Published:Updated:

குறையொன்றும் இல்லை!

பி.சந்திரமெளலிஅட்டைப்பட ஓவியம்: பாரதிராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
குறையொன்றும் இல்லை!

துராபுரியில் தேவகிக்கும் வசுதேவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறுகிறது. மாப்பிள்ளையையும் தன் சகோதரியையும் ரதத்தில் ஏற்றிக்கொண்டு, தானே சாரதியாக அமர்ந்து குதிரைகளை முடுக்கிவிடுகிறான் கம்சன். தேர் சில அடிகள்கூட நகர்ந்திருக்காது. அப்போது வானில் ஓர் அசரீரி, ‘மூடனே... கம்சா! நீ இப்போது அழைத்துச் செல்லும் இந்த தேவகியின் எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப் போகிறது!’’ என்று ஒலித்தது.

வெகுண்டான் கம்சன். சகோதரி என்றும் பாராமல் தேவகியைக் கொல்லத் துணிந்தான். பிறகு, வசுதேவர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, அந்தத் தம்பதியைக் கொல்லாமல் சிறையில் அடைத்தான். அங்கே அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்றான். ஏழாவதாக உதித்த கருவானது வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு இடம்மாறியது (அந்தக் குழந்தையே பலராமன்). ‘‘தேவகியின் ஏழாவது கர்ப்பம் தோன்றி மறைந்துவிட்டது!’’ என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. நிலையான ஆனந்த வடிவனான ஸ்வாமி, இவ்வாறு தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் குழந்தையாக வடிவம் கொண்டார்.

 ஆம்! முடிவே இல்லாதவரும் பிறப்பும் இறப்பும் இல்லாதவருமாகிய அந்தப் பரம்பொருளே, தன்னைப் பெற்றவர்களை மட்டுமல்லாமல், காலம் காலமாக உலக மக்களை மகிழ்விக்கவும், அவர்களுடைய ஜன்மங்களைக் கடைத்தேற்றவும் தன்னை ஒரு குழந்தையாக மாற்றிக்கொண்டு இந்த உலகத்தில் தோன்றினார்.

தங்களுக்காகத் தேவகியின் கர்ப்பத்தில் வாசம் செய்யும் ஸ்வாமியை தரிசிக்க தேவர்கள் அனைவரும், கம்சனின் சிறைச்சாலைக்கு வந்தனர். ஸ்வாமியைத் துதித்தார்கள். இந்த இடத்தில் நாராயண பட்டத்திரி, நாராயணீயத்தில் அற்புதமான வேண்டுகோள் ஒன்றை ஸ்வாமியிடம் சமர்ப்பிக்கிறார்.

பகவான் நாராயணனின் அவதார லீலைகளை பக்தி மயமாக வர்ணித்து, நேரடியாக குருவாயூரப்பனின் ஒப்புதல் பெற்ற ஒப்பற்ற நூல் நாராயணீயம். தனது நோய் நீங்குவதற்காக நாராயண பட்டத்திரி எழுதிய இந்த நூல் அவரது நோயை நீக்கியதுடன், இதைப் பாராயணம் செய்யும் பலரது நோய்களையும் தீர்த்து வைப்பது அனுபவபூர்வமான உண்மை.

இதோ, பட்டத்திரியே தேவகியின் வயிற்றில் இருந்த கண்ணனிடம் வேண்டுகிறார்: ‘குருவாயூரப்பா! எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்த மாத்திரத் தில் தேவர்கள் அனைவரும் கம்சனின் சிறைச்சாலையைத் தேடிவந்து தங்களைத் துதித்தார்கள் அல்லவா? அப்படிப்பட்ட கருணா மூர்த்தியான தாங்கள் எனது வியாதிக் கூட்டத்தை நீக்குங்கள். மேலும் தேவகி, தங்களைத் தன் கர்ப்பத்தில் தரித்தாள். (அதுபோல) நான் தங்களை என் இதயத்திலே தரிக்க வேண்டும். அதற்குத் தேவை, அசையாத பக்தி. அதையும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’ என வேண்டுகிறார். அந்த வேண்டுதலை குருவாயூரப்பன் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரியும். நாராயண பட்டத்திரி இப்படி பாடிப் பிரார்த்தித்தார் என்றால், பெரியாழ்வார் எப்படிப் பாடுகிறார் தெரியுமா? கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

குறையொன்றும் இல்லை!

ஆயர்பாடியில் ஓர் அதிகாலைப் பொழுது. யசோதையின் பக்கத்தில் தன் சின்னஞ்சிறு கால்களை அசைத்தபடி அழுதான் கண்ணன். அதைக் கேட்டு, கோகுலம் முழுவதும் ஆனந்தப் பரவசம் அடைந்தது. அப்போது கண்ணனைக் கண்ட கோகுலவாசிகளின் மனநிலையை பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத் தானென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே


கோடிசூரிய ஒளியுடன் ஸ்வாமி யைப் பார்த்தவர்கள், ‘இதை நாம் பார்த்தால் போதுமா? ஆயர்பாடி முழுவதும் அல்லவா பார்க்க வேண்டும்?’ என்று, ஆர்வத்துடன் குழந்தைக்கு அருகில் வர வேண்டியவர்கள், வெளியே ஓடுகிறார்கள். கால்கள்தாம் ஓடுகின்றனவே தவிர, மனம் யசோதையின் பக்கத்தில் இருக்கும் கண்ணனிடமே இழுக்கிறது. மனதுக்கும் கால்களுக்குமான இந்தப் போராட்டத்தில் சிக்கிக்கொண்ட உடம்பு ‘பொத்’தென்று விழுகிறது. குதூகலத்தில் கோபியர் போடும் கோஷம், ஆயர்பாடி முழுதும் பரவி எதிரொலித்து, ஒரு பெரிய முழக்கமாக மாறுகிறது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானவர்கள் கண்ணனைக் காண வருகிறார்கள். பாட்டுப் பாடியும் தாளத் துக்கு ஏற்ப ஆடியும் வருகிறார்கள்.

கண்ணனை தரிசித்ததும் அவர்களது நடவடிக்கைகள் மாறின. தங்களது வீட்டு உறிகளை முற்றத்தில் உருட்டி விடுகிறார்கள். தயிர், பால், நெய், வெண்ணெய் போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் பூசியும் தூவியும் விளையாடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ‘அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே’ என்கிறார் ஆழ்வார். அவர்கள் செய்த காரியங்கள், ‘சித்த சுவாதீனம் இல்லாதவர்கள்’ என்று நினைக்கும்படி இருந்தனவாம்.

குறையொன்றும் இல்லை!

மனிதனது சாதாரண அறிவுக்கு எட்ட முடியாதவன் பகவான். அவனை உணர வேண்டும் என்றால், அறிவால் ஆவது ஒன்றும் இல்லை. அறிவால் ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் அறிய முடியாத ஸ்வாமியை, கோபியர் தங்கள் உள்ளங்களால் விரைவில் நெருங்கிவிட்டார்கள் என்பதுதான் ஆழ்வார் தம் பாடல் மூலம் நமக்கு உணர்த்தும் செய்தி.

நாமும், நாராயண பட்டத்திரி வேண்டுவது போன்று அசையாத பக்தியையும், பெரியாழ்வார் குறிப்பிடுவது போல் கோபியர்கள் பெற்றிருந்த திடமான பக்தியையும் அந்தக் கோகுலக் குழந்தையிடம் வரமாகக் கேட்டுப் பெறுவோம். நம்மிடம் கிருஷ்ண பக்தி வந்துவிட்டால், மற்ற வரங்கள் யாவும் தாமே நம்மை வந்தடையும்.

அப்படியான பக்தியை வளர்க்க முதற்படி, கிருஷ்ண வழிபாடு.அதற்கேற்ப கோகுலாஷ்டமி புண்ணிய தினத்தில் கண்ணன் லீலைகளைப் படிப்போம், அவன் அருளைப் பாடி துதிப்போம். அதைக்கேட்டு மகிழவும், நமக்கு தனது அருளை அள்ளி வழங்கவும், நம் வீடு தேடி வருவான் கண்ணன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு