திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாமியே சரணம் ஐயப்பா!

விரதம், வழிபாடு, யாத்திரை - முழுமையான தொகுப்புசாஸ்தா வியாசர்- அரவிந்த் சுப்ரமணியம்

சுவாமியே சரணம் ஐயப்பா!

கார்த்திகை மாதம் துவங்கிவிட்டது. ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்துடன், தாயிடம் சரண் புகும் குழந்தைகளைப் போன்று, ஐயன் ஐயப்பனைத் தரிசிக்கவும் அவருடைய பாதார விந்தங்களில் சரணடையவும் சபரி யாத்திரைக்குத் தயாராகும் சாமிமார்கள், மாலை அணிந்து விரதம் ஏற்கும் புண்ணிய மாதம் இது.

‘எல்லோரும் மாலை அணி கிறார்கள் நானும் அணிகிறேன்; விரதம் இருக்கிறேன்... எல்லோ ரும் மலைக்குச் செல்கிறார்கள் நானும் செல்கிறேன்...' என்பது மாதிரியான மனோநிலையுடன் கடைப் பிடிக்கப் படுவதல்ல ஐயப்ப விரதமும், சபரி மலை யாத்திரையும்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்ப விரதம்... அது, பரம்பொருளைத் தரிசிக்க நம்மைப் பக்குவப்படுத்தும் விரதம்; அந்தப் பக்குவத்தை அடைய நம்மைத் தயார்படுத்தும் விரதம். சபரி யாத்திரையோ, ஐயப்பப் பரம்பொருளுடன் நம் உயிரை உணர்வை ஒன்றிணைக்கும் உன்னத யாத்திரை.

அதன் வழியெங்கும் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும் ஆனால், நம் கால்களுக்கு வலிக்காது. காடுகளும் காட்டு மிருகங்களும் நிறைந்ததுதான் பெருவழிப் பாதை. ஆனால், அதன் தூரமும் கடினமும் ஒரு பொருட்டாகவே தெரியாது நம் மனதுக்கு.

இப்படி, தேகபலத்தையும் பாத பலத்தையும் ஐயனிடமே யாசித்துப் பெற்று, அவனருளால் அவன் தாள் தேடிப் பயணித்து- அவன் சந்நிதானத்தை அடைந்து, பொன்னுபதினெட்டாம்படி ஏறி, அங்கே மகா யோக பீடத்தில் மகர விளக்காக ஜொலிக்கும் மணிகண்ட பிரபுவின் புன்னகையைத் தரிசிக்கும் அந்த ஒரு கணம்... அப்பப்பா அற்புதம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

தீவினைகளையெல்லாம் பொசுங்கச் செய்யும் அந்தப் புன்னகையை, கண் மலரில் தண்ணருளைக் காட்டி உலகம் செழிக்க வரம் வாரி வழங்கக் காத்திருக்கும் அந்தப் புன்னகையைத் தரிசிக்க ஆயுள்  பரியந்தம் தவமாய் தவம் கிடந்த அடியார்களும், சபரி ஐயனின் திருப்பணிக்கு தங்களது வாழ்வையே அர்ப்பணித்த மகான்களும் எத்தனையோ பேர்! ஐயன் ஐயப்பனின் மகத்துவம் இவ்வாறிருக்க, அவருக்கான வழிபாடு குறித்தும், சபரி யாத்திரை குறித்தும் நம் பாமர மனதில் எண்ணற்ற கேள்விகளும் எழுவது உண்டு.

ஐயப்பனுக்கு 11 நாள் விரதம் இருந்தால் போதாதா, சபரி யாத்திரைக்கு பெருவழிப் பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா, எல்லா ஆலயங்களும் எல்லா நாட்களும் திறந்திருக்க, சபரி மலை ஐயப்பன் கோயிலில் மட்டும் குறிப்பிட்ட தினங்களில்தான் நடைதிறக்கப்படுகிறது, அது ஏன்... இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள், இந்த இணைப்பில் உங்களுக்காக!

படித்து அதன்படி விரதம் இருந்து ஐயனைத் தரிசித்து வரம்பெற்று வாருங்கள்.

அவதார காலமும் ஆலயத்தின் தொன்மையும்

`பூதநாத உபாக்யான'த்தின்படி, மகிஷியின் மகன் ராமாயண காலத்தில், வாலியால் கொல்லப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது. மணிகண்டன், மகிஷியை வதம் செய்தபின், சபரிமலைக் கோயிலில் பரசுராமரால் பிரதிஷ்டை நடந்தேறியது. இதை வைத்துப் பார்க்கும்போது, திரேதாயுகத்தில் இது நடந்துள்ளது என அறியலாம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

ஆர்ய கேரள வர்மன் என்று அழைக்கப்பட்ட இளவரசன் ஐயப்பனைப் பற்றிய குறிப்புகளும் வரலாற்றில் உண்டு. சாஸ்தா அம்சமாகிய இந்த ஆர்ய கேரள வர்மன் இருந்த காலம், சுமார் பத்தாவது நூற்றாண்டு. அவர், சபரிமலைக் கோயிலைப் புதுப்பித்து, சாஸ்தாவுக்கு சந்நிதி அமைத்திருக்கிறார். திருக்கோயிலைப் புதுப்பித்த பிறகு, மகர சங்கராந்தி தினத்தன்று, இளவரசனும் யோகியுமான அந்த ஐயப்பன், கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா விக்கிரகத்தில் ஐக்கியமானதாக தகவல் உண்டு. இதைப்  பின்னணியாக வைத்து, சபரிமலை சுமார் 900 – 1000 வருடங்கள் முன்னால் கட்டப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது; இது தவறு.

ஆக, புராண காலத்திலிருந்தே சபரி மலைக் கோயில் இருக்கிறது. ஆர்ய கேரள வர்மனின் காலத்தில் சபரிமலைக் கோயில் புனரமைக்கப்பட்டு, யாத்திரை முறைப்படுத்தப்பட்டது.

ஐந்துமலை வாசன் ஐயப்பன் சபரியில் மட்டும் கோயில் கொண்டிருப்பது ஏன்?

பகவானுக்கு பஞ்சாத்ரீஸ்வரன், ஐந்து மலை அழகன் என வேறு பெயர்களும் உண்டு. முதலில் ஐந்து மலைகள் அல்லது தலங்கள் என்னென்ன என்பது குறித்து அறிவோம்.

இதில் இருவேறுபட்ட கருத்துகள் உண்டு. சிலர் சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில், ஆரியன்காவு, குளத்துபுழை  மற்றும் சபரிமலை என்ற வரிசையைச் சொல்வார்கள். வேறு சிலரோ அழுதைமலை, (உடும்பாறை மலையையும் சிலர் சேர்த்துக் கொள்வர்), தலைப்பாறை மலை, கரிமலை, நீலிமலை மற்றும் சபரி மலை (பொன்னம்பல மேட்டையும் சிலர் சேர்த்துக் கொள்வர்) என்பர்.

`கருடாத்ரி' என்பதே சபரிமலையின் உண்மையான பெயராகும். பகவான் பற்பல மலைகளில் இருந்து அருள்பாலித்தாலும், பரசுராமரின் வேண்டுகோளுக்கு இணங்க மஹாயோக பீடமான சபரிமலையில்தான்  ப்ரத்யக்ஷ பரிபூர்ணனாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். பரசுராமர் கேரளத்தை உருவாக்கியபோது, மஹாயோக பீடத்தில் தனக்கொரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும்படியும், அதுவே பிற்காலத்தில் தனது தலைமை பீடமாகவும் ஆகும் என்றும் பகவான் ஆணையிட்டபடி, உருவான கோயில்தான் சபரிமலை திருக்கோயில்- `மம ப்ரதான க்ஷேத்ரம் பவிஷ்யாதி' (கேரள கல்பம்)

ஐயன் ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்?

தர்மஸ்ய சாசனம் கரோதி
இதி தர்ம சாஸ்தா:


சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர், மேலும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப் பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனேனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளை இட்டவர். வீரபத்ரரை `தக்ஷ சாஸ்தா' என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார். ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அழைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார்.
  
தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். `தர்மம் சர' என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது எல்லா நல்ல செயல்களும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார்- எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று. இந்த தர்மத்தால் தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது.

ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்விகமானவனாக்குகிறது.நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்விகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்ப தால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் என்னென்ன?

ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத  சாஸ்தா, மற்றும் புவன சாஸ்தா.

இந்த எட்டு அவதாரங்களில் இருந்து, பகவான் பலவித  ஸ்வரூபங்களாகக் காட்சி அளிக்கின்றார். கலியுகத்தில் மகிஷியை கொல்வதற்காக எடுத்த மணிகண்ட ஸ்வரூபம் மிகவும் உன்னதமானது.

ஐயப்பன் என்ற திருநாமம் எதற்கு?


 பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில், கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால் மணிகண்டன் என்ற திருப் பெயர் அவருக்கு உண்டு.

ஆனால், ஐயப்பன் என்ற பெயர் வந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு.

சாஸ்தாவுக்கு ஐயன் என்று பிரசித்திப் பெற்ற பெயர் உண்டு. திருமந்திரம் போன்ற பண்டைய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஐயன் என்பதற்கு, `மிக உயர்ந்தவர்' என்று பொருள். இந்த ஐயன் வார்த்தைக்குப் பின்னால் `ஆர்' என்கிற பதத்தைச் சேர்த்து (ஐயன் + ஆர்) ஐயனார் என்று தமிழ்நாட்டிலும், `அப்பன்' என்ற பதத்தைச் சேர்த்து (ஐயன் + அப்பன்) ஐயப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்?

ஐயப்பனின் கால்களில் காணப்படுவது கட்டு அல்ல; யோகப் பட்டம்.

ஐயப்பன் யோக நிலையில் இருப்ப தால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள பட்டம் யோகப் பட்டம் எனப்படும்.  இதே மாதிரியான யோகப் பட்டத்தை, நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும்.

பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன.அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங் களில் அச்சங்கோவில், ஆரியங்காவு ஆலயங்களில் காணலாம். சபரி மலையில், யோக நிலையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக உள்ளார். ஏனென்றால், அது மகா யோகபீடம். பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார்.  அதனால்தான் யோகப்பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலை `ஹரிவராசனம்' எனப் படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை  நேராக நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த யோகநிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப்பட்டம் பயன்படுகிறது.

மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் தரிசிக்கலாம். இந்த திருக் கோலத்தில், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்து கட்டப் பட்டிருக்கும் பட்டம் வீரப் பட்டம் எனப்படும்.

ஐயப்பன் சின்முத்திரை காட்டுவது ஏன்?

ஐயன் ஐயப்பன் வலக்கரத்தால் சின் முத்திரை காட்டியபடி அருள்கிறார். நம்மில் பலரும் ஸ்வாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக் கிறார்கள். அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார். இது, நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவைக் குறிக்கும்; ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது (நாம் - ஜீவாத்மா). கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும். இந்த இரண்டு விரல்களின் இணைப்பு... அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி  ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும். இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.

சபரிமலை கோயில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படுவது இல்லையே ஏன்?


ஒரு கோயிலுக்கு மிக முக்கியமான நியதி தினசரி பூஜை முறைதான். கோயில் நிர்வாகிகள் இதற்கு உறுதி அளித்தால்தான் அங்கு, விக்கிரக பிரதிஷ்டை செய்யப்படும்.ஆனால், சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு. அதற்கு காரணமும் இருக்கிறது.

சபரிமலை, ஒரு மகா யோகபீடம். அங்கே, பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். புராணப்படி, அவரைச் சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக் கிறார்கள்.
 
ஆதிகாலத்தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை  கோயில் திறக்கப்பட்டது. அந்த நாளில், பகவான் யோக நிலையில் இருந்து வெளி வந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதீகம் உண்டு.ஆண்டுகள் கடந்தன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. கோயில் நிர்வாகிகள் பகவானிடம் தேவ பிரச்னம் கேட்டு உத்தரவு பெற்று, 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள், அதன்பின் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, இப்போது மாதம் ஒரு முறை என்று கோயில் திறக்கப்பட்டு வருகிறது.

சுவாமியே சரணம் ஐயப்பா!

சபரிமலையில் ஐயப்ப தரிசனம்... ஒரு வருடத்தில் பக்தர்களுக்கு 120+ நாட்கள்; மீதம் உள்ள நாட்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல்லும் கருத்து.

விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

பழங்காலத்தில், மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் துவங்குவர்.இதன்படி, ஒருவர் சபரி மலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்துச் செல்ல வேண்டும். இதன்படி செய்ய, அவர், கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட் டால்தான், மகர ஜோதி தரிசினத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

விரதம் எத்தனை நாட்கள்?

41 நாட்கள் விரதம் முடித்த பிறகு கட்டு நிறைத்து யாத்திரை தொடங்குவதுதான் சரியான நடைமுறை. சபரிமலையிலும், தென் தமிழகத்திலும், கேரளத்திலும் நடைதிறந்த 41-ம் நாளையே மண்டல பூஜையாகக் கொண்டாடுவது குறிப்பிடத் தக்கது. விரத நாட்களில் சாத்வீகமான உணவு, நல்ல பழக்கங்களைப் பின்பற்று தல், தினமும் பூஜை செய்தல் ஆகியவை அவசியம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

எவருடைய கையால் மாலையை அணிந்துகொள்ள வேண்டும்?

சபரிமலை யாத்திரையில் மிகவும் முக்கிய பங்கு குருசுவாமிக்குத்தான் உண்டு. எவரும் குரு இல்லாமல் யாத்திரை செல்லக் கூடாது. குருசுவாமியின்  அனுமதியுடனும் அவர் சொல்படியுமே, நம் பயணத்தைத் தொடங்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு, குருசுவாமி என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்து, அவரை எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் இருக்கவேண்டும், அவருடைய சொற்களே முடிவானது. `குரு வாக்கியம் பிரமாணம்' பகவானை குருவின் குரு என்று அழைப்பது எல்லோரும் அறிந்ததே.

ஒருவருக்கு மாலை அணிவிப்பது அவரின் தாயாராகவோ அல்லது குரு சுவாமியாகவோ இருக்கலாம். இது மிகவும் வரவேற்கத்தக்கது. முதல் முக்கியத்துவம் தாயாருக்கே தரப்பட்டுள்ளது. தாயார் இல்லாதவர்கள், அவர்களின் குருசுவாமி கையால் மாலைஅணிந்து கொள்ளலாம். பலரும் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று மாலை அணிகிறார்கள். இது தவறல்ல. எனினும் தாயார் அல்லது குருசுவாமி கையால் மாலை அணிவது மிகச் சிறப்பு. நிறையபேர் மாலையை ஒரு கோயிலில் அணிந்துகொண்டு, வேறொரு கோயிலில் களைகிறார்கள். அல்லது தானாகவே வீட்டில் வைத்து களைந்துகொள்கிறார்கள். இன்னும் சிலர், திரும்பும்போது பம்பாவிலேயே மாலையைக் களைந்துவிடுகிறார்கள்.  இவையெல்லாம் சரியானதல்ல.

ஐயப்பமார்கள் கருப்பு வண்ண ஆடையை அணியலாமா?


இதற்கான பதில் ஒரு தனிப்பட்ட கருத்து. நான் சொல்வதை எவ்வளவு பேர் ஒத்துக்கொள்வார்கள் என்று தெரிய வில்லை. ஆனால், சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்லக்கூடிய கருத்து, நாம் எந்த நல்ல காரியத்துக்கும் கருப்பு அணிவதில்லை என்பது. இதைத்தான் சாஸ்திரமும் சொல்கிறது. நமக்கு சாஸ்திரம் சொன்னதை, மாற்றி அமைக்க எந்தவித அதிகாரமும் இல்லை. கருப்பு வேஷ்டி அணியும் வழக்கம் எப்போது எப்படி வந்தது என்று தெரியவில்லை. பக்தர்கள் காட்டு வழியில் செல்வதாலோ, அல்லது வேறு காரணங்களாலோ அவர்கள் கருப்பு அணிய ஆரம்பித்து இருக்கலாம்.

ஆனால், சபரிமலை யாத்திரை மற்றும் பூஜை உட்பட, எந்த வித நல்ல விஷயத் துக்கும், கருப்பு வஸ்திரத்தை தவிர்ப்பது உத்தமம். அதற்கு பதிலாக, நீலம், மஞ்சள், காவி அல்லது வெள்ளை நிற வஸ்திரங் களை அணிந்துகொள்ளலாம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

மாலையணிந்த பிறகு சிராத்த காரியங்கள் செய்யலாமா?

சிராத்தங்களோ, தர்ப்பணங்களோ செய்வது நமது கர்மாவாகும். அதில் எந்தவிதமான இரண்டாவது கருத்துக்கும் இடமே இல்லை. ஒருவருடைய பிறந்த நாள், நட்சத்தித்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றது. காரியங்களோ குறிப்பிட்ட திதியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.  ஒரு மாதத்தில் இரு நட்சத்திரங்கள் இருந்தால், அதில் இரண்டாவது நட்சத்திரத்தை பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றோம். ஆனால், காரியங்கள் செய்யும்போது அதை தள்ளிப்
போடக்கூடாதென்ற காரணத்தினால் முதலாவதாக வருகின்ற திதியே முக்கியமா னதாகக் கருதப்படுகிறது.

பகவான் ராமர், தனது தகப்பனார் தசரத மகாராஜாவுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.   பம்பா நதியும் கங்கைக்கு இணையான புனித நதியாக கருதப்படுவதால், பம்பா நதிக்கரையில், நிறைய பக்தர்கள்  தனது முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்வதை நாம் கண்டுள்ளோம்.  அவர்கள் மாலையணிந்து கொண்டு செய்ய வில்லையா என்ன?

எனவே, மாலையணிந்து கொண்டு சிராத்தங்கள் செய்வது என்பதில் எந்தத் தவறும் இல்லை. சபரி யாத்திரை விரதத்தின்போது இடையில் வரும் சிராத்தத்துக்காக மாலை அணிதலை பக்தர்கள் தள்ளிப்போட்டிருந்தால், இனி அவ்வாறு செய்யத் தேவையேயில்லை. ஏனெனில், முறையாக கர்மாக்கள் செய்ப வரைக் கண்டு பகவானும் மகிழ்ச்சியே அடைவார்.

பம்பையின் கரையில் இருமுடி கட்டும் வழக்கம் சரியானதா?


பகவானின் ஆணைப்படி, கட்டுநிரை என்பது எங்கிருந்து கிளம்புகின்றோமோ, அங்கிருந்தே கட்டப்பட வேண்டும். முற்காலத்தில், பக்தர்கள் தத்தம் வீடுகளிலேயே கட்டுநிரையை கட்டிக் கொண்டு, பிறகு ஒரு பொது இடத்தில் கூடி, அங்கிருந்து யாத்திரைக்கு கிளம்புவர்.

ஆனால், தற்காலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒருவரது  இல்லத்திலிருந்தோ, மண்டபத்திலிருந்தோ அல்லது ஆலயத்திலிருந்தோ கட்டுநிரை கட்டிக்கொண்டு தங்களது யாத்திரையைத் தொடங்குகின்றனர். இது தவறில்லை. ஒரு முறை கட்டுநிரை கட்டிய பிறகு, பக்தர்கள் தங்களது வீட்டுக்குச் செல்லுதல்  கூடாது.

சாஸ்திரங்களின்படி, பெரிய பாதையின் (எரிமேலி வழியாக) செல்லுதல் மட்டுமே சபரிமலை யாத்திரையாக கருதப்படுகிறது. பம்பா வழி, மற்ற வழிகளெல்லாம் மிகவும் பிற்காலத்தில் தோன்றியவையே. தலையில் இருமுடி இல்லாமல் எரிமேலிக்குள் நுழையும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. எனவே, எரிமேலிக்குள் செல்லுமுன் கட்டுநிரையானது கட்டியிருக்க வேண்டும்.  பம்பாவிலோ மற்ற இடங்களிலோ கட்டுநிரை கட்டுவது என்பது ஒருவரது வசதிக்காக கட்டப்படுவதேயன்றி, அது மிகவும் தவறு.

சுவாமியே சரணம் ஐயப்பா!

நெய்த் தேங்காய் எதற்காக?

தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி, பகவானை தரிசனம் செய்து, பின்னர் நம் குருசுவாமியின் கையால் அந்த தேங்காயை உடைத்து நெய் அபிஷேகம் செய்யும்போது, நாம் பரமாத்மாவை நோக்கி ஒரு படி மேல் நோக்கி செல்கிறோம். இதுதான் நெய்த் தேங்காயின் தத்துவம்

பதினெட்டாம்படி மகத்துவமும் தத்துவமும் என்னென்ன?

18 என்ற எண்ணுக்கு பல வகையில் முக்கியத்துவம் உண்டு. 18 புராணங்கள், 18 மலைகள், 18 ஆயுதங்கள், 18 சித்தர்கள், 18 தேவதைகள், 18 குணங்கள் என பதினெட்டு எனும் தொகையில் அமைந்தவற்றின் பட்டியல் உண்டு.

`படி பதினெட்டும் புராணங்கள் ஆக்கிய, ப்ரேம ஸ்வரூபண்டே ஆனந்த மண்டபம்' என்கிறது ஒரு பழைய சரண விளி. சபரி மலையைச் சுற்றியும் உள்ள 18 மலைகளும், பதினெட்டாம்படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாக கூறப் படுகிறது. மணிகண்டனிடம் 18 வகை ஆயுதங்கள் உண்டு, அவர் ஒவ்வொரு படியிலும் ஒவ்வோர் ஆயுதமாக விட்டுவிட்டு ஏறி, தன்னுடைய மகாபீடத்தை அடைந்தார். எனவே, ஒவ்வொரு படியும் ஒவ்வொரு ஆயுதங்களைக் குறிப்பனவாக உள்ளன. இந்த ஆயுதங்களானது எதிரிகளை அழித்து, பக்தர்களைக் காப்பதற்காக உள்ளன. நமது சாஸ்திரங்கள் 18 சித்த புருஷர்களை  மிக உயர் நிலையில் வைத்துள்ளன. ஏனெனில், இந்த சித்த புருஷர்கள், யோகீஸ்வரரான சாஸ்தாவிடம் சரணாகதி பெற்று அவரது அஷ்டா தசபீடத்தில் (18 படிகள்) ஒருவராகும் பெரும் பேற்றைப் பெற்றனர் என்றும் கூறுவர். 18 படிகளில் 18 தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். படி பூஜையின் போது இந்த தேவதைகள் வணங்கப்படுகின்றனர்.
 
என்ன குழப்பமாக உள்ளதா?


இவையனைத்தும் ஒவ்வொருவிதமான தாக்கங்கள்தான். பதினெட்டாம் படியைப் பொறுத்தவரை இவை அனைத்தும் உண்மையே; மேற்கூறிய எவற்றையும் மறுக்க  இயலாது. எனினும், “அது அங்கு இருக்கவேண்டும், அதனால் அங்கு உள்ளது” என்பதே சரியான விடையாகும்.

இவையனைத்தும் பகவான் ஐயப்பனது தெய்வ சித்தப்படி நடைபெறுபவையாகும்.

இவற்றை சற்றே தலைகீழ் வரிசையில் காண்போம்.

மலைத்தொடர்களுக்கும் அதிஷ்டான மூர்த்திகளாக விளங்கும் பதினெட்டு தேவர்கள் (பரிவார தேவதைகள்) பதினெட்டு படிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேல் பகவான் சாஸ்தா வீற்றிருக்கிறார்.   இந்த 18 படிகள் கட்டப்பட்டவையல்ல; பிரதிஷ்டை செய்யப்பட்டவையே. இதுவே சபரிமலையின் தனித்துவமும் மற்றும் முக்கியமான சிறப்பம்சமும் ஆகும்.

பகவான் தனது ஐயப்ப அவதாரத்தில், அரசுரிமையைத் துறந்து, மேலும்  ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஆயுதங்களையும் துறந்து பதினெட்டுபடிகளேறி வந்து சாஸ்தாவுடன் ஐக்கியமானார்.

மேலும் பகவானுக்கு சேவை செய்ய விரும்பிய 18 சித்த புருஷர்களும் தங்களது தெய்வாம்சத்தை பதினெட்டு படிகளிலும் பிரதிஷ்டை செய்து பகவானுக்கு சேவைசெய்தும், அவரை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடியும் உள்ளனர்.

சற்றே சிந்தித்து பார்த்தால், பகவான் சாஸ்தா எல்லா இடங்களிலும் ஒருவரே. அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை... என எல்லா தலங்களிலும் சுவாமி ஒருவரேதான். ஆனால், 18 படிகள்  சபரி மலையில் மட்டுமே உள்ள தனித்துவம்.ஐயப்பனை விரதம் இல்லாமல்கூட தரிசிக்க முடியும். ஆனால், பதினெட்டாம் படியை விரதமின்றி நெருங்கக்கூட முடியாது. இதுவே பதினெட்டாம் படியின் சிறப்பம்சமாகும்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

ஏனெனில், ஒவ்வொரு படியிலும் ஏறும்போதும், அந்தப் படிக்கு உரிய தெய்வங்களின்  காவல் எல்லைக்குள் செல்கின்றோம். நமது விரத பலம் நன்றாக இருந்தால் மட்டுமே, அதன் பலத்தால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்று அடுத்த படிக்கு செல்ல முடியும்.

மேற்கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மையே. ஆனால், இத்தோடு முடியவில்லை. எந்தவொரு தெய்வாம்சத்துக்கும் நேரிடையாகவும், மறைபொருளாகவும் நிறைய அர்த்தங்கள் உண்டு.  18 படிகளுக்கும் தெய்வார்த்தம் என்பது உண்டு.

எவரொருவர் 18 குணங்களையும் அடக்கி ஆள்கிறாரோ, அவர் பகவானுக்கு நிகர். அதுவே “தத்வமஸி”. நாம் ஒவ்வொரு வருடமும் நூறு சதவீதம் நியதிப்படி விரதம் இருந்தோமேயானால், நாம் நமது ஆன்மீகப் பயணத்தில் ஒரு படி அல்லது ஒரு நிலை உயர்கின்றோம். அதாவது நமது அந்தராத்மா சுத்தியடைகிறது. இதுவே, சபரிமலை யாத்திரையின் உண்மையான நோக்கமாகும்.

3-ம் முறை சபரி யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்பமார்கள் மணி ஒன்று எடுத்துச் செல்லக் காரணம் என்ன?


முன்பே சொன்னதுபோல இதுவும் பல வகை காரணங்களுக்காக செய்யப்படும் தேசாச்சாரமே. சில கோயில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு. இந்த நம்பிக்கை சபரிமலையைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானது.

மூன்றாவது யாத்திரை மிக புனித மாகக் கருதப்படுவதற்குக் காரணம், அப்போதுதான் ஒரு மனிதன் முழு நிலை அடைகிறான். தெய்வத்தின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் தன்னுடய மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்ய முடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையைக் காண்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம்.

அமாவாசை முடிந்து சந்திரன் மெதுவாக வளர்கிறது. இரண்டாம் நாள் சந்திரன் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் மூன்றாம் நாள் நமது கண்ணுக்கு புலப்படும். இந்த மூன்றாம் பிறையைக் காண்பதில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது. சூரியன் மறைந்த பின், மேற்கு வானத்தில், மேகமூட்டம் இல்லாமல் இருந்தால், ஒரு குறுகிய நேரம் மட்டுமே இதைக் காண முடியும். நமது மனதை ஆளும் கடவுள் சந்திரன். வளர்பிறை, தேய்பிறை போல, நமது மனமும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டிருக்கும். மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, பகவானை பொன்னம்பல மேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும்.

ஆக, மூன்றாவது யாத்திரை முக்கியமானது. பகவானின் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே, ஒருவரால் சபரி மலைக்கு மூன்றாவது முறை செல்ல முடியும். அதேபோல் மூன்றாம் முறையாக சபரிக்குச் செல்பவர்களை மணிகண்டன், கொச்சு ஸ்வாமி என்று அழைப்பார்கள்.இது அந்தந்த குழுவினரைச் சார்ந்ததே தவிர, கட்டாயம் கிடையாது.

பதினெட்டாம் முறை சபரி யாத்திரையின்போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது அவசியமா?

முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போதும்
ஐயப்பமார்களுக்கு பலவிதமான மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஐயப்பன்மார்களுக்கு அவர்களுக்குள் இருக்கும் தீயகுணங்கள் அகன்று நல்ல குணங்கள்   துளிர்க்கும்.  ஐயப்பமார்கள் அவர்களிடமிருந்த அஞ்ஞானங்களைத் துறந்து மெய்ஞ்ஞானத்தை அடைகிறார்கள்.  இதன் மூலம் அவர்களது பழைய பிறவியைத் துறந்து புனர் ஜன்மம் பெறுகின்றனர்.

தென்னையை நாம் மனித இனத்துக்கு இணையாகவே கருதுகின்றோம்.  அதனால் அதை ‘தென்னம்பிள்ளை’ என்றே அழைக்கிறோம்.  மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம்.

ஐயப்பன் பிரம்மச்சாரியா? சபரியில் மஞ்சமாதா குடியிருப்பது ஏன்?


பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் போன்ற எதுவும் பகவத் ஸ்வரூபத்துக்குக் கிடையாது. எவனொருவன் பிரம்மத்தோடு ஐக்கியம் ஆகின்றானோ அவனே பிரம்மச்சாரி. மானுடப் பிறவிகளுக்கே உரித்தான வர்ணங்கள், ஆஸ்ரமங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன். பகவானது வடிவம் என்பது தத்வ ஸ்வரூபம். அதை அப்படியேதான் புரிந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ண அஷ்டோத்தரம் 16,000 கோபிகா ஸ்த்ரீகளை மணந்த கிருஷ்ண பகவானை `அநாதி பிரம்மச்சாரி' என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் கணபதி, வட இந்தியாவில் ஸித்தி, புத்தி என இரு துணைவியரோடு வணங்கப் படுகிறார். கார்த்திகேயனான முருகன் வடநாட்டில் பிரம்மச்சாரி. ஆனால், இங்கே அவருக்கு வள்ளி மற்றும் தெய்வானை என இரு துணைவியர். அதுபோலவே சாஸ்தாவுக்கும் பூர்ணா, புஷ்கலா என்று இரண்டு சக்திகள் கூறப்படுகிறது.

பகவானது சக்தி ஸ்வரூபமே அவரது துணைவியர்களாக உருவகப்படுத்தப் படுகிறது. இறைவனது இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி ஸ்வரூபங்களே நமக்கு புலனாகும் வண்ணம் பகவானது இரு புறமும் துணைவியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

சுவாமியே சரணம் ஐயப்பா!

சக்தி ஸ்வரூபங்கள்  வெளிப்படையாக இல்லாத இடங்களில், இவை இறைவனுக்கு உள்ளேயே உறைந்திருப் பதாகக் கருதப்படுகின்றன.
 
மஞ்சள் மாதா கதை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புவார்கள். `கன்னி' ஐயப்பன் எந்த வருடம் வரவில்லையோ அப்போது மஞ்சமாதாவை திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் வாக்கு தந்ததாகக் கூறுவர். இதுகுறித்த சான்றுகள் எந்த புராணத்திலும் இல்லை.

மகிஷியை லீலாவதி (துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் வெளிப்பாடு) அம்சம் என்பார்கள். அது உண்மை எனில், அவள் ஐயப்பனது தாயார் ஸ்தானத்தை அடைகிறாள். அவளுக்கு சாப விமோசனம் கொடுத்து, புது வாழ்வு கொடுத்தவர் ஐயப்பன். எனவே, அவளுக்கு தகப்பன் ஸ்தானம் ஆகிறார். ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் மணிகண்டனால் அவளை திருமணம் செய்து கொள்ளமுடியாது.

எனவே, மஞ்சாம்பிகா சாஸ்தாவின் பரிவார தெய்வங்களுள் ஒருத்தியாக மணி மண்டபத்தின் அருகே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளாள். சக்திகளின் ஸ்வரூபமாக அங்கே இருந்து, வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது பெரியோர்களின் கருத்து.

மஞ்சமாதா கோயிலில் தேங்காய் உருட்டுவது ஏன்?


இதற்குப் பின்னால் எவ்விதமான சாஸ்திரங்களோ, சம்பிரதாயங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இது தேசாச்சாரமாக – நாளடைவில் யாரோ ஆரம்பித்து, அந்த இடத்தில் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை. அல்லது மற்றவர்களைப் பார்த்து காரணம் தெரியாமலே கடைபிடிக்கப்படும் வழக்கமாகவே உள்ளது.

சமீப காலமாக பன்னீரில் கையை நனைத்து, அதை விபூதியில் தொட்டு கொச்சு கடுத்தன் சந்நிதான சுவற்றில் பதிக்கும் வழக்கம் உண்டாகி இருக்கிறது.இனி, இது புது ஸம்பிரதாயமாக ஆகாமல் இருக்க வேண்டும்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

கற்பூர ஆழியின் தாத்பரியம் என்ன?

பஞ்சபூதங்களில்  தனித் தன்மை  பெற்றது அக்னி.  அக்னிக்கு வடிவம் உண்டு; அதேநேரத்தில் வடிவம் இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாகவே தொன்று தொட்டநாள் முதல் இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில்-ஜோதி ஸ்வரூபனாகவே காண்கின்றனர். எனவே அக்னியைக் கொண்டு ஐயனை வழிபடுவது ஒரு நடைமுறையாகக் கருதப்படுகிறது.  இதன் ஒரு பாகமே கற்பூர ஆழி. ஐயனின் அருள் முகமும் அக்னியே. ஆதலால், அக்னியை வழிபடுவது மற்றும் அக்னியைச் சுற்றி வருவது ஆகியவை ஐயனை வழிபடுவதற்குச் சமம்.

கற்பூர ஆழி, மரக்கட்டைகளையும் கற்பூரத்தையும் கொண்டு உருவாக்கப் படுகிறது.  ஆழி பூஜை தொடங்குவதற்கு முன் சிறப்பு பூஜைகளும் பலிகளும் நடத்தப்படும்.

முற்காலத்தில் ஆழி பூஜை பழம்பெரும் குருசாமி பார்வதிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வர ஐயர் மூலம் உடும்பாறை கோட்டை, கரிமலை போன்ற புனித இடங்களில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில் இந்த பூஜை பூதப்பாண்டி ஸ்ரீஇராமநாத வாத்தியார் மூலமாக தொடரப்பட்டது. தற்போது நடைபெறும் ஆழிபூஜையும் இவற்றின் தொடர்ச்சியே.

எரிமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன?

பேட்டைத்துள்ளல் என்பது, நான், எனது என்ற எண்ணங்களை அறவே அகற்றுவதற்காக மட்டுமே.

ஒவ்வொரு மனிதனும், ஜாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து இவற்றை அகற்றி, வண்ணம் பூசி நடனமாடி, நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வைபவமே பேட்டைத்துள்ளல்.

இங்கே வேட்டைப்பிரியரான சாஸ்தா, வேடவன் உருவத்தில் கிராத சாஸ்தாவாக அருள்பாலிக்கின்றார். இந்த சாஸ்தா, காட்டில் உள்ள மிருகங்களை மட்டும் வேட்டையாடவில்லை; நம்முள் உள்ள மிருக குணாதிசயங்களையும் வேட்டையாடி, நம்முள் உள்ள `நான்' என்ற உணர்வை அழித்து, நமக்குள் விழிப்பு உணர்வைப் புகுத்தி, நாம் எல்லோரும் சமம் என்று உணரவைத்து நம்மை நல்ல மனிதர்களாக மாற்றி அருள்கிறார்.

சுவாமியே சரணம் ஐயப்பா!ஐயனின் திருவருளைப் பரிபூரண மாகப் பெற்றுத் தரும் இந்த 108 சரண கோஷங்களை அனுதினமும் சொல்லி, மனதார வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

(கீழ்க்காணும் ஒவ்வொரு நாமாவளிக்குப் பின்னும் `சரணம் ஐயப்பா' என்று சேர்த்துச் சொல்லவும்)

ஹரிஹர சுதனே - சரணம் ஐயப்பா
கன்னிமூல மஹாகணபதி பகவானே
சக்தி வடிவேலன் சோதரனே
மாளிகைபுரத்து மஞ்சமாதேவியே லோகமாதாவே
வாவர் ஸ்வாமியே
கருப்பண்ண ஸ்வாமியே
பெரிய கடுத்த ஸ்வாமியே
சிறிய கடுத்த ஸ்வாமியே
வனதேவத மாரே
துர்கா பகவதி மாரே
அச்சன் கோவில் அரசே

அனாத ரட்சகனே
அன்னதானப் பிரபுவே
அச்சம் தவிர்ப்பவனே
அம்பலத்தரசனே
அபயதாயகனே
அகந்தை அழிப்பவனே
அஷ்டஸித்தி தாயகனே
அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே
அழுதையில் வாஸனே
ஆரியங்காவு ஐயாவே
 
ஆபத்பாந்தவனே
ஆனந்த ஜோதியே
ஆத்மஸ்வரூபியே
ஆனைமுகன் தம்பியே
இருமுடி ப்ரியனே
இன்னலைத் தீர்ப்பவனே
இகபரசுக தாயகனே
இதயக் கமல வாஸனே
ஈடில்லா இன்பமளிப்பவனே
உமையவள் பாலகனே
 
ஊமைக்கு அருள் புரிந்தவனே
ஊழ்வினை அகற்றுவோனே
ஊக்கம் அளிப்பவனே
எங்கும் நிறைந்தோனே
எண்ணில்லா ரூபனே
என் குலதெய்வமே
என் குருநாதனே
எருமேலி வாழும் கிராத சாஸ்தாவே
எங்கும் நிறைந்த நாதப்ரஹ்மமே
எல்லோருக்கும் அருள்புரிபவனே
 
ஏற்றுமானூரப்பன் மகனே
ஏகாந்த வாஸியே
ஏழைக்கருள் புரியும் ஈசனே
ஐந்துமலை வாஸனே
ஐயங்கள் தீர்ப்பவனே
ஒப்பில்லா மாணிக்கமே
ஓங்கார பரப்ரஹ்மமே
கலியுக வரதனே
கண்கண்ட தெய்வமே
கம்பங்குடிக்குடைய நாதனே

சுவாமியே சரணம் ஐயப்பா!

கருணா சமுத்திரமே
கற்பூர ஜோதியே
சபரிகிரி வாஸனே
சத்ரு ஸம்ஹார மூர்த்தியே
சரணாகத ரட்சகனே
சரணகோஷ ப்ரியனே
சபரிக்கு அருள் புரிந்தவனே
சம்பு குமாரனே
ஸத்ய சொரூபனே
சங்கடம் தீர்ப்பவனே

சஞ்சலம் அழிப்பவனே
சண்முகன் சோதரனே
தன்வந்த்ரி மூர்த்தியே
நம்பினோரைக் காக்கும் தெய்வமே
நர்த்தன ப்ரியனே
பந்தள ராஜகுமாரனே
பம்பை பாலகனே
பரசுராம பூஜிதனே
பக்தஜன ரட்சகனே
பக்த வத்ஸலனே

பரமசிவன் புத்திரனே
பம்பா வாஸனே
பரம தயாளனே
மணிகண்டப் பொருளே
மகர ஜோதியே
வைக்கத்தப்பன் மகனே
கானக வாஸனே
குளத்துப்புழை பாலகனே
குருவாயூரப்பன் மகனே
கைவல்ய பத தாயகனே
 
ஜாதிமத பேதமில்லாதவனே
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே
சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே
துஷ்டர் பயம் நீக்குவோனே
தேவாதி தேவனே
தேவர்கள் துயரம் தீர்த்தவனே
தேவேந்திர பூஜிதனே
நாராயணன் மைந்தனே
நெய்யபிஷேக ப்ரியனே
ப்ரணவ ஸ்வரூபனே

பாப ஸம்ஹார மூர்த்தியே
பாயஸான்ன ப்ரியனே
வன்புலி வாகனனே
வரப்ரதாயகனே
பாகவதோத்தமனே
பொன்னம்பல வாஸனே
மோகினீ சுதனே
மோகன ரூபனே
வில்லன் வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே

ஸத்குரு நாதனே
ஸர்வரோக நிவாரகனே
ஸச்சிதானந்த ஸ்வரூபனே
ஸர்வாபீஷ்ட தாயகனே
சாஸ்வதபதம் அளிப்பவனே
பதினெட்டாம்படிக்குடைய
நாதனே- சரணம் ஐயப்பா