Published:Updated:

பனங்காட்டில் சுயம்புவாக எழுந்த மண்டைக்காடு பகவதியம்மா! #VikatanPhotoStory

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பனங்காட்டில் சுயம்புவாக எழுந்த மண்டைக்காடு பகவதியம்மா! #VikatanPhotoStory
பனங்காட்டில் சுயம்புவாக எழுந்த மண்டைக்காடு பகவதியம்மா! #VikatanPhotoStory

பனங்காட்டில் சுயம்புவாக எழுந்த மண்டைக்காடு பகவதியம்மா! #VikatanPhotoStory

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு கிராமம். இங்கு புற்றிலிருந்து தோன்றிய புகழ்பெற்ற பகவதியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பெண்களுக்கான சிறப்பான ஆலயமாகப் போற்றப்படுகிறது. 


மாசி மாத 'கொடை விழா' இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு வரும் பக்தர்கள் அநேகம்.


மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கடந்த  மார்ச் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13 - ம் தேதி வரை இந்த ஆலயத்தில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. இந்த புற்று வடிவம் வளர்ந்துகொண்டே வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள்.


இன்று இரவு (மார்ச்  6) வெள்ளிப் பல்லக்கில் மண்டைக்காடு பகவதியம்மன் வீதியுலா வரவிருக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்காரரூபிணியாகக் காட்சி தரும் அம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள். 


முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். 'மந்தைக்காடு' என்ற பெயரே மருவி, 'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது. 


கேரள மற்றும் கன்னியாகுமரி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த அம்மனின் அருள், பிரசித்தி பெற்றதாகும். தீயவர்களைத் தண்டிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் எப்போதும் விழித்திருப்பவள் இந்த அம்மன் என்கிறார்கள். 'இவளை வேண்டிக்கொண்டு தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியைத்தான் கொடுக்கும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.


புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் காட்சி தருகிறாள். 


ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இங்கு வருகை புரிந்தபோது பகவதி அம்மனின் சக்தியை உணர்ந்து ஸ்ரீசக்கரம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் இங்கேயே சமாதி ஆகிவிட்டார் என்றும் அவரது திருவருளும் பக்தர்களைக் காக்கிறது என்றும் கூறுகிறார்கள். 


காலையில் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அப்பம் செய்து வந்து அம்மனுக்கு நைவேத்தியமாக அளித்தால் தலைவலி குணமாகிறது என்பது ஐதீகம். 


தாலிக் காணிக்கை, மண் சோறு உண்ணுதல், உறுப்பு வடிவ தகடுகளைச் செலுத்துதல் எனப் பல்வேறு வேண்டுதல்கள் இங்கு செய்யப்படுகின்றன. 


மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் குணமாகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த அம்மன் கோயிலின் கிணற்றுக்கு, தோண்டியும் கயிறும் நேர்த்திக் கடனாக செலுத்தியும் குணமடைகிறார்கள். 


27 நெய் தீபங்கள் ஏற்றி, அம்மனின் சந்நிதியை 9 முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும். உடல் ரீதியாக குறை உள்ளவர்கள் பலரும் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பலரது குறையை நீக்கி வாழ வைத்தவள் இந்த பகவதியம்மன்.


திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி, கடன் தொல்லை, வியாபார விருத்தி, வேலை வாய்ப்பு, நோய்கள் தீர என இங்கே எல்லாவிதமான வேண்டுதலையும் வேண்டிக்கொண்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள். எல்லா வேண்டுதல்களையும் காது கொடுத்துக் கேட்டு அதை நிறைவேற்றித் தருகிறாள் பகவதியம்மன்.


மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தின் விசேஷமே இங்கு தரப்படும் 'மண்டையப்பம்' என்ற பிரசாதம்தான். பச்சரிசி மாவு, வெல்லம், சுக்கு, ஏலக்காய், பாசிப் பருப்பு கலந்து செய்யப்படும் இந்த அப்பம் சுவையானது. 


நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது குறைகள் நீங்கியதும், இங்கு வந்து அம்மனுக்கு 'முத்தப்பம்' என்ற ஒருவகை நைவேத்தியத்தைப் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். 


மாசி மாத கொடை விழாவில் பக்தர்கள் ஆலயத்தின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருந்து, பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். பொங்கல் பொங்கி வழியும்போது குலவையிட்டு அம்மனுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். மங்களங்கள் யாவும் பொங்கச்செய்யும் தேவிக்குப் பெண்கள் செய்யும் நன்றிக் காணிக்கை இது.

மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்ட வேப்ப மரமே இங்கு ஸ்தல விருட்சமாக உள்ளது. வேம்பின் உள்ளிருக்கும் சக்தியான தேவி, தன்னை வேண்டுவோருக்கு மருத்துவச்சியாகவும் இருந்து காத்து வருகிறாள். வேப்ப மரத்தைச் சுற்றி வந்து வழிபடும் பக்தர்களின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் தந்து அருள்கிறாள்.


பக்தர்கள் அருகிலிருக்கும் கடலில் நீராடிய பிறகே, கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். மாசி கொடை விழாவுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவர். 'மாசி கொடை விழா'வின்போது பக்தர்கள் கூட்டம் திரள்வது போலவே, மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி நாளும் இங்கு பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது. விழா நாள்களைப் போலவே காணப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாள்களிலும் இங்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. 


மாசி கொடை விழாவின் முக்கியத் திருவிழாவாக 6 - ம் நாள் வலிய படுக்கையும், அதன்பின்னர் 'மஹா ஒடுக்கு பூஜை'யும் நடைபெறும். ஒடுக்கு பூஜை விழாவின் அனைத்து நாள்களிலும் இரவு வேளைகளில் நடைபெறும். கேட்ட வரங்கள் யாவையும் கொடுத்தருளும் மண்டைக்காடு பகவதியம்மனின் அருளும் ஆசியும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். மங்களங்கள் யாவும் பெற்று மனையறம் சிறந்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறட்டும். எல்லாம்வல்ல தேவி எல்லோரையும் காப்பாள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு