Published:Updated:

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

கூத்தனூர் அற்புதம்

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

ல்வி தெய்வமாம் கலைமகளுக்கான தனிக்கோயில் அமைந்த திருத்தலம், கவி ஒட்டக்கூத்தருக்கு கலைவாணியின் திருவருள் கிடைத்த திருத்தலம், இன்றைக்கும் வழிபட வரும் அடியவர்களின் அறியாமை நீங்கவும் ஞானம் ஸித்திக்கவும் சரஸ்வதிதேவியின் திருவருள் கைகூடும் புண்ணிய க்ஷேத்திரம்... இப்படி மகிமைகள் பல நிறைந்த திருத்தலம் கூத்தனூர். இங்கே தலைமுறை தலைமுறையாக பட்டாச்சார்யராக சேவை செய்து வரும் குடும்பம் சந்தோஷ் குருக்களுடையது. ஒரு தலைமுறையில், இந்தப் பணிக்கு தடை ஏற்படுமோ என்று கலங்கும் சூழல் ஏற்பட்டதாம்.  ஆனால், அம்பாள் அருளால் அந்த இன்னல் அகன்றது என்கிறார் சந்தோஷ் குருக்கள்!

“என் பாட்டனாரின் தகப்பனார் சாமிநாத குருக்கள், அம்பாளின் தீவிர பக்தர். சதாசர்வ காலமும் அம்பாளைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவருக்கு நான்கும் பெண் குழந்தை களாகவே பிறந்தன. ஆண் வாரிசே இல்லை. இதனால் மிகவும் மனத் துயரமுற்றார்.

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘தலைமுறை தலைமுறையாக இந்தக் கோயிலுக்கு பட்டாச்சார்யராக சேவை செய்து வருகிறோம். அந்தத் திருப்பணி இந்தத் தலை முறையோடு முடிந்துவிடுமோ’ என ரொம்பவே மனமுடைந்துபோனார். தன் மனக்குறையை சரஸ்வதி அம்மனிடம் நெக்குருகச் சொல்லி கண்ணீர் சிந்தினார். ‘தாயே,  நான் மடிப்பிச்சை எடுத்து உனக்குக் காணிக்கை செலுத்துகிறேன். என்னைப்

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

போலவே உன்னை வணங்கிட ஒரு ஆண்வாரிசைக் கொடு’ என  உள்ளம் உருகி வேண்டியதுடன், மடிப்பிச்சை எடுத்து காணிக் கையும் சமர்ப்பித்தார். அவர் வேண்டியது போலவே ஓர் ஆண்வாரிசு பிறந்தது. அதற்குப் பிச்சை எனப் பெயரிட்டு வளர்த்து, அம்பாள் சேவைக்கு அர்ப்பணித்தார். அதிலிருந்து, எங்கள் வம்சத்தில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை, தனது 9-வது வயதில் வேதம் பயின்று, அம்பாளின் ஆலயத்தில் பட்டாச்சார்யராக சேவை செய்வது வழக்கமானது.

சாமிநாத குருக்கள், பிச்சை குருக்கள், ராமநாத குருக்கள், சிவ சங்கர குருக்கள் என தொடர்ந்து பணி செய்த எங்கள் வம்சாவழியில், இப்போது நான் பணிசெய்து வருகிறேன். எனக்கென நான்  அம்பாளிடம் எதுவும் கேட்க மாட்டேன். அம்பாள் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

அதனால், அம்பாளிடம் குறைகளைச் சொல்ல வருவோரின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென்றுதான் பிரார்த்திப்பேன். வாய் பேச இயலாத நிலையில் உள்ள சிறு வயதுக் குழந்தைகள் பலரையும் இந்த ஆலயத்துக்கு அழைத்து வருவார்கள். அம்பாளுக்குப் படைக் கப்பட்ட தேன் பிரசாதத்தைப் பெற்றுச் செல் வார்கள். அம்பாள் அருளால் நிறைய குழந்தை களுக்கு பேச்சுத்திறன் வந்திருக்கிறது. அம்பாளின் புகழ் பாடி அவருக்குத் தொண்டு செய்வதே என் வாழ்க்கை!” என மனமுருகிச் சொன்னவர், தொடர்ந்து இந்தத் தலத்தின் மகத்துவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“சோழ மாமன்னன் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக் கூத்தருக்கு இந்த ஊரைப் பரிசாக வழங்கியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. எனவேதான் அவர் பெயரால் இந்த ஊர் ‘கூத்தனூர்’ என அழைக்கப்படுகிறது.

அமைதியான சூழலில்தான் கல்வியும் கலைகளும் வளரமுடியும். ஞானத்தின் பிறப்பிடம் அமைதியே. அப்படிப்பட்ட வார்த்தைகளின் தேவியான சரஸ்வதி, இப்பூவுலகில் அமைதியும் அழகும் நிறைந்த ஓர்  இடத்தைத்  தேர்ந்தெடுத்து, அருளாட்சி புரிய வந்த ஊர்  கூத்தனூர். அம்பாள் அருள்புரிய வந்த ஊர் என்பதால், இந்த ஊருக்கு  ‘அம்பாபுரி’ என்ற பெயரும் உண்டு. இதை ‘செதலபதி’ புராணம் விளக்குகிறது. இத்தலத்துக்கு இரண்டாம் குலோத்துங்கச் சோழன் எண்ணற்ற திருப்பணிகள் செய்துள்ளார். ஒட்டக்கூத்தருக்கு வரகவி பாடும் வல்லமையை தந்தவள் இந்த தேவி'' என்றவரிடம், கோயிலின் நவராத்திரி விழா குறித்து கேட்டோம்.

‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை!’

“இங்கு அம்பாளுக்கு நவராத்திரியில்  துர்கா பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மகாலக்ஷ்மி, சாகம்பரி, சந்தான லக்ஷ்மி, மீனாட்சி, பத்மாவதி, சரஸ்வதி மற்றும் சந்தனக்காப்பு ஆகிய விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 

விஜய தசமியன்று இத்தலத்தில்  பாலகர்களை தானியத்தில் ‘அகரம்’ எழுதவைத்து, பாடசாலையில் கொண்டு சேர்க்கும் வைபவம் சிறப்புற நடைபெறும். இதனால், பாலகர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதாக  ஐதீகம்.

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய இரண்டு நாட்களும் அம்பாள் கால்நீட்டி உட்கார்ந் திருப்பதுபோல் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். திருப்பாதத்தில் பக்தர்கள் அனை வரும் பூக்கள் சமர்ப்பித்து வழிபடுவார்கள். இந்த  பாத தரிசனத்தை பெரும்பாக்கியமாகக் கருதுவார்கள்'' என்கிறார் சந்தோஷ் குருக்கள்.

திருக்கோயில் விசேஷங்கள் நவராத்திரி தினங்களில் மட்டுமின்றி புதன் கிழமைகள், பெளர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல், ஒவ்வொருநாளும் கோயிலில் நான்குகால பூஜை கள் நடைபெறுகின்றன. நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, தானியத்தில் ‘அகரம்’ எழுத வைத்து, அம்பாள் சரஸ்வதிதேவியின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

ஆலயத்தில் வழிபட்டுக்கொண்டிருந்த வீரக்குமார்-பிருந்தா தம்பதி, “மாதத்தில் இரண்டு புதன் கிழமையாவது, இந்த கோயிலுக்குக் கட்டாயம் வந்துவிடுவோம். தொடர்ந்து ஆறு வருடங்களாக இந்தக் கோயிலுக்கு வந்து செல்கிறோம்.  இங்கு வந்து செல்வதால், எங்கள் மகன் அர்ஜுன் மிகவும் நன்றாக படிக்கிறான்” என்றனர் மகிழ்ச்சி பொங்க.

நாமும் வாழ்வில் ஒருமுறையேனும் கூத்தனூர் நாயகியைத் தரிசித்து அருள்பெற்று வருவோம்.

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில், பூந்தோட்டம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அரை கி.மீ தொலைவு பயணித்தால், கூத்தனூர் சரஸ்வதி கோயிலை அடையலாம். திருக்கோயில் காலை  7.30 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

 - வீ.ஆனந்தவள்ளி, படங்கள்: க.சதீஷ்குமார்