Published:Updated:

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

அக்டோபர் - 11 பாபா மகாசமாதி தினம்

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

ஷீர்டி பாதயாத்திரைக் குழுவினரின் சிலிர்ப்பூட்டும் அனுபவம்...

நாம் செய்யும் எந்தச் செயலையும், இறைவனுக்காகச் செய்யும் போது அல்லது இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது அதன் பரிமாணமே மாறிவிடுகிறது. வெறும் சாதம் பிரசாதமாவதுபோல், சாதாரணமான நமது பயணமே... அதுவொரு புண்ணிய தலத்தை நோக்கியது எனும்போது, புனித யாத்திரையாகி விடுகிறது. அப்படியொரு புண்ணிய யாத்திரை நம்மை வியக்கவும் சிலிர்க்கவும் வைத்தது.

ஆம்! சென்னையைச் சேர்ந்த குருசாமி சந்திரமௌலி, ஸ்ரீதர் குப்தா, அசோக்குமார், ஆனந்த், கார்த்திகேயன், மோகன், பானுசந்தர், மகேஷ், வினோத்குமார், சரவணன், வசந்த், குமார், சந்தோஷ், தயாளன், தண்டபாணி, கோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னையில் இருந்து திருப்பதி, மந்திராலயம், பண்டரீபுரம் வழியாக சுமார் 1640 கி.மீ. தூரம் பாத யாத்திரை யாகப் பயணித்து ஷீர்டி மகானைத் தரிசித்து வந்துள்ளனர்.

சென்னை தி.நகர் சரோஜினி தெருவில் இருக்கும் ஸ்ரீசாயி பாபா தியான மையத்தின் அறங்காவலர் திருவள்ளுவன், பாத யாத்திரை குழுவினரை நமக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

‘‘முதன் முதலில் ஒரே ஒருத்தர் ஷீர்டிக்கு நடந்துபோய் வழிபட்டார். அடுத்த வருஷம் இன்னும் கொஞ்சம் பக்தர்கள் சேர்ந்தாங்க.. அடுத்தடுத்த வருஷம் இன்னும் அதிகம்பேர் சேர்ந்தாங்க. இந்த வருஷம் 17 பேர் போய்ட்டு வந்திருக்காங்க. இது அஞ்சாவது வருஷம்’’ என்று கூறிய திருவள்ளுவன், ஓய்வு பெற்ற வங்கி அலுவலரும் பாதயாத்திரை குழு வில் மூத்தவருமான ஸ்ரீதர் குப்தாவை அறிமுகப் படுத்தினார்.

ஆத்மார்த்தமான சாயி பக்தரான ஸ்ரீதர் குப்தா தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘எல்லாப் புகழும் அந்த ஷீர்டி மகானுக்கும், ஷீர்டிக்கு முதன்முதலில் தனி ஒருவராக பாத யாத்திரை சென்று வந்த எங்க குருமகராஜ் சந்திரமௌலி சாருக்கும்தான்! அதுக்கடுத்த வருஷம் அசோக் சாயி (இந்த தியான மையத்தின் பக்தர்கள் அனைவருமே மற்றவர்களை அழைக் கும்போது, பெயருடன் ‘சாயி’ என்னும் நாமத்தைச் சேர்த்தேதான் சொல்கின்றனர்) உட்பட இன்னும் சிலர் சேர்ந்து போனாங்க.
2013-ல் இருந்து நானும் இந்தக் குழுவில் இணைந்து பாபா அருளால் நல்லபடியாகப் போய்ட்டு வந்துட்டிருக்கேன்!’’ என்றவர் தொடர்ந்தார்:

‘‘எங்க பையனுக்கு கல்யாணமாகி 7 வருஷம் குழந்தை இல்லை. எல்லா தெய்வத்துக்கும் வேண்டி, விரும்பித் தவமிருந்தோம். அந்த நேரத்தில், என் மனைவி எங்க ஏரியா லேடீஸ் கிளப் பெண்களுடன் சேர்ந்து ஷீர்டிக்குப் போனாங்க. அங்கே நடந்த சத்ய விரத பூஜையில் கலந்துக்கும் வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. பூஜை நிறைவில், பிரசாதமாக என் மனைவிக்கு முழுத் தேங்காயைக் கொடுத் திருக்காங்க. அதைக் கொண்டுவந்து, வீட்டில் வெச்சு பூஜை பண்ணினோம். அப்போ என் பையனும் மருமகளும் வியட்நாமில் இருந்தாங்க. 3 மாசத்தில் மருமகள் உண்டாகி இருக்கிறதாக பையன் போன் பண்ணினான். சாயியின் அனுகிரஹம் எங்களுக்குப் பரிபூரணமாக கிடைச்சதை நினைச்சு உருகிப்போனோம். அந்த நிமிஷத்திலிருந்து பாபாவே எல்லாம்னு ஆயிடுச்சு. நல்லபடியா பேரன் பிறந்தான். ‘தத்த சாயி’ன்னு பேர். பாபாவின் பரிசு அவன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

குடும்பத்தில் எல்லோரும் இப்போ பாபா பக்தர்கள்! தினம் மூணு வேளை பூஜை, ஆரத்தின்னு சகலமும் நடக்குது. ஒரு முறை ஷீர்டியிலிருந்து பாபாவின் பாதுகை வந்தப்போ, எங்க வீட்டுக்கும் வந்தது. அது எங்கள் கொடுப்பினை.

அடிக்கடி தி.நகரில் இருக்கும் இந்த தியான மையத்துக்கு வருவேன். இங்கே நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை மிகவும் சக்திவாய்ந்தது. இந்தக் கோயிலில் நான் பாட மாட்டேனான்னு முன்பெல்லாம் ஆசையாக இருக்கும். ஆனா, இப்போ இங்கே மந்திரங்கள் சொல்லி பூஜையே பண்ற வாய்ப்பை பாபா கொடுத்துட்டார். அவருடைய அருளை என்னன்னு சொல்றது?’’ என்று நெகிழ்ந்த குப்தா, அருகில் இருந்த சந்திரமௌலியைப் பார்க்க, அவர் தன்னுடைய முதல் பாதயாத்திரை அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘மயிலாப்பூர் பாபா கோயிலுக்குப் பின்னால் தான் வீடு. எங்க பெற்றோர் பாபாவின் பக்தர்கள் என்பதால், எனக்கும் சின்ன வயதில் இருந்தே பாபாவிடம் மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. மயிலாப்பூர் பாபா கோயிலில் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி இருக்கும்போது, நாங்கள்லாம் சின்னப் பசங்க. ஈஸி சேரில் சாய்ந்து உக்கார்ந்திருக்கும் அவரிடம் சாக்லேட் வாங்கிச் சாப்பிட்ட நினைவு இருக்கு! 

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

வருஷா வருஷம் சபரிமலைக்கு சென்னையி லிருந்து நடந்து போவேன். அதேபோல ஷீர்டிக்கும் நடைப்பயணமாகவே போய் பகவானைத் தரிசிக்க ஆசை!  7 வருஷம் முன்னால, ஷீர்டிக்கு நடந்து போகலாம்னு முடிவு செய்ததும், முதலில் காரில் போய் ரூட் எல்லாம் பார்த்துக்கிட்டேன். பிறகுதான் நடைப்பயணம் தொடங்கினேன். ஒரேஒரு ஜோல்னா பை! வழியில் என்ன கிடைக்குதோ, அதைச் சாப்பிட்டுக்குவேன். கிடைக்கிற தண்ணியைக் குடிச்சுக்குவேன். காலில் கொப்புளங்கள் வந்து, வெடிச்சு ரொம்ப சிரமமாக இருந்தது. ஆனாலும் யாத்திரையை நிறுத்தக் கூடாதுன்னு உறுதி!

ஆந்திராவில் கடப்பா அருகில் ஒரு ஊரில் டாக்டர்கிட்ட போனேன். கொப்புளத்துக்கு சிகிச்சை எடுக்க! நெடுஞ்சாலையில் நடக்கிறதால புழுதி படிஞ்ச உடை, பரட்டைத் தலை, காலில் கொப்புளத்தோடு என்னைப் பார்த்த அவர் நான் ஒரு தொழுநோயாளின்னு நினைச்சு, வைத்தியம் பண்ண மாட்டேன்னுட்டார். ஷீர்டி பக்தன், பயணம் போறேன்னு சொன்னதும், அதை நம்பாமல் தன்னுடைய உதவியாளரை விட்டு கொப்புளத்தை உடைச்சுவிட்டு, மருந்து வெச்சுக் கட்டச் சொன்னார். ஹோட்டல்ல டீ குடிக்கப் போய் உட்கார்ந்தா வெளியே அனுப்பிடுவாங்க. ஏ.டி.எம்.ல போய் பணம் எடுத்தால், சந்தேகமாக பார்ப்பாங்க! ஏதாவது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தா கூட, விரட்டி அடிப்பாங்க. எப்படியோ பாபா துணையோடு அந்தப் பயணத்தை நல்லபடியா முடிச்சேன்.

அடுத்த வருஷம், இன்னும் சில நண்பர்கள் வர்றேன்னு சேர்ந்தாங்க. ‘முன்னே மாதிரி சிரமப்படக் கூடாது’ என்று முடிவு பண்ணி, ஒரு வண்டியில் தேவையான சாமான்களை ஏற்றி, எடுத்துட்டுப் போனோம். அப்புறம் எல்லோரும் காவி வேஷ்டி, டீஷர்ட் என்று சீருடை போட்டோம். அப்பத்தான் ஒரு அங்கீகாரம் கிடைச்சுது. மூன்று மாநிலங்களைக் கடந்து போறதால பல சிரமங்கள் ஏற்படவே செய்யும். ஆனால், அத்தனை சிரமத்துலயும் பாபா எங்ககூடவே இருக்கறதை நாங்க அனுபவபூர்வமா உணர்ந்திருக்கோம்.

நான் முதல் வருஷம் போனப்போ, ஷீர்டியை நெருங்குறதுக்கு முன்னால், ஒரு டீக்கடையில் என்னைவிட அழுக்கான உடை போட்டிருந்த ஒரு ஏழை விவசாயி இருந்தார். அவருக்கும் சேர்த்து நான் டீக்கு பணம் கொடுக்கப் போனப்போ, ‘வேண்டாம் சாப். என்னால் ஷீர்டிக்குப் போகத்தான் முடியல... இதையாவது செய்றேனே’ன்னு சொல்லி, என்னுடைய டீக்கும் சேர்த்து காசு கொடுத்தார். உணவே கிடைக்காமல் பசியில் வாடி, களைத்து மயங்கப் போன நேரத்தில் ஒரு வீட்டில் ஒரு தட்டில் கொஞ்சம் சோறு, தண்ணி, உப்பு போட்டு ஒரு கத்தரிக்காய் வெச்சுக் கொடுத்தாங்க. அமிர்தமாக இருந்தது அந்த நேரத்தில்! பட்டினி கிடந்து சாப்பிட்ட அந்த உணவை என் வாழ்க்கையில் என்னிக்கும் மறக்கமுடியாது! 

குப்தாஜி வந்தபிறகு எங்களைப் பக்குவமாக வழிநடத்தி அழைச்சுக்கிட்டுப் போறார். எங்களுக்கு முழுமையான ஆதரவு தர்றது, சென்னை ஈ.சி.ஆர்.ல இருக்கிற பட்டிப்புலம் சாயிமந்திர் கே.வி.ரமணி சாயிதான். அங்கே இருந்துதான் நாங்க மாலை போட்டு கிளம்பு வோம். எங்கள் பயணத்துக்குப் பக்கபலமா இருந்து, ஆசீர்வதிச்சு அனுப்புவதுடன், முழுமைக்கும் கூட இருப்பவர் ரமணி சாயி! ஷீர்டி பாத யாத்திரையை நாம் என்ன சங்கல்பம் பண்ணிட்டு போறோமோ அதை பாபா நிறைவேத்தி வைக்கிறதை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கோம்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் சந்திரமௌலி.

இவர்களது பாதயாத்திரை குழுவின் முக்கியமான நபர், எல்லோராலும் ‘தன்வந்திரி சாயி’ என அன்போடு அழைக்கப்படும் அசோக். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், இதுவரை 5 வருடங்கள் ஷீர்டிக்கு நடந்து சென்று வந்திருக்கிறார்.

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

‘‘எனக்கு பாபாவைப் பத்தி அவ்வளவாக தெரியாது. சந்திரமௌலி சாயியை ஒருமுறை சந்தித்தபோது, ‘ஷீர்டிக்கு நடந்து போறோம். வர்றீங்களா?’ன்னு கேட்டார். எனக்கு பாத யாத்திரை என்றால் அவ்வளவு இஷ்டம். உடனே சரின்னு சொல்லி, தயாராயிட்டேன். அதன்பிறகுதான் பாபாவைப் பத்தி நிறையத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

யாத்திரையின்போது, தொடர்ந்து நடப்பதால் கால்களில் கொப்புளம் வருவதைத் தவிர்க்க முடியாது. அதைக் கீறிவிட்டு, சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்டவேண்டும். இரவு உணவு முடிந்ததும் அந்தப் பணியைச் செய்யும் பேற்றினை பாபா எனக்கு வழங்கி உள்ளார். நாங்கள் போகும்போதே கைவைத்தியமாக சில மருந்துகளை எடுத்துட்டுப் போவோம். கொப்புளம் வர்றப்போ, கடுக்காய்ப் பொடி, மஞ்சள்பொடி, கள்ளிப்பால் (தூள் செய்தது-பவுடர்) எல்லாத்தையும் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் குழைச்சு பாதங்களில் தடவணும். கொப்புளம் ஆறிடும். இந்த மருத்துவமெல்லாம் எனக்கு எப்படித் தெரிந்தது என்பதே ஆச்சர்யமா இருக்கு. பாபாவே என் மூலமா எல்லோருக்கும் மருத் துவம் பார்க்கிறார் என்பதுதான் உண்மை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பாதயாத்திரை போகணும். அது, மனசையும் உடம்பையும் சுத்திகரிக்கும்! பாபாவை நேரிலும் அரூபமாகவும் பார்க்கக் கூடிய வாய்ப்பு அது! நடுவில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நடக்க முடியாத சூழ்நிலை வந்தாலும் பாபா நம்ம கையைப் பிடிச்சு, மெதுவாக அழைச்சுக்கிட்டுப் போயிடுவார்!’’ என்று பக்திப் பரவசம் பொங்கக் கூறுகிறார் அசோக்.

இந்தக் குழுவினருக்கு வேன் ஓட்ட வந்த டிரைவர் கே.வி.ரமணி. முதலில் தயங்கியவர் பிறகு அரைமனதாக சம்மதித்திருக்கிறார். ஆனால், மாலை போட்டதும் அவருடைய மனதில் இனம் தெரியாத ஒரு மாறுதல். மதுப் பழக்கம் உள்ள அவர் மாலை போட்டதும் மதுவைத் தொடாமல் இருந்ததுடன், யாத்திரைக் குழுவினருக்கு தேவையான உதவிகளை சிரத்தை யாகச் செய்திருக்கிறார். பாதயாத்திரை முடிந்து வந்ததும் மாலையைக் கழற்றியதும் எதையோ இழந்தவர்போல் காணப்பட்டவர், உடனே ஒரு ஸ்படிகமாலை வாங்கி அதில் பாபா டாலரைக் கோர்த்து அணிந்துகொண்டாராம். அந்த அளவுக்கு அவருடைய சஞ்சலமான மனதை பாபா மாற்றி அருள்புரிந்திருக்கிறார்.

குப்தாஜியின் அனுபவங்களும் மெய்சிலிர்க்க வைப்பவை!

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

‘‘ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எவ்வளவோ சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்... இருந்தாலும், நாங்க எல்லோருமே சேர்ந்து பல இடங்களில், பல ரூபங்களில் பாபாவைத் தரிசிச்சிருக்கோம். என்னால் மறக்க முடியாத அற்புதம் ஒண்ணு பாபா நிகழ்த்தி இருக்கார்.

ஒருமுறை, காலில் கொப்புளங்கள் ரொம்ப அதிகமாகி, கட்டுப் போட்டும் நடக்க முடியாம, வலியால் துடித்து சிரமப்பட்டேன். பக்கத்து ஊர் மருந்துக் கடையில் மாத்திரை வாங்கணும். அப்போ, பைக்கில் வேகமாக வந்த ஒருத்தர், ‘இந்தா... இந்த மாத்திரையைப் போட்டு நட!’ என்று சொல்லிக் கொடுத்தார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன். ‘நான் யாராக இருந்தால் என்ன? மாத்திரையை வாங்கிப் போட்டு நட!’ என்று ஹிந்தியில் கட்டளையாகச் சொன்ன அந்த நபர், மாத்திரையைக் கொடுத்துட்டுப் போயிட்டார். ரெண்டு அட்டை. மொத்தம் 40 மாத்திரைகள். அதைப் போட்டதும் வலி இருந்த இடம் தெரியாமல் மாயமாகிப் போயிடுச்சு! என்ன அதிசயம்! ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாம இருந்த நான், அதுக்கப்புறம் எழுந்து 6 கி.மீ. நடந்தேன்! மாத்திரை தர்றதுக்காக பைக்கில் வந்தது பாபா இல்லாமல் வேற யாரு?

எல்லோருமே அதைப் போட்டுக்கிட்டு, வலி இல்லாமல் நடந்தோம். அதுக்குப் பிறகு, அந்த மாத்திரையை எல்லா மாநிலங்களில் இருக்கும் மருந்துக் கடைகளிலும் விசாரிச்சிட்டோம். இதுவரை அப்படி ஒரு மாத்திரை இல்லைன்னு தான் சொல்றாங்களே தவிர, அது கிடைக்கவே இல்லை... நடக்கும்போது நாம் அனுபவிக்கும் சிரமங்கள் நம்முடைய கர்மாதான். அதை அனுபவிச்சுத்தான் ஆகணும். அதன்பின் பாபா கூட்டிட்டுப் போயிடுவார்! இது ஒரு பெரிய யக்ஞம்... இதில் பங்கேற்கக் கிடைச்ச வாய்ப்பு, என்னுடைய பிறவிப் பயன்!’’ மெய்யுருகிக் கண்கலங்கி விவரிக்கிறார் குப்தாஜி.

இந்த சாயி அடியவர்களின் அனுபவத்தைக் கேட்ட நமக்கே ஷீர்டி போய் வந்த ஆனந்தம் என்றால், ஆண்டுதோறும் இந்த மகா யக்ஞத்தில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்த அவர்களுக்கு கிடைப்பது பேரானந்தம் அல்லவா!

சென்னை - ஷீர்டி பாதயாத்திரை

** ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இந்த பாத யாத்திரை தொடங்கப்படுகிறது. அதிக மழையோ, அதிக வெயிலோ இல்லாத பருவநிலை என்பதால், இந்த மாதத்தில் செல்கிறார்கள்.

** ஒரு நாளைக்கு சுமார் 50 கி.மீ. தூரம் என்ற அளவில் நடக்கிறார்கள். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து 2 மணிக்கு நடையைத் தொடங்கினால், காலை 8.30 வரை நடை. பிறகு ஒரு பிரேக். காலை உணவு. பின் 9.30-க்கு நடக்கத் தொடங்கி 12.30 வரை பயணம் தொடர்கிறது. பின்னர், மதிய உணவு இடைவேளை. உணவுக்குப் பிறகு, 3.30 வரை ஓய்வு. பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்து, இரவு 10 மணி வரை நடை. அதன் பின் இரவு உணவு, 1 மணி வரை தூக்கம்.

** ஈ.சி.ஆர். பட்டிப்புலம் கிருஷ்ணன்கரணை சாயிபாபா கோயிலில் மாலைபோட்டுக் கிளம்பி, மயிலாப்பூர் பாபா கோயிலுக்கு வந்து ஆசி பெற்றுக் கிளம்புகிறார்கள்.

** தொடர்ந்து திருப்பதி, திருச்சானூர் தரிசனம் முடித்து, 15-ம் நாள் மந்த்ராலயம் சென்று ஸ்ரீராக வேந்திரர் தரிசனம். பிறகு மந்த்ராலயத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த 8-வது நாளில் பண்டரிபுரம் ஸ்ரீவிட்டலன் தரிசனம்.

** அடுத்தது மாந்தோலி கிராமத்தில் யோக நிலையிலேயே இருக்கும் ஆத்மகிரி பாபா தரிசனம். அன்ன, ஆகாரம் இல்லாமல் வெறும் சுவாசத்திலேயே ஜீவித்துக்கொண்டிருக்கும் மகான். 12 ஆண்டுகளாக ஒற்றைக் காலில் நின்று நாராயண கீர்த்தனை செய்தவர்.

** அங்கிருந்து ஒரு வார கால நடைபயணத்தில் ஷீர்டியை அடைவார்கள். சென்னையில் ஆகஸ்ட் மாதம் எந்தத் தேதியில் கிளம்புகிறதோ, அடுத்த மாதம் அதே தேதியில் ஷீர்டியை அடைகிறது குழு. இடையில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் வந்தாலும், சரியாக ஒரு மாதம் என்பது இதுவரை தவறியது இல்லையாம்.

** ஷீர்டியை அடைந்ததும் முதலில் கண்டோபா கோயிலில் கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் பிறகு, ஷீர்டி சமஸ்தானத்தின் பி.ஆர்.ஓ. வந்து, இவர்களை வரவேற்று, அழைத்துச் செல்கிறார். ஷீர்டி கோயிலின் இயக்குநர் வந்து குழுவினரை கௌரவித்து, பின்னர் பாபாவின் அருகே அழைத்துச் செல்ல... திவ்ய தரிசனம் பெறுகின்றனர்.

** சாயி பக்தரான பால்கிநிவார் என்பவரின் அறக் கட்டளையின் சார்பில் இவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடமும் உணவும் வழங்கப்படுகின்றன.

‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை!’’

பாதயாத்திரை செல்ல விருப்பமா?

ஷீர்டிக்கு பாதயாத்திரை செல்ல விருப்பம் இருப்பவர்கள், சாதி, மதம், இனம், வயது வேறுபாடு இன்றி யார் வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த புண்ணிய யாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்க்காணும் முகவரியை அணுகலாம்.

ஸ்ரீசாயிபாபா தியான மையம்
சரோஜினி தெரு, தியாகராய நகர்,
சென்னை - 600 017