Published:Updated:

"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

Published:Updated:
"ராவணன் எங்கள் மாப்பிள்ளை!" - 'ராம்லீலா' கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மக்கள்!

ராவணன்... அசுர குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும், மிகச் சிறந்த சிவபக்தன். சாமகானம் இசைத்து, இறைவனை மகிழ்வித்து அருள் பெற்றவன். சிறந்த சிவபக்தனாக இருந்தாலும், `பிறன்மனை நோக்காப் பேராண்மை’ அவனிடம் இல்லாத காரணத்தால், ராமபிரானால் சம்ஹாரம் செய்யப்பட்டான். ராவணன் இறக்கும் தருணத்தில், அவனுடைய உபதேசங்களைக் கேட்டு வரும்படி லட்சுமணனை அனுப்பினார் ராமபிரான். ராவணனும் சில நீதிகளை லட்சுமணனுக்கு உபதேசித்தான். அசுரகுலத்தில் பிறந்த ராவணனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்தான் ராவணனுக்குக் கோயில் அமைந்திருக்கிறது.


ஜோத்பூருக்கு, 'மன்தோர்' என்ற பெயரும் உண்டு. அந்த நாட்டின் இளவரசியான மண்டோதரியின் அழகும், நல்ல பண்புகளும் கண்டு மகிழ்ந்த ராவணன், மண்டோதரியைத் திருமணம் செய்துகொண்டாதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே, ராவணனை மாப்பிள்ளையாக மதித்து ஒரு கோயிலும் கட்டினர். நாம் தேவூ வைஷ்ணவ் சமாஜ் என்ற இனத்தைச் சேர்ந்தவள் மண்டோதரி. அவளை ராவணனுக்குத் திருமணம் செய்துவைக்க ஜோத்பூரிலிருந்து மௌதிகில் இனத்தைச் சேர்ந்த அந்தணர்கள் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜோத்பூருக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் அந்த இனத்தைச் சேர்ந்த 150 குடும்பத்தினர் இங்கு வசித்துவருகின்றனர்.

ராவணன் தங்கள் ஊர் மாப்பிள்ளை என்பதால், மஹாதேவ், நவக்கிரகக் கோயில் வளாகத்தில், ராவணன் சிவபெருமானை வழிபடுவதுபோல் சிலை வைத்து, ஒரு கோயில் கட்டியிருக்கின்றனர். மேலும் தசரா பண்டிகையின்போது, 'ராம்லீலா' வைபவத்தில் ராவணன் சம்ஹாரம் செய்யப்பட்ட பிறகு, இங்குள்ளவர்கள் 12 நாள்கள் ராவணனுக்கு சடங்குகள் செய்கிறார்கள். அந்த நாள்களில் அவர்கள் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்வதில்லை. மேலும் புனித நூல்களைப் படிப்பது, ஆன்மிகம் தொடர்பான சடங்குகளைச் செய்வது, சுவையான உணவு வகைகளை உண்பது போன்றவற்றையும் தவிர்த்துவிடுகின்றனர். ராவணனைத் தங்கள் மாப்பிள்ளையாகப் போற்றுவதால், வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறும் 'ராம்லீலா' வைபவத்தை இவர்கள் கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராவணனை மிகச் சிறந்த சிவபக்தனாக மட்டுமல்லாமல், சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும், இசை மற்றும் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவனாகவும் போற்றுகிறார்கள். 

ஜோத்பூர் செல்பவர்களின் கவனத்துக்கு... 

ஜோத்பூரில் ராவணன் கோயில் மட்டுமல்லாமல், தரிசிக்கவேண்டிய  பல கோயில்களும், சுற்றுலாத் தலங்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை... அசல்நாத் சிவன் கோயில், சாமுண்டா தேவி கோயில், உதய் மந்திர், குஞ்ஜ் பிஹாரி, ராஜ்ரான் சோடி, ரசிக் பிஹாரி போன்ற கலைநயம் மிக்க கோயில்கள். 

ஜோத்பூரில் கோட்டைகளுக்கும் குறைவில்லை என்னும்படி பல கோட்டைகளும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, மெஹ்ரான்கார் (Mehranghar) மிக அழகான கோட்டை. கோட்டைக்குள் மோதி மஹால், பூல் மஹால் போன்ற மாளிகைகளும் இருக்கின்றன. அந்த மாளிகைகளில் அக்கால  மன்னர்கள் பயன்படுத்திய பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 
ஜோத்பூருக்கு மற்றொரு சிறப்பைச் சேர்க்கிறார்கள் பிஷ்நோய் இனத்தைச் சேர்ந்த மக்கள். அவர்கள் இந்தப் பகுதியில் பரவலாக வசித்துவருகிறாகள். பிஷ்நோய் இனத்தைச் சேர்ந்த மக்கள்,  மான்களையும் மரங்களையும் மிகவும் நேசிப்பவர்கள். 'மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக எங்களை வெட்டுங்கள்' என்று தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு இந்த மக்கள், இயற்கையின் கொடையான மரங்களை மிகவும் நேசிக்கின்றனர். 

(டாக்டர் என்.லட்சுமி அய்யர் , டீன் -மொழிகள் பள்ளி, இந்தி துறைத் தலைவர், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்)