Published:Updated:

முற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்த குதம்பைச் சித்தர்! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 13

முற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்த குதம்பைச் சித்தர்! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 13
முற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்த குதம்பைச் சித்தர்! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 13

மாங்காய்ப் பாலுண்டு
மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? - குதம்பாய்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி?
                                           -குதம்பைச் சித்தர்

பொருள்:
கபாலத் தேன் எனும் மூளையில் சுரக்கும் அமிர்தத்தை உண்டவர்களுக்கு வேறு நீர்த் திரவங்கள் தேவையில்லை.

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?' என்பது மயிலாடுதுறையைப் பற்றிய சொலவடை. மாயவரம், சூதவனம், சிகண்டிபுரம், தென்மயிலை என்பவை மற்ற பெயர்கள். காவேரி புஷ்கரம், துலாக் காவிரி, சப்த ஸ்தானம் எனப் பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற ஊர். தேவாரப் பாடல் பெற்ற மயூரநாதர் திருக்கோயில், காசிக்கு இணையான ஆறு காவிரிக்கரைக் கோயில்களில் ஒன்று.
ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அபயாம்பிகை சமேத மயூரநாதர் ஆலயத்துக்குள் செல்கிறோம். அந்த பிரமாண்டமான ஒன்பது நிலை ராஜ கோபுரத்துக்குள் செல்லும்போது, இடப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் - ரிஷப தீர்த்தம் உள்ளது.


சிவன் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில், தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ளது குதம்பைச் சித்தரின் ஜீவ சமாதி. நாம் அங்கு சென்றிருந்தபோது, இரண்டு வெளிநாட்டு யாத்ரிகர்கள் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். சுற்றுப் பிராகாரத்தில் யாரோ ஒரு சிவனடியார் பாடும் தேவாரப் பாடல் காற்றில் தவழ்ந்து வந்து, ஓர் அலாதியான சுகானுபவத்தைத் தந்துகொண்டிருந்தது.
கருங்கல் தூணின் கீழே சிறிய அளவில் அமைந்திருந்த குதம்பைச் சித்தரின் சிலை அருகே ஒரு பெண்மணியும், குழந்தையும் அகல் விளக்கு ஏற்றி வணங்கிவிட்டு, எதிரில் அமர்ந்து கண்மூடி தியானிக்கத் தொடங்கினார்கள்.


சித்தர்களில் குதம்பையர் வித்யாசமான சித்தர். 'பெண் ரூபங் கொண்ட சித்து' என போகர் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மாயவரத்தில் வாழ்ந்து அங்கேயே சித்தியடைந்தவர். இவர் ஒரு பெண் சித்தர் என்றும், சிறிது காலம் பெண்ணுடலில் வாழ்ந்தவர் என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. குதம்பை என்பது, பெண்கள் காதில் அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற பழைய அணிகலனாகும்.


குதம்பையர் பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடைய தாய்க்கு இவர் மீது பாசம் அதிகம். அதனால், பெண் குழந்தை போல அழகாக இருந்த குழந்தைக்குக் காதில் குதம்பை அணிவித்து மகிழ்ந்தார். மகனின் காதில் குதம்பை ஆடும் அழகைக் கண்டு 'குதம்பாய்' 'குதம்பாய்' எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கினாள். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தும் விட்டது.


குதம்பையின் பதினாறாவது வயதில், அவர் ஒரு சித்தரைச் சந்தித்தார். '''குதம்பாய்! நீ சாதாரண மனிதன் அல்ல. ஞானம் பெற்று மனித குலத்துக்கு நற்கருத்துகளை போதிக்கப் பிறந்தவன். உன்னுடைய தாய், உன்  மீதிருக்கும் பாசத்தின் மேலீட்டால், உன் இல்லற வாழ்வுக்குத் துணையாய் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், அது நடக்காது! காரணம், நீ உன்னுடைய முற்பிறவியில் இறைவனைக் காணவேண்டும் என்பதற்காக, அடர்வனம் ஒன்றில், ஒரு மரத்தினடியில் அமர்ந்து நெடுந்தவம் இருந்தாய். ஆனால், உன் முற்பிறவியில் விதி தடுத்து விட்டது. விதி குறித்தபடி உன் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அடித்த பெரும்புயலில், நீ தவமிருந்த மரம் உன் மேல் சாய்ந்தது; உன் ஆயுளும் முடிந்தது. நீ முற்பிறவியில் விட்ட தவத்தை இந்தப் பிறவியில் தொடரப்போகிறாய். என் ஞானோபதேசத்தை செவிமடுத்துக் கேட்டுக்கொள்'' என்று கூறி, குதம்பையருக்கு ஞானோபதேசமும் செய்தார். 


கவனத்துடன் உபதேசம் கேட்ட குதம்பை, அந்தச் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கினார். ''இன்று முதல், நீ குதம்பைச் சித்தர் என அழைக்கப்படுவாய்!" என ஆசி வழங்கி மறைந்தார். வீட்டுக்குச் சென்ற குதம்பையரிடம் அவரின் அம்மா ஆசை ஆசையாக 'அவள் அழகில் சிறந்தவள், இவள் அறிவில் உயர்ந்தவள், இவள் பணிவு மிகுந்தவள்!" எனப் பல பெண்களைப் பற்றி தெரிவித்து இவர்களில் ஒருத்தியை உன் இல்வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்!" என்றாள். குதம்பையர் சொன்னார்: ''அம்மா! உடலைக் கட்டுப்படுத்த வெண் காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது. சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து உட்கொண்டால் ஒரு பெண் காயம் (பெண் உடல்) நமக்கு எதற்கம்மா? ஒரு பெண்ணால் ஸித்திக்காத பேரின்பம் இந்த மாமருந்தால் ஸித்திக்காதா?" குதம்பையர் கூறியதைக் கேட்டு அம்மா அதிர்ந்தார்.


"துறவறத்தை விட இல்லறமே மேலானது. உன்னைப் பெற்று வளர்த்து அழகு பார்ப்பதில்தானே எனக்கு மகிழ்ச்சி! இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு, அதன் பயனாக நீ பெறும் மழலையால் நீயும் உன் மனைவியும் மகிழ்வது போல் நானும் மகிழ்வேன். இந்த இன்பம் துறவறத்தில் கிடைக்காது மகனே! என் ஆசையை நிறைவேற்றிக்கொடு!" என்றார் கண்ணீர் மல்க.

தாயின் கண்ணீர் குதம்பையின் மனதை இளகச் செய்யவில்லை. 'முற்பிறவியில் தவறவிட்ட ஞான வாழ்வை இப்பிறவியில் அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணமே, அந்தச் சித்தரின் உபதேசத்தைக் கேட்டதிலிருந்து அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நள்ளிரவில் அம்மா அறியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.


நிலவொளி பால்மழை போல் பொழிந்துகொண்டிருந்தது. மனமெல்லாம் சிவசிந்தனை மட்டுமே நிறைந்திருக்க, அடர்வனத்துக்குள் புகுந்து நடந்தார். ஓரிடத்தில் களைப்புடன் சற்றே நின்றார். முற்பிறவியில் அவர்மீது சாய்ந்த மரத்தின் வேர்முண்டு அங்கிருந்தது. அதை அறியாத குதம்பைச்சித்தர், பக்கத்திலிருந்த பேயத்தி மரத்தை நோட்டமிட்டார். அங்கு ஒரு பெரிய பொந்து இருந்தது.

ஒருவேளை தன் அம்மா தன்னைத் தேடி காட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எச்சரிக்கை உணர்வுடன் அந்த பொந்துக்குள் புகுந்துகொண்டார். தவம் இயற்றத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரமதை மனம் ஜபிக்க, சிவனுரு மட்டுமே அவரின் சிந்தையெல்லாம் நிறைய தவம். நீண்ட நெடுந்தவம்!


"இறைவா என்னை ஆட்கொள்!" என்று ஜபித்தார். ஆண்டுகள் பல கழிந்தன அவரின் நெடுந்தவத்தில் ஒரு பௌர்ணமி இரவில் அசரீரி ஒன்று ஒலித்தது. "குதம்பாய்! உன்னை யாம் இப்போது அழைப்பதாக இல்லை. பூலோகத்துக்கு உன்னால் நிறைய நன்மைகள் நடக்க இருக்கின்றன. இப்போது நீ தவம் செய்யும் இந்த விந்திய மலைப்பகுதியில் யானைகள் ஏராளம் உள்ளன. யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. இப்போது உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இங்குள்ள யானைகளின் செவிகளில் கேட்கும்படி அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்! அவற்றின் பிளிறல் ஓசையில் அந்த மந்திரங்கள் எதிரொலிக்கும்! அப்போது பூமியில் அமுதத் தாரைகள் வழியும்! அம்மழையால் உலகம் செழிக்கும்!"

loading...


சிறிது நேரத்தில் குதம்பையருக்கு வருண மந்திரம் உபதேசித்தது அசரீரி. குதம்பையர் அந்த மந்திரத்தை கவனத்துடன் உள்வாங்கி, தொடர்ந்து உச்சாடனம் செய்யத் தொடங்கினார். மழை பொழிந்தது. காடு கரைகள் செழித்தன. எல்லா உயிர்களும் மழை ஈரம் கண்டு இன்புற்றன. இன்றும் வாசியோகம் பயின்றவர்கள் குதம்பைச் சித்தரை மானசீகக் குருவாக ஏற்று மழை வரம் வேண்டினால் தப்பாது மழை பெய்யும் என்பது ஒரு நம்பிக்கை.


-பயணம் தொடரும்...