Published:Updated:

எந்த நெருக்கடியையும் தீர்க்க உதவும் பாபாவின் பேரருள்! - ஓர் உண்மைச் சம்பவம்

எந்த நெருக்கடியையும் தீர்க்க உதவும் பாபாவின் பேரருள்! - ஓர் உண்மைச் சம்பவம்
எந்த நெருக்கடியையும் தீர்க்க உதவும் பாபாவின் பேரருள்! - ஓர் உண்மைச் சம்பவம்

காராஷ்டிரா மாநிலம், கந்த்வா என்னும் ஊரில் 1864 - ஆம் ஆண்டு பிறந்தவர் ஹரி சீதாராம் தீக்ஷித். இவர் தனது சிறு வயது முதலே மிகுந்த அறிவுக்கூர்மையும், சமயோசிதமாகச் சிந்திக்கும் திறனும் கொண்டு திகழ்ந்தார். இவர் தாம் விரும்பியபடியே சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று, பம்பாயில் தொழில் புரியத் தொடங்கினார். இவரின் பேச்சுத் திறமையால் சில நாள்களிலேயே சிறப்பான வழக்கறிஞர் என்று பெயரும் புகழும் பெற்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேய அரசு பாலகங்காதர திலகருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் தீக்ஷித், திலகருக்கு ஆதரவாக வாதாடினார். அந்த அளவுக்கு தேசப்பற்று கொண்டவர் அவர்.

இந்த வழக்கில் கிடைத்த வெற்றியால் 1901-ம் ஆண்டு, இவர் பம்பாய் மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1904-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

இப்படி பல வெற்றிகள் அடைந்த தீக்ஷித்தின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஒருமுறை அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டு கால் முடமாகிவிட்டது.

மூன்று வருடங்கள் அவரது வாழ்க்கை விரக்தியுடன் ஓடியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நானா சாந்தோர்க்கர் அவரைச் சந்தித்தார். நானா அவரிடம் ஷீரடியில் வசிக்கும் சாயிநாதரைப் பற்றிக் கூறியதோடு, அவரைச் சந்திக்கவும் கூறினார்.

அவரின் வார்த்தைக்கு இசைந்த தீக்ஷித், பாபாவைக் காண ஷீரடிக்குச் சென்றார். பாபா அவரை, 'காகா' (மாமா) என்று அன்புடன் அழைத்தார். பாபாவின் அன்புக்குக் கட்டுப்பட்டவராக தீக்ஷித்  ஷீரடியிலேயே தங்கிவிட்டார். அவரிடம் இருந்த சில சொத்துக்கள் மூலம் சிறிது வருவாய் அவருக்கு வந்தது.

அவர் இப்படி ஷீரடியே கதியென்று இருந்ததால், அவருக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சில நாள்களில் அவருக்கு உதவியாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் எல்லாம் வருமானம் இல்லாத காரணத்தால் அவரை விட்டு விலகினர்.மேலும், பாபாவின் மீது அவர் கொண்ட பக்தியைக் கண்ட அவர்கள் அவரைப் பித்தன் என்றே கூறினர்.

அனைத்தையும் அறிந்த மகான் அல்லவா பாபா?!  அவர் ஒருமுறை தீக்ஷித்தை அழைத்து, தன் அருகே அமரச் செய்து, 'இனி நீ கவலையற்று இரு' என்று கூறினார். பாபா அனைத்தையும் கவனித்துக் கொள்வார் என்பதுதான் பாபா கூறிய வார்த்தைகளின் பொருள். அதை அவர் சில நாள்களிலேயே உணர்ந்தார்.

ஒரு முறை தீக்ஷித் நெருக்கடியான நிலைமைக்கு ஆட்பட்டார். அவர் ஒருவரிடம் 30.000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடன் கொடுத்தவர் பணத்தைத் திருப்பித் தரும்படி நெருக்கினார். தீக்ஷித்துக்கு சொத்துகள் நிறைய இருந்தாலும், கையில் ரொக்கமாக பணம் எதுவும் இல்லை. தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டார். எல்லோருமே கையை விரித்துவிட்டனர். வேறு வழி இல்லாத நிலையில், தீக்ஷித் பாபாவைப் பிரார்த்தித்துக்கொண்டு, ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஈடுபட்டார். இரண்டு நாள்களிலேயே, தீக்ஷித்தின் நண்பர் ஒருவருடைய மகன், தீஷித்தைப் பார்க்க வந்தார். தாம் தந்தையின் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால், உரிய சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டு, அதற்கு கட்டணமாக 30.000 ரூபாயும் கொடுத்தார். 

பம்பாயில் தீக்ஷித்தின் இல்லத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அவரது வீட்டில் ஒரு பெரிய அலமாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எட்டு வயது  நிரம்பிய அவரது மகள் அந்த அலமாரியில் இருந்து பொம்மையை எடுக்க எம்பியபோது,   அலமாரி அவளின் மேல்  சரிந்துவிட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், அதிசயிக்கும் வகையில் சில வளையல்கள் உடைந்து போனதைத் தவிர, குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. 

இவ்விதமாக, தம்மிடம் பரிபூரணமாக சரணடைந்த தீக்ஷித்துக்கு ஏற்பட்ட நெருக்கடியை பாபா தீர்த்து வைத்தார்.  

இந்த நிகழ்வு நிகழ்ந்த பின் தீக்ஷித் நிரந்தரமாக ஷீரடியிலேயே தங்க தொடங்கினார். அவர் தன் 48-வது வயதில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

பாபா, அவரை துவாரகாமாயிக்கு வர வேண்டாம் என்றும் தீக்ஷித் வாடாவிலேயே ( தங்கும் சத்திரம்) இருக்கலாம் என்றும் கூறினார். அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும், துவாரகாமாயியில் பாபாவிற்கு தீபாராதனை செய்வதைப் பார்க்கும் ஆவல் மட்டும் இருந்தது. பாபாவும் அனுமதியளித்ததால், தினமும் தீக்ஷித் துவாரகாமாயிக்கு சென்று பாபாவின் தீபாராதனையைப் பார்த்து வந்தார்.