Published:Updated:

முஞ்சிறை தொடங்கி திருநட்டாலம் வரை... 110 கிலோ மீட்டர் ஓடி ஈசனைத் தரிசிக்கும் பக்தர்கள்...! #MahaSivarathiri

முஞ்சிறை தொடங்கி திருநட்டாலம் வரை... 110 கிலோ மீட்டர் ஓடி ஈசனைத் தரிசிக்கும் பக்தர்கள்...! #MahaSivarathiri
முஞ்சிறை தொடங்கி திருநட்டாலம் வரை... 110 கிலோ மீட்டர் ஓடி ஈசனைத் தரிசிக்கும் பக்தர்கள்...! #MahaSivarathiri

சிவராத்திரியின் பெருமையை எடுத்துச்சொல்லும் விதமாக நேற்றிரவு கன்னியாகுமரி மாவட்ட சிவபக்தர்கள் பலரும் கூடி  சிவாலய ஓட்டத்தினை மேற்கொண்டார்கள். அப்போது முஞ்சிறை திருமலைக் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி,  திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் போன்ற 12 சிவாலயங்களை ஓடிச்சென்று தரிசிப்பார்கள். சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தை ஒரே இரவில் ஓடிச்சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டம் . 12 சிவாலயங்களுக்கு ஓடிச்செல்லும் பக்தர்கள், ஒவ்வொரு சிவாலயத்திலும் உறையும் ஈசனை விசிறிகொண்டு வீசுவது வியப்பான வழிபாடு. சிவாலய ஓட்டம்  என்றாலும் பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா, மாதவா, கேசவா..." என்று பெருமாளின் திருநாமங்களை சொல்லிக்கொண்டே ஓடுவார்கள். இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களும் ஓடும் இந்த ஓட்டத்தின்  முக்கிய நோக்கம்,  கால ஓட்டத்தினையும், கர்மாக்களின் ஓட்டத்தினையும் கண்காணிக்கும் ஆதிசிவனின் புகழைப்பாடுவதேயாகும். 

சிவபக்தரான புருஷாமிருகத்துக்கு "ஸ்ரீவிஷ்ணு" என்று சொன்னாலே கோபம் வருமாம். அந்த அளவுக்கு வைணவ எதிரியாக விளங்கியவர் புருஷாமிருகம். மனித உடலும் புலியின் முகமுமாக விளங்கிய புருஷாமிருகம் சிவனைத்தாங்கும் வாகனங்களில் ஒருவர். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று புருஷாமிருகத்துக்கு விளங்க வைக்க எண்ணிய கிருஷ்ணர், பீமனை அழைத்து 12 ருத்ராட்சங்களை கொடுத்து புருஷாமிருகத்தை வம்புக்கு இழுத்து ஒரு லீலையை நடத்தச் சொன்னார். அதன்படி பீமனும் புருஷாமிருகத்தின் அருகே சென்று ஸ்ரீவிஷ்ணுவின் திருநாமங்களைச் சொன்னதும் கோபமாகி பீமனை விரட்டத்தொடங்கினார். பீமனைப் பிடிக்க நெருங்கும்போதெல்லாம் பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட, அது ஒரு சிவலிங்கமானது.

புருஷாமிருகம் உடனே பீமனைத் துரத்துவதை விட்டுவிட்டு சிவலிங்க வழிபாட்டினைச் செய்வார். அவரை மீண்டும் பீமன், ஸ்ரீவிஷ்ணு நாமம் சொல்லி கேலி செய்ய மீண்டும் விரட்டிப் பிடிப்பாராம். இப்படியே 12 திருத்தலங்களில் பீமன் வீசிய ருத்ராட்சங்களால் உருவானதே இந்த 12 சிவாலயங்கள். 12-வது சிவாலயத்தில் பகவான் விஷ்ணு சிவனோடு இணைந்து சங்கரநாராயணராகக் காட்சி தந்து புருஷாமிருகத்திடம் ஹரியும், ஹரனும் ஒன்றே என்று உணர்த்தினார். இதனாலேயே இன்றும் இந்த சிவாலய ஓட்டத்தில் விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லியபடியே ஓடுகிறார்கள். பீமனின் பிரதிநிதியாகவே  பக்தர்கள் இந்த ஓட்டத்தினை மேற்கொள்கிறார்கள்.

சிவராத்திரிக்கு முந்தைய ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்,  சிவராத்திரிக்கு முந்தைய நாளில் மாலை நான்கு மணியளவில் முஞ்சிறை ஆலயத்தில் ஓட்டத்தினைத் தொடங்குவார்கள். 12 ஆலயங்களையும் அடைந்து ஒவ்வொரு கோயிலிலும் நீராடி, விபூதி அணிந்து இறைவனை விசிறியால் வீசி வணங்குவார்கள். இதற்காகக் கையில் விசிறியும், இடுப்பில் விபூதிப்பையும் வைத்திருப்பார்கள். செல்லும் வழியெங்கும் நீர்,மோர் பந்தல்களும் அன்னதானங்களும் நடந்துகொண்டிருக்கும். இரவு முழுக்க பத்மநாபபுரம் சுற்றுவட்டாரப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். 

12 ஆலயங்களையும் ஒரே இரவில் தரிசித்து, வேண்டும் பக்தர்களின் விருப்பத்தினை சங்கரநாராயணராக தோன்றி ஈசன் நிறைவேற்றி வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 12 ஆலய வழிபாட்டுக்குப் பின்னர் திருமால், அயன், சிவன் என மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் சுசீந்திரம் தாணுமாலயக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது இந்த விழாவின் இறுதி நிகழ்வாக நடைபெறுகிறது. சகல பாவங்களையும் நீக்கி முக்தி அளிக்கும் நன்னாளாக இந்த சிவராத்திரி நாள் விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டினைச் செய்வது சிறப்பிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. பிறப்பு, இறப்பு எனும் இரு புள்ளிகளுக்கிடையே எல்லா ஜீவராசிகளையும் ஓடவைத்து வேடிக்கை பார்க்கும் ஈசனுக்காக, தங்களது கர்ம ஓட்டங்களைக் கட்டுப்படுத்த பக்தர்கள் ஓடும் இந்த சிவாலய ஓட்டம் அவர்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தரட்டும்!