Published:Updated:

திருவண்ணாமலை: 1,200 ஆண்டுகள் பழைமை; பல்லவர் காலச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

தவ்வை மற்றும் கொற்றவை சிற்பம்

"நின்ற நிலையில் காணப்படும் தவ்வை சிற்பம் மிகவும் அரிதாகும். இதே போன்ற நின்ற கோலத்திலான தவ்வை, தொண்டூரிலும் காணப்படுவது மற்றொரு சிறப்பு."

திருவண்ணாமலை: 1,200 ஆண்டுகள் பழைமை; பல்லவர் காலச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

"நின்ற நிலையில் காணப்படும் தவ்வை சிற்பம் மிகவும் அரிதாகும். இதே போன்ற நின்ற கோலத்திலான தவ்வை, தொண்டூரிலும் காணப்படுவது மற்றொரு சிறப்பு."

Published:Updated:
தவ்வை மற்றும் கொற்றவை சிற்பம்
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு அருகே உள்ள கீழ்நமண்டி கிராமத்தில் கி.பி.8 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்ட அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வம், "எங்களின் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் உதயராஜா, விஜயன் ஆகிய இருவருடன் இணைந்து தெள்ளார் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, கீழ்நமண்டி கிராமத்தில் இரண்டு பலகைக் கற்களில் சிற்பங்கள் இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஊரில் உள்ள ஒரு வயல்வெளியின் அருகே, சுமார் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட ஒரு பலகைக் கல்லில் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

எட்டு கரங்களுடன் காணப்பட்ட அந்த சிற்பம், கொற்றவையே என்பதைக் கண்டறிந்தோம். அந்த சிற்பத்தில்... தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரு காதுகளிலும் பனையோலை குண்டலமும், கழுத்தில் ஆரம் போன்ற பட்டையான அணிகலனும் அணிந்து, தோள் மற்றும் கைகளிலும் வளைகளை அணிந்து அழகுறக் காட்சி தருகிறார் கொற்றவை. தோளின் இருபுறமாக அம்புரா தூளியும் காட்டப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேல் வலது கரங்கள் முறையே மேலிருந்து கீழாகப் பிரயோகச் சக்கரம், வாள், மான் கொம்பு ஏந்தியபடியும், ஒரு கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் உள்ளது. அதே போல, இடக் கரங்களில் முறையே... சங்கு, வில், கேடயம் ஏந்தியும் கீழ் கரம் மட்டும் இடையின் மீது ஊரு முத்திரையிலும் உள்ளவாறு அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

கொற்றவையின் வாகனமான கலைமான், அவருக்கு பின்புறமாக காட்டப்பட்டுள்ளது. மேலும், எருமையின் தலை மீது கம்பீரமாக நின்றபடிக் காட்சி தருகிறார் கொற்றவை. அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்துப் பார்க்கையில், இந்த சிற்பம் கி.பி. 8 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் கொற்றவை சிற்பமாக கருதலாம்.

கொற்றவை
கொற்றவை

மேலும், இவ்வூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே பலகைக் கல் ஒன்றில் தவ்வையானவள் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார்.

தலையில் மூன்றடுக்களில் கரண்ட மகுடம் தரித்து, வலது கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும், நின்ற கோலத்தில் அழகுற வடிக்கப்பட்டுள்ளது இந்தச் சிற்பம். இந்தச் சிற்பத்திலும் தவ்வை இடை பெரிதாகவே காட்டப்பட்டுள்ளது. தவ்வையின் தலையருகே வலது புறம் காக்கை கொடியும், இடதுபுறம் துடைப்பமும் காட்டப்பட்டுள்ளது. மேலும் தவ்வை சிற்பத்தில், கால் அருகில் மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியும் அழகுற செதுக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போல நின்ற நிலையில் காணப்படும் தவ்வை சிற்பம் மிகவும் அரிதாகும். இதே போன்ற நின்ற கோலத்திலான தவ்வை, தொண்டூரில் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிற்பத்தின் அமைதியை வைத்துப் பார்க்கையில், கி.பி. 8 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாகக் கருதலாம்.

இந்தத் தவ்வை சிற்பத்தின் அருகே சிறு கொட்டகையில் சதுர வடிவிலான ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும், பிற்கால அம்மன் சிலையும் காணப்படுகிறது.

தவ்வை
தவ்வை

இச்சிவலிங்கம் மண்ணில் புதைந்து கிடந்ததாகவும், அதனைச் சில வருடங்களுக்கு முன்னர் மீட்டு, ஊர் மக்கள் வழிபாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு கோயில் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனராம்.

இவ்வூரில் ஏராளமான பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுவதோடு, பல்லவர் காலத் தடயங்களும் காணக்கிடைக்கின்றன. இச்சிவலிங்கம் மற்றும் சிற்பங்களை வைத்துப் பார்க்கையில் இவ்வூரில் பல்லவர் காலக் கோயில் ஒன்று இருந்து, கால ஓட்டத்தில் அழிந்துள்ளதை அறிய முடிகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism