Published:Updated:

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

கெளரி விரதம்!

பூசை அருண வசந்தன்

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

பூசை அருண வசந்தன்

Published:Updated:
கெளரி விரதம்!

ப்பசி மாத அமாவாசையன்று சுகமான இல்வாழ்வு வேண்டியும், ஒளிமயமான எதிர்காலத்தை வேண்டியும் கௌரி நோன்பு நோற்கின்றனர். பெரும்பாலும் தீபாவளி நாளில் நோற்கப்படுவதால், இது தீபாவளி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் இந்த விரதத்தை `கேதார கௌரி நோன்பு' என்று அழைக்கின்றன.

கேதாரம் என்னும் தலத்தில் அம்பிகை சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் செய்து அவருடைய உடலில் இடப்பாகத்தைப் பெற்றாள். அப்படி அவள் மேற்கொண்ட விரதத்துக்குக் கேதாரீஸ்வர விரதம் என்று பெயர்.

அந்த விரதத்தின் பயனைப் பெற்ற கௌரிதேவியிடம்... அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெற பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விதமாகும்.

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

முதலில், கௌரிதேவி கேதாரத்தில் தவம் செய்து இறைவனின் இடப்பாகம் பெற்ற வரலாற்றைக் காண்போம்.

ஒருமுறை கயிலை மலையிலுள்ள பொன் மண்டபத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்கள் சூழ கௌரிதேவியுடன் பொன்னாலான சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தார் சிவனார். அப்போது, அங்கு வந்த பிருங்கி மகரிஷி, கௌரிதேவியை விடுத்து, பரமேஸ்வரனை மட்டும் போற்றி வணங்கினார். அவருடைய அந்தச் செயலைப் பார்த்து தேவி கடுங்கோபம் கொண்டாள்.

அவள் பரமனாரை நோக்கி, ‘`ஸ்வாமி! இந்த உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் தங்களையும் என்னையும் வேறுவேறாக எண்ணாமல் அம்மையப்பராகவே போற்றி வணங்குகின்றன. அப்படியிருக்க, இந்த பிருங்கி மட்டும் என்னை மதியாமல், தங்களை மட்டும் வணங்கக் காரணம் என்ன?'' என்று கேட்டாள்.

அதற்குப் பரமேஸ்வரன், ‘‘மலைமகளே! உலகத்தவருக்கு, வேண்டியதை அடைவது (காமியம்), வீடுபேறு பெறுவது (மோட்சம்) என்ற இரண்டு வேண்டுதல்கள் உண்டு. வீடு, மனை மக்கள் ஆகிய சுகங்களை வேண்டுபவர்கள் உன்னையும் என்னையும் ஆராதித்து அவற்றை நமதருளால் அடைந்து வருகின்றனர். மோட்சத்தை மட்டுமே விரும்புபவர்கள் என்னை மட்டுமே வணங்குகின்றனர்’’ என்று மொழிந்தார். அதைக் கேட்ட கௌரி, ``அப்படியானால் எனது அம்சமான சதை, நிணம், ரத்தம் ஆகியவையும் அவர்களுக்குத் தேவையில்லை அல்லவா?'' என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

இதைச் செவிமடுத்த பிருங்கி முனிவர், `சிவமே செம்பொருள்' எனக் கருதி, ``எனக்குச் சக்தி அம்ச மான இவை தேவையில்லை'' என்று கூறித் தன் தவ வலிமையால் நிணம், தசை, நரம்பு ஆகியவற்றை உதிர்த்து எலும்புருவாய் ஆனார். அதனால், நிற்க முடியாது சாய்ந்தார். அப்போது, சிவப் பரம் பொருள் அவருக்கு மூன்றாவது காலை அளித்துச் சாயாது நிற்கவைத்தார்.

தன்னை வணங்காத பிருங்கிக்கு சிவனார் அருள் புரிந்தது கண்டு வருந்தினாள் பார்வதிதேவி. கயிலையை விட்டு நீங்கி மண்ணுலகுக்கு வந்து கௌதமர் ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், தான் சிவபெருமானிடமிருந்து பிரிந்து வந்துவிட்ட செய்தியைக் கூறினாள். அவர் அவளுக்குப் பல இனிய வார்த்தைகளைக் கூறி மீண்டும் பரம சிவனிடமே செல்லும்படிக் கூறினார்.

அதற்குத் தேவி, ‘‘மாமுனியே! அவரைப் பிரிந்து வந்த நான் மீண்டும் தவம் செய்தே அவரை அடைவேன். எனக்கு அதற்கான வழியைக் கூறி அருளுங்கள்’’ என்றாள்.

உடனே கெளதம முனிவர், ‘‘அம்மா, சிவ பெருமானைக் காணப் பல ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை. அதற்கு எளிய வழியாக அவரே கூறிய சிறந்த விரதம் ஒன்று உள்ளது. அதை நீ கடைப்பிடித்தால் போதும் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும்’’ என்று கூறியதுடன், அந்த வழிபாட்டு முறையையும் விவரித்தார். அதுவே, புரட்டாசி மாதம் தேய்பிறை தசமி தொடங்கி ஐப்பசி மாதம் அமாவாசை வரை இருபத்தோரு நாட்கள் நோற்கப்படும் கேதாரீஸ்வரர் விரதமாகும்.

பின்னர் அவரிடம் விடைபெற்றுக் கொண்ட தேவி, கேதாரம் எனும் தலத்துக்குச் சென்று, கங்கைக் கரையில் 21 நாட்கள் தவம் புரிந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவனார் அவளுக்குக் காட்சியளித்து, இனி என்றும் பிரியாதிருக்கும்படி தன் உடலின் இடப்பாகத்தில் அவளை இணைத்துக் கொண்டார். கேதாரீஸ்வர புராணம், சிவமகா புராணம், மச்ச புராணம் முதலியவற்றில் கேதார கௌரி வரலாறும் கேதாரீஸ்வர விரத மகிமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

புரட்டாசித் திங்கள் தேய்பிறைச் சதுர்த்தசியில் கொண்டாடப்படுவது கேதாரீஸ்வர விரதம் என்றும், ஐப்பசித் திங்கள் தேய்பிறை சதுர்த்தசி, அமாவாசை ஆகிய நாட்களில் நோற்கப்படும் விரதம் கேதார கௌரி விரதம் என்றும் அழைக்கப்படும்.

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

அதாவது, கௌதம முனிவரின் உபதேசப் படி கௌரிதேவி கேதாரம் சென்று 21 நாட்கள் கடுந்தவம் புரிந்தாள். புரட்டாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து அருள்புரிந்தார். அவளுடைய தவத்தின் வெற்றியைக் கண்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ஐப்பசி அமாவாசையன்று கௌரிதேவியை அமர்த்தி அவளுக்குப் பெரிய சிறப்புகளைச் செய்தனர். அதுவே கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகின்றது.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதுடன், உமையொரு பாகனாக சிவனார் அருளும் திருச்செங்கோடு முதலான அர்த்தநாரீஸ்வர திருத்தலங்களைத் தரிசிப்பதும் சிறந்த பலனைப் பெற்றுத் தரும்.

இனி, கேதாரகெளரி விரத நியதிகளைத் தெரிந்துகொள்வோம்.

கேதார கௌரி விரதம் இருப்பது எப்படி?

இந்த விரதமே கௌரிதேவியைக் குறித்து நோற்கப்படும் விரதங்களில் மிக உயர்ந்ததாகும். இதனை தேவமாதர்கள் அனைவரும் கொண்டாடி அன்னையின் அருளைப் பெற்றதாகப் புராணங்கள் விளக்கும்.

முற்காலத்தில், கேதாரகௌரி விரதத்தின்போது, நீர்நிலைகளின் கரைகளில் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கோயில் வளாகங்களிலும், வீடுகளிலும் வைத்து இந்த வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள்.

பூஜை செய்யும் இடத்தில் ஒரு மேடை அமைத்து அதன்மீது பூரண கும்பத்தை அமைத்து வெள்ளைத் துணியை அணிவித்து, வெள்ளைக் கற்கள் இழைத்த ஆபரணங்களால் அலங்கரித்து, வெண்மையான மலர்களைச் சூட்ட வேண்டும்.

அந்தக் கௌரி கலசத்தின் மீது இருபத்தோரு முடிச்சு களைக் கொண்ட நோன்புக் கயிற்றை வைத்து பூஜிக்க வேண் டும். வெண்தாமரை மலர்கள் (அ) இருபத்தோரு வகையான வெண் மலர்களால் பூஜிப்பது மிகவும் சிறப்பு.

இல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்!

கேதாரத்தில் தேவி 21 நாட்கள் பூஜித்துச் சிவனருள் பெற்றதன் நினைவாக. அவளுக்கு இருபத்தோரு வெற்றிலை பாக்கு, இருபத்தோரு முறுக்கு என்று எல்லாவற்றையும் இருபத்தொன்றாகவே படைக்க வேண்டும்.

அம்பிகையை வழிபட்ட பின்பு, அவளுடைய இருபத்தோரு பெயர்களைக் கூறி, நோன்புக் கயிறுகளை பூஜித்து வந்து மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அனைவரும் கூடி நீர்நிலைகளுக்குச் சென்று அகல் விளக்குகளை நீரில் விட்டுக் கௌரி கங்கையை பூஜிக்க வேண்டும்.
பிறகு, வீட்டில் குல தெய்வத்தை முறைப்படி பூஜித்து வணங்க வேண்டும். அதன்பிறகு திருமணமான பெண்கள் தங்கள் கணவ னுக்கும் குழந்தைகளுக்கும் நோன்புக் கயிறுகளைக் கட்டிவிட வேண்டும். திருமணமாகிச் சென்றுள்ள பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து அதிரசத்தையும் நோன்புக் கயிறுகளையும் அனுப்பிவைக்க வேண்டும்.

ஸ்ரீகௌரி கங்கணம்

கௌரி பூஜையின் முக்கியமான நிகழ்ச்சி நோன்புக் கயிறுகளைப் பூசித்துக் கட்டிக் கொள்வதாகும். சுவர்ண கௌரி பூஜையில் 16 முடிச்சுகளை இட்டும், கேதார கௌரி பூஜையில் 21 முடிச்சுகளை இட்டும், நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைப்பார்கள்.

இதில் ஒவ்வொரு முடிச்சிலும் கௌரிதேவி யின் ஒவ்வொரு பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் இந்த நோன்புக் கயிறுகளை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். ஆதிநாளில் 21 இழைகளைக் கொண்ட நூலில், 21 நவரத்தின மணிகளைக் கோத்து அதனை பூஜித்து அணிந்தனர். பிறகு, ரத்தின மணிகளுக்குப் பதிலாகத் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த மணிகளைக் கோத்து அணிந்தனர். இப்போது முடிச்சுகள் இடப்படுகின்றன (மணிகளால் கோக்கப்பட்டதால் அது தோர பந்தன் என்றும் அழைக்கப்பட்டது. தோரா - மணி).
இந்நாளில் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டுக் கயிறுகளை அணிந்துகொள்கின்றனர். அதில் குஞ்சங்களை அமைத்துப் பொன் வண்ணச் சரிகை நூலால் அலங்கரிப்பதும் உண்டு. நோன்புக் கயிறுகளுக்குக் கௌரி கங்கணம் என்பது பெயர். இவற்றை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்ள வேண்டியதே முறை. பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பின்பு, ஆண்டுதோறும் நோன்புக் கயிறுகளை அதிரசத்துடன் பெண்ணுக்குத் தாய் வீட்டினர் அனுப்பும் வழக்கம், பல குடும்பங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism