Published:Updated:

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

பிரிட்டிஷ் அதிகாரியை வியக்கவைத்த மகான்!பிரேமா நாராயணன்

லையே சிவமாகி நின்று அருள்பாலிக்கும் திருவண்ணாமலை, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி போன்ற எண்ணற்ற மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த தவபூமி. ஒருமுறை மனதார நினைத்தாலே முக்தி தரும் இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் மடங் களுக்கும் ஆசிரமங்களுக்கும் குறைவே இல்லை. இன்றைக்கும் இந்தத் திருத்தலத்தில் சித்தர்களும் முனிவர்களும் அரூபமாக உறைந்து அருள்புரிகிறார்கள் என்பது, பக்தர்கள் பலர் தங்களது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. அத்தகைய மகான்களில், சுவாமி ஈசான்ய ஞானதேசிகரும் ஒருவர்.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

ஜோதி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், கிரிவலம் வரும் பாதையில், ஈசான்ய லிங்கத்துக்கு எதிரில் அமைந்திருக்கிறது, ஈசான்ய ஞானதேசிக சுவாமிகள் மடம். இங்கே ஜீவசமாதி கொண்டு அன்பர்களுக்கு அருள்பாலித்து வரும் ஈசான்ய ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டான திருக்கோயில், 200 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது. இந்தத் திருக்கோயிலுக்கு, வரும் டிசம்பர் 9-ம் நாள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இங்கே இந்த மடம் உருவான வரலாறும், ஈசான்ய ஞானதேசிக சுவாமிகளின் வாழ்க்கை வரலாறும் சிலிர்க்கவைப்பவை. ஈசான்ய ஞான தேசிக சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயர் கந்தப்ப தேசிகர். வேலூர், வேட்டவலத்துக்கு அருகில் உள்ள ராயவேலூர் என்னும் கிராமத்தில் 1750-ம் ஆண்டு, திருநீலகண்டர் என்பவருக்கு மகனாக, அண்ணாமலையார் அருளால் அவதரித்தார்.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

சிறுவயதிலேயே, பெரும்பொழுதுகளை நிஷ்டையில் கழித்த கந்தப்ப தேசிகர், ஆசிரியர் கேட்கும் முன்னரே அத்தனை பாடங்களையும் சொல்லும் அளவுக்கு ஞானமும் சக்தியும் பெற்றி ருந்தார். பருவ வயதில் அவருடைய பெற்றோர் அவருக்காகப் பெண் தேட முனைந்தபோது, இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாததால், வீட்டை விட்டு வெளியேறி சிதம்பரத்துக்குச் சென்றார். அங்கே மௌனகுரு சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்து, கௌபீனம் தரித்து ஞானதீட்சை பெற்றார்.

அப்போது, சிக்கல் நகரத்தில் நெசவுத்தொழில் செய்து கொண்டு, வீடு பேறு அடைய வேண்டும் என்று பெருவேட்கை கொண்ட அன்பர்களுக்கு, தமிழ் மொழியிலே வேதாந்தம் போதித்து வந்தவர் உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகள். அவரிடம் சென்று, முறையாக வேதாந்தப் பாடம் கேட்டார் கந்தப்ப தேசிகர். பின்னர் அங்கிருந்து வந்து வேட்டவலம் அருகே ஓரிடத்தில்  ஊண், உறக்கம் இன்றி கடும் தவம் புரிந்துவந்தார். அவரது தவ நிலையைக் கண்ட முத்துசாமி உடையார் என்பவர், தேசிகரின் பசியை ஆற்றும் விதம், தினமும் பால் கறந்து எடுத்து வந்து தேசிகரின் முன் வைத்து வணங்கிச்செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நிஷ்டை கலையும் நேரத்தில் அந்தப் பாலை அருந்துவார் கந்தப்ப தேசிகர். அத்துடன், தமக்குப் பால் சமர்ப்பிக்கும் அன்பருக்குத் திருவருள் புரிய திருவுளம் கொண்டாரோ என்னவோ, ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது! வீட்டில் ஏதோ வேலையாக நிலத்தைத் தோண்டிய முத்துசாமிக்கு பெரும் புதையல் கிடைத்தது.

இதையறிந்த ஊரார், தேசிகருக்குப் பால் படைத்து வணங்கியதால்தான் புதையல் கிடைத் தது என்ற ஆர்வத்தில், தாங்களும் பாலமுது படைக்கப் போட்டி போட்டனர். கூட்டம் அதிகரித்தது. ஆகவே, அங்கிருந்து நகர்ந்து திருவண்ணாமலையை வந்தடைந்தார் தேசிகர். அண்ணா மலையில் முதலில் கோரக்கநாதர் குளக்கரையில் அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார்.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

அப்போது அவரை வணங்கி, தொண்டுகள் செய்த அண்ணா மலையைச் சேர்ந்த அருணாசலம் செட்டியாருக்கு, நீண்ட நாட் களாகக் குழந்தை இல்லாமலிருந்தது. கந்தப்ப தேசிகர் அருளால் அவருக்கு மகன் பிறந்தான். அருணாசலம் செட்டியாரின் பரம்பரையில் வந்த அவரின் குடும்பத்தார், இன்றைக்கும்  தேசிகர் அளித்த விபூதிப் பையை வீட்டில் வைத்து வணங்கி வருகின்றனர்.

பின்னாளில், அண்ணாமலையாரின் அருள் வாக்குப்படி, ஈசான்ய மூலைக்கு வந்து சேர்ந்தார் தேசிகர். அங்கிருந்த குளக் கரையில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் தேசிகரின் தவம் தொடர்ந்தது. அந்தத் தருணத்தில் அவரை எவரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, இரண்டு புலிகள் வந்து  காவலுக்கு இருக்குமாம். அவற்றை ‘அண்ணாமலை அரசே, உண்ணாமுலை அம்மையே’ என்று அழைப்பாராம் தேசிகர். சுவாமிகளின் மீது தீராத அன்பும் உண்மை பக்தியும் கொண்ட அன்பர்கள் வரும்போது, புலிகள் அங்கிருந்து அகன்றுவிடுமாம்!

ஈசான்ய மூலையில் இருந்து மக்களுக்கு அருள் செய்ததால், கந்தப்ப தேசிகர் நாளாவட்டத்தில் ஈசான்ய ஞான தேசிகர் என்று அழைக்கப்பட்டார். இவரை வந்து வணங்கிப் பேரருள் பெற்றவர்கள் பலர். புதுப்பாளையம் நாயக்கரின் சூலை நோய், தேசிகரின் அருளால் குணமானதாகக் குறிப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் ஜில்லா கலெக்டராக இருந்த ஐடன் துரையின் காசநோயும் தேசிகரை தரிசித்த பிறகுதான் குணமானதாக வரலாறு.

காரைக்குடிக்கு அருகே உள்ள கோவிலூர் மடத்தின் மடாதிபதிகள்தான் இப்போது ஈசான்ய மடத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர். இதைப் பற்றி, கோவிலூர் மடத்தின் தற்போதைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கூறியது...

‘‘சிக்கல் உகந்தலிங்க சுவாமியிடம், கந்தப்ப தேசிகர் படித்தபோது, அவருடன் சக மாணவராக வேதாந்தப் பாடம் கேட்டவர், காரைக்குடி கோவிலூர் கிராமத்திலே ஜீவசமாதி கொண்டுள்ள எங்கள் ஆதி குரு முதல்வர் முத்துராமலிங்க ஞான தேசிகர்.

கந்தப்ப தேசிகர் வேதாந்தத்தினை முழுமையாகப் பயின்று ஞானம் பெற்றபின்பே, திருவண்ணாமலையில் ஈசான்ய மூலையிலே அமர்ந்து நெடுந்தவம் புரிந்து வந்தார். இவர் திருவண்ணாமலையிலே பல பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும் அவர்களின் இன்னல்களைக் களைந்தும், நோய்களைப் போக்கியும் அருள் பாலித்து வந்தார். உதாரணமாக ராமலிங்க சுவாமிகள், புதுச்சேரி அருணாசல சுவாமிகள், பாக்கத்து வாசி முத்துசாமி உடையார், திருவண்ணாமலையைச் சார்ந்த அருணாசலம் செட்டியார் ஆகியோர் தேசிகரின் அருளைப் பூரணமாகப் பெற்றவர்கள்.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

விருத்தாசலம் ஜில்லா கலெக்டர் ஐடன் துரை, ஈசான்ய ஞானதேசிகரின் அருமைகளை அறிந்து தரிசிக்க வந்தார். அப்பொழுது “என்னிடம் வேண்டிய அளவு நிலம் இருக்கிறது. தங்களுக்கு எவ்வளவு வேண்டினும் தான சாசனம் செய்து வைக்கிறேன்” என்று தேசிகரிடம் கூற... அதற்கு ஈசான்யர் அண்ணாமலையாரைக் காட்டி, ‘‘அவர்தான் இரண்டு குழந்தைகளோடு குடும்பஸ்தனாக இருக்கிறார். நான் குடும்பஸ்தன் இல்லை. வேண்டுமானால் அண்ணாமலையாருக்கு தானம் செய்யுங்கள்’’ என்று பதிலளித்திருக்கிறார். அது முதல் ஐடன் துரை தேசிகரை தியானித்த பிறகே எல்லா காரியங்களையும் செய்தாராம்.

திருவண்ணாமலை தேர் உற்ஸவத்தில், தேசிகரை அழைத்து தனக்கு முன்பாக வடம் பிடிக்க வேண்டி, “தாத்தாவே பிடி முன்னிரு” என்று கூறியவர் ஐடன் துரை. அதைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் ஈசான்யரின் மகிமை அறிந்து பரவசத்துடன் வணங்கினர்.

ஒரு முறை, திருவண்ணாமலை ரத உற்ஸவத்திற்கு ஐடன் துரை கிளம்பி வந்தபோது, பெண்ணை நதி கரைபுரண்டு ஓடியது. தான் பயணித்து வந்த குதிரையைப் பார்த்து “ஏ குதிரையே... தாத்தாவை நினைத்துக்கொண்டு இந்த ஆற்றைத் தாண்டுவாய்” என்று சொன்னார். தேசிகரின் ஞானதிருஷ்டியால், குதிரை எவ்வித அபாயமும் இன்றி ஆற்றைக் கடந்து சென்றது. திருவண்ணாமலை ரத உற்ஸவமும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. இதுபோல, தேசிகர் நிகழ்த்தியிருக்கும் அற்புதங்கள் பலப்பல.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

ஈசான்ய தேசிகர் கோரக்கநாதர் குளக்கரையிலே, ஸ்ரீஅண்ணாமலையார் தரிசனம் கொடுத்த காலத்தில் தாம் இயற்றிய அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை, வெண்பா, அந்தாதி, கண்ணி முதலிய பிரபந்தங்களையும் உபதேசித்தார். உகந்தலிங்க சுவாமிகளுடைய விதேக முக்தி காலத்தில் அங்கே சென்று அவருடைய சமாதி செய்ய உதவினார். திரும்பி வந்ததும் இது போன்ற பல அற்புதங்களை நிகழ்த்தி, ஆழ்ந்த தவத்திலே இருந்த ஈசான்ய ஞான தேசிகர், விதேக முக்தி மார்கழி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்கள். வருடம்தோறும் இந்த நாளில், அவருடைய குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது. 

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

அச்சமயத்தில் வேட்டவலம் ஜமீன்தாருடைய பாட்டி, சமாதி ஆலயத்தையும், மடத்தையும் சுதையாகக் கட்டினார். தேசிகர் வாழ்கின்ற காலத்திலே திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பல மக்கள் நிலங்களைத் தானமாக எழுதித் தந்தார்கள். பரிபூரணம் அடைந்த பின்னர், அவர் தவம் செய்த இடத்தில் இப்பொழுதுள்ள ஜீவசமாதியை கோவிலூர் ஆதீனம் ஆதி குரு முதல்வர் முத்துராமலிங்க ஞான தேசிகர் (கோவிலூர் ஆண்டவர்) அவர்கள் கட்டி நித்திய வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். இந்த ஈசான்ய அதிஷ்டான திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஈசான்ய மடத்தை, அடுத்து வந்த சாத்தப்ப சுவாமிகள் போன்ற மடாதிபதிகள் விரிவுபடுத்தி பல வசதிகளை ஏற்படுத்தி வைத்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த ஈசான்ய மடம் கோவிலூர் மடாலயத்தின் கிளை மடமாக இயங்கி வருகிறது. இதன் மடாதிபதிகள் கோவிலூர் ஆதீனகர்த்தர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் ஈசான்ய மடத்தின் நிர்வாகிகளை நியமித்து நடத்தி வருகிறார்கள்.

இந்தத் திருக்கோயில் கட்டுமானம் முடிந்து முதல் கும்பாபிஷேகம், அடுத்தடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரம் எதுவும் தெரியவில்லை. 1998-ல் 12-ம் ஆதீனகர்த்தர் தவத்திரு. நாச்சியப்ப சுவாமிகள் திருக்கோயிலுக்கு வண்ணம் புதுப்பித்து புதிதாக ஒரு தகரக்கொட்டகை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

தற்போது அந்தத் தகரக்கொட்டகையை அகற்றிவிட்டு கான்கிரீட் மண்டபமாக அமைத்து, ஈசான்ய மடாலயம் முழுமையாகப் பழுது பார்க்கப்பட்டு, புதிய தளங்கள் அமைத்துப் புது வண்ணம் பூசிச் சீரமைக்கப்பட்டுள்ளது. ஈசான்ய ஞான தேசிகர் சந்நிதி மற்றும் அவருக்குப் பின் வந்த மடாதிபதிகளின் சந்நிதிகள் அனைத்தும் சீரமைத்து வண்ணம் பூசி, துர்முகி ஆண்டு கார்த்திகை மாதம் 24-ம் தேதி ரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் (9.12.16) வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தகோடிகள் அனைவரும் வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு, தேசிகரின் அருளைப் பெறுமாறு அழைக்கிறோம்’’ என்று அழைப்புடன் முடித்தார் கோவிலூர் மடாதிபதி. உள்ளம் உருகி வேண்டுவோருக்கு, எண்ணம் போல வரம் தரும் ஈசான்ய ஞான தேசிகர், குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு மக்கட்செல்வம் அருள்வது இன்றும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வு!

அண்ணாமலைக்குச் சென்று அவர் அருள் பெறுவோம்!

படங்கள்: கா.முரளி

ரமணர் வந்து பாடம் நடத்திய ஒரே மடம்!

‘எனக்கு வேண்டாம்... அண்ணாமலையாருக்குக் கொடு!’

திருவண்ணாமலையில் இருக்கும் ரமண ஆசிரமத்துக்கும் முந்தைய பழைமை பெற்றது ஈசான்ய மடம். பகவான் ரமண மகரிஷியே இந்த மடத்துக்கு வந்து சென்றதற்கு ஆதாரமாக நூல் குறிப்புகள் உள்ளன. ஈசான்ய மடத்துக்கு வருகை தந்தது மட்டுமல்லாமல், பகவத் கீதையின் ஒரு பாடலுக்கு விளக்கம் அளித்து பாடமும் நடத்தியுள்ள அற்புதம் இங்கே நிகழ்ந்துள்ளது.

1920-ம் ஆண்டு... கந்தாஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு, கிரிவலம் வந்த பகவான் ரமணர் உடலை நீத்து, பிறர் பார்வையிலிருந்து மறையவிருந்தார். அப்போது, ரமணரின் மீது மிகுந்த பதியும் அன்பும் கொண்டிருந்தவரான, ஈசான்ய மடத்தின் மடாதிபதி சாத்தப்ப சுவாமிகள், ரமணரைக் கட்டி அணைத்து, ஈசான்ய மடத்துக்கு அழைத்து வந்து விருந்து வைத்தார். அந்த நேரத்தில் அங்கே வேதாந்த வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று அங்கே நிகழ்ந்தது.

‘கீதாசாரத் தாலாட்டு’ என்ற அத்வைத கோட்பாட்டுப் பாடலுக்கு, மிக அழகாக விளக்கம் அளித்தார் மகரிஷி.

ஞான குருவாக விளங்கிடும் பகவான் ரமணர், வேதாந்த வகுப்பொன்றில் குருவாக இருந்து, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தது அந்த ஒரு முறை மட்டும்தான். அந்த வகையில் ஈசான்ய மடம், மிக அதிக சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றுவிட்டது.

அதுமட்டுமல்ல; கந்தாஸ்ரமத்தின் கட்டுமானப் பணிகளுக்கு, ஈசான்ய மடத்திலிருந்து பொருளுதவி யும் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீபாவளி நேரத்திலும், எண்ணெய், சீயக்காய், லங்கோடு ஆகியவை ஈசான்ய மடத்திலிருந்து ரமணாஸ்ரமத் துக்கு அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.