Published:Updated:

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை
பிரீமியம் ஸ்டோரி
திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

ஸ்ரீரங்கம் முரளி பட்டர்

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

ஸ்ரீரங்கம் முரளி பட்டர்

Published:Updated:
திருவரங்கத்தில் திருக்கார்த்திகை
பிரீமியம் ஸ்டோரி
திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

கார்த்திகை மாதம் என்றாலே சைவ, வைணவ ஆலயங்களில் நடைபெறும் தீப உற்ஸவங்கள் நம் நினைவுக்கு வரும். பஞ்சபூதங்களில் ஒன்றாகிய ‘அக்னி’க்கு ஏற்றம் தரும் மாதம் இந்த மாதம்.

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

ஸ்ரீமந் நாராயணனை, வேதம் ‘நாராயண பரோஜ்யோதிர்....’ என்று பிரமாண்டமான ஜோதி சொரூபமாகவே வர்ணிக்கின்றது.  108 வைணவத் தலங்களில் முதன்மையான திருவரங்கத்தில் இந்தக் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

வைணவக் கோயில்களில் கார்த்திகை தீப உற்ஸவத்துக்குப் பௌர்ணமி திதிதான் முக்கியமாகும்.   திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை மற்றும் வஸந்த உற்ஸவம் ஆகிய மூன்று உற்ஸவங்களும் பௌர்ணமி திதியை உத்தேசித்தே நடைபெறுகின்றன.  அவ்வகையில் வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி புதன்கிழமை (கார்த்திகை 29-ம் தேதி) திருவரங்கம் கோயிலில் திருக்கார்த்திகை கொண்டாடப்பட உள்ளது.

திருக்கார்த்திகையன்று காலை காப்புக் கட்டுதல் முடிந்தபின் நம்பெருமாள் சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளுவார். மாலையில் நம்பெருமாள் கருவறைக்கு எழுந்தருளுவார். அந்த நேரத்தில் பொதுஜன சேவை நிறுத்தப்படும்.  மாலை வழக்கம் போல் ‘க்ஷீரான்னம்’ எனப்படும் பசும்பாலில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பால்சாதம் அமுது கண்டருளுவார்.

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

திருவரங்கத்தில் ‘உத்தமநம்பிகள்’ எனப்படும், பெரிய பெருமாளுக்கு பல நூற்றாண்டுகளாக பல அரிய கைங்கர்யங் களை செய்து வரும் வம்சத்தினர் இன்றும் உள்ளனர். இவர்கள் பெரியபெருமாளின் மாமனாரான ‘பெரியாழ்வார்’ வம்சத்தினர் ஆவர்.  புகுந்த வீட்டில் மருமகள் ஏற்றிவைக்க வேண்டிய விளக்கினை அவளுடைய உடன்பிறந்தோர் எடுத்து வருவது வழக்கம் அல்லவா! அந்த வகையில் அரங்கனை ஆட்கொண்ட ஆண்டாளின் சம்பந்தத்தினால், அரங்கனது மைத்துனராகிய உத்தம நம்பி வம்சத்தினைச் சார்ந்த குடும்பத்தினர், மேளதாளத்துடன் சகலவிதமான மரியாதைகளுடன் பெரிய பெருமாள் சந்நிதி ஆர்யபடாள் வாசலை அடைவர்.

அங்கிருந்து பெரிய பெருமாள் திருமடைப்பள்ளியை அடைவார்கள். அங்கே நன்றாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில், ஒரு வெள்ளி விளக்கு உட்பட ஒன்பது விளக்குகளை ஏற்றுவர். பின்பு இந்த விளக்குகள் உத்தமநம்பிகளாலும், இதர மரியாதைக்காரர்களாலும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளச் செய்யப்பெற்று, உத்தம நம்பி எடுத்து வரும் வெள்ளி விளக்கு மட்டும் அர்ச்சகரால் வாங்கப்பெற்று நம்பெருமாள் திருமுன்பு நெல்லினால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் (இதனை ‘சேனைக்கால்’ என்பர்) எழுந்தருளச்செய்யப்படும். மீதமுள்ள விளக்குகள் முதல் பிராகாரமான திருவெண்ணாழியில் (திரு: ஸ்ரீதிருமால், வெண்ணாழி: ஸ்ரீபாற்கடல். இந்த பிராகாரத்தினை திருப்பாற்கடலாகவும் உள்ளே வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதனை க்ஷீராப்தி நாதனாகவும் கொண்டாடுவதால் இந்த இயற்பெயர் உண்டாயிற்று) ஆங்காங்கு எழுந்தருளச்செய்வர். ஆண்டாளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஏற்றம் தரும் ஒரு உற்ஸவமாகும் இது.

இந்த வைபவங்கள் யாவும் முடிந்தபின்னர், அரங்கன் அன்று ஒருநாள் மட்டும், ‘செங்கழுநீர்ப் பூவினால் அலங்கரிக்கப்பட்ட திருவாசி கொண்ட கேடயத்தில் புறப்பட்டு ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸந்நிதி சமீபம் அடைந்து, கிழக்கு முகமாக ‘சொக்கப்பனை’ எனப்படும் பனைமரம் உயரத்துக்குக் காய்ந்த பனை ஓலைகளினால் வேயப்பட்டுள்ள கட்டுமானத் துக்கு எதிரில் நின்றருளுவார்.
 
கோயில் மிராசுக்காரரான ‘திருச்சுற்று’  எனப்படும் கைங்கர்யபரரை, நம்பெருமாள் திருமுன்பு அழைத்து வந்து, அவருக்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டு களையப் பெற்ற கைலியை பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும்.

திருவரங்கத்தில் திருக்கார்த்திகை

பின்னர் திருச்சுற்றுக்காரர் கொண்டு வந்த பெரிய பந்தமானது ஏற்றப்பட்டு, நம்பெருமாள் முன்பு மூன்றுமுறை ஆரத்தி செய்யப்படும். ஆரத்தி முடிந்ததும் திருச்சுற்றுக்காரர் அந்த பந்தத்தைப் பெற்றுக் கொண்டு, பனையோலைக் கட்டுமானத்தின் உச்சியில் ஏறி, பனையோலைகளைப் பற்ற வைத்துவிட்டு நொடிப் பொழுதில் கீழே இறங்கி மறுபடியும் நம்பெருமாளிடத்தில் சடாரி சாதிக்கப்பெற்றுத் திரும்புவார். மூன்று பனை உயரத்துக்கும் அதிகமாகச் சுடர்விட்டு எரியும் சொக்கப்பனையானது, நமக்கு ஓங்கி உலகளந்த உத்தமனை நினைவூட்டும்.

சொக்கப்பனை கொளுத்தப்போகும் திருச்சுற்றுக்காரரிடம் மிகுந்த பரிவுகொண்டு, அக்னியின் வெம்மை தகிக்காமல் இருப்பதற் காக அவருக்குத் தம் ஈரக் கைலியினை பரிவட்டமாகக் கட்டுவதும், திருச்சுற்றுக்காரர் சொக்கப்பனையைக் கொளுத்திவிட்டு வரும்வரை நம்பெருமாள் ஆதுரத்துடன் அங்கேயே எழுந்தருளி இருப்பதும் நம்மை நெகிழச் செய்யும் தருணங்கள் ஆகும்.

அன்பென்றாலே அரங்கன்தான்..! அவன் காட்டும் கருணைக்கும் அன்புக்கும் எல்லை என்பது ஏது..?!