Published:Updated:

கங்கா தரிசனம் குபேர யோகம்!

கங்கா தரிசனம் குபேர யோகம்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கா தரிசனம் குபேர யோகம்!

க.புவனேஸ்வரி

கங்கா தரிசனம் குபேர யோகம்!

க.புவனேஸ்வரி

Published:Updated:
கங்கா தரிசனம் குபேர யோகம்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கா தரிசனம் குபேர யோகம்!
கங்கா தரிசனம் குபேர யோகம்!

தீர்க்கதமஸ் என்ற முனிவர் இருந்தார். ஒருமுறை, இவரது ஆசிரமத்துக்கு சனாதன முனிவர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று பாத பூஜை செய்து, உணவளித்த தீர்க்கதமஸ் தனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைக் கூறுமாறு அப்போது வேண்டினார்.

சனாதன முனிவர், ‘‘தீர்க்கதமஸ்... துன்ப இருளை அகற்றி வாழ்வில் இன்ப ஒளியேற்றும் ஒரு விரதம் உண்டு. அதைக் கடைப் பிடித்தால் எல்லாம் நலமாகும். எவரும் மிக எளிமையாகக் கடைப்பிடிக்கக் கூடியது இந்த விரதம். துலா மாதம் தேய்பிறை திரயோதசி அன்று (தீபாவளிக்கு முதல் நாள்) மகா பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி யம தேவனை வழிபட வேண்டும். இதனால் நமது வாழ்வு நலம் பெறுவதோடு, நரகத்தில் உழலும் நம் முன்னோர் சொர்க்கம் செல்லவும் வழி பிறக்கும். முன்னோர்களது ஆசியும் கிடைக்கும். மறு நாள் நரக சதுர்த்தசி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் அதாவது உதய காலத்துக்கு முன் எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.  இந்தப் புனிதமான நாளில் எண்ணெயில் திருமகளும், அரப்புப் பொடியில் கலைமகளும், சந்தனத்தில் நிலமகளும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினிகளும், நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரமாத்மாவும் உறைந்து, அருள்பாலிக்கிறார்கள்.

எனவே, இந்த நல்ல நாளில் எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்! இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் சேரும். பிறகு புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய். இதுவே தீபாவளி விரதமாகும். இதைக் கடைப்பிடிப்பதால் எல்லா விதமான இடையூறுகளும் நீங்கும். இயற்கை ஒத்துழைக்கும். வழிபாடும் தவமும் தடையின்றி நடைபெறும். நற்கதி உண்டாகும். இந்தத் தீபாவளி விரத வழிபாட்டை ஆண்டுதோறும் கடைப் பிடிப்பதன் மூலம், தோஷங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை அமையும்!’’ என்று விளக்கமாக எடுத்துரைத்தார். அவ்வாறே கடைப்பிடித்து தீர்க்கதமஸ் இறையருள் பெற்றார். நாமும் தீபாவளி விரதம் மேற்கொண்டு, இறையருள் பெறுவோம்.

முனிவர் உபதேசித்தபடி, தீபாவளி வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவது கங்காஸ்நானம். வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது, பக்த அன்பர்கள் ஒவ்வொருவரும் விரும்பியிருக்க, அவளே நம் இல்லம் தேடி வரும் நாள்தான் தீபாவளி. இந்த நாளில் அவளின் மகிமையை அறிந்து புனித நீராடுவதால், பன்மடங்கு பலன் உண்டு. அறிந்துகொள்வோமா சகல சம்பத்துகளையும் குபேர யோகத்தையும் தரும் புனிதமிகு கங்கையின் மகத்துவத்தை?!

கங்கையின் பிறப்பிடம்

தன் முன்னோரான சகர மைந்தர்கள் நற்கதி அடைய, பகீரதன் பெருந்தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த திருக்கதை நாமறிந்ததே. இதுபோன்று இன்னும் பல கங்கா மகாத்மியங் களைப் பெரியோர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.
கங்கையின் மகத்துவம் குறித்து வால்மீகி முனிவர், “கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ ஜன்மமெடுத்தால்கூட போதும்’ என்கிறார்.

மகாபாரதம், “கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க்கத் திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’ என்கிறது. மகாகவி காளிதாசன், “கங்காதேவியே, யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது’ என்கிறார்.

“கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக்கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத்தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர்களுக்கு முக்தி எளிது’ என்கிறார் ஆதிசங்கரர். கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.

கங்கா தரிசனம் குபேர யோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கையாற்றின் அறிவியல் சிறப்பு:

கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப்புக்கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடிவைத்து விட்டால் வருடக்கணக்கில் கெடாது. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கங்கையின் பாதை!

இமயமலையின் பனி சூழ்ந்த கோமுகி என்னும் பகுதியே கங்கையின் பிறப்பிடம் என்கிறார்கள். அங்கே கங்கோத்ரி என்று பெயர் பெறுகிறது. இந்த இடம் மிகச் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப்பிடம் யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கங்கை தோன்றும் இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. பக்தர்கள் இதைத்தான் தரிசித்து வழிபட்டு திரும்புகிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சியின்படி கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநந்தா என்ற நதியுடன் இணைந்தபின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது. கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோயில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. இதுவே கங்கைக்கு முதல் கோயில் என்பர். அதையடுத்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து ஹரித்வாரை அடைகிறது. இங்கு கங்கை ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை மேற்கொள்கிறது. கிழக்கு நோக்கி ஓடும் கிளைகள் ஹாலதினி, பவானி, நளினி என்று பெயர் பெறுகின்றன. அதன்பின், 785 கிலோமீட்டர் தூரம் பயணித்து அலகாபாத் நகரை அடைகிறது.

கங்கையின் மற்ற பெயர்கள்

ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என  பல்வேறு திருப்பெயர்களால் கங்கையைச் சிறப்பிக்கின்றன புராணங்கள். இவை தவிர, அவள் பாய்ந்து செல்லும் தலங்களில் எல்லாம் அந்தந்த இடங்களுக்கு ஏற்ப விதவிதமான திருப்பெயர்களை ஏற்றுள்ளாள்.

அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமா னுடன் விளையாடும்போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டதாம். அந்த மையை சிவபெருமான் கங்கையில் கழுவும்போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்டதாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது. கயிலையிலிருந்து மானசரோவர் வழியாக கங்கை நதி காளிபோல் குதித்துக் கொண்டு செல்வதால் “காளிகங்கா’ என்று பெயர் பெற்றது.

உத்திரப் பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது ராம்கங்கா என்றும்; பித்தோராகர் மாவட்டத்தில் ஓடும்போது ஜடகங்கா என்றும்; தார்குலா, முன்சியாரி கிராமத்தை அடுத்து ஓடும்போது வெண்மையாகக் காட்சி தருவதால் கோரி கங்கா எனவும்; அல்மோரா மாவட்டத்தில் பைஜ்நாத் திருத்தலத் தின் அருகே செல்லும்போது கருட கங்கா எனவும் பெயர் பெறும் கங்கா நதி, ஜம்முவைக் கடந்து வைஷ்ணவி கோயில் அருகே செல்லும்போது பாண கங்கை என்று பெயர் பெறுகிறது.

வைஷ்ணவி தேவி, தன் கூந்தலை கங்கை நதியில் அலசியதால் “பால்கங்கா’ என்றும் பெயர் பெற்றது. இந்தி மொழியில் “பால்’ என்றால் கூந்தல். கேதார்நாத் திருத்தலத்திற்கு அருகே பாய்ந்தோடும் நதியை துக்தகங்கா என்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே பேடாகாட் என்ற இடம் உள்ளது. இது பிருகு முனிவர் தவம்புரிந்த இடமாம். இங்கு செல்லும் கங்கையை வாமன கங்கை என்பர். நர்மதை நதிக்கரையில் சூலபானேஸ்வரர் என்ற திருத்தலம் உள்ளது. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோக்கடி என்ற கிராமத்தின் அருகில் நர்மதையுடன் கலக்கும் கங்கையை மோட்ச கங்கா என்கிறார்கள். இப்படி பல பெயர்களைப் பெற்ற கங்கை நதி எங்கே எவ்விதம் உருவாகிறது என்பது இன்று வரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. பலமுறை முயன்றும் அறிய முடியவில்லை.

காசியில் கங்கை!

கோமுகியில் தொடங்கிய கங்கை வங்காளத் திற்குச் சென்று கடலில் கலப்பது ஏன்? நேரே தென் திசை நோக்கி வந்திருக்கலாமே! வடக்கை விட தெற்கு தாழ்வான பகுதிதானே? பிறகு ஏன் கிழக்கு நோக்கி ஓடினாள்? அதற்கும் புராணக்கதை உண்டு. கபில முனிவரின் சாபத்தால் சகர மன்னனின் அறுபதாயிரம் குழந்தைகளும் சாம்பலாகிவிட்டார்கள். அந்த இடம் வங்காளத் தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் புனிதமடைந்து சொர்க்கம் செல்ல பகீரதனின் தவத்திற்கு இணங்கி அவன் பின்னே ஓடினாள் என்பது புராணம். கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) விளங்குகிறது.

கங்கா ஆரத்தி!

கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். பாரதத்தின் புண்ணிய நதியாக விளங்கும் மகாநதி கங்கை மட்டுமே. கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும்.

கங்கைக் கரையில் நடைபெறும் இந்த மாபெரும் பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த பூஜை காசி மாநகரிலேயே கங்கைக் கரையில் பல இடங்களில் நடைபெற்றாலும் ‘தஸாஸ்வமேத’ கட்டத்தில் நடைபெறும் பூஜையே மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த பத்து பூஜாரிகளால் மிக மிக நிதானமாக இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பத்து உயர்ந்த மேடைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். மின் ஒளி விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் நடைபெறும். ‘கங்கா ஆரத்தி’ பூஜையைக் கண்டு பக்தர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கிறார்கள்.

கங்கா மந்திரம்!

எங்கே வசித்தாலும் கங்கையின் பெயர் சொன்னால் போதும் எல்லா பாவங்களும் அகலும் புனிதம் சேரும். பொதுவாக நீராடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்:

கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் (ச) சச்சதி.


தீபாவளி கங்காஸ்நானத்தின்போது இந்த மந்திரத்தைக் கூறி மனதார கங்கையை வழிபட, நம் பாவங்கள் நீங்கும்; புண்ணியம் பெருகும்.

அன்னபூரணி தரிசனம்!

கங்கா தரிசனம் குபேர யோகம்!

தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக் கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது.

ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக் கோடான தாயே! அன்னபூரணியே! பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உலகமே வீடு! உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழ வேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன். அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக, ‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி!’ என்று அன்னத்தோடு, ஞான வைராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டு கிறார். நாமும் அவர் வழியில் காசி அன்னபூரணியை மனதார துதித்து அருள்பெற வேண்டும்.

அதேபோல், காசியில் அன்னபூரணி தீபாவளி யன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்க வேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism