறார்.

சித்தர் நெறிகளை முற்றிலும் கற்ற சட்டைமுனி, அவை மனிதகுலத்துக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறார். அந்த இலக்குடன் எல்லோர்க்கும் புரியும் எளிய நடையில் நூல்களை எழுதத் தொடங்குகிறார்... அதனால் அவருக்கும் வேறு பல சித்தர்களுக்கும் இடையே நெறிசார்ந்த முரண்பாடுகள் எழுகின்றன. பொதுவாக, சித்தர்கள் தாம் எழுதும் நூல்களில் உள்ள உண்மைகள், தவறானவர்களால் புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் தீமைகள், நடந்துவிடக் கூடாது என்ற நோக்கில் 'பரிபாஷை' என்னும் 'மறைமொழி'யிலேயே எழுதுவார்கள். இந்தப் பரிபாஷையை சித்தர் ஆய்வாளர்கள் 'சூனியமொழி', 'சந்தியா பாஷை', 'குறியீட்டு மொழி' எனக் குறிக்கின்றனர்.

சட்டைமுனி வீடியோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் ... 

ஆனால், பொதுமக்களுக்குப் புரியும்படி எழுத வேண்டும் என்பதற்காக பல அபூர்வ வேதியியல் மருந்து முறைகளை வெளிப்படையாக எழுதிவிடுகிறார் சட்டைமுனி. இந்தச் செயல் இவருடைய சக சித்தர்கள் பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்திவிடுகிறது. திருமூலர், சட்டைமுனி எழுதிய 'தீட்சாவிதி' என்னும் நூலைக் கிழித்தெறிந்தார் என்று கூறுவர். உரோம ரிஷியும் இவரின் சில சுவடிகளை அழிக்க முயல, சட்டைமுனி காகபுஜண்டரிடம் அவற்றைக் கொடுக்க, காகபுஜண்டர் தன் காக்கையின் சிறகுகளடியில் சுவடிகளை மறைத்துக் காப்பாற்றிவைத்தார் என்பதும், நெடுங்காலம் கழிந்த பின் அகத்தியரிடம் சேர்த்தார் என்பதும் சித்தர்களைப் பற்றி உலவும் ஐதீகக் கதைகளில் ஒன்று.

சட்டைமுனி வெளிப்படையாக நூல்கள் இயற்றியது தொடர்பான குற்றம் குறித்து, ஏனைய சித்தர்கள் கயிலாயத் திருச்சபையில் சிவபெருமானிடம் சென்று முறையிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சிவபெருமான் சட்டைமுனியின் நூல்களைப் பாதுகாக்க ரகசியமாக மலைக்குகைகளில் அவற்றை மறைத்து வைக்க உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. சட்டைமுனியின் மேல் சிவபெருமானுக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு எனவும், சட்டை முனியை அவர் அடிக்கடி கயிலாயத்துக்கு அழைத்ததாகவும் அதனாலேயே, `கயிலாய கம்பளிச் சட்டைமுனி’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. கயிலை மலையின் கடுங்குளிரைத் தாங்க முடியாமல் அவர் எப்போதும் கம்பளிச்சட்டை அணிந்திருப்பாராம்!

loading...

சட்டைமுனி சீர்காழி சட்ட நாதர் ஆலயத்தில் ஸித்தி பெற்றார் என்பதற்கு போகரின் 'ஜெனன சாகரம்' நூல் ஆதாரமாக உள்ளது. திருவரங்கத்தில் சமாதிகொண்டார் என்றும் ஒரு கருத்து உள்ளது! சட்டநாதர் ஆலய இடப்புறம் சிறிது தூரம் நடந்த உடனேயே கருங்கல் கட்டுமானத் திண்ணையில் சித்தர் சட்டைமுனியின் ஜீவசமாதி பீடம் காணப்படுகிறது!

அந்த இடத்தை அடையும்போது நாசிகளில் மெள்ளப் பரவுகிறது பூக்களின் நறுமணம். மனதிலும் உடலிலும் இனமறியாத அமைதி பூவாசம் போலவே பரவிப் படர்கிறது. அங்கு சிலர் கண்மூடித் தியானித்திருக்கின்றனர். சட்டைமுனியின் சமாதி பீடம் அருகே நாமும் கண்மூடி தியானிக்கத் தொடங்குகிறோம்.

- பயணம் தொடரும்...