Published:Updated:

அட்டமா சித்தி என்றால் என்ன... அது இன்றைக்கு சாத்தியம்தானா?

அட்டமா சித்தி என்றால் என்ன... அது இன்றைக்கு சாத்தியம்தானா?
அட்டமா சித்தி என்றால் என்ன... அது இன்றைக்கு சாத்தியம்தானா?

`டம்பே ஆலயம் உயிரே ஆண்டவன்’ என அறிந்துகொண்ட நமது முன்னோர்கள் சிலர் வியக்கத்தக்க சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். அதனால், `சித்தர்கள்’ ஆனார்கள். `உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்’ எனக் குறிப்பிடுகின்றன சில நூல்கள். சித்தர்களும், சித்தர்களுக்குப் பின்னர் வந்த சிலரும் அரிய மூலிகைகளைக் கொண்டு சில சித்துவேலைகளைச் செய்தார்கள். அவை `அஷ்ட கர்மங்கள்’ எனப்படும், எட்டுவித மந்திரச் செயல்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சித்துகள் அத்தனையும் மூலிகைகளைக் கொண்டே செய்யப்பட்டன.

ஒவ்வொரு சித்துக்கும் எட்டுவிதமான மூலிகைகள் என்ற கணக்கில், மொத்தம் 64 மூலிகைகளும் சில பாஷாணங்களும் பயன்பட்டன என்றும் சொல்கிறார்கள். இந்தச் சித்துகளை இப்போது செய்ய முடியுமா... அஷ்ட கர்மங்கள் என்னென்ன... அவை உண்மையில் செய்யப்பட்டனவா என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தின் உதவி இயக்குநர் சத்ய ராஜேஸ்வரனை அணுகினோம்.

``அந்தக் காலத்தில் சித்தர்களின் ஆய்வால் பல மூலிகைகளைக் கொண்டு வசியம், தம்பனம் போன்ற அற்புதங்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. இது குறித்து `மூலிகை மாயாஜால திரட்டு’ என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் மூலிகைகள் சித்து வேலைகள் செய்யப் பயன்படுமா என்பதை ஆய்வுக்குட்படுத்திதான் சொல்ல முடியும். சித்தர்கள் தங்கள் காலத்தில் அறிவியலோடு இணைந்து மூலிகைகளின் ரகசியங்களை மெய்ப்படுத்தி இருந்திருக்கிறார்கள். இப்போது நடப்பவையெல்லாம் மனரீதியான முறைகள். நம்புபவர்களைப் பொறுத்து சித்து வேலைகளின் பயன் இருக்கலாம். மருத்துவத்தில் ஹிப்னாடிசம் உண்மை என்றால், மூலிகைகளாலும் அதே போன்ற வேலைகளைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது முறையாகச் செய்யப்பட வேண்டும்" என்றார் சத்ய ராஜேஸ்வரன். 

மேலும், இது குறித்து அறிந்துகொள்ள `அகத்தியர் பசுமை உலகம்’ அமைப்பின் நிறுவனர் சரவணனிடம் பேசினோம்... 

``மொத்தம் எட்டு சித்துகள்... 

உச்சாடனம் - மூலிகைகளால் மந்திரித்து வியாதிகள், பேய், பிசாசுகள், மிருகங்கள், எதிரிகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் செயலே உச்சாடனம்.

ஆகர்ஷணம் - துர்தேவதைகள், தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.

பேதனம் - ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது. 

மோகனம் - மயங்கச்செய்வது.

வசியம் - மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது. 

வித்துவேஷணம் - விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.  

மாரணம் - எதிரிகளை மிரட்டி, கொல்வது.  

தம்பனம் - செயல்களைக் கட்டுவது. (உ-ம். வாயைக்கட்டுவது).  

இந்த எட்டு சித்துகளுக்கும் பேய் மிரட்டி, மான் செவிகள்ளி, தேள்கொடுக்கி, கொட்டைக்கரந்தை, வெள்ளைக் கண்டங்கத்திரி, நத்தைச்சூரி, பிரமதண்டு, புல்லுருவி, ஏறண்டம், வேளை, உள்ளொட்டி, புறவொட்டி, சிறு முன்னை, அழுகண்ணி-தொழுகண்ணி போன்ற 64 மூலிகைகள் தேவைப்பட்டன என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இந்த 64 மூலிகைகளில் பல இப்போது கிடைப்பதில்லை. அதனாலேயே இந்தச் சித்துகளில் எதையும் இப்போது செய்ய முடியாது. மூலிகைகள் கிடைத்தாலும், அவற்றைப் பறிப்பதற்கென்று ஒரு நியதியே வகுக்கப்பட்டிருக்கிறது. சூரியன் தோன்றி முதல் நிழல் விழுவதற்கு முன்னர், அதே சமயம் இருள் இல்லாமல் இருக்கும் வேளையில்தான் மூலிகைகளைப் பறிக்க வேண்டும். ஆறு மணிக்கு சூரிய உதயம் என்றால் 5:50-லிருந்து 6 மணி வரைதான் மூலிகைகளைப் பறிக்க வேண்டும். அதுவும் பறிக்கவேண்டிய மூலிகைக்கு மஞ்சள் நிற நூல் கொண்டு காப்புக் கட்டி, வெற்றிலை, பாக்கு வைத்து தீபம் காட்டி வணங்க வேண்டும். அந்தந்த மூலிகைக்கு உரிய தேவர்களை வணங்கிவிட்டு, `ஓம் மூலி, உயிர் மூலி, உன்னுயிர் மூளி’ என்று 16 முறை சொல்லும் கால அளவுக்குள் பறிக்க வேண்டும். 

இப்படிப் பறித்த மூலிகைகளை மீண்டும் மருந்தாக இடிக்கும்போது `ஓம் மூலி, உயிர் மூலி, உன்னுயிர் பெற்றெழுக’ என்று சொன்ன பிறகே அதாவது, மூலிகைக்கு உயிர் வரவழைத்த பிறகே இடிக்க வேண்டும். இப்படி ஒரு முறை உள்ளது. இத்தனை சிரமப்பட்டு யாருமே இப்போது மூலிகைகளைப் பறிப்பதும் இல்லை; தயாரிப்பதும் இல்லை. இன்றும் கிராமங்களில் பூசாரிகள், `காஞ்சானம் குச்சி’ என்ற ஒரு மூலிகையைக்கொண்டு, யாருக்காவது கெட்ட கனவுகள் வந்தால், அதை மந்திரித்து விரட்டுவது உண்டு. `குடியோட்டிப்பூண்டு’ என்ற மூலிகையை யாராவது விதைத்தால், அது பூ பூக்கும் சமயத்தில் அது இருக்கும் நிலத்தில் குடியிருப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்று சொல்வார்கள். இவையெல்லாம் நம்பிக்கை சார்ந்ததுதான்.

மனரீதியான தாக்குதல்கள்தாம் மனிதர்களை பலவீனமாக்குகின்றன. உயிர் கொடுக்கும் மூலிகைகளைவைத்தே மிரட்டுவது என்பதெல்லாம் உளவியல்ரீதியான தாக்குதல். அறிவியல் வளர்ச்சியுற்ற இந்த நாள்களில் இதுபோன்ற காரியங்கள் சாத்தியமில்லாதவை. ஆனால், பலவீனமான எளிய மக்களை இன்னும் பல இடங்களில் பில்லி, சூனியம், வசியம், குட்டிச்சாத்தான், ஏவல் என்று ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சித்தர்கள் காலத்தில் கிடைத்த மூலிகைளும், பாஷாணங்களும், அவர்களின் தவப்பயன்களும் பல அற்புதங்களைச் செய்திருக்கலாம். அதுவும்கூட சித்தர்கள் பெரும்பாலும் மூலிகைகளைக்கொண்டு நோய் தீர்க்கும் மருந்துகளையே செய்தார்கள் என்பதுதான் உண்மை" என்கிறார் சரவணன்.

நெல்லை, பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருந்து ஆய்வாளர், மைக்கேல் ஜெயராஜிடம் பேசினோம்...

``மூலிகைகளின் கூட்டால் உருவாகும் பலனால் நிச்சயம் சித்திகள் பலிக்கலாம். 'அரிவாள் வெட்டுவதில்லை, வெட்டுபவன்தான் முக்கியம்' என்பதுபோல, மூலிகைகள் கருவி. அதைக்கொண்டு சித்து வேலைகள் முந்தைய காலத்தில் நடைபெற்றிருக்கலாம். இப்போது சாத்தியமில்லை. இன்றும் மக்களை நம்பவைத்து சித்து வேலைகள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் இருக்கும் இந்த பாபநாசத்திலேயே 'எனக்கு இந்தக் கஷ்டம், அந்தக் கஷ்டம்... யாரோ என்னமோ செஞ்சிட்டாங்க' என்று வருபவர்கள் அநேகம் பேர். அவர்களில் படித்த, வசதியான மக்களும் அடக்கம். மூலிகைகளைக் காட்டி, மனோரீதியாக அவர்களைச் சமாதானப்படுத்துவதே அவர்களுக்கு ஒரு கவுன்சலிங் போலத்தான் இருக்கிறது. மனோதத்துவ மருத்துவர்களை நம்புவதைவிட, `சித்து வேலைகளால் தீயசக்திகளை விரட்டிவிடுவேன்’ என்று சொல்பவர்களைத்தான் பலர் நம்புகிறார்கள். இவை, மனிதர்களுக்கு நல்லது செய்யும்வரை எதுவும் பிரச்னையில்லை. அதேபோல மூலிகைகளைக் கொண்டு தீமை செய்வதெல்லாம் நடக்கவே நடக்காத ஒன்று. அப்படி நம்புபவர்கள், மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் மைக்கேல் ஜெயராஜ்.  

`மந்திரம் கால், மதி முக்கால்’ என்கிறது பழமொழி. வசியம், தீயசக்திகளை அழைத்துப் பேசுவது இவையெல்லாம் உண்மையாக இருந்தால், உலகம் நிம்மதியாகவா சுழலும்? பாலிவுட் நடிகர்கள் நடிக்க வாய்ப்புப் பெற வசியம் செய்வதாகவும், பதவிகள் பெற அரசியல்வாதிகள் மாந்திரீகர்களை நாடுவதாகவும் செய்திகளைப் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.