
விநாயகர் தனக்குத் தலைவர் தானேயாக விளங்குபவர். அவருக்கு மேல் வேறு தலைவர் இல்லை. தேவர்கள் யாருக்குமே இத்தனை ஆற்றல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அபரிமிதமான


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆற்றல் கொண்டவர் விநாயகர். அகிலம் அனைத்தையும் தனது வயிற்றுக்குள் அடக்கி, வெளியிலிருந்து எந்த இடையூறும் நெருங்காதவாறு காக்கும் கருணைக் கடவுள் கணபதி. எத்தனை படைகள் ஒருசேரத் திரண்டு வந்தாலும், அத்தனை படைகளையும் சம்ஹாரம் செய்து, பக்தர்களைக் காப்பாற்றுபவர் அவர்.
கணங்களுக்கெல்லாம் பதியாக இருப்பவர் கணபதி. பிரகிருதி தத்துவம், சுத்தவித்யா தத்துவம், ஈசுவர தத்துவம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் விளங்கும் விநாயகர், பிரகிருதி, தெய்வம், பரஞானம் ஆகிய மூன்று நிலைகளிலும் தோற்றம் தருபவர்.

தூய அன்போடு பூவும் நீரும் கொண்டு அவரை பூஜிக்கும் அன்பர்களுக்கு நிகரற்ற இன்ப வாழ்வை அருள்பவர். தன் அடியவர்களுக்குப் பிற உயிர்களாலும், மற்ற தெய்வங்களாலும், ஏன்... தன்னாலும்கூட எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் காப்பாற்றுபவர்.
யானையைப் போலவே தன்னைக் கட்டுவதற்கு, அன்பாகிய கயிற்றை அடியார்களுக்குத் தானே எடுத்துக் கொடுத்து, அவர்களின் உள்ளமாகிய கூடத்தில், ஊக்கமாகிய கட்டுத்தறியில் கட்டுண்டு நிற்பவர். பாகனின் அன்பான கட்டளைக்கு இணங்கி நடக்கும் யானையைப் போலவே, அடியார்கள் பக்தியுடன் கண்ணீர் மல்கத் துதித்துப் போற்றும் பாடல்களுக்கு வசமாகி, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவர்.
சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்தும் ஐந்து கரங்கள்... என பிரணவ

தத்துவமாகவே திகழும் அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தித் திருநாள்.
இந்தப் புண்ணிய தினத்தில் விநாயகரை வழிபடுவதால், நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும்.
வழிபடுவது என்றால், பண்டிகை தினங்களில் ஏதோ சம்பிரதாயமாக தெய்வங்களை வணங்குவதால் பலன் கிட்டாது. குறிப்பிட்ட பண்டிகை உணர்த்தும் தாத்பரியத்தை உணர்ந்து, அந்த பண்டிகைக்கு உரிய தெய்வத்தின் மகிமையை அறிந்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி உளமார வழிபட்டால், அதற்கான பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
அவ்வகையில் விநாயகர் சதுர்த்தியின் மகிமையோடு, பிள்ளையாரின் லீலைகள், பதினாறு பேறுகளையும் பெற்றுத் தரும் அவரின் திருவடிவங்கள், பிள்ளையார் விரதங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.