Published:Updated:

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

பூசை. ஆட்சிலிங்கம்

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

பூசை. ஆட்சிலிங்கம்

Published:Updated:
படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

யிர்கள் வாழ உணவு அவசியம். அன்னம் உயிருக்கு உரமூட்டுவது. எனவே, அமுது எனப்பட்டது. அன்னமயமாகப் சிவபெருமான் விளங்குகிறார்; அதனை உண்பதால் கிடைக்கும் முழுமையான மன உணர்வைப் பராசக்தி அளிக்கிறாள். இதையொட்டியே, சிவபெருமானை அன்னவிநோதர் என்றும் அம்பிகையை அன்னபூரணி என்றும் அழைக்கிறோம்.

திருஆப்பனூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு அன்னவிநோதர் என்ற பெயர் வழங்குகிறது. இங்கு பெருமான் அன்பருக்காக மணலைச் சோறாக்கி அருள்புரிந்தாராம்.

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

உயிர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அன்னம் வழியாக இருப்பதால், அதை அளிக்கும் பெருமானைச் சோற்றுத் துறையார் என்றும் அழைக்கின்றனர். திருவையாற்றுக்கு அருகில் திருச்சோற்றுத்துறை என்ற தலம் உள்ளது. இங்குள்ள இறைவர் தொலையாச்செல்வர்; அம்பிகை அன்னபூரணி. இங்கு அருளாளன் என்பவனுக்குப் பெருமான் அட்சய பாத்திரம் தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

சுந்தரர் ‘பாடுவார் பசிதீர்ப்பார் பரவுவார் இடர் களைவார்’ என்று போற்றுகின்றார். கருகாவூர் பெருமானுக்குப் பசிதீர்த்த நாயனார் என்றே பெயர்.

இப்படி, உயிர்கள் பசித்தழுத பொழுதெல்லாம் உடன் வந்து உவந்து உணவளித்து திருவருள்புரியும்- உலகுக்கே படியளக்கும் பரமனுக்கு ஐப்பசி-அன்னாபிஷேகம் மிகப்பொருத்தமான வைபவம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தமுது ஊட்டும் வைபவம்

ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலாக விளையும் நெல்லை அறுத்து குத்தி அரிசியாக்கி ஸ்வாமிக்குப் படைப்பதைப் ‘புத்தமுது ஊட்டுதல்’ என்பர். அதை வடமொழியில் நவ நைவேத்திய உற்ஸவம் என்பர்.

விவசாயத்தில் விதைத்தலும் உழைப்பும் மட்டுமே நம் கையில் உள்ளது. விதை விளைய வேண்டியதற்குத் தேவையான தண்ணீர், இதமான பருவம் முதலிய யாவும் இயற்கையின் கையில் உள்ளது. இயற்கை ஒத்துழைக்க ஆண்டவன் அருள் கூடினால்தான் நல்ல விளைச்சலைக் கண்டு பயன் பெற முடியும்.

எனவே, விவசாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனையும் இயற்கையையும் போற்றி வணங்கித் துணைபுரிய வேண்டுவது இன்றியமையாதது. விவசாயத்தின்போது, முதன் முதலாக ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் ‘பொன்னேர் பூட்டுதல்’ எனும் வைபவமாகக் கொண்டாடுவர். இதில், நில மகளுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்வர். அதேபோல், விதைத்தல், நாற்று எடுத்தல், நடுதல், பயிர் கதிர்ப்பிடிக்கத் தொடங்குதல் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் வழிபாடுகளை நிகழ்த்துவார்கள். பயிர் நன்கு விளையச் சூரிய, சந்திரரிடம் பிரார்த்தனை செய்யப்படும்.

அவ்வண்ணமே, முதன் முதலாக அறுவடை தொடங்கும் வேளையிலும் சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்வர். ஆலயத்திலிருந்து சூலதேவர், சண்டீசர் ஆகியோரையும் அரிவாளையும் பூசித்து அவர்களுடன் ஊர்வலமாகச் சென்று முதல்பிடி கதிர் அறுப்பார்கள். இதன் பிறகே வயல்களில் அறுவடை துவங்கும். பின்னர் கூடையில் நெற்கதிர்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வருவர். கோயில் முற்றத்தில் அதைக் காயவைப்பார்கள். மீண்டும் ஒரு நல்ல நாளில், உலக்கை- உரலுக்குப் பூசை செய்து நெல்லைக் குத்தி அரிசியாக்குவர். அந்த அரிசியைச் சுத்தம் செய்து களைந்து உலையிலிட்டு அமுதாக்குவர். பிறகு புத்தரிசி அமுதுடன் கற்கண்டு,  கரும்புச்சாறு, வாழைப்பழம் முதலியவற்றை வைத்து நிவேதிப்பர். அந்த அமுது எல்லோருக்கும் பிரசாதமாக அளிக்கப்படும்.

இந்த விழா, இறைவன் தானே நேரில் மக்களுடன் வந்து அறுவடையைத் துவக்கி வைப்பதாகக் கருதும் விழா வாகும். முதல் அரிசியை இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும் அமைகிறது. முன்னாளில் மூன்று போகம் விளையும். முதல் போக அறுவடையான புரட்டாசி மாதம் இந்தத் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்த புத்தமுதூட்டும் விழாவின் மறு வடிவமே இந்நாளைய அன்னாபிஷேகம் எனலாம்.

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

ஐப்பசி அன்னாபிஷேகம்

தற்காலத்தில் அன்னாபிஷேக வைபவம் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் நிகழ்கிறது. அபிஷேகம் என்ற சொல், நடை முறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். அன்னாபிஷேகம் என்பது இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கிக் காய்கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதேயாகும். காலப் போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லைக் கொண்டு இறைவன் திருமேனியில் அதைச் சாற்றும் வழக்கம் வந்ததென்பர்.

அன்னாபிஷேக புண்ணிய தினத்தன்று, உச்சிக் காலத்தில் அக்னிதிரட்டி (அக்னியை வளர்த்து) அடுப்பிலிட்டு அதை மூட்டுவர். உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவர். அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொரியல், அவியல் முதலியவற்றை செய்வர். முறுக்கு, அதிரசம், தேன்குழல், சுகியன் முதலியவற்றைச் செய்து கொள்வர்.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபின் (நன்கு துடைத்தல்), அமுதை (அரிசிச்சோறு) இறைவன் திருமேனியை மூடும்படி சார்த்துவார்கள். அதன் மேல் அலங்காரமாக வடை, முறுக்கு, அதிரசம், அப்பம் ஆகியவற்றை அணிவிப்பர். பாகற்காயை அப்படியே வேகவைத்து, புளி, காரமிட்டு கோத்து உருத்திராட்ச மாலைபோல் அணிவிப்பர். நீண்ட புடலங்காயை அப்படியே அவித்து பாம்புபோல் அணிவிப்பர். சுவாமிக்கு முன்புறம் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள், பணியாரங்கள், காய்கறிகள், கூட்டுகள், பழங்கள், பானங்கள், பாயசங்களை இட்டு நிவேதனம் செய்வர்.

பிறகு தீபாராதனை செய்யப்படும். அதன் பிறகு மிளகுநீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்து திரையிடப்படும். பின்னர் முகவாசம் எனப்படும் தாம்பூலம் நிவேதிப்பர். மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர்.

பிறகு, அந்த அலங்காரத்தைக் களைந்து, சிறிதளவு அன்னத்தை (சோற்றை) எடுத்து லிங்கம்போல் செய்து பூசிப்பார்கள். பின்னர், அதை தட்டில் வைத்துப் பரிசாரகன் தலையில் ஏந்தி வர, குடை, மேளதாளம் தீவட்டியுடன் சென்று, ஊரின் குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல்  செழிக்கும் என்பது நம்பிக்கை.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய அளவில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஏறத்தாழ 100 மூட்டை அரிசியைச் சோறாக்கி அன்னாபிஷேக விழா நடத்துகின்றனர். சிதம்பரத்தில் தினமும் அழகிய திருச்சிற்றம் பலமுடையாரான லிங்கத்துக்கு அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. (இதில் காய்கறிகள், குழம்புகள் படைப்பதில்லை. அன்னத்தைக் கொண்டு லிங்கத்தை மூடி வில்வம் அணிவித்து தீபாராதனை செய்கின்றனர்.)

இந்த  வருடம்  நவம்பர் 14  திங்கட்கிழமையன்று அன்னாபிஷேக  வைபவம் வருகிறது. இந்நாளில் அருகிலுள்ள சிவாலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நிகழ்த்தும் வண்ணம் கோயி லுக்கு அரிசி வழங்குவதுடன், அன்னாபிஷேக தினத்தில் ஆலயத்துக்குச் சென்று அகம் மலர- மனம் குளிர அபிஷேக வைபவத்தையும் தரிசித்து வாருங்கள். அன்று, உங்களால் இயன்றளவு அடியார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யுங்கள். தென்னாடுடைய சிவனருளால் உங்கள் இல்லத்தில் வறுமைகள் நீங்கும்; பசிப்பிணி விலகும்; அன்ன பூரணியின் திருவருட்கடாட்சம் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.

படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேகம்!

ஐப்பசி பரணி - அன்னப்படையல்!

சிவபெருமானின் திருவுருவங்களில் பெருங்காவல் தெய்வமாக விளங்குவது பைரவ கோலமாகும். இவருக்குப் பெரும்படையல் எனப்படும் அன்னபாவாடம் இடுவது சிறப்பு வழிபாடாகப் போற்றப்படுகிறது. குறிப்பாகச் சித்திரை பரணியிலும், ஐப்பசி பரணியிலுமாக இரண்டு முறை பைரவருக்குப் படையலிட்டு வழிபடுகின்றனர்.

பைரவர் அனேக சமயங்களில் வெளிப்பட்டு அன்பர்களிடம் சென்று படையல் ஏற்கின்றார். என்றாலும், சிறுத்தொண்டரிடம் அவர் சென்று ஏற்ற படையலே புராணங்களில் தனிச் சிறப்புடன் போற்றப்படுகிறது. அப்படிச் சென்ற நாள் சித்திரை பரணியாகும். அதையொட்டியும், போர் நட்சத்திரமான பரணியில் உக்கிர தெய்வங்களுக்கு பெரும் படையலிட்டு வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பதாலும், பரணி நட்சத்திரம் பைரவர் வழிபாட்டுக்கு உரியதாக விளங்குகிறது. சித்திரை பரணி ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் பைரவரைச் சிறப்புடன் வழிபடுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism