திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

ஸ்ரீநாட்டராயன் - ஸ்ரீநாச்சிமுத்து சுவாமி திருக்கோயில்ச.செந்தமிழ் செல்வன்

சினத் தெழுகின்ற ஓடியவேல் சூனியம் செய்தவரை

மனத்தைத்துளர்த்தி வாய்தீர டக்கும்நன் மண்டலத்தில்

கணத்தில் புகழ் பெற்றமாந்தை நகர்தனிற் காரணமாம்

வனத்தைய நென்றான் வருவார் நமக்குவழி துணையே


- தென்ன பாடல், யாரைப் பற்றிய பாடல் என்று கேள்வி எழுகிறதா உங்கள் மனதில்? இதற்கான பதிலை அறியுமுன், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்த அற்புதக் கோயில் ஒன்றின் திருக்கதையைப் படித்துவிடுவோம்.

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

நாமெல்லாம் அறிந்த கதையே என்றாலும், அந்த தலத்தில், நம்பிக்கைச் சார்ந்து சற்றே மாறுபட்டு வழங்கப்படுகிறது. கதை இதுதான்...

முன்னொரு காலத்தில், பஸ்மாசுரன் என்றொரு அரக்கன் வாழ்ந்து வந்தான். நீண்டநெடிய காலம் தவமிருந்த அவன் முன் சிவபெருமான் தோன்றி, ‘வேண்டும் வரம் யாது’ எனக் கேட்டார்.  ‘‘எவர் தலையில் நான் கை வைத்தாலும் அவர் அப்போதே எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்’’ என்று வரம் கேட்டான் அசுரன். ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று வரம் தந்தார் சிவனார்.

வரத்தை வாங்கியாகிவிட்டது. அது பலிக்குமா பலிக்காதா என்று சோதிக்க வேண்டாமா? இதுபற்றி யோசித்த அந்தப் பொல்லாத அசுரன், வரத்தை சோதிக்க சிவனார் சிரசிலேயே கை வைக்க முயற்சித்தான். அவனிடம் இருந்து தப்பிக்க சுயரூபத்தை மறைத்துக்கொண்ட சிவபெருமான் மண்ணானார்;  மருவானார்; மலையானார்; கடலானார்; நதியானார். இன்னும் பலவித உருக் கொண்டார். பின்பு, ஐவரளிச்செடியாகி, ஆயிரக்கணக்கான பழங்களுடன் காட்சி அளித்தார். ஈசனைத் தொடர்ந்து வந்த அந்த அசுரன், இறுதியாக இறைவனைத் தின்று தீர்க்க ஆட்டுக்கிடா உருவமாகி, ‘இதை மென்றே தீர்ப்பேன்’ என்று சூளுரைத்துத் தின்னத் தொடங்கினான். இதைக் கண்டு அஞ்சிய அன்னை பரமேஸ்வரி, இறைவனின் கையறுநிலை கண்டு, தனது தமையனான பெருமாளிடம் வேண்டி னாள். பெருமாளும் தெய்வ அரம்பையாக வடிவம் கொண்டு, பேரழகுடன் அந்த அசுரன் முன் தோன்றினார். அரம்பையின் அழகில் மயங்கிய அசுரன், அவளை அள்ளி அணைக்க அருகே சென்றான். உடனே அந்த அரம்பை, ‘‘இவ்வளவு அருவருப்பாக உள்ள நீ எவ்வாறு என்னைத் தீண்டலாம்? முதலில் நன்றாகக் குளித்துவிட்டுச் சுத்தமாக வா!’’ என்று கூறினாள். அசுரனும் குளிப்பதற்காகத் தண்ணீரைத் தேடியலைந்தான்.

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

ஆனால், இறையருளால் உலகில் எங்குமே நீர் இல்லாமல் போக, அசுரனுக்கு சிறிதளவு கோமியம் மட்டுமே கிடைத்தது. அசுரனிடம், “அதுவும் நீர்தான்! சிறிதளவு கரத்தில் எடுத்து, உனது சிரசில் தடவினால், நீ சுத்தமாகி விடுவாய். பிறகு, நீ என்னுடன் சேரலாம்” என்று சொன்னாள் அரம்பை. அவளின் தெய்விக அழகில் மெய்ம்மறந்து இருந்த அசுரனும், சிரசில் கோமியத்தை வைத்துக் கையால் தேய்த் தான். அடுத்த நொடியே, தான்  வாங்கிய வரத்தின்படி எரிந்து சாம்பலாகிப் போனான்.

இச்சம்பவத்தை அறியாது, தன்னை மறைத்துக்கொண்டு ஐவரளிச்செடியாக நின்ற ஈசனை, அந்த அரம்பை அழைக்க, தன் சுயரூபம் கொண்டு வந்து அந்த அரம்பையை அணைத்துக் கொண்டார் ஈசன். அவர்களுக்கு ஹரி, ஹரன் என இரு குழந்தை கள் பிறந்தன. இவர்களுக்கு மக்கள், திருக்கோயில் எழுப்பி, வழிபடத்தொடங்கினர். இந்தக் கோயில் முதலில் ஹரிஹரன் திருக்  கோயில் என்று அழைக்கப்பட்டு, இன்று அது நாட்டராயன் நாச்சி முத்து சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.

தமிழக அரசுக்குச் சொந்தமான  தஞ்சை சரஸ்வதி மஹாலில், பழங்கால ஓலைச்சுவடிகள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அந்த ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பாதுகாத்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஒருவ ரது வீட்டில் 52 ஓலைச்சுவடிகள் பெறப்பட்டன. அதிலுள்ள சில ஓலைச்சுவடிகளில் திகழும் பாடல்கள், நாட்டராய சுவாமிகள் பற்றி பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றையே, இக்கட்டுரையின் துவக்கத்தில் படித்தீர்கள்!

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தின் ஊஞ்சவனம் காட்டுப்பகுதியில் உள்ளது, அருள்மிகு நாட்டராயன் மற்றும் நாச்சிமுத்து சுவாமிகள் இரட்டையர்களாக அமைந்திருக்கும் கோயில். வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் 4-வது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம். ஊஞ்ச மரங்கள் நிறைந்த சோலைகளுக்கு நடுவில், கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயத்தில், பிரதான மூர்த்திகளான அருள்மிகு நாட்டராயன் மற்றும் நாச்சிமுத்து சுவாமி இருவருமே கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக் கிறார்கள். மூல சந்நிதானத்துக்கு வடபுறத்தில் சப்த கன்னிமார்களையும், தென்மேற்கு மூலையில் விநாயகரையும் தரிசிக்கலாம். மேலும், கருப்பண்ண சுவாமி, பேச்சி அம்மன், நாச்சிமுத்து அம்மன் ஆகிய தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம்.

மூலவர்களின் சந்நிதிக்கு எதிர்ப்புறமாக, மிக பிரமாண்டமாகக் காட்சி தருகிறாள், மகா முனியம்மன். மகாமுனி தேவதை கேரளப் பகுதியில் நரமாமிசம் வேண்டி, அங்குள்ள மக்களை துன்புறுத்தியதாகவும், அங்குள்ள மக்கள் நாட்டராயன் மற்றும் நாச்சிமுத்து சுவாமியரின் மகிமையை அறிந்து, இங்கு வந்து முறையிட, இந்த சுவாமிகள் இருவரும் அந்த தேவதையை அடக்கி தங்கள் கண்பார்வையில் வைத்துக் கொண்டதாகவும் ஒரு திருக்கதை சொல்லப் படுகிறது. இன்றைக்கும் கேரள மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அதேபோல், இந்தக் கோயிலுக்கு தெற்கில் கருப்பண்ண சுவாமிக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. நான்கு வாயில்களோடு, ஒவ்வொரு  மூலையிலும் கம்பீரமான பூத கணங்களுடன் காட்சி தருகிறது கருப்பண்ணசுவாமி திருக்கோயில். இங்கேயும் சப்தகன்னிமார் அருள்கின்றனர்.

சுற்றுவட்டார மக்களின் காவல்தெய்வமாகவும், எல்லை தெய்வ ங்களாகவும் திகழும் நாட்டராயன்- நாச்சிமுத்து சுவாமியரின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயிலுக்கு மண்ணாலும் சுதையாலும் ஆன குதிரைச் சிலைகளை சமர்ப்பிப்பது வழக்கமாம். அப்படியான வேண்டுதல் குதிரைகள் நூற்றுக் கணக்கில் இங்கு குவிந்திருந்தனவாம். 2014- ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றபோது, அனைத்து பொம்மைகளும் அகற்றப்பட்டன என்கிறார்கள்.

பிணிகளை நீக்கும் தெய்வச் சுனை!


மூலவர்கள் சந்நிதிக்கு வடபுறத்தில் சுமார் நூறு அடி தூரத்தில் இயற்கையாக உருவான சுனை ஒன்று அமைந்துள்ளது. இது தற்போது சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சுனை ‘பஸ்மாசூரன் சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையாக ஊற்றெடுக்கும் இச்சுனையில் பக்தர்கள் இதில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து உள்ளே வீசி, வணங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் முகம் சம்பந்தமான பிணிகள் நீங்கிப் போகும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக இலந்தை மரம் ஒன்று இங்கு உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.

சங்கடம் தீர்க்கும் பிராது சீட்டு


‘பிராது தாள் வேண்டுதல்’ இக்கோயிலின் சிறப்பம்சம். மஞ்சள் வண்ணம் கொண்ட பிராது தாளில் பக்தர்கள் தங்கள் குறைகள் மற்றும் வேண்டுதல்களையும், அவை நிறைவேறினால் என்ன செய்வோம் என்பதையும் எழுதி, மூலவர் சந்நிதிகளில் வைத்து வணங்கியபிறகு, மகாமுனி மேல் வைத்து விடுகின்றனர். அந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறியதும், அதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

பக்தர்கள் எழுதும் கடிதம்... தெய்வங்கள் கடைப்பிடிக்கும் விரதம்!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும் நாட்டராயன் மற்றும் நாச்சிமுத்து தெய்வங்கள் விரதம் இருக் கிறார்கள். அன்று மட்டும் இரவு முழுவதும் கோயில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பின்னர், இரவு இரண்டு மணிக்கு புனுகு பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு, நான்கு மணிக்கு  பச்சை மாவு இடித்து சர்க்கரை பொங்கலிட்டு, பூசாரிகள் விரதம் இருந்து சிறப்பாக பூஜை செய்கின்றனர். இந்த பூஜை `பெரிய பூஜை' என்று அழைக்கப்படுகிறது.

இவை தவிர, பிரதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மஞ்சள் காப்பு பூஜை நடைபெறுகின்றது. செவ்வாய்க் கிழமையில் இக்கோயிலுக்கு வந்து இந்த வைபவங்களைத் தரிசித்து இரட்டை தெய்வங்களை வணங்கிச் சென்றால், விரும்பியது விரும்பியபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நாட்டராயன்-நாச்சிமுத்து சுவாமி சந்நிதியில் திரளும் பக்தர்கள் கூட்டமே அதற்கு சாட்சி!

படங்கள் : க.மணிவண்ணன்

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி : ஸ்ரீநாட்டராயன், ஸ்ரீநாச்சிமுத்து சுவாமி

தலவிருட்சம்: வில்வமரம்

தீர்த்தச் சிறப்பு: இங்கே, இயற்கையாக ஊற்றெடுக்கும் `பஸ்மாசுரன் சுனை'யில் பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு சேர்த்து உள்ளே வீசி, வணங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் முகம் சம்பந்தமான பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனைச் சிறப்பு: `பிராது தாள் வேண்டுதல்' எனும் பிரார்த்தனை இக்கோயிலின் விசேஷ அம்சம். பக்தர்கள், மஞ்சள் வண்ண தாளில் தங்களின் வேண்டுதலையும், அது நிறைவேறினால் நேர்த்திக்கடனாக தாங்கள் செய்யப்போவதையும் எழுதி, மூலவர் சந்நிதிகளில் வைத்து வணங்கியபிறகு, மகாமுனியிடம் சமர்ப்பித்துச் செல்கின்றனர். இதனால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  காலை 6 மணியிலிருந்து 12 மணி வரை; மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை. விசேஷ நாட்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தின் ஊஞ்சவனம் காட்டுப்பகுதியில் உள்ளது, இக்கோயில். வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் 4-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.