Published:Updated:

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

குபேர யோகம் அருளும் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்க.புவனேஸ்வரி

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

குபேர யோகம் அருளும் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்க.புவனேஸ்வரி

Published:Updated:
செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!
செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

வேத காலத்தில் நைமிசாரண் யத்தில் இருந்த மகரிஷிகள் பல விரதங்கள் மற்றும் பூஜைகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார் கள். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி, ‘`வரப்போகும் கலியுகத்தில் செல்வம் இருந்தால்தான் பூஜை வழிபாடுகள் சாத்தியப்படும். அந்த செல்வத்தைப் பெற உகந்த வழிபாடு லக்ஷ்மி குபேர வழிபாடுதான்’’ என்றவர் தொடர்ந்து,

‘‘கலியுகத்தில் ஏகாதசி விரதம், ரதசப்தமி விரதம், பௌர்ணமி விரதம், சிவராத்திரி விரதம், கார்த்திகை விரதம் என்று பல விரதங்கள் உலக மக்களால் அனுஷ்டிக்கப்படும். ஆனால், அந்த விரதங்களை அனுஷ்டிக்க பொருள் வசதி வேண்டும். அந்தப் பொருள் வசதி பெறுவதற்கான விரதம்தான் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம். இந்த பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியைப் பெறுவார்கள்’’ என்றார். மகரிஷிகள், ‘‘நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. விரதங்களையும், பூஜைகளையும் அனுஷ்டிக்க பொருள் கட்டாயம் தேவையா?’’ என்று கேட்டனர்.

‘`ஆம். கலியுகத்தில் தண்ணீர்கூட காசு கொடுத் தால்தான் கிடைக்கும் என்ற நிலை வரப்போகிறது. பொருள் இருந்தால்தான் அருள் தேடமுடியும். அந்தப் பொருளையும் ஒருவன் தர்மத்துக்கு மீறாத வகையில் அடையவேண்டும். அப்போதுதான் பொருளுடன் அருள் தேடி புண்ணியம் பெறவும் முடியும். தீபாவளி அன்று செய்யவேண்டிய ஸ்ரீலக்ஷ்மிகுபேர பூஜைதான் இதற்குச் சிறந்த வழி. வடக்கு திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்புரிபவன். மகாலக்ஷ்மி தேவியை பூஜித்து சங்க நிதி, பதும நிதி உள்ளிட்ட நவநிதிகளையும் வரமாகப் பெற்றவன். கலியுகத்தில் தீபாவளி நன்னாளில் ஸ்ரீலக்ஷ்மிகுபேர பூஜை செய்வதால் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்’’ என்றார்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம்! நாமும் தீபாவளி திருநாளில் ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை செய்து சகல செல்வ வளங்களையும் குபேர சம்பத்துகளையும் வரமாகப் பெறுவோம். முன்னதாக, குபேரனின் திருக்கதைகளையும், அவரது மகிமைகளை யும், தெய்வங்களின் திருவருளால் அவருக்கு குபேர பதவி கிடைத்த அருட்கதையையும், குபேரனுக்கும் செல்வம் அருளும் அலைமகளின் மகத்துவங் களையும் விரிவாக அறிந்துகொள்வோம்.

குபேரனின் பூர்வ ஜன்மம்

காசி காண்டத்தில் குபேரனது பெருமை பேசப்படுகிறது. ஒரு ஜென்மத்தில் இவர் எலியாகப் பிறந்து ஒரு சிவாலயத்தில் வசித்தபோது பாம்பு இவரைத் துரத்த, பாம்புக்கு பயந்து சிவாலயத்துக்குள் சென்று விளக்கின் மேல் ஏறியதாகவும், அங்கு அணைய இருந்த விளக்கு இவர் அசைத்ததால் மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியதாகவும், இதனால் திருவிளக்குப் போட்ட புண்ணியம் கிடைத்தது எனவும், அதனால் குபேரனாகப் பிறந்ததாகவும் சொல்லுவார்கள் (மகாபலியின் பிறப்புக்கும் இப்படியொரு கதை சொல்லப்படுவது உண்டு)

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

மற்றொரு புராணத்தில் இவர் வராஹ கல்பத்தில், காம்பிலி தேசத்தில் வேள்வி தத்தன் என்பவருக்கு குணநிதி என்ற பெயருடன் பிறந்து அவரின் பெருஞ்செல்வத்தை சூதிலும், மாதிலும் தொலைத்ததாகக் கூறுவார்கள். நல்ல பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தும் இவர் திருந்தவில்லை. பின் குடும்பத்தினர் இவரை விலக்கி வைத்ததாகவும், இவர் வறுமையில் வாடியதாகவும் சொல்வர்.

பின்னர், ஒரு சிவராத்திரியில் சிவபக்தர்களுடன் சேர்ந்து சிவாலயம் சென்றார். அங்கு சந்நிதானத்தில் பூஜைகள் முடிந்து அனைவரும் உறங்கும்போது சிவன் சந்நிதிக்கு சென்று, அங்கு இருட்டாக இருந்ததால், அங்கிருந்த விளக்கை நன்கு எரியச்  செய்துவிட்டு, தாங்கமுடியாத பசியின் காரணமாக சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை உண்டார். பின் திரும்பி வருகையில் அங்கிருந்த காவலர்களால் பிடிக்கப்பட்டு கள்வன்  எனக் கூறி கொலை செய்யப்பட்டார்.

அகால மரணம் அடைந்தவரை யமகிங்கரர்கள் பிடித்து யம லோகம் இழுத்துச்செல்ல முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த சிவகணங்கள் ‘‘இவரை நீங்கள் அழைத்துச் செல்ல முடியாது. இவர்  சிவராத்திரி அன்று கண் விழித்தார். சுவாமிக்கு திருவிளக்கை ஏற்றினார். சுவாமி பிரசாதத்தை உண்டார். அதன் பலனாக பெரும் புண்ணியம் பெற்றார். இவர் செய்த  பாபங்கள் மறைந்தன. அடுத்த பிறவியில் பெரும் அரசனாகவும், சிவபக்தனாகவும் பிறக்கப் போகிறார்’’ என்று கூறி அழைத்துச் சென்றதாக திருக்கதை உண்டு.

புராணங்கள் கூறும் குபேர சரிதம்!

பி
ரம்மதேவரின் மானச புத்திரர் புலஸ்தியர். புலஸ்தியரின் புத்திரர் விச்ரவசு. இவர், சிறந்த சிவபக்தர் என்பதால், சிவபெருமானைக் குறித்து ஒரு வேள்வி செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு திரேதாயுகம் ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமை பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி மீன லக்னம் கூடிய சுபயோக சுபதினத்தில்  ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தனர்.

தந்தையைப் போலவே வைஸ்ரவணனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.
அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்ம தேவன், அவன் முன் காட்சி தந்தார். ‘‘என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.

‘`தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?’’ என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.

இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார்.குபேரனின் மனைவி சித்ரரேகை. பிள்ளைகள் நளகூபரன், மணிக்கிரீவன் ஆகியோர் ஆவர். பிரம்மாவின் அருளால் சகல செல்வங்களுக்கும் அதிபதியான குபேரன் இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.

செல்வம் இழந்த குபேரன்

க்காலத்தில் மாலியவான், சுமாலி, மாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அரக்கர்களின் கொடுமை தாங்கமாட்டாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு அரக்கர்குலத்தை சம்ஹாரம் செய்தார். விஷ்ணுவிடம் இருந்து தப்பிய அரக்கர் தலைவர்கள் மூவரும்  நாடு நகரம் இழந்து பாதாளத்துக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர்.  அவர்களின் தலைவன் சுமாலி. தங்கள் குலம் இப்படி மறைந்து வாழ்வது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

அதேநேரத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த இலங்கையை குபேரன் ஆட்சி செய்து வந்தது அவன் கண்களை உறுத்தியது. குபேரன் விச்ரவசு முனிவரின் மகன் என்பதை அறிந்துகொண்ட சுமாலி, அவர் மூலமாகத் தங்கள் குலம் விளங்க பிள்ளை பிறந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான்.

தன் மகள் கேகசியை அழைத்த சுமாலி, ‘‘நம் வம்சம் உன்னால்தான் விளங்கவேண்டும். அதற்கு ஒரே வழி நீ விச்ரவசுவை திருமணம் செய்துகொண்டு, அவர் மூலமாக குபேரனைப் போன்ற பிள்ளைகளைப் பெறவேண்டும். அப்போதுதான் நம் குலம் விளங்கும்’’ என்றான்.
சுமாலி சொன்னதைக் கேட்ட கேகசி, ‘‘தந்தையே, அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அப்படி இருக்க அவர் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாரா?’’ என்று கேட்டாள்.

‘‘அவரைச் சம்மதிக்க வைப்பது உன்னுடைய பொறுப்பு. எப்படியாவது நீ இதைச் செய்துதான் ஆகவேண்டும்’’ என்று வற்புறுத்தினான் சுமாலி.

தந்தையின் விருப்பம் நியாயமானதுதான் என்பதால், கேகசியும் அதற்குச் சம்மதித்தாள்.

ஒரு மாலைப் பொழுதில் கேகசி அழகிய பெண்ணாக மாறி விச்ரவசுவின் ஆசிரமத்துக்குச் சென்றாள். விச்ரவசுவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தாள்.

நமஸ்கரித்த பெண்ணுக்கு ஆசி வழங்குவதுதான் முறை என்பதால், விச்ரவசுவும் ‘‘பெண்ணே, உன்னுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறி, சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வாயாக’’ என்று ஆசிர்வதித்தார்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

கேகசி, ‘‘நான் தங்களைத் திருமணம் செய்துகொண்டு, தங்கள் மூலமாகப் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்பதுதான் என் விருப்பம். தாங்கள் உடனே என்னை காந்தர்வ விவாகம் செய்துகொள்ளவேண்டும்’’ என்று கூறினாள்.

‘‘பெண்ணே, `உன் விருப்பம் நிறைவேறட்டும்' என்று நான் கொடுத்த வரத்தை மீற முடியாது. அவசியம் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன். இரவு வரை பொறுத்திரு. இப்போது நடந்தால் பிறக்கும் பிள்ளைகள் அரக்க குணத்துடன் இருப்பார்கள்’’ என்றார்.

கேகசியோ இரவுவரை காத்திருந்தால் எங்கே விச்ரவசு மனம் மாறிவிடுவாரோ என்று பயந்து, அப்போதே அவர் தன்னை காந்தர்வ மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினாள். வேறு வழி இல்லாமல் விச்ரவசுவும் சம்மதித்தார். அப்படி அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள்தான் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர்.

பெரும் வீரனான ராவணன் மிகச் சிறந்த சிவபக்தனும்கூட. தனக்கு முன் பிறந்த குபேரன் செல்வச் செழிப்புடன் இலங்கையை ஆண்டு வந்தது அவன் கண்களை உறுத்தியது. குபேரனுடன் போரிட்டு இலங்கையுடன் குபேரனின் செல்வங்களையும் பறித்துக்கொண்டான்.

ராவணனிடம் நாட்டையும் செல்வத்தையும் இழந்த குபேரன், சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றினான். குபேரனின் கடுமையான தவம் கண்டு இரங்கிய சிவபெருமான் தேவியுடன் தரிசனம் தந்தார். மறுபடியும் குபேரனை வடக்கு திசை பாலகனாக நியமித்து, மகாலக்ஷ்மியின் அருளால் குபேரனுக்கு நவநிதிகளும் கிடைக்கும்படியாக அருள்புரிந்தார்.

கடவுளுக்கே கடன் தந்தவர்!

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் திருமலை ஸ்ரீவேங்கடேச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடைபெற்றபோது, திருமணத்துக்குத் தேவையான நிதியை குபேரனிடம் இருந்து பெற்றதாகவும், அந்தக் கடனுக்கு பிரம்மதேவர் சொல்ல பெருமாள் பத்திரம் எழுதி குபேரனுக்குத் தந்ததாகவும் சொல்லப்படுகிறது.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்தப் பத்திரத்தில், கலியுகத்தில் விளம்பி வருஷம், வைகாசி மாதம், வளர்பிறை சப்தமி நாளில் ராமர் முத்திரையுடன் கூடிய 14 லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றதாகவும், அந்தக் கடனை வட்டி சேர்த்து 1000 வருஷத்தில் திருப்பிக் கொடுப்பதாக எழுதப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெருமாளுக்கு கடன் கொடுத்ததற்கு முதல் சாட்சியாக பிரம்மதேவரும், இரண்டாவது சாட்சியாக சிவபெருமானும், மூன்றாவது சாட்சியாக அரசமரமும் இருந்ததாகச் சொல்வார்கள்!

சில்ப சாஸ்திரத்தில் குபேர தேவன்

சில்ப சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகாபுரத்தில் (குபேர பட்டணம்) அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர், மீனாசனம், மெத்தை மீது அமர்ந்து ஒரு கை அபய முத்திரையுடனும், கிரீடம் முதலிய சொர்ணாபரணங்களுடன் திருமுத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் வீற்றிருக்கிறார்.

அவரது வலதுபுறத்தில் சங்க நிதி தேவதையும், இடதுபுறத்தில் பத்மநிதி தேவதையும் திகழ்கின்றனர்.

 குபேரனுடைய இடதுபுறம் அவரது தர்மபத்தினி இடது கையில் கருநெய்தல் புஷ்பம் ஏந்திய நிலையில் வலதுகையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார்.

சிவபூஜையில் லயிக்கும் - குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வ சக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால் தனத்துக்கும், வீரத்துக்கும் ராஜனாகிறார்.

திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் கோபதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். யட்சர்களுக்குத் தலைவரான குபேரன் சிறந்த சிவ பக்தராக இருந்தாலும், ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவர். இதனால் சகல சக்திகளையும் தன் வயம் கொண்டு பக்தர்களுக்கு ‘இல்லை’ என்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறார்.

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதிராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் பலன் கிட்டும் என்பதால், கற்பூர ஆரத்தி காட்டும்போது யஜுர் வேத ஸ்லோகமான,

‘ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம:‘


என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறார்கள்.  இவ்வளவு மகிமைகள் கொண்ட குபேரனை வழிபடுவதால், வறுமைகள் தீண்டாத வாழ்வைப் பெறலாம்.

நிறைந்த பொருளுடன் இருக்கவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். அது பேராசையல்ல. நிறைந்த பொருளால் சகல சுகங்களும் அதனால் ஆனந்தமும் பெறுவதோடில்லாமல் நம்மைச் சுற்றியுள்ளோர் பலரும் இதனால் ஆதாயம் பெற்றிட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
குபேரனின் திருக்கதைகளை, மகிமைகளைப் பற்றி அறிந்தோம். இனி, தீபாவளி தினத்தில், ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை செய்வது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

ஸ்ரீலக்ஷ்மிகுபேர வழிபாடு

பூஜிக்கும் முறை:

கு
பேர பூஜை துவங்குவதற்கு முன்னால் எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரைப் பூஜிக்க வேண்டும். தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து, ஸ்ரீசூக்த பாராயணத்துடன் தூபதீபம் போன்ற பதினாறு உபசரணைகள் செய்து பூஜிக்கவேண்டும். தன்னிடம் இருக்கும் செல்வ வளத்தை மற்றவர்களுக்கும்  அடியவர்களுக்கும் வரமாக வழங்கும் வரத்தை குபேரனுக்கு அருளியவள் திருமகளே. ஆகவே, திருமகளை வழிபட்டபிறகு குபேரனை வழிபடுவது சிறப்பு.

கலச பூஜையை அடுத்து நவகிரகங்களை பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

நிறைவாக வடக்கு திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தால் குபேரனை ஆவாஹனம் செய்து குபேர பூஜையை துவங்க வேண்டும். முதலில் குபேரனை தியானிக்கவேண்டும்.

குபேரனின் தியான சுலோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயுகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம்!!


கருத்து: மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத்தில் அமர்ந்திருப்பவரும், மரகதம் போன்று ஒளிவீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமான் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடையவரும், செல்வம் தருபவரும் ஆகிய குபேரப் பெருமானை தியானிக்கிறேன்.

பின்னர் குபேர மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜபிக்கவேண்டும்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

குபேர மந்திரம்

ஓம் யக்ஷாய
  குபேராய வைச்ரவணாய!
தநதாந்யாதிபதயே தநதாந்ய
   ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா!!


தொடர்ந்து குபேரனுக்கு 108 திருநாமங்களால் புஷ்பார்ச்சனை செய்து, இனிப்பு பண்டங்களை நைவேத்தியம் செய்து, பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

குபேர யந்திரம் வரையும் முறை

பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளில் புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். அல்லது சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3*3” அளவுள்ள தாமிரம் அல்லது வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் மேற்கூறிய யந்திரத்தை எழுதலாம்.

இந்த யந்திரத்தை சிவப்பு நிற பட்டின் மீது வைத்து தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கு நெய்தீபம் எரிய வேண்டும். 72 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்வது நலம். தினசரி குபேர மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். வடக்கு முகம் நோக்கி அமர வேண்டும். பால் நைவேத்தியம் செய்ய வேண்டும்.    
குபேர பூஜையுடன் தனலக்ஷ்மி அல்லது ஸௌபாக்ய லக்ஷ்மி யந்திரம் அல்லது படத்தையும் பூஜை செய்ய வேண்டும்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

வசதி உள்ளவர்கள் ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்வது விசேஷம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும்,  மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கவேண்டும்.

இந்த பூஜையை விரிவாகச் செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து, அவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும் (பக்கம் 101-ல் உள்ளது).

ஸ்ரீலக்ஷ்மிகுபேர பூஜை செய்ய உகந்த தினங்கள்:


ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். பெரும்பாலும் இது, தீபாவளி தினத்துடன் சேர்ந்தே வரும்.

தவிர வெள்ளிக் கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.

ஸ்ரீமகாலக்ஷ்மி பூஜை

குபேரனை பூஜிப்பதற்கு முன்பாக மகாலக்ஷ்மி தேவியை பூஜிக்கவேண்டும். மகாலக்ஷ்மியின் அருள் நமக்கு இருந்தால்தான், செல்வத்துக்கு அதிபதியான மகாலக்ஷ்மியின் உத்தரவு கிடைத்தால்தான் குபேரன் நமக்கு செல்வம் வழங்கவும், வழங்கிய செல்வத்தை மேலும் மேலும் பெருகும்படியும் அருள்புரிவார். அதனால்தான் குபேர பூஜை செய்வதற்கு முன்பாக மகாலக்ஷ்மியை பூஜிக்கவேண்டும்.

ராவணனிடம் இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்காக சிவபெருமானைக் குறித்து தவம்செய்த குபேரனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்து, குபேரனுக்கு நவநிதிகளையும், வடக்கு திசையின் அதிபதி பதவியையும் கொடுத்தார். செல்வம் என்றால் நிலையில்லாதது என்பதை ராவணன் மூலமாகப் புரிந்துகொண்டதால், சிவபெருமானின் அருளால் தான் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவும் மேலும் பெருகவும் மகாலக்ஷ்மி பிராட்டியை பிரார்த்தித்தார். குபேரனுக்கு காட்சி தந்த தாயார், ‘’செல்வம் என்பது நிலையில்லாததுதான். ஆனால், என்னை முறைப்படி பூஜித்து, பின்னர் உன்னையும் பூஜிக்கும் அன்பர்களுக்கு நீ அளவற்ற செல்வத்தை வழங்கி நிலைத்திருக்கச் செய்வாய்’’ என்று வரம் அருளினார்.

எனவேதான் குபேரனை பூஜிப்பதற்கு முன்பாக செல்வத்துக்கு அதிபதியான மகாலக்ஷ்மி பிராட்டியாரை பூஜிக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

மகாலக்ஷ்மியை பூஜிக்கும் முறை

லக்ஷ்மி குபேர பூஜையில் முதலில் விநாயகர் பூஜைக்குப் பிறகு மகாலக்ஷ்மி பிராட்டியாரை பூஜிக்கவேண்டும்.

சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்வஸ்திக் அல்லது ஐஸ்வர்ய கோலம் போட்டு, அதன் மேல் பலகையை வைக்க வேண்டும். பலகையின் நான்கு மூலைகளிலும் கோலமிட்டு அதன் நடுவே அரிசி அல்லது கோதுமையை பரப்பி, அதன் மேல் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் கோலம் போட வேண்டும்.

கலசத்தில் சுத்தமான நீர் நிரப்பி, அதனுள் சிறிது அறுகம்புல், ஒரு கொட்டைப் பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் போட வேண்டும். பின்னர்  மாவிலை செருகி அதன் நடுவில் தேங்காய் வைக்கவேண்டும். கலசத்தின்மேல் சிவப்புநிறப் பட்டு வஸ்திரம் சாத்தவேண்டும். கலசத்துக்கு முன்பாக மகாலக்ஷ்மி பிராட்டியாரின் திருவுருவப் படத்தையும் யந்த்ரத்தையும் அலங்கரித்து வைக்கவேண்டும். படத்தின் அருகே நாணயங்கள் வைக்க வேண்டும்.

பின்னர் மகாலக்ஷ்மியை தியானிக்கவேண்டும்.

மகாலக்ஷ்மி தியான ஸ்லோகம்:

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
ஸரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
  ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருஸ்யாம் மனோஹராம்
 ப்ரதப்த காஞ்சனநிப ஸோபாம் மூர்திமதீம் ஸதீம்
 ரத்நபூஷண பூஷாட்யாம் ஸோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
ஸஸ்வத்ஸுஸ்திரயெளவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே ஸுபாம்

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

கருத்து: ஆயிரம் தளத்துடன் கூடிய தாமரைப் புஷ்பத்தின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும் சரத் காலத்திலுள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமாகக் காட்சி அளிப்பவளும், பக்தர்களுடைய மனதைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே உருவெடுத்து வந்தது போல் இருப்பவளும், பதிவ்ரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகிறவளும், மந்தஹாஸத்தால் பிரஸன்ன முகமுடையவளும், சாச்வதமாய் அமைந்துள்ள யெளவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு ஸர்வ ஸம்பத்துகளையும் நன்கு அளிப்பவளும், மங்களத்தைச் செய்கிறவளுமான ஸ்ரீமஹாலக்ஷ்மியை தியானிக்கிறேன்.

பின்னர் மகாலக்ஷ்மி பிராட்டியாருக்கு ஷோடச உபசாரங்களுடன் பூஜை செய்யவேண்டும். பிறகு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து, பால் சேர்த்த இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்து தூப தீப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யவேண்டும். பின்னர் மகாலக்ஷ்மி அஷ்டகத்தையும் பாராயணம் செய்யலாம்.

மகாலக்ஷ்மி பிராட்டியாரை வழிபட்டால் எப்படிப்பட்ட வறுமை நிலையில் இருப்பவனும் பிராட்டியாரின் கடாட்சத்தினால் பெரும் செல்வந்தனாக முடியும்.

ஒருமுறை துர்வாசரின் சாபத்துக்கு ஆளான இந்திரன், தான் இழந்த செல்வத்தை மகாலக்ஷ்மியின் அருளால்தான் திரும்பப் பெற்றான்.

அந்த புராண சம்பவம்...

ஒருமுறை துர்வாசர் பகவான் மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக வைகுண்டம் சென்றிருந்தார். பெருமாளையும் தாயாரையும் பூஜித்துத் திரும்பும்போது, பிராட்டியார் அவருக்கு வாடாத தாமரைகளால் ஆன மாலையைக் கொடுத்தார். சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் மாலையுடன் திரும்பிய துர்வாசர், தமக்கு எதிரில் இந்திரன் ஐராவதத்தின்மீது வந்து கொண்டிருப்பதைக் கண்டு, தமக்கு மகாலக்ஷ்மி பிராட்டியார் கொடுத்த மாலையை இந்திரனுக்குக் கொடுத்தார்.

இந்திரன் தவமுனிவரைச் சிறிதும் மதிக்காதவனாக, அவர் தந்த மாலையை அலட்சியமாக ஒரு கையால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். ஐராவதம் அந்த மாலையைத் தும்பிக்கையால் எடுத்து காலடியில் போட்டு மிதித்தது.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

இந்திரனின் செய்கையால் கோபம் கொண்ட துர்வாசர், மகாலக்ஷ்மி பிராட்டியாரின் பிரசாதத்தை அவமதித்த பாவத்துக்காக அவனுடைய செல்வபோகங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கட்டும் என்று சபித்துவிட்டார். இந்திரன் பதவியும் சகல போகங்களும் நீங்கி வறுமையின் பிடியில் வருந்தினான்.

சாபம் கொடுத்த முனிவரிடமே சாப விமோசனம் கேட்டான். மகாலக்ஷ்மியை பூஜித்தால் விமோசனம் கிடைக்கும் என்றார் துர்வாசர். அதன்படியே இந்திரனும் மற்ற தேவர்களும் ஸ்ரீசூக்தம் மற்றும் மகாலக்ஷ்மி அஷ்டகம் போன்ற துதிகளை ஜபம் செய்து,  தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மகாலக்ஷ்மி பிராட்டியாரின் அருளால் திரும்பப்பெற்றான்.

மகாலக்ஷ்மி ஸ்தோத்ர மகிமை

ஓர் ஊரில் ஏழை அந்தண தம்பதி தங்கள் நான்கு பெண்குழந்தைகளுடன் வசித்து வந்தனர். வறுமையிலும் இறைவனிடம் மாறாத பக்தி கொண்டு தர்மநெறிப்படி வாழ்ந்து வந்தனர். ஆனாலும், அவர்கள் மனதில், ‘தங்களுடைய நான்கு பெண்களை எப்படிப் படிக்கவைத்து, திருமணம் செய்துகொடுக்கப் போகிறோம்’ என்று நினைத்து வருந்தினர். வறுமையிலும் நெறி தவறாமல் வாழ்ந்து வந்த தம்பதிக்கு மகாலக்ஷ்மி அருள்புரிய திருவுள்ளம் கொண்டாள்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

ஒருநாள் ஒரு துறவி அவர்கள் வீட்டுக்கு வந்தார். அன்றைக்குப் பார்த்து அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை. ‘வீட்டில் ஒன்றுமே இல்லாத நிலையில் அதிதியாக வந்திருக்கும் துறவிக்கு ஒன்றும் கொடுக்கமுடியவில்லையே’ என்ற எண்ணம் அந்தத் தம்பதியை வாட்டி வருத்தியது.
அந்த தம்பதியின் மனத் துன்பம் அந்தத் துறவிக்குப் புரியாதா என்ன?

அவர், வீட்டுக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தம்பதியை வெளியில் அழைத்தார். ‘‘எனக்கு பிக்ஷை அளிக்க எதுவும் இல்லையென்று வருந்தவேண்டாம். உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. உங்களுக்கு அருள்புரியவேண்டும் என்பதுதான் மகாலக்ஷ்மியின் விருப்பம்போலும். அவள்தான் என்னை இங்கு அனுப்பி இருக்கிறாள் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்கிறேன். அந்த மந்திரத்தை தினமும் 108 முறை பக்தியுடன் சொல்லி வாருங்கள். படிப்படியாக உங்கள் செல்வநிலையும் அந்தஸ்தும் உயரும்’’ என்று கூறி மந்திரோபதேசம் செய்தார்.

மகாலக்ஷ்மி மந்திரம்

`ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
 மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி
யேகி யேகி சர்வ சௌபாக்யமே தேகி ஸ்வாஹா'

(ஸ்லோகத்தின் இந்த வரியை `தேஹி தேஹி சர்வ செளபாக்யமே தேஹி ஸ்வாஹா' என்றும் சொல்வது உண்டு)

இந்த மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்த துறவி அவர்களைப் பார்த்து, ‘‘உங்கள் நிலைமை மாற வேண்டுமானால் நான் சொன்ன இந்த மந்திரத்தை ஜபம் செய்து வருவீர்களா’’ என்று கேட்டார். அவர்களும் தங்களால் இயன்ற அளவு ஜபம் செய்வதாகக் கூறினர். பின்னர் அந்தத் துறவி சிலகாலம் சென்று திரும்பி வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

அந்தத் துறவியின் அறிவுரைப்படி அந்தணரின் மனைவி தினமும் மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தாள். அந்தத் துறவி கூறியது போல் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகி அவர்களது நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தனர்.

சிலகாலம் சென்றதும் அந்தத் துறவி மீண்டும் வந்து அவர்களின் வாசலில் நிற்க, அந்த தம்பதி அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உள்ளே அழைத்து வந்து விருந்து உபசரித்து, `‘சுவாமி! நீங்கள் கூறியது போல் அந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை நாங்கள் விடாமல் தினமும் ஜபித்து வருகிறோம். இப்பொழுது நாங்கள் செல்வச் செழிப்போடும், மிகுந்த சந்தோஷத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்றார்கள். துறவியும் அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.

செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

தீபாவளிநாளில் செய்யும் லக்ஷ்மிகுபேர பூஜைக்கு முன்பாக மகாலக்ஷ்மி பூஜை செய்யும்போது மட்டும்தான் இந்த ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும் என்பது இல்லை.

தினமும் ஜபித்து வந்தால், நம்முடைய வீட்டில் மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் பரிபூரணமாக நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மகாலக்ஷ்மி மந்திரத்தைச் சொல்லும் முறை:

தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு,  வீட்டு பூஜையறையில் குத்துவிளக்கு ஐந்து முகமும் நெய்தீபம் ஏற்றி, வீடுமுழுவதும் சாம்பிராணி தூபம் போடவேண்டும்.

பூஜையறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஒருமுகப்பட்ட மனதுடன் கண்களை மூடி மகாலக்ஷ்மியை தியானித்தபடி இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தபட்சம் 108 முறையாவது ஜபிக்கவேண்டும். முடிந்தவர்கள் மாலையிலும் ஜபிக்கலாம். மகாலக்ஷ்மிக்கு உகந்த வெள்ளிக்கிழமை, பௌர்ணமி போன்ற தினங்களிலும் ஜபிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism