Published:Updated:

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!
மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம்க.புவனேஸ்வரி

பிரீமியம் ஸ்டோரி

ன்னை நாடி வரும் அன்பர்களின் உடற்பிணி களை மட்டுமின்றி பிறவிப் பிணியையும் தீர்க்கும் ஸ்ரீபிறவிமருந்தீஸ்வரராக எனும் திருநாமம் கொண்டு சிவனார் அருள்பாலிக்கும் தலம்.... அஸ்வினி நட்சத்திரக் காரர்கள் வழிபடவேண்டிய அற்புத க்ஷேத்திரம்... நடராஜ பெருமான் சுந்தர தாண்டவராய் அருளோச்சும் திருவூர்... நவகிரகங்களும் வந்து வழிபட்டதால் நவகிரகபுரம் என்றும், வில்வ மரங்கள் நிறைந்ததால் வில்வாரண்யம் என்றும் போற்றப்படும் திருத்தலம்...

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

- இவ்வளவு மகத்துவங்களைத் தன்னகத்தே கொண்ட சிவத்தலம் எது தெரியுமா? நாகை மாவட்டத்தில் அமைந்த திருத்துறைப்பூண்டிதான் அந்தத் தலம். இங்குள்ள இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.
 
முன்னொரு காலத்தில் படைப்புத் தொழிலைப் புரியும் பிரம்மாவுக்கும், கலைஞானத்தை வழங்கும் கலைவாணிக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. தமது படைப்புத் தொழிலே மேன்மையானது என்றார் பிரம்மன். ஆனால், சரஸ்வதிதேவியோ தான் மனிதர்களுக்கு வழங்கும் அறிவே அனைத்திலும் உயர்ந்தது என்று வாதிட்டாள். இவ்வாறு அவர்கள் வாதம் புரிந்துகொண்டிருக்கும் தருணத்தில், தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார். அவர், ‘‘அறிவை வழங்கும் சரஸ்வதியே உயர்ந்தவர்’’ என்று கூறினார்.

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

இதைக் கேட்டதும் பிரம்மன் தனது தவறை உணர்ந்தார். படைப்பின் அங்கமாகிய உயிர் களுக்கு உரிய ஞானம் கிட்டும்போதுதான், அவை உயர்வு பெறுகின்றன என்பதை புரிந்துகொண் டார். இதுவரையிலும் அறியாமையில் உழன்று தேவியுடன் தர்க்கம் செய்ததற்காக வருந்தினார். அறியாமை நீங்கிட தவமியற்ற முடிவு செய்தார். பூலோகத்தில் வில்வ மரங்கள் நிறைந்த ஓரிடத்துக்கு வந்து, அங்கே தீர்த்தம் உருவாக்கி, அதன் கரையில் நின்றபடி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறு தவத்தில் ஆழ்ந்தார். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் சுயம்புமூர்த்தி யாக தோன்றினார். மேலும், பிரம்மாவின் ரஜோ குணத்தை நீக்கி, அவருக்கு பல வரங்களையும் கொடுத்தருளினார். ஆகவே, அந்தத் தலத்துக்கு பிரம்மபுரி என்றும், அங்கே அருள் வழங்கும் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் திருப் பெயர் உண்டானது.

சிவ தரிசனத்தால் மகிழந்த பிரம்மதேவன் இந்த தலத்தில் சிவனுக்கு ஒன்றும் அம்பிகைக்கு ஒன்றுமாக தனித்தனிச் சந்நிதிகள் அமைத்தாராம். அதுமட்டுமா? அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் அமிர்த புஷ்கரணியை உண்டாக்கி, அதன் தீர்த்தத் தைக் கொண்டு தினமும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து ஆறுகால பூஜைகள் நடத்தி வழிபட்டராம். பின்னர், சித்திரை மாதம் சிவாச்சார்யர்களைக் கொண்டு சிறப்பு பூஜை செய்தபிறகு பிரம்மலோகம் சென்றடைந்ததாக தலபுராணம் சொல்கிறது.

அதிஅற்புதமாக அமைந்திருக்கிறது ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் ஆலயம். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு பெரியநாயகி. மாங்கல்ய பலம் அருளும் மங்கல நாயகி இவள்.

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

ஒருகாலத்தில் விருபாக்ஷன் என்றொரு அசுரன், தன் மனைவி ஜல்லிகையுடன் வராஹ பர்வத குகையில் வசித்துவந்தான். ஒருமுறை, தந்தையின் சிராத்தத்துக்காக காசியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு இவ்வழியே வந்துகொண்டிருந்த  அந்தணச் சிறுவன் ஒருவனை விழுங்க முற்பட்டான் விருபாக்ஷன்.  ஏற்கெனவே அவன் நர மாமிசம் புசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜல்லிகை, இம்முறையும் அவனைத் தடுத்து எச்சரித்தாள்,  ஆனாலும் விருபாக்ஷன் கேட்கவில்லை; சிறுவனை விழுங்கி விட்டான்; அதன் பலனாக இறந்தும் போனான்.

ஜல்லிகை கதறியழுதாள். இந்நிலையில் அவ்வழியே கண்வ மகரிஷி வருகைதர, அவரிடம் தன் நிலையைக் கூறி புலம்பினாள். அவளை ஆறுதல் படுத்திய மஹரிஷி,   தமது தவவலிமையால் அசுரனின் வயிற்றில் இருந்து அந்தணச் சிறுவனை உயிர்ப்பெற்று எழச் செய்தார். அவனிடம் குமரிக்குச்  சென்று தந்தைக்கான கடமையை பூர்த்திசெய்யும்படி பணித்தார். மேலும் ஜல்லிகையை வில்வாரண்யம் க்ஷேத்திரத்துக்குச் சென்று அமிர்தபுஷ்கரணியில் நீராடி, அங்கே அருள்பாலிக்கும் அம்பிகையை வழிபடும்படி அறிவுறுத்தினார். அதன்படியே, வில்வாரண்யம் வந்து அமிர்த புஷ்கரணியில் நீராடி பெரிய நாயகியை வழிபட்டாள் ஜல்லிகை. அவளுக்கு அம்பாள் அருள்புரிந்தாள்; விருபாக்ஷன் உயிர்த்து எழுந்தான். ஜல்லிகையின் மாங்கலயத்தை காத்தருளியதால் அமிர்த புஷ்கரணிக்கு  மாங்கல்ய புஷ்கரணி என்ற சிறப்புப் பெயரும் வழங்காலாயிற்று.

மேலும், தன்னைப்போலவே இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் படி வேண்டிக்கொண்டாள் ஜல்லிகை. அப்படியே அருள்செய்தாள் அம்பிகை. ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தமாம் அமிர்த புஷ்கரணியில் நீராடி அம்பாளை வழிபட்டால், மாங்லய பலம் பெருகும், மங்கல வாழ்வு ஸித்திக்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்தின் கீழ்க்கரையில் வேதாரண்யேஸ்வரர் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சியளிக்கும் நிலையிலும், லிங்கத் திருவுருவோடும் கோயில் கொண்டுள்ளார்.
   
இக்கோயிலில் சிவகாமவல்லியுடன் அருளும் நடராஜர், சுந்தரத் தாண்டவர் என்று அழைக்கப்படு கிறார். இந்தத் தலம் தவம் புரிவதற்கு ஏற்ற தலம் என்பதை அறிந்த அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்திரி, பரத்வாஜர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர் ஆகிய ஒன்பது முனிவர் கள் இங்கே தனித்தனியாக தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சாயுஜ்ய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி ஆனந்த தாண்டவம் ஆடினார். மேலும் அவர்களுக்கு பிறவாநிலையைத் தந்து முக்தி அளித்தார்.  அவர்களின் வேண்டுதலுக்கு  இணங்க, சித்ரா பெளர்ணமியில் இங்கு வந்து நவதீர்த்தங்களில் நீராடி தம்மை தரிசிக்கும் அன்பர்களுக்கும் பிறவா வரம் அருள்வதற்காக,  சந்திர சூடாமணித் தாண்டவராக இங்கு அருள்கிறாராம் நடராஜபெருமான்!

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

இந்த சுந்தரத்தாண்டவரின் சந்நிதியை அடுத்து இரண்டாவது திருச்சுற்று அமைந்துள்ளது. அங்கே யாகசாலையும் மண்டபமும், தல விருட்சமாகிய வில்வமரங்களும் அமைந்துள்ளன. உட்சுற்றில் தெற்கு புறத்தில் வரசித்தி விநாயகரும், தீர்த்தவிடங்க விநாயகரும், நர்த்தன விநாயகரும் அடுத்தடுத்து நமக்கு அருள்பாலிக்கின்றனர்.  அவர்களைக் கடந்து வலமாக வந்தால், தேவியருடன் முருகன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து கஜலட்சுமி, ஜகசம்ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். மூலவர் கருவறைக்கு தெற்குப்புறத்தில் தனிச் சந்நிதியில் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிக்கலாம். மேலும் கருவறையை சுற்றும் பிராகாரத்தில் துர்கை, பிரம்மன், பைரவர், நவகிரகங்கள், சூரியன், தட்சிணாமூர்த்தி, நால்வர் பெருமக்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். தாண்டவ விநாயகரின் திருவுருவம் கண்ணையும் கருத்தையும் கவரும் திருக்கோலம்! தவிரவும், இக்கோயிலில் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இப்படி, பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தில் நிகழும் சித்திரை திருவிழாவையும், அந்த விழாவையொட்டி நிகழும் ரிஷபவாகன காட்சி,  தியாகேச பெருமானின் வசந்த உற்ஸவம், பக்த காட்சி, பாத தரிசனம், பஞ்சமுகவாத்திய கச்சேரி ஆகியவையும் அவசியம் தரிசிக்கவேண்டியவை. இப்படி, எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்ட இந்தக் கோயிலில்தான் சக்தி விகடனின் அடுத்த விளக்குபூஜை (29.11.16 செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. பூஜையில் கலந்துகொண்டு அம்மையையும் அப்பனையும் வழிபட்டு, மங்கல வாழ்வு பெற்று வாருங்கள்.

படங்கள்: க.சதீஷ்குமார்

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு பெரியநாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

சிறப்பு வழிபாடு: இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தமாம் அமிர்த புஷ்கரணியில் நீராடி அம்பாளை வழிபட்டால், மாங்லய பலம் பெருகும், மங்கல வாழ்வு ஸித்திக்கும் என்பது ஐதீகம். பிறவி மருந்தீஸ்வரரை வழிபட உடல், உள்ளப் பிணிகள் யாவும் நீங்கும்.

நடை திறக்கும் நேரம்:
காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: 
திருவாரூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்துறைப்பூண்டி. பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே திருக்கோயில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு