Published:Updated:

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
News
தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

சகல சுபிட்சங்களும் அருளும் தசமஹா தேவியர்

யாதேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம:


ந்த தேவியானவள், இந்த பிரபஞ்சத் தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தாய்மை உணர்வோடு விளங்கு கிறாளோ, அந்த தேவிக்கு எனது நமஸ்காரங்கள் என்று போற்றுகிறோம்.

ஆம். எல்லாம்வல்ல தேவி, தானே இவ்வுலகத்தின் அன்னையாக இருந்து நம்மைக் காப்பாற்றி வருகின்றாள். லலிதா ஸஹஸ்ர நாமமும் ‘ஸ்ரீ மாதா’ என்று தேவியை தாயாகவே வர்ணிக்கிறது. ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் மீது கருணையுடன் திகழ்வாளோ, அப்படியே உலக மாதாவான ஆதிபராசக்தியும் நம்மீது கருணையுள்ளம் கொண்ட வளாக விளங்குகின்றாள். அவளின் அருளைப் பெற, சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை நமக்கு அளித்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நவராத்திரி வழிபாடு. ‘சரத்காலே மஹாபூஜா க்ரியதேயாச வார்ஷிகி’ என்கிறது தேவி மஹாத்மியம். அதன்படி, இந்த சரத் கால நவராத்திரியில் எல்லாம் வல்ல அன்னையை வழிபட்டு, எண்ணிய பலன்களை அடைந்து மகிழ்வோம்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அம்பிகை வழிபாட்டில், தசமகா வித்யா தேவியருக்கான  வழிபாடு குறிப்பிடத்தக்கது. இவர்களை எப்போதுமே வழிபடலாம் என்றாலும், சக்திதேவிக்கு உகந்த நவராத்திரியில் வழிபடுவது, இன்னும் விசேஷம்! தசமகா தேவியருக்கான வழிபாட்டு முறைகளையும் மிகத் தெளிவாக அளித்திருக்கின்றன சாஸ்திரங்கள். பல நூற்றாண்டுகளாக நம் தேசத்தின் மீது நிகழ்ந்த அந்நிய படையெடுப்புகள்-ஆதிக்கங்கள் காரண மாக, நமது கலாசாரத்தில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களை நாம் முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவற்றின் மகத்துவங்களையும் மறந்து, சில மதியீனர்கள் காட்டிய தவறான வழியில் சென்று, மகிழ்ச்சியைத் தரக்கூடிய இந்த உயர்ந்த உபாசனைகளை நாம் தவற விட்டு விட்டோம். எனினும், எல்லாம் வல்ல அன்னையானவள், நாம் நன்மையை அடைய வேண்டி, மறைந்து நின்ற இந்த உயர்ந்த மகத்துவங்களை எல்லாம் இருளை நீக்கி பேரொளி தரும் ஞான தீபங்களாக, இந்த நூற்றாண்டில் பல மகான்களின் மூலமாக, வழங்கியிருக்கிறாள்.

அந்த மகத்துவங்களில் ஒன்று தசமகாவித்யா தேவியர் வழிபாடு. தச என்றால் பத்து, மஹா என்றால் பெரிய, வித்யா என்றால் அறிவு.இங்கு வித்யா என்பது, வெறும் அறிவை மட்டுமே குறிக்காமல், அறிவினால் அடையக்கூடிய பராசக்தியை குறிப்பதாக உள்ளது. ஆகவே, பத்துவிதமான சக்திகள் பற்றி அறியக் கூடியதாகத் திகழ்கிறது இந்த வழிபாடு. வாருங்கள்... நாமும் இந்த தேவியரின் மகிமையை விரிவாக அறிந்து கொள்வோம்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!வரும் நவராத்திரி காலத்தில் விஜயதசமியையும் சேர்த்து பத்து நாட்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தேவியின் திருவடிவில் ஆதிசக்தியை மனதில் தியானித்து வழிபட்டுவந்தால், நமது இன்னல்கள் யாவும் நீங்கும்; அன்னையின் அருளால் சகல வரங்களும் கைகூடும்.

தசமகாதேவியரின் மகிமைகள் மட்டுமின்றி, நவராத்திரியில் நாம் வழிபட வசதியாக, புகழ்பெற்ற தலங்களில் அருளும் அம்பாள்களின் திருவுருவப் படங்களும் அவர்களை வழிபடுவதற்கான துதிப்பாடல்களும் இந்த இணைப்பிதழில் இடம் பெற்றுள்ளன. உடல்-உள்ள சுத்தியுடன் அனுதினமும் அவர்களை வழிபட்டு, நல்லன எல்லாம் கிடைக்க வரம்பெற்று மகிழுங்கள்.

ஆரோக்கியம் அருளும் ஸ்ரீகாளீ தேவி

ஆதிபராசக்தி அனந்தகோடி பிரம்மாண்டங் களின் நாயகி. ஆதியும் அந்தமும் இல்லாதவள்.

‘யதா யதா ஹி ஸாதூனாம் துக்கம் பவதி தானவ
ததா தேஷாம் ச ரக்ஷார்த்தம் தேஹம் ஸந்தாரயாம்யஹம்
அரூபாயஸ்ச மே ரூபம் அஜன்மாயாஸ்ச ஜன்ம ச’

அதாவது மகிஷாசுரனை நோக்கி, ‘‘ஹே, மகிஷாசுரா, ஸாதுக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம் நேரிடுகின்றதோ, அப்போதெல்லாம் தேகமெடுக்கின்றேன். உருவமில்லா எனக்கு உருவமும், பிறவியற்ற எனக்கு ஜன்மாவும் அமரரைக் காப்பதற்காகவே ஏற்படுகின்றது என்பதை அறிந்துகொள்’’ என்று தேவி உரைப்பதாகச் சொல்கிறது தேவி பாகவதம்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

இவை அசுரனுக்கு கூறிய வார்த்தைகள் மட்டுமல்ல, கடவுளின் சக்தியைக் குறித்து பலநேரங்களில் நமக்கும் சந்தேகம் வரும்போது, அந்த மாய இருளை நீக்க கடவுள் கொடுத்த அருள்விளக்கு எனவும் கொள்ளலாம்.

அனைத்து காலங்களிலும் நம்மை காக்கக் கூடிய சக்தியே காளி. பத்ரம் எனில் நன்மை. எனவே அவளை பத்ரகாளி அதாவது அனைத்து காலங்களிலும் நன்மை செய்பவள் என்று போற்றுகிறோம். அவள் இருப்பதாகச் சொல்லப்படும் மசானம் என்பது, ஏதோ இங்கு நாம் காணும் மயானமல்ல, மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கி இருக்கும் நிலையில் அவள் ஒருவளே ஆதி சக்தி என்பதை உணர்த்துவதே.

‘கலனாத் காளீ’ என்று அனைத்து பூதங்களை யும் தன்னுள் அடக்கிவைத்த நிலையில் காளி என்று போற்றப்படுகிறாள் அன்னை. அவள் எல்லா யுகங்களிலும் நமக்கு நன்மை அளிப்பினும், கலிகாலத்தில் உயரிய பலன்களை அருள்பவ ளாகத் திகழ்கிறாள். ‘பயப்படவேண்டாம், நான் அபயம் அளிக்கிறேன்' என்று காளி தன் பக்தர்களைக் பயத்தினின்று காப்பாற்றுகிறாள்.

விக்னேச்வரர், இந்திரன், பரசுராமர், கங்கை, லட்சுமி, சூரியன், சந்திரன், ராவணன், குபேரன், வாயு, குரு, சுக்ரர், ஹனுமான் முதலிய பலரும் காளி உபாசகர்கள் என விவரிக்கிறது ‘காளி கல்பதரு’ எனும் ஞானநூல். காளியை வழிபடுபவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், புஷ்டி, பெரும் கீர்த்தி, கவி புனையும் சக்தி, போக மோக்ஷம் முதலான உயர்ந்த பலன்களை அடைவர்.

ஸ்ரீகாளியின் அனுக்கிரஹத்தால் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. ஸ்ரீகாளி உபாசகனே புண்ணிய சாலியாகவும், குலம் தழைக்கச் செய்யும் புத்திரனாகவும் ஆகின்றான். அவன் ஜீவன் முக்தனாக விளங்குகிறான். தக்ஷிண காளி என்று போற்றப்படுபவள் தேவி. தக்ஷிண என்றால் வலது என்று பொருள். பொதுவாக வலது பாகம் என்பது சிவபெருமானுடை யது. ஆதலின் சிவபெருமானின் ஆற்றல், சக்தி இவளே என்று நாம் அறிய இந்தப் பெயர் விளங்கு கிறது. ‘தக்ஷிணம்’ என்றால் தெற்கு திசையைக் குறிக்கும். இந்த தக்ஷிண காளியை வழிபடுவதால், தெற்கு திசையின் அதிபதி யான யமதர்மராஜனைப் பற்றிய பயம் நம்மை அணுகாது.

இவள் தக்ஷிணாமூர்த்தி என்று போற்றப்படும் தென்முகக் கடவுளின் அருளை ஒரு தாயின் உருவில், எளிமையானதாக நமக்குப் பெற்றுத் தருகிறாள். அதேநேரத்தில் மிகுந்த ஆற்றல் உடையதாக செய்து கொடுப்பதினாலும், இவளை தக்ஷிண காளி என்று போற்றுகிறோம்.

ஆதி காளீ, பத்ரகாளீ, ச்மசான காளீ, கால காளீ, குஹ்ய காளீ, காமகலா காளீ, தன காளீ, ஸித்தி காளீ, சண்டி காளீ, டம்பர காளீ, கஹனேச்வரீ காளீ, ஏகதாரா காளீ, சாமுண்டா காளீ, வஜ்ராவதீ காளீ, ரக்ஷா காளீ, இந்தீவரீ காளீ  தனதா காளீ, ரமண்யா காளீ, ஈசான காளீ, மந்த்ரமாலா காளீ, ஸ்பர்சமணி காளீ, ஸம்ஹார காளீ, தக்ஷிண காளீ, ஹம்ஸ காளீ, வீர காளீ, காளீ, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று காளியை பல வடிவங்களில் வர்ணிக்கின்றன ஞானநூல்கள்.

காளி என்றாலே நாம் பயம் அடையாமல், நம்மை பயத்தில் இருந்து காக்கக்கூடிய சக்தியே அவள் என்பதை உணர்ந்து, கீழ்க்காணும் மந்திரங்களை ஜபித்து வழிபட்டு அருள் பெறுவோம் (தேவியரின் மூல மந்திரத்தை குருமுகமாகப் பெற்று ஜபித்திட வேண்டும்)

ஸ்ரீகாளீ காயத்ரீ

ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீகாளீதேவ்யை நம:

சாதிக்கவைக்கும் ஸ்ரீதாராதேவி

‘தாரா நாம மஹாசக்தி: வர்த்ததே தாரிணீச்வரீ’ என்றவாக்கியத்தின்படி, இந்த தேவி, மகா சக்தி படைத்தவள். தசமகா தேவியரில் இரண்டாவது சக்தி. வாழ்க்கையில் ஒற்றுமை வேண்டும் என்றால், இவளை வழிபடுவது அவசியம். சர்வ ஸித்திகளையும் அளிக்கவல்ல இந்த தாராதேவி, ராவணனை வதம் செய்ய ஸ்ரீராமனின் சக்தியாக விளங்கியவள். ஸ்ரீகாளி தேவியின் பல அம்சங்களை உடையவள்.
தாராதேவியை வழிபடுபவர் ஜீவன் முக்தனாக விளங்குவர். இடைவிடாது பொங்கி வரும் கவிதா சக்தியைப் பெறுவர். அனைத்து துறைகளிலும் தேர்ச்சி உடையவராவார்கள். அரசாங்கத்திலும், சபையிலும், விவாதத்திலும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவர்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே

உக்கிரமான காலங்களில் பக்தர்களைக் காப்பதால் இவளை ‘உக்ர தாரா’ என்றும் வழிபடுகின்றனர். இவள் பிறப்பற்றவள். எனினும் பக்தர்களைக் காப்பதில் ‘காள ராத்ரி’ - அதாவது பிரளய காலத்தில் நான்கு சமுத்திரங்களும் பொங்கி எழ, அந்தச் சமயத்தில் தேவர்களைக் காக்க தோன்றுபவள் (காள ராத்ரி தினே ப்ராப்தே...கலா’).

சாக்த தந்த்ரங்கள் பதினோரு இரவுகளைக் கூறுகின்றன. அவை: காள ராத்ரி, வீர ராத்ரி, மோஹ ராத்ரி, மஹா ராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவ ராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம்.

நரக சதுர்த்தசி தினத்தன்று தீபாவளி கொண் டாடுகிறோம். அன்று அமாவாசை சம்பந்தம் இருப்பின், அது காள ராத்ரி எனப்படும். இந்த நாள் தாரா தேவியை வழிபட மிகச் சிறந்த நாளாகும்.
அதேபோன்று செவ்வாய்க் கிழமையன்று அமாவாசை திதியும் சேர்ந்து கிரஹணமும் ஏற்பட்டால், அது தாரா தேவியின் அருளைப் பெற மிகச் சிறந்த நாளாகும்.

ஜைனர்கள் தாரா தேவியை ‘ப்ரபாவதீ’ அல்லது ‘பத்மாவதீ’ என்றும், பௌத்தர்கள் ‘தாரா’ என்றும், கௌலர்கள் ‘சக்ரா’ என்றும், சீனர்கள் ‘மஹோக்ரா’ என்றும் வழிபடுகின்றனர்.
வசிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் மிகச் சிறந்த முறையில் போற்றப்பெற்ற சக்தி இவள்.

தாரா, உக்ர தாரா, மஹோக்ர தாரா, வஜ்ரா தாரா, காளீ தாரா, ஸரஸ்வதீ தாரா, காமேச்வரீ தாரா, சாமுண்டா தாரா என மந்த்ர சாஸ்திரங்கள் இந்த தேவியைப் போற்றுகின்றன.

தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணீரூபா, ஸத்வரூபா, மஹா ஸாத்வீ, ஸர்வ ஸஜ்ஜன பாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹா மாயா, கோர ரூபா, பயானகா, கால ரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸ காரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞான ப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்த வஸ்த்ரா, ரக்தமாலா ப்ரசோபிதா, சித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என்னும் இந்த முப்பது திருநாமங்களையும் எவரொருவர் தினமும் ஜபிக்கிறார்களோ அவர்களால் உலகில் சாதிக்கமுடியாத காரியங்கள் எதுவும் இல்லை என சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.
ஆகவே, இந்த நவராத்திரி காலத்தில் எல்லாம் வல்ல பராசக்தியை தாரா தேவியாக தியானித்து, கீழ்க்காணும் மந்திரங்களைக் கூறி வழிபட்டு எல்லையில்லா வரம்பெறுவோம்.

ஸ்ரீதாரா காயத்ரி மந்திரம்:

ஓம் தாராயை வித்மஹே உக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மூல மந்திரம்
ஓம் தாராயை நம:

உலகுக்கு நன்மை அருளும் ஸ்ரீவித்யாதேவி

தச மஹா வித்யைகளில் மூன்றாவதாகப் போற்றப்படுபவள் ஸ்ரீவித்யா தேவி.

பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், இந்திரன், மன்மதன், சந்திரன், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாஸர், லோபாமுத்ரை, நந்தீச்வரர், வருணன், புதன், யமன், தத்தாத்ரேயர், பரசுராமர், பலதேவர், வாயு, பிரஹஸ்பதி, ரதி தேவி, ஆதிசேஷன் ஆகியோர், உலக மாதாவை ‘ஸ்ரீவித்யா தேவி’யாக உபாசித்ததாக தந்திரங்கள் கூறுகின்றன.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியே ஸ்ரீவித்யா. இவளே ஸ்ரீமாதா. இவள் வாஸம் செய்யும் பட்டினம் ’ஸ்ரீபுரம்’. இது மகாமேருவின் சிகரத்தில் உள்ளது. இவளின் மகா மந்திரம் ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. இவளின் யந்திரம் ‘ஸ்ரீசக்ரம்’. இவளது சிம்மாஸனம் ‘ஸ்ரீ சிம்மாஸனம்’ என அறியப்படுகிறது.

செக்கச் சிவந்தத் திருமேனி, சம்பகம், அசோகம் முதலான பூக்கள் சூடிய கூந்தல், பத்மராகக் கற்களால் ஜொலிக்கும் கிரீடம், பிறைச்சந்திரன் போன்ற நெற்றி, கருப்பு நிறக் கஸ்தூரிப் பொட்டு, அழகிய புருவங்கள், மீன் போன்ற கண்கள், சம்பகப் பூப்போன்ற நீண்ட மூக்கு, நட்சத்திரம் போல்  ஜொலிக்கும் மூக்குத்தி, கடம்பப் பூங்கொத்து அலங்கரிக்கும் காதுகளில், சந்திர-சூரியரே தோடுகளாக திகழ்கின்றன. பத்ம ராகத்தாலான கண்ணாடி போன்ற கன்னங்கள், பவளத்தை பழிக்கும் உதடுகள் என்று இந்த அன்னையின் அழகை விவரிக்கிறது, லலிதா சகஸ்ரநாமம்.

இவளை வழிபடும் ஸ்ரீசக்ரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ மயமான நான்கு சக்கரங்களும் (அஷ்டதளம், ஷோடச தளம், மேகலாத்ரயம், பூபுரத்ரயம்), சக்திமயமான ஐந்து சக்கரங்களும் (த்ரிகோணம், அஷ்ட கோணம், பத்து கோணங்கள் இரண்டு, சதுர்தச கோணம்) ஆகிய ஒன்பது சக்கரங்களை உடைய அமைப்பே ஸ்ரீசக்ரம். இதில் ஸ்ரீகாமேஸ்வரருடன் இணைந்து இவ்வுலகங்களை பரிபாலனம் செய்து வரும் தேவியை, நவாவரண பூஜை எனப்படும் ஸ்ரீசக்ர பூஜையினால் மகிழ்விக்கச் செய்தால், உலகம் நன்மையைச் சந்திக்கும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாது.

இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் உலகில் உள்ள உயர்ந்த பலன்களை அடையலாம் என்கின்றன சாஸ்திரங்கள். நமக்குள் உள்ள வீண் பயமும் அகலும். இந்த தேவியானவள் தர்ம ஸ்வரூபிணீ. எனவே தர்ம வழியில் சென்று, நம்மால் இயன்ற அளவு இந்த தேவியை ஆராதித்து வந்தால், இவ்வுலகத்திற்கு வேண்டிய நலன்களும், பிறவா முக்தி ஆனந்தத்தையும் தேவியானவள் நமக்கு அருளுவாள்.
எல்லாம் வல்ல அன்னையை, பராசக்தியை தாரா தேவியின் வடிவில் வழிபட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவோமாக.

ஸ்ரீவித்யா காயத்ரி

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி
தன்னோ வித்யா ப்ரசோதயாத்

மூல மந்திரம்
ஓம் ஸ்ரீவித்யாயை நம:

புவனம் காக்கும் ஸ்ரீபுவனேஸ்வரி

புவனங்களுக்கு எல்லாம் தலைவியாகத் திகழ்பவள், ஸ்ரீபுவனேஸ்வரி. ஞானியர் போற்றும் குண்டலினி சக்தி இவளே. ‘விச்வஸ்ய பீஜம் பரமாஸி மாயா’ என்று, இந்த தேவியை உலகின் விதையாகப் போற்றுகிறது தேவிமகாத்மியம்.

நாம் அனைவரும் அந்த ஆதிசக்தியின் குழந்தைகள். அம்மையின் திருக்கரங்களில் திகழும் அபய-வரத முத்திரைகள், அவளது தாயுள்ளத்தையே காட்டுகின்றன. உலகத்தவருக்கு பயம் வந்தால், அதைப் போக்க பராசக்தியால்தான் முடியும். அப்படி, சகல ஜீவராசிகளுக்கும் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதையே தனது அபய முத்திரையால் உணர்த்துகிறாள் சக்திதேவி. எதை நினைத்ததும் இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்று விடுபடுகிறோமோ அதை அபயம் என்று போற்றுவதாகக் கூறுகிறார் ஆதிசங்கரர்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.

‘வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ' என்றபடி, வேண்டி யவற்றை வேண்டியபடி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் தேவி ஒருவளே. ஆக, புவனம் காக்கும் அந்த அன்னையை வழிபடுபவர்கள் சொற்செல்வம், கவித்துவம், ஸர்வ வசியம், ராஜ்ய லாபம், சூரியனைப் போன்ற காந்தி பெற்றவர்களாகவும் விளங்குவர்.

உலகில் உள்ள அனைத்து பெண் வடிவங்க ளாகவும் இவள் போற்றப்படுகிறாள். எனவேதான், நமது மதத்தில் பெண்களை சுவாசினியாகவும், கன்னிகையாகவும் போற்றுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமா? ‘சப்தாத்மிகா’ என்றும்... அதாவது, நாம் சொல்லும் அனைத்து சொற்களும் அவளே என்கின்றன சாக்த தந்திரங்கள்.

எல்லாம் வல்ல அன்னையே ஒளி, புகழ், அழகு, ஸம்பத்து, இரவு, ஸந்த்யை, செயல், ஆசை, இருள், பசி, புத்தி, நுண்ணறிவு, ஸ்துதி, சொல், நிச்சயம், செய்யும் அறிவு, பணிவு, சோபை, சக்தி ஆகியவை யாகவும், அவைபோன்ற மற்ற சக்திகளாகவும் திகழ்கிறாள் எனப் போற்றுவர். நெருப்பின் வெம்மை போன்று உலகின் அனைத்துப் பொருட்களிலும் விரவியிருப்பவள் சக்திதேவி. இதை உணர்ந்தோமானால், இன்றைக்கு உலகில் உள்ள எவ்வித பேதங்களும் இருக்காது. அனைத்திலும் அந்த சக்தியை உணர்ந்ததால்தான், சக்தி உபாஸகரான மகாகவி பாரதியார் ‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்’ என்று பாடியுள்ளார். நாமும் எல்லாம்வல்ல புவனேஸ்வரிதேவியின் அருளால் உலகங்கள் அனைத்திலும் அமைதி நிலவிட வேண்டுவோமாக.

ஸ்ரீபுவனேஸ்வரி காயத்ரி

ஓம் நாராயண்யை வித்மஹே புவனேச்வர்யை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மூல மந்திரம்
ஓம் புவனேஸ்வர்யை நம:

அச்சம் அகற்றும் ஸ்ரீதிரிபுர பைரவி

ஆதி சக்தியான காளியே ஸம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன் றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.

அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு, மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும், தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட, எல்லாம்வல்ல பராசக்தியை ஸ்ரீபைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ரந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள்.

மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும், முன்னரே இருப்பதாலும், மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும், உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும், சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை த்ரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். கூப்பிட்டவுடன் வந்து நம்மை காப்பவளே பைரவி. உலகில் ஏற்படும் கோர சம்பவங்களை நொடிப்பொழுதில் போக்கி அமைதி நிலை நிறுத்தக்கூடியவள் பைரவி.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பைரவி சக்தியின் பேதங்கள் சாக்த தந்திரங் களில் விளக்கப்பட்டுள்ளன. அவை: ஸம்பத்ப்ரதா பைரவி, சைதன்ய பைரவி, காமேச்வர பைரவி, அகோர பைரவி, மஹா பைரவி, லளிதா பைரவி, காமேச்வரீ பைரவி, ரக்தநேத்ர பைரவி, ஷட்கூடா பைரவி, நித்யா பைரவி, ம்ருதஸஞ்ஜீவினி பைரவி, ம்ருத்யுஞ்ஜயா பைரவி, வஜ்ரப்ரஸ்தாரிணீ பைரவி, புவனேச்வரீ பைரவி, கமலேச்வரீ பைரவி, சித்த கௌலேச பைரவி, டாமர பைரவி, காமினீ பைரவி.

இவ்வாறு திகழும் மாதா ஸ்ரீபைரவி தேவியின் புண்ணிய உருவங்களை நினைத்து தினமும் வழிபடுபவர்களுக்கு எந்த நேரத்திலும், எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் பயம் ஏற்படாது என்பது நிச்சயம்.

ஸ்ரீபைரவி காயத்ரீ

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் பைரவ்யை நம:

துஷ்ட சக்திகளை அழிக்கும் ஸ்ரீசின்னமஸ்தா

‘தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாயச’ என்ற வாக்கியத்துக்கு இணங்க,  'தீயவர்களை அழிக்கவும் நல்லோர்களை காக்க வும் ஆயுதங்களைத் தாங்கியுள்ளேன்' என்று விவரிக்கிறாள் சக்திதேவி.

அதேபோல் வர்ணினீ, டாகினி தேவியர்களுடன் தலையைக் கொய்தவளாக உக்ர கோலத்தில் அம்பிகைக் காட்சித் தருவாள். இந்தத் திருக் கோலமும் தீயவற்றை அழிக்கவே என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ‘அதி சௌம்ய அதி ரௌத்ராயை’ என்ற வாக்கியப்படி, மிக கருணை கொண்டவளாகவும், அதே சக்தி மிக கோபம் கொண்டவளாகவும் மிக கருணை உடையவளாகவும் திகழ்வது தீயதை அழிக்கவும், நல்லவற்றை ரட்சிக்கவும்தான்.

இந்த சக்தியை பிரசண்ட சண்டிகா என்றும் கூறுவர். இந்த மாபெரும் சக்தியை வழிபடுவதினால் துஷ்டர்கள் விலகுவர், நல்ல எண்ணம் தோன்றும், நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்கும், லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும், உலகம் வசப்படும். மஹா பாதகங்கள் நசுக்கப்படும், புத்திரன் இல்லாதவர் புத்திரனையும், வறுமையுடையவர் பொருளையும் பெறுவர், கவித்துவமும் பாண்டித்தியமும் கிடைக்கும். ஆறு மாதங்கள் தொடர்ந்து இந்த தேவியை எவரொருவர் வழிபடுகிறாரோ, அவருக்கு கவிதா விலாஸம் ஏற்பட்டு, கவிகளில் சிறந்தவராக விளங்குவார்.

இந்த தேவியின் திருவுருவம், தரிசிப்பவருக்கு ஒருவித பயத்தை உண்டுபண்ணும். எனினும், உயரிவான தத்துவார்த்தங்களை உணர்த்துவது.நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் இடா, பிங்களா, சுஷும்னா என மூன்று நாடிகள் முக்கியமானவை. நமது உடலின் இயக்கமே ரத்த ஓட்டத்தினால்தான். ஒரு மனிதனுக்கு சீரான உடல்நிலை இருப்பதற்கும், யோக மார்கத்தில் சிறந்து விளங்கி, தன்னை அறிந்து பிறவிப் பயனை அடைவதற்கும் இந்த தேவியானவள் அருளுகிறாள் என்பது, நம் முன்னோர்கள் இந்த சக்தியின் உபாசனையை செய்து நமக்கு அளித்த அனுபவம்.

இந்த சக்தியை அனைத்து காலங்களிலும் வழிபடலாம். இவள் தோன்றிய நேரம் வீர ராத்ரீ எனக் கூறுவர். வீர ராத்ரீ எனில் செவ்வாய்க் கிழமை, அமாவாசை திதி, மக நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து வருவது.

எவரொருவர், இந்த தேவியின் 12 நாமங்களை  காலையில் எழுந்து துதிக்கின்றார்களோ, அவர் களுக்கு எந்த நேரத்திலும் எதிரிகள் தொல்லை இருக்காது என தேவி அருளுகிறாள். பரம கருணை உடைய ஸ்ரீசின்னமஸ்தா தேவியின் அருளால் தீய எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நல்ல வழியில் செல்ல அந்த தேவியை வழிபடுவோம்.

தேவியின் 12 திருநாமங்கள்: சின்னக்ரீவா, சின்ன மஸ்தா, சின்ன முண்டதரா, அக்ஷதா, க்ஷோத க்ஷேமகரீ, ஸ்வக்ஷா, க்ஷோணீ சாச்சாதன க்ஷமா, வைரோசனீ,  வராரோஹா, பலிதானப்ரஹர்ஷிதா, பலிபூஜித பாதாப்ஜா, வாசுதேவப்ரபூஜிதா ஆகிய தேவியின் நாமங்களைக் கூறி இந்த தேவியை போற்றி வழிபடுவது சிறப்பு.

ஸ்ரீ சின்னமஸ்தா காயத்ரீ

ஓம் வைரோசின்யை வித்மஹே சின்னமஸ்தாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மூல மந்திரம்

ஓம் சின்னமஸ்தாயை நம:

துன்பங்கள் நீக்கும் ஸ்ரீதூமாவதீ

தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்த சதிதேவி, பிறகு வேள்வி குண்டத்தில் தன் சரீரத்தை வீழ்த்தினாள். அதனால் அதற்கு கௌரீ குண்டம் எனப்பெயர் ஏற்பட்டது. அந்த குண்டத்தினின்று எழுந்த புகை மண்டலமே தூமாவதீ என்ற சக்தியாய் உருவெடுத்தது என சாக்த தந்திரங்கள் கூறுகின்றன.

இவள் தோன்றிய மாதம் பால்குனம், செவ்வாய்க்கிழமை, அட்சயதிரிதியை, ஸாயங்கால நேரம். இவள், ஸர்வ ஸம்ஹார சஞ்சலா - அனைத்தை யும் சம்ஹாரம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்த வள் என்றும், கருத்த முகம் உடையவள் ஆன தால் காலமுகீ என்றும் போற்றப்படுகிறாள்.

இவளை ஜ்யேஷ்டா என்றும் கூறுவர். இதுகுறித்த தகவலை நேரடியாக அறிய முடியா விட்டாலும், தூமாவதீ மந்திரத்தின் தேவதை ஜ்யேஷ்டா, ரிஷி பிப்பலாத மஹரிஷி என்ற தகவலில் இருந்து அனுமானிக் கலாம்.

ஜ்யேஷ்டா என்பவள் லட்சுமி தேவிக்கு முன்பு உதித்தவள். பாற்கடல் கடையும்போது விஷம் வெளிவர, அதை தேவர் வேண்டுகோளுக்கு இணங்கி பகவான் சாப்பிட்டவுடன் கடலிலிருந்து ஜ்யேஷ்டா தோன்றினாள். தேவர்களிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அவள் வினவ, அவர்கள் ‘‘எவர் வீட்டில் சண்டை நடக்கின்றதோ, அங்கு நீ சுகமாக வாசம் செய். எவர் கொடூரமாய் பேசுகின்றாரோ, பொய் கூறுகிறாரோ, ஸந்த்யா காலத்தில் உணவு உண்ணுகிறார்களோ, அவர்களின் வீட்டில் அவர்களுக்கு துக்கம் கொடு. மண்டை ஓடு, கேசம், சாம்பல், எலும்பு, உமி, நெருப்பு உள்ள இடத்தில் நீ இரு.
பாதங்களைச் சுத்தி செய்து கொள்ளாமல் சாப்பிடுபவர் வீட்டில் துக்கத்தையும் வறுமையையும் கொடு. குரு, தேவர் அதிதிகளுக்கு எங்கு பூஜை நடைபெறவில்லையோ, வேத முழக்கம் எங்கு இல்லையோ அங்கு துக்கமாக நீ இரு. பிறர் மனைவியை விரும்புபவன், பிறர் பொருளை அபகரிப்பவன், நல்லோர்களை வருத்துபவன் இவர்கள் வீட்டில் பாபத்தையும், துன்பத்தையும் அளித்துக் கொண்டு இரு” என்று கூறினர்.

இந்த ஜ்யேஷ்ட தேவியே லட்சுமிக்கு மூத்ததேவி. இவளை வழிபட்டால் லட்சுமிகடாட்சம் ஸித்திக்கும் என மஹா விஷ்ணு வானவர் கூறுகிறார்.

எனவே அருவருக்கத்தக்கதாக தோன்றும் இந்த தூமா வதியின் உருவமானது உபாசகர்களால், நல்ல வகையிலேயே நோக்கப்படுகிறது. இந்த தேவியை வழிபட்டால், தீயவர்களுக்கு தீயவை ஏற்படும்.

அப்படியாயின் தர்மம் நிலைநாட்டப்படும் என்பதை அறிந்து எல்லாம்வல்ல அன்னையை தூமாவதீயாக நினைத்து வழிபடுவோமாக.

ஸ்ரீதூமாவதீ காயத்ரீ

ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரின்யை தீமஹி
தன்னோ தூமா ப்ரசோதயாத்

மூல மந்திரம்

ஓம் தூமாவத்யை நம:

வெற்றிகள் அருளும் ஸ்ரீபகளாமுகீ

தசமஹா தேவியர்களில் எட்டாவது சக்தியாக விளங்கி அருளுபவள் ஸ்ரீபகளாமுகீ தேவி. அசுரனை தண்டிக்கும் கோலத்தில் இந்த தேவியை தியானிப்பது  மரபு.

நமது சனாதன தர்மத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாஸனையும் உலக நன்மைக்காகத்தானே தவிர, தனி மனித விருப்பு - வெறுப்புகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்ல. இதை நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இந்த தேவதைகளின் பெருமைகளை மேலும் அறியலாம்.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே

இதுபோன்று தீமைகளை அழிக்கும் தெய்வங் களை நாம் வணங்கும்போது, நம்மில் இருக்கும் அசுரத்தன்மை விலகி, நம்மை சுற்றி இருக்கும் தீமைகளும் போக்கப்படுகிறது.

அசுரர்கள், தேவர்களை அழிக்க சில ஆபிசார பிரயோகங்கள் செய்த வஸ்துக்களை புதைத்து விட்டுச் சென்றனர். புதைத்துவிட்ட சென்ற வஸ்துக்களை ‘க்ருத்யா' என்று கூறுவர். அவற்றை அழிக்கும் வாக்கு அல்லது சொல்லுக்கு, ‘வலகஹனம்' என்று பெயர்.

வலகா என்பது ‘பலகா’ என மறுவி, பிறகு ‘பகளா’ என்று அமைந்தது. அதனுடன் ‘முகி’ சேர்ந்து ‘பகளாமுகீ’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘முகி’ என்பதற்கு பிளப்பது என்று பொருள். அதாவது, தீயவற்றைப் பிளக்கும் சக்தியாக பகளாமுகீ தேவியானவள் போற்றப்படுகிறாள்.

அதர்வண வேதத்தில் பகளா சூக்தம், யஜுர் வேதத்தில் ஆபிசாரிகப் பிரகரணம் ஆகியவற்றில் இந்த தேவியின் தன்மை சிறப்பாகக் கூறப்பட்டுள் ளது. ‘பகளா’ எனில் பேசக்கூடிய சக்தியை அளிப்பவள் என்றும் கூறப்படுகிறது.

இந்த பராசக்தியானவள் ஸ்ரீமந்நாராயணருக்கும் ஸ்ரீசிவபெருமானுக்கும் உதவினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எல்லாம்வல்ல முருகப் பெருமானுக்கு, சிவபெருமான் இந்த சக்தி யின் மந்திரத்தை அளித்து, பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தச் செய்தார் என்று புராணங்கள் இந்த தேவியின் சிறப்பினை இயம்புகின்றன.

இந்த அன்னையின் சக்தியானது வீண் வாதம் செய்பவர்களின் வாக்கு, முகம், கால் இவற்றை ஸ்தம்பிக்கச் செய்து, நல்லோருக்கு வெற்றியை அளிக்கவல்லது. பிறர் செய்யும் தீய செயல்களில் இருந்து நம்மைக் காக்க வல்லது. மஞ்சள் வண்ணப் பூக்களால் இந்த தேவியை அர்ச்சித்தால், வேண்டிய பலன் கிடைக்கும்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட மாதா ஸ்ரீபகளாமுகி தேவியானவள் நம்மையும், நமது குடும்பத்தாரையும், நமது நாட்டையும் தீயவர் களில் இருந்து காத்து நன்மை புரியட்டும்.

ஸ்ரீபகளாமுகீ காயத்ரீ

ஓம் பகளாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மூல மந்திரம்

ஓம் பகளாமுக்யை நம:

ராஜயோகம் அருளும் ஸ்ரீராஜமாதங்கீ

பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க மஹரிஷியின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஆதிசக்தியின் அம்சமானது மாதங்கியாக தோன்றியது. இந்த சக்தியை மந்த்ரிணீ எனப் போற்றுவர்.

தேவர்கள் இந்த தேவியை ஸங்கீத யோகினீ, ச்யாமா, ச்யாமளா, மந்த்ரிநாயிகா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேசீ, சுகப்ரியா, வீணாவதீ, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியக ப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவன வாசினீ, ஸதாமதா என்று துதித்தனர். வீணை, குழல், மிருதங்கம் ஆகியவை தரித்த சங்கீத யோகினிகள் ஆகிய சக்திகள் எப்போதும் இந்த தேவியின் பக்கம் இருப்பர். இந்த சக்தியின் நாமாக்களை அனுதினமும் வழிபடுபவர்களுக்கு மூவுலகங்களும் வசமாகும்.

ராஜாங்க காரியங்களில் வெற்றி, ஆட்சி செய்பவர்களுக்கு வெற்றி ஆகிய அனைத்தையும் அளிப்பவள் ராஜமாதங்கீ. இந்த தேவியை உபாசிப்பவர்களுக்கு ஸர்வ ஸித்திகளையும் அளிப்பாள். குறிப்பாக வாக் ஸித்தி ஏற்படும். சங்கீதக் கலையில் நல்ல தேர்ச்சி உண்டாகும். சத்ரு ஜயம் ஏற்படும். சாஸ்திர ஞானத்திலும், கவிதை புனைவதிலும் சிறந்தவராக விளங்குவர், குபேர சம்பத்து உண்டாகும்.

இந்த மாதங்கீ தேவியின் பாதாரவிந்தத்தை சரணடையும் பக்தன், பல ஸித்திகளையும் அவற்றின் மூலம் அடையமுடியாத முக்தியையும் பெறுகிறான். அனைவரும் அவருக்கு வசமாவர். விரும்பியது அனைத்தும் கிடைக்கும். பாபங்கள் நசியும். பிள்ளை பாக்கியம் முதலாக சகல செளபாக்கியங்களுக்கும் குறை இருக்காது.

தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே

இந்த தேவியின் பக்தர்களின் வீட்டில் லட்சுமி சஞ்சலம் இன்றி வாசம் செய்வாள். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும். பிணிகளை விரட்டவும், நெருப்பு மற்றும் திருடர் பயங்களில் இருந்து விடுபடவும், கிரக தோஷங்களை போக்குவதிலும் இந்த தேவியின் மந்திரம் துணைசெய்யும்.

மகாகவி காளிதாஸர், இந்த சக்தியின் அருளினாலேயே மகா கவிகளுள் தலைமையானவராக இருந்தார். அவளே அனைத்துமாய் விளங்குகிறாள் என ச்யாமளா தண்டகத்தில் மிகச் சிறப்பாக  கூறியுள்ளார் அவர்.

இந்த ராஜமாதங்கீ தேவியே மதுரையில் மீனாட்சியாகவும், திருவெண்காட்டில் லகுச்யாமா என்று போற்றப்படும் ப்ரஹ்ம வித்யாம்பிகையாகவும் விளங்கி அருள்பாலித்து வருகிறாள். நாம் நம்மை அறிந்து, பிறவி எடுத்த பயனைச் சிறப்புறச் செய்து எல்லாம் வல்ல பராசக்தியை அடைவோமாக.

ஸ்ரீராஜமாதங்கீ காயத்ரீ

ஓம் சுகப்ரியாயை வித்மஹே காமேச்வர்யை ச தீமஹி
தன்னோ ச்யாமா ப்ரசோதயாத்

மூல மந்திரம்

ஓம் ராஜமாதங்க்யை நம:

வறுமைப் பிணியகற்றும் ஸ்ரீகமலாத்மிகா

தசமஹா தேவியரில் பத்தாவது தேவி இவள். அதேநேரம், அனைத்து சக்திகளின் ஆற்றலும் உடையவள், ஸ்ரீகமலாத்மிகா. இவளே ஸ்ரீமஹாலட்சுமி. இவள் பரப்ரஹ்ம ஸ்வரூபிணி.

இந்த சக்தி சுவர்ண நிறத்தினள். தங்கம், வெள்ளியாலான ஆபரணங்கள் அணிந்தவள். சந்திரனைப் போன்று மக்களை மகிழ்விப்பவள். இந்த சக்தியின் சாந்நித்தியமானது எங்கு நிறைந்துள்ளதோ, அங்கே பொன், பசுக்கள், குதிரைகள், நண்பர்கள், குழந்தைச் செல்வம் ஆகியன நிறைந்திருக்கும்.

ராஜ சம்பத்தை அள்ளி அருள்பவள். இவள் முறுவல் பூத்த முகத்தினள். ஆபரணங்களாலும் உயர்ந்த குணங்களாலும் ஜொலிப்பவள். இந்த தேவி நறுமணம் உடைய இடத்தில் வசிப்பவள்.தான் திருப்தியாய் இருந்து, அனைவருக்கும் திருப்தியை அளிப்பவள். சூரியன் போன்று பிரகாசிப்பவள். உள்ளும் புறமுமாயுள்ள துன்பம் வறுமை ஆகியவற்றை போக்குபவள்.

இந்த தேவியை வழிபடும் அடியவர்களை  குபேரசம்பத்து வந்தடையும். பசி, தாகம், பாப ரூபமாக விளங்கும் அனைத்தும் இந்த தேவியை துதித்தால் விலகும். வீட்டில் உள்ள வறுமை நீங்கும். மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் என்று விளக்குகின்றன சாஸ்திரங்கள்.

நித்யையான இந்த மகாலட்சுமி தேவி, விஷ் ணுவை விட்டுப் பிரியாது இருப்பவள். முக்குணங்களும் கொண்டவள். இவள் கண்ணுக்குப் புலப்படக் கூடியதும், கண்ணுக்குப் புலப்படாததுமான ரூபம் உடையவளாக இருந்துக்கொண்டு, இந்த அகில உலகங்களையும் வியாபித்து அருளுகிறாள்.

இந்த சக்தியே ஸமஸ்த வித்யா பேதங்களாகவும் திகழ்கிறாள். சௌந்தர்யம், சீலம், நன்னடத்தை, சௌபாக்கியம் எல்லாம் இவளேயாம். இந்த தேவியை கீழ்கண்ட நாமாக்களால் துதித்து வழிபட்டு, இகபர சுகம் பெறுவோம்.

லக்ஷ்மீ, ஸ்ரீ, கமலா, வித்யா, மாதா, விஷ்ணு ப்ரியா, ஸதீ, பத்மாலயா, பத்மஹஸ்தா, பத்மாக்ஷி, லோகசுந்தரீ, பூதானாம் ஈச்வரீ, நித்யா, ஸத்யா, ஸர்வகதா, சுபா, விஷ்ணு பத்னீ, மஹா தேவி, க்ஷீரோததனயா, ரமா, அனந்தா, லோகமாதா, பூ, நீலா, ஸர்வ சுகப்ரதா, ருக்மிணீ, சீதா, ஸர்வா, வேதவதீ, ஸரஸ்வதீ, கௌரீ, சாந்தி, ஸ்வாஹா, ஸ்வதா, நாராயணீ

ஸ்ரீகமலாத்மிகா காயத்ரீ

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

மூல மந்திரம்:

ஓம் கமலாத்மிகாயை நம: