Published:Updated:

ஓவியத்திலும் புகைப்படத்திலும்கூட உயிர்ப்புடன் இருப்பவர் பாபா! - உணர்த்திய சம்பவம் #SaiBaba

ஓவியத்திலும் புகைப்படத்திலும்கூட உயிர்ப்புடன் இருப்பவர் பாபா! - உணர்த்திய சம்பவம் #SaiBaba
ஓவியத்திலும் புகைப்படத்திலும்கூட உயிர்ப்புடன் இருப்பவர் பாபா! - உணர்த்திய சம்பவம் #SaiBaba

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அருள்புரியும் ஷீரடி சாயிபாபா, நம் உடலில் ஏற்படும் நோய்களை மட்டுமல்ல, மனதில் தோன்றும் காம, குரோத, மத, மாத்சர்யங்கள் என்னும் கொடிய மன நோய்களையும் போக்கி அருள்பவர். இதற்கான காணிக்கையாக நாம் அவருக்குக் கொடுக்கக்கூடிய தட்சிணை பொறுமையும் நம்பிக்கையுமே ஆகும். சாய் பாபா, தம்முடைய பக்தர்களுக்கு ஏற்பட்ட நோய்களைப் போக்குவதற்கு மருந்துகள் எதையும் கொடுப்பதில்லை. புனித அக்னி எரிந்துகொண்டே இருக்கும் 'துனி'யில் இருந்து கிடைக்கும் பஸ்பத்தையே 'உதி' என்னும் பெயரில் பக்தர்களுக்கு அருமருந்தாகக் கொடுத்து, அவர்களின் உடல் நோய்களை குணப்படுத்தியதுடன், பக்தர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய மனதில் இருக்கும் மனோ வியாதிகளையும் குணப்படுத்தினார். 

பாபாவின் 'உதி' பிரசாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது. அவ்வளவு ஏன்? சாயிபாபாவின் திருவடிகளில் சரணடைந்து, அவருடைய திருநாமத்தை ஜபித்தபடி நாம் ஏற்றுக்கொள்ளும் ஊதுவத்தியின் சாம்பல்கூட, சாயிபாபாவின் அருளால், மகத்தான பலன்களை நமக்குத் தரும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு நிகழ்ச்சியை இங்கே பார்ப்போம்.
நாராயண மோதிராம் ஜனி என்பவர் பாபாவின் தீவிர பக்தர். அவர் நாசிக்கில் வசித்துவந்தபோது அவருடைய நெருங்கிய நண்பரை தேள் ஒன்று கொட்டிவிட்டது. வலி தாங்க முடியாமல் அவர் மிகவும் வேதனையடைந்தார். அவரின் வேதனையைப் போக்க எண்ணிய அவர், பாபாவின் உதியை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவ முன் வந்தார். ஆனால், அவர் கண்களில் உதி தென்படவில்லை. ஒருபுறம் நண்பரோ வலியால் மிகவும் அவதியுற்றிருந்தார். 

நாராயண மோதிராம் செய்வதறியாது திகைத்து நின்றார். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவராக, பாபாவின் புகைப்படத்தின் அருகே வந்து அவரை வணங்கினார். அப்போது அவர் கண்களில் ஊதுவத்தி சாம்பல்பட்டது. பாபாவை மனதார வணங்கியவர், அந்தச் சாம்பலை எடுத்து வந்து நண்பருக்குக் கடிப்பட்ட இடத்தில் தடவினார். சாம்பலைத் தடவியவுடன் நண்பரின் வலி குறைந்ததுடன் விஷமும் இறங்கத் தொடங்கியது.

ஊதுவத்தி சாம்பல் மட்டுமல்ல, பாபாவை நம்பி மண்ணையே உதியாகப் பூசினாலும் நோயிலிருந்து விடுபட முடியும் என்பதைப் பின்வரும் நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

பாபாவின் அடியவர் ஒருவர் பாந்த்ராவில் வசித்து வந்தார். வேறு ஓர் ஊரில் இருந்த அவருடைய மகள், பிளேக் நோயால் மிகவும் துன்பப்பட்டு வருவதாக அவருக்குத் தகவல் வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்துடன் இருந்தவருக்கு, தன்னுடைய ஒரே தெய்வமும், புகலிடமுமான பாபாவின் நினைவு வந்தது. உடனே ஓர் ஆளை அழைத்து, தனது நண்பரும் பாபாவின் பக்தருமான நானா சாகேப்பிடம் சென்று உதி பிரசாதம் பெற்று வருமாறு அனுப்பினார்.

அந்த ஆள் புறப்பட்டுப் போன அதே தருணத்தில், நானா சாகேப் தன் மனைவியுடன் கல்யாணுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அதைக் கேள்விப்பட்ட அந்த ஆள், உடனே தாணே ரயில் நிலையத்துக்குச் சென்று அவரைப் பார்த்து உதி பிரசாதம் கேட்டான். அப்போது நானா சாகேபிடம் உதி பிரசாதம் இல்லை. மேலும் நண்பரின் மகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லவே, சற்றும் யோசிக்காமல் தரையில் இருந்த மண்ணை எடுத்து, தன் மனைவியின் நெற்றியில் பூசியபடியே, எங்கோ இருக்கும் நண்பரின் மகளை, பிளேக் நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பாபாவைப் பிரார்த்தித்துக்கொண்டார்.

இதற்கிடையில் பாந்த்ரா பக்தர் தன் மகளைக் காண ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே கண்ட காட்சி அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம். அவருடைய மகள் கொடிய பிளேக் நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து, உற்சாகத்துடன் காணப்பட்டாள். சில மணி நேரங்களுக்குப் பிறகு, நானே சாகேபிடம் உதி பெற்றுவரச் சென்ற ஆள் அங்கு வந்து, தாணே ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார்.

மண்ணை உதி பிரசாதமாக மாற்றியது மட்டுமல்லாமல், யாருடைய நன்மைக்காக வேண்டுமானாலும் பிரார்த்தித்துக்கொண்டு, நாம் நம் நெற்றியில் இட்டுக்கொண்டாலும், சாயிபாபாவின் அருளால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது உறுதி.

மகான்களின் மகத்துவம் பற்றிக் குறிப்பிடும்போது, மகேஸ்வரனால் முடியாததும் மகான்களால் முடியும் என்று சொல்வார்கள்.
நாசிக் மாவட்டத்தில் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். சாயிபாபா உதி பிரசாதம் கொடுத்து பக்தர்களின் நோய்களை குணப்படுத்துவது பற்றிக் கேள்விப்பட்ட அந்த மருத்துவர், முதலில் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. 

இந்த நிலையில் அவருடைய சகோதரியின் மகன் எலும்புருக்கி நோயின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தான். அவர் தன்னுடைய மருத்துவ அறிவை முழுவதுமாகப் பயன்படுத்தி அவனுக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் குணம் ஏற்படவேயில்லை. இத்தனைக்கும் மிகவும் கைராசியான மருத்துவர் என்று புகழ் பெற்றிருந்தவர் அந்த மருத்துவர். இனி தெய்வத்திடம் சரணடைவதே நல்லது என்று முடிவுசெய்தார். மேலும், தன் சகோதரியிடம், பாபா உதி பிரசாதம் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவது பற்றித் தெரிவித்து, மகனை அழைத்துக்கொண்டு ஷீரடிக்குச் செல்லும்படிக் கூறினார்.

அவரின் சகோதரியும், அவள் கணவரும் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஷீரடிக்குச் சென்றனர். தங்கள் பிள்ளையைக் காப்பாற்றும்படி பாபாவை வணங்கினர். 

பாபாவும், அந்தப் பிள்ளையின் மீது கருணை கொண்டவராக, சிறிது உதியினை எடுத்து அவனுடைய உடலில் தடவிவிட்டார். அவருடைய கருணையினாலும் உதியின் மகிமையினாலும் அவனுடைய நோயின் தீவிரம் குறையத் தொடங்கியது. சாய் பாபா, மேலும் கொஞ்சம் உதியினைக் கொடுத்து, அதை தினமும் தடவி வந்தால் நோய் பூரணமாகக் குணமாகும் என்று கூறி ஆசி வழங்கினார்.

அவர் கூறியதுபோலவே தினமும் உதியைத் தடவியதும் பையன் நோயிலிருந்து முழுவதுமாக விடுபட்டு பூரண குணமடைந்தான்.  

பாபாவை நாம் எந்த வடிவத்திலும் தரிசிக்கலாம். அவருடைய சித்திரத்திலும், புகைப்படத்திலும்கூட அவர் உயிர்ப்புடன் இருப்பார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது... 

பம்பாயைச் சேர்ந்தவர் பாலபுவா சுத்தார். இவர் பாபாவிடம் தீவிர பக்தி கொண்டவர். பஜனைப் பாடல்களைப் பாடுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவருடைய பஜனைப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்ததால், இவரை `நவீன துக்காராம்’ என்று பக்தர்கள் அழைப்பது வழக்கம்.

இவருக்கு ஒருமுறை பாபாவைச் சந்திக்கும் ஆர்வம் மிகுந்ததால், ஷீரடிக்குச் செல்ல தீர்மானித்து, அதன்படி சென்று பாபாவை தரிசித்தார். துவாரகாமாயியில் பாபாவைப் பார்த்தவுடன் உணர்ச்சிப் பெருக்கால் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

அவரை ஆசீர்வதித்த பாபா, "உம்மை நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே நான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார். ஆனால், பாலபுவா இப்போதுதான் முதன்முறையாக ஷீரடிக்கு வருவதால், தம்மை எப்படி பாபா பார்த்திருக்க முடியும் என்று நினைத்து வியந்தார். ஆனால், பாபாவின் வார்த்தை சத்திய வாக்கு என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த பாலபுவா, பாபா கூறியது பற்றி ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போதுதான், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, தான் ஓரிடத்தில் சாயிபாபாவின் திருவுருவப் படத்தை தரிசித்து, பக்தியுடன் வழிபட்டது அவருடைய நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியைத்தான் பாபா இப்போது கூறினார் என்பதை அறிந்து, படத்தின் மூலமாகவே பாபா தனக்கு அருள்புரிந்த கருணையைப் பெரிதும் போற்றிப் பணிந்தார்.

சாயிபாபாவைப் பற்றி முழுமையாகப் படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்...