Published:Updated:

ஜோதிர்லிங்கம் கிருஷ்ணேஸ்வரர்!

கிருஷ்ணேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணேஸ்வரர்

கிருஷ்ணேஸ்வரர்

ஜோதிர்லிங்கம் கிருஷ்ணேஸ்வரர்!

கிருஷ்ணேஸ்வரர்

Published:Updated:
கிருஷ்ணேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணேஸ்வரர்

இந்தியா முழுவதும் 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. அவற்றில் மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக, திரிம்பகேஷ்வர், பீமாசங்கர், கிருஷ்ணேஸ்வர் என மூன்று ஜோதிர் லிங்கங்கள் அமைந்துள்ளன.

கிருஷ்ணேஸ்வர்
கிருஷ்ணேஸ்வர்


 பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான் ஒளி வடிவில் எழுந்தருளி, `அந்த ஒளி எங்கு முடிகிறது' என்று இருவரிடமும் கேட்டார். இருவராலும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவனின் ஒளி பிம்பங்கள் எங்கெல்லாம் பட்டதோ அங்கெல்லாம் ஜோதிர் லிங்கங்கள் உண்டாயின என்கின்றன புராணங்கள்.

 12 ஜோதிர்லிங்கங்களில் நிறைவாக தரிசிக்க வேண்டியது கிருஷ்ணேஸ்வர் ஆலயமாகும். இந்தத் தலம் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்கா பாத் அருகில் உள்ளது. உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகக் கருதப்படும் எல்லோரா குகைக்கு அருகில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள `வருல்' என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

 எல்லோரா செல்லும் சுற்றுலாப் பயணிகள், தவறாமல் கிருஷ்னேஸ்வர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்து வருவதால் இந்தக் கோயிலும் ஆன்மிக சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.

 புகழ்பெற்ற இந்த ஆலயம், டெல்லி சுல்தான்களால் 13-ம் நூற்றாண்டில் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து 16-ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் தாத்தா `மலோஜு போஸ்லே' இந்தக் கோயிலைப் புதுப்பித்தார்.

 மொகலாய சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தூர் ராணி அகில்யாபாய் ஹோல்கர் என்பவரால் 18-ம் நூற்றாண்டில் மீண்டும் இக்கோயிலைப் புதுப்பித்தார். தற்போது இருக்கும் ஆலயம் ராணி அகில்யாபாய் கட்டியதுதான்.

 முற்றிலும் சிவப்பு வண்ணக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. கோயில் பிராகாரத்தில் 24 தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களில் சிவபெருமானின் லீலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

பிள்ளையார்
பிள்ளையார்


 ஆலயத்தில் சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவனை நோக்கி நந்திதேவர் அமர்ந்திருக்கிறார். பிள்ளையார், அனுமன் போன்ற தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு அருகிலேயே இந்தக் கோயிலைப் புதுப்பித்த சத்ரபதி சிவாஜியின் தாத்தா மலோஜுவின் சமாதியும் இருக்கிறது.

 மகாராஷ்டிராவின் தேவ்கிரி மலைப்பகுதியில், சுதர்மா என்ற அந்தணர் தன் மனைவி சுதேகாவுடன் வசித்து வந்தார். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் தன் சகோதரி குஷ்மாவையும் சுதர்மாவுக்குத் திருமணம் செய்து வைத்தார் சுதேகா.

கோயில் பிராகாரம்
கோயில் பிராகாரம்


 குஷ்மா சிவபக்தி கொண்டவள். தினமும் மண்ணில் சிவலிங்கம் செய்து வழிபட்டு, பின்னர் அதை அருகில் இருக்கும் குளத்தில் கரைத்துவிடுவாள். இறைவனின் திருவருளால் குஷ்மாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

 இது சுதேகாவுக்குள் பொறாமையை விதைத்தது. ஒருநாள் அறிவிழந்து குஷ்மாவின் குழந்தையை வெட்டிக் குளத்தில் தூக்கிப்போட்டாள் சுதேகா. குழந்தை காணாமல் போனதால் மனம் உடைந்து அழுந்த குஷ்மா சிவபெருமானை எண்ணி வழிபட்டாள்.

 குஷ்மாவின் பக்தியில் மனமிறங்கிய சிவன், குஷ்மாவின் மகனுடன் காட்சி கொடுத்தார். குஷ்மா மனம் மகிழ்ந்து மகனைப் பெற்றுக்கொண்டாள்.

 அப்போது சிவபெருமான் அவளிடம் ``உன் சகோதரிதான் உன் மகனை வெட்டிக் குளத்தில் போட்டாள்'' என்ற உண்மையைத் தெரியப்படுத்தினார். இதனால் குஷ்மா மனம் உடைந்து போனாள். ஆனாலும் தன் சகோதரியை மன்னித்து விடும்படி ஈசனிடம் வேண்டிக் கொண்டாள்.

கிருஷ்ணேஸ்வர் ஆலயம்
கிருஷ்ணேஸ்வர் ஆலயம்


 பக்தியிலும் அன்பிலும் சிறந்த குஷ்மா வேறொரு பிரர்த்தனையையும் ஈசனிடம் சமர்ப்பித்தாள். ``ஸ்வாமி! தாங்கள் இங்கேயே திருக்கோயில் கொள்ளவேண்டும். என் வழிபாட்டுக்கு மகிழ்ந்து எனக்கு திருவருள் செய்தது போன்றே, இங்கு தங்களைத் தேடி வந்து வழிபடும் பக்தர்களுக்கும் அருள்செய்யவேண்டும். அவர்கள் வைக்கும் வேண்டுதல்கள் யாவற்றையும் நிறைவேற்றி அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தாள்.

 குஷ்மாவின் இந்த வேண்டுதல் சிவபெருமானை மகிழ்வித்தது. மற்றவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யும் அவளின் குணத்தைப் போற்றிப் பாராட்டி, அவளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவளுக்கு அருள்பாலித்த அந்த இடத்திலேயே திருக்கோயில் கொண்டார் என்கிறது தலபுராணம்.

 இந்தத் திருக்கதையின்படி, பக்தை குஷ்மாவின் பெயரைக்கொண்டு, இந்த ஆலயத்தை `குஷ்மேஸ்வர் ஆலயம்' என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.

 இந்தக் கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று சிவலிங்கத்தைத் தொட்டு வழிபட அனுமதிக்கிறார்கள். ஆனால், ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்று வழிபடவேண்டும் என்பது விதி.

 தினமும் காலை 5 முதல் இரவு 9:30 மணி வரையிலும் கிருஷ்ணேஸ்வர் திருக்கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருக வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த வேண்டுதல் பலிக்கும் என்கிறார்கள், இப்பகுதி பக்தர்கள். குறிப்பாகக் குழந்தை இல்லாமல் வருந்தும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட்டால், குழந்தை வரம் கிடைக்குமாம்.

 இந்தியாவிலுள்ள மிகவும் சிறிய ஜோதிர்லிங்கம், கிருஷ்ணேஸ்வர் மூர்த்தம் என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய வரலாம் என்றாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலுமான காலம் இங்கு வழிபட மிகவும் உகந்ததாகக் கருதப் படுகிறது. அதேபோல் சிவராத்திரி காலம் மிகவும் விசேஷம்.

 இக்கோயிலுக்கு வருபவர்கள் அருகில் உள்ள எல்லோரா குகை மட்டுமல்லாது தெளலாதாபாத் கோட்டையையும் கண்டுகளிக்க முடியும். யுனஸ்கோ புராதானச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் இக்கோட்டை மொகலாய மன்னர் ஔரங்கசீப்பின் தலைநகரமாகவும் விளங்கியது.

எப்படிச் செல்வது?: கிருஷ்ணேஸ்வர் ஆலயம் ஔரங்காபாத்தில் இருந்து சுமார் 30 கி. மீ தொலைவில் உள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள், ரயில் மார்க்கமாக புனே வந்து, அங்கிருந்து ஔரங்காபாத் செல்ல முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism