Published:Updated:

`12 ராசிகள்; 12 குபேரர்கள்!' - திருச்சிக்கு அருகில் செல்வ வளம் அருளும் அதிசய தரிசனம்!

லட்சுமி குபேரர்

ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் திருச்சிக்கு அருகில் உள்ளது!

`12 ராசிகள்; 12 குபேரர்கள்!' - திருச்சிக்கு அருகில் செல்வ வளம் அருளும் அதிசய தரிசனம்!

ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் திருச்சிக்கு அருகில் உள்ளது!

Published:Updated:
லட்சுமி குபேரர்
குபேர தரிசனம் செல்வ சம்பத்துகளை அள்ளித்தரும்; தொழில் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும் என்கின்றன ஞானநூல்கள். எனில், ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் திருச்சிக்கு அருகில் உள்ளது!

திருச்சி-சென்னை மார்க்கத்தில், திருச்சியிலிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் செட்டிக்குளம். இங்குள்ள மலைக்கோயிலில் கையில் கரும்புடன் அருளும் விசேஷமான முருகனை தரிசிக்கலாம். அதேபோல், இந்த ஊரில் அமைந்திருக்கும் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பர நாதர் ஆலயமும் பிரசித்திபெற்றது. இங்குதான் ஒவ்வொரு ராசிக்கு ஒருவர் என 12 குபேரர்கள் அருள்பாலிக்கிறார்கள்.இங்கே இவர்களுக்கு என்ன சிறப்பு, ஏகாம்பரேஸ்வரர் இங்கே கோயில் கொண்டது எப்படி? விரிவாகத் தெரிந்துகொள்வோம்!

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பர நாதர்
காமாட்சியம்மன் சமேத ஏகாம்பர நாதர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வனத்துக்குள் வணிகர் கண்ட காட்சி!

முன்னொரு காலத்தில் கடம்பவனமாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. முனிவர்கள் பலரும் இங்கே தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு அருள் வழங்கும் வண்ணம், இங்கேயே கோயில் கொள்ள முடிவு செய்தார் சிவபெருமான். அதற்கான தருணத்தையும் சூழலையும் கனியச் செய்தார்.

வணிகம் முடித்து ஊர் திரும்பிய வணிகர் ஒருவர், பொழுது இருட்டத் தொடங்கியதால் இந்த வனப்பகுதியில் ஒரு மரத்தின் கிளை யில் தங்கினாராம். நள்ளிரவில் பேரொளி தோன்றியது. கண்விழித்த வணிகர், பேரொளிப் பிழம்பையும் அதன் நடுவே சிவலிங்கத்தையும் கண்டு வியந்தார். சுற்றிலும் தேவர்களும் முனிவர்களும் வணங்கித் தொழுதனர். வணிகர் சிலிர்த்துப்போனார்; பஞ்சாட்சரம் ஓதி வணங்கினார். எல்லாம் சில கணங்கள்தான்... அந்தக் காட்சி மறைந்து போனது; மீண்டும் இருள் சூழ்ந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விடிந்ததும் சோழ மன்னன் பராந்தகனிடம் ஓடிச்சென்று விவரம் சொன்னார் வணிகர். அந்த மன்னனும், அப்போது அங்கே வருகை தந்திருந்த குலசேகர பாண்டியனும் கடம்பவனத்தை அடைந்தனர். வணிகர் கண்ட லிங்கத் திருமேனியைத் தேடினர்.

அப்போது கரும்பு ஏந்திய முதியவர் வந்து, லிங்கம் இருக்கும் இடத்தை அவர்களுக்குக் காட்டி மறைந்தார். அப்படி வந்தது முருகப்பெருமானே என்பதும் அவர்களுக்கு உணர்த்தப்பட அனைவரும் பரவசத்தில் திளைத்தனர். இந்த முருகனே மலைக்குமேல் கோயில் கொண்டிருக்கிறாராம். பின்னர் சிவலிங்கத்தை தரிசித்த இடத்தில் ஆலயம் உருவானது. காமாட்சி அம்பாளுடன் ஏகாம்பரேஸ் வரர் அழகுறக் கோயில் கொண்டார்.

மகாகுபேரர்
மகாகுபேரர்

12 ராசிகள்... 12 குபேரர்கள்!

ஏழுநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகத் திகழ்கிறது ஏகாம்பரேஸ் வரர் ஆலயம். அற்புதச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், அருளும் பொருளும் அள்ளித் தரும் ஏகாம்பரேஸ்வரரின் அழகு தரிசனம்... என பிரமிக்க வைக்கிறது இந்த ஆலயம்.

குறிப்பாக, 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே ஆலயத்தின் பல இடங்களிலும்... தமக்கேயுரிய மீன் வாகனத்தில் அமர்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றனர் 12 குபேரர்கள். இவர்களோடு மகாகுபேரரையும் தரிசிக்கலாம்.

எப்படி வழிபட வேண்டும்?

அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த குபேரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், செல்வம் பெருகும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; வீடு-மனை வாங்கி செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். அவரவரின் நட்சத்திர நாளில் வந்து வழிபடுவது இன்னும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

மேஷ ராசிக்கான குபேரர்
மேஷ ராசிக்கான குபேரர்
ரிஷப ராசிக்கான குபேரர்
ரிஷப ராசிக்கான குபேரர்
மிதுன ராசிக்கான குபேரர்
மிதுன ராசிக்கான குபேரர்
கடக ராசிக்கான குபேரர்
கடக ராசிக்கான குபேரர்
சிம்ம ராசிக்கான குபேரர்
சிம்ம ராசிக்கான குபேரர்
கன்னி ராசிக்கான குபேரர்
கன்னி ராசிக்கான குபேரர்
துலாம் ராசிக்கான குபேரர்
துலாம் ராசிக்கான குபேரர்
விருச்சிக ராசிக்கான குபேரர்
விருச்சிக ராசிக்கான குபேரர்
தனுசு ராசிக்கான குபேரர்
தனுசு ராசிக்கான குபேரர்
மகர ராசிக்கான குபேரர்
மகர ராசிக்கான குபேரர்
கும்ப ராசிக்கான குபேரர்
கும்ப ராசிக்கான குபேரர்
மீனம் ராசிக்கான குபேரர்
மீனம் ராசிக்கான குபேரர்

திருச்சி, பெரம்பலூர், துறையூர், நாமக்கல், கரூர் முதலான பல ஊர்களில் இருந்தும் வியாபாரிகளும் எண்ணற்ற பக்தர்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்றில்லாமல் நினைத்தபோதெல்லாம் இங்கே வந்து குபேரர்களை வழிபட்டு, வரம்பெற்றுச் செல்கின்றனர்.

கரும்பு ஏந்திய முருகன் தரிசனம்... என்ன சிறப்பு?

மலைக்கோயிலில் அருளும் கரும்பு ஏந்திய முருகனை ஒருமுறை தரிசித்தால் போதும், துன்பம் எனும் கசப்பினை நீக்கி நம் வாழ்வை இனிக்கச் செய்வார் என்பது ஐதீகம்.

ஏராளமான பக்தர்கள், அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால் குடம் எடுத்து வந்தும் முருகனை வழிபடுகிறார்கள். முருகன் அருளால், பிள்ளை பாக்கியம் பெற்றவர்கள், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைத் தூக்கியபடி பிராகார வலம் வந்து வழிபடுகிறார்கள். இந்த முருகனைப் பிரார்த்தித்து நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் நிச்சயமாம்!

கரும்பேந்திய கந்தன்
கரும்பேந்திய கந்தன்

எப்படிச் செல்வது?

திருச்சி-சென்னை சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆலத்தூர்கேட். இங்கேயே கோயில் நுழைவாயில் வளைவு ஒன்று உள்ளது. நுழைவாயில் வளைவு உள்ள இந்தப் பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிகுளம் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ -ஷேர் ஆட்டோ வசதி உண்டு.