Published:Updated:

தெள்ளாறு: 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு! கூறும் தகவல்கள் என்ன?

தவ்வை, கொற்றவை சிற்பங்கள்

"இவ்வூரில் பல்லவர் காலத்திய கோயில் ஒன்று இருந்து கால ஓட்டத்தால் அழிந்திருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இச்சிற்பங்கள் சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையான ஒன்று."

தெள்ளாறு: 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு! கூறும் தகவல்கள் என்ன?

"இவ்வூரில் பல்லவர் காலத்திய கோயில் ஒன்று இருந்து கால ஓட்டத்தால் அழிந்திருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இச்சிற்பங்கள் சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையான ஒன்று."

Published:Updated:
தவ்வை, கொற்றவை சிற்பங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு அருகே உள்ள பென்னாட்டகரம் கிராமத்தில் கி.பி. 8 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய 4 சிற்பங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்ட அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம், "நண்பர்கள் நான்கு பேருடன் இணைந்து தெள்ளாறு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் அருகே சாலையோரமாக இரு சிற்பங்கள் இருப்பதைக் கண்டு ஆய்வு செய்தோம். அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த விஷ்ணு சிற்பம், மண்ணுக்குள் கால்வாசி புதைந்த நிலையில் காணப்பட்டது. இரு காதுகளிலும் அழகான மகர குண்டலங்களை அணிந்து, நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் காட்சி தருகிறார் விஷ்ணு. மேல் வலதுகையில் பிரயோக சக்கரத்தையும், மேல் இடதுக்கையில் சங்கையும்; கீழ் வலது கை அபய முத்திரையிலும், கீழ் இடது கை கடிமுத்திரையில் இடையின் மீது வைத்தவாறும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது இந்தச் சிற்பம். முப்புரி நூலுடன், கழுத்தில் பட்டையான சரப்பளி அலங்கரிக்க, நான்கு கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைதியை வைத்து பார்க்கையில், 8 - ம் நூற்றாண்டின் கடைபகுதியைச் சேர்ந்த சிற்பம் என்று இதனைக் கருதலாம்.

விஷ்ணு சிற்பம்
விஷ்ணு சிற்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இவ்விஷ்ணு சிற்பத்திற்கு அருகே புடைப்புச் சிற்பமாக பிள்ளையார் காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில், பருத்த வயிற்றுடன் பீடத்தின் மீது அமர்ந்தவாரு வடிக்கப்பட்டுள்ள இச்சிலை, மிகவும் தேய்ந்து காணப்படுகிறது. இதனால் மேல் இரு கரங்களில் உள்ள ஆயுதங்களை அடையாளம் காண இயலவில்லை. கீழ் வலது மற்றும் இடது கரங்கள் முறையே அபய முத்திரையிலும் , இடையில் கடி முத்திரையிலும் காட்டப்பட்டுள்ளது. யானையின் காது மடல்கள் போன்ற பெரிய காதுகளுடன், துதிக்கையை வலப்பக்கமாகச் சுருட்டி வலம்புரி பிள்ளையாராகக் காட்சி தருவது சிறப்பாகும். மேலும், இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள சில பல்லவர் காலத்துப் பிள்ளையார்களுடன் இச்சிற்பமும் ஒத்துப்போவதால் இதன் காலம் கி.பி. 8 - ம் நூற்றாண்டின் தொடக்கமாகக் கருதலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வூரில், ஏரிக்கரை அருகே வயல்வெளிப் பகுதியில் இன்னொரு சிற்பம் தரையில் சாய்ந்தபடி இருப்பதைக் கண்டு, சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அச்சிற்பம் கொற்றவை என்று தெரியவந்தது. அழகான ஜடா மகுடம் தலையை அலங்கரிக்க, கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து, தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் காட்சியளிக்கிறார்.

பிள்ளையார்
பிள்ளையார்

எட்டு கரங்களில்... மேல் வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும், ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், சூலம் ஏந்திய நிலையில், 4வது வலக்கரத்தில் அபயமுத்திரை ஆகியன காணப்படுகின்றன. மேல் இடது கரத்தில் சங்கும், ஏனைய கரங்கள் முறையே குறுவாள், மான் கொம்பு ஏந்திய நிலையில், கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் உள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாகக் கொற்றவையின் இடையருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்களும், இடதுபுறமாக இருக்கும் கலைமானும் இந்தச் சிற்பத்திலும் இடம் பெற்றுள்ளது. எருமையின் தலையின் மீது திரிபங்க நிலையில் காட்சி தருகிறார் கொற்றவை. மேலும், கொற்றவையின் தலையருகே பெரிய சூலம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்த கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து பார்க்கையில் கி.பி 8 ம் நூற்றாண்டாக கருதலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இதே ஊரில் தவ்வை சிற்பம் ஒன்று இருப்பதாக பழனிசாமி என்பவர் அளித்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்த்தோம். ஒரே பலகை கல்லில்... மாந்தன் மாந்தியுடன் , அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமர்ந்த நிலையில் இருக்கும்படி வடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கலைப்பாணியில் வடிக்கப்பட்டிருந்தாலும் இச்சிற்பத்தையும் அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

தவ்வை, கொற்றவை சிற்பங்கள்
தவ்வை, கொற்றவை சிற்பங்கள்

இச்சிற்பங்களை வைத்து பார்க்கையில், இவ்வூரில் பல்லவர் காலத்திய கோயில் ஒன்று இருந்து கால ஓட்டத்தால் அழிந்திருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இச்சிற்பங்கள் சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையான ஒன்று. பென்னாட்டகரம் கிராமத்தின் தொன்மைக்குச் சான்றாக உள்ள இதுபோன்ற சிற்பங்களை ஊர் மக்கள் முறையாக பராமறித்து பாதுகாத்திட வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism