Published:Updated:

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

ஜி.லட்சுமணன்

``நம்பியார்சாமி, ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துக் கொண்டவர். கடவுளின் புகழைப் பரப்பவேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை. என்றாலும், உலகுக்கு வழிகாட்டும் பொருட்டு, சில காலகட்டங்களில் சில அன்பர்களை தன் தூதர்களாக அனுப்பிவைப்பார் இறைவன். அப்படி, ஐயன் ஐயப்பனால் அனுப்பப்பட்ட தூதராகவே நம்பியார் சாமியை நாங்கள் பார்க்கிறோம்

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

அவர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர்.  ஆயிரக்கணக்கான ஐயப்பமார்களுக்கு குருசாமியாய்த் திகழ்ந்தவர். சிவாஜிகணேசன், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கன்னட டைரக்டர் சிவராம், ராஜ்குமார், வி.கே.ராமசாமி, பாரதிராஜா, இளையராஜா, முத்துராமன்... என எத்தனையோ பிரபலங்கள், ஐயப்பன் மீது தீராத பக்தி கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் நம்பியார்சாமிதான். பலமுறை அவருடன் சபரியாத்திரை செல்வதற்குக் கிடைத்த வாய்ப்பு, பூர்வஜன்ம கொடுப்பினை என்றே சொல்வேன்!''

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

- ஐயப்ப அடியவராக எம்.என்.நம்பியார் ஆற்றிய பணிகள் குறித்தும் ஐயப்ப வழிபாடு மற்றும் சபரி யாத்திரை தொடர்பான அவரது வழி காட்டல்கள், அவருடனான அனுபவங்கள் குறித்தும் கேட்டதும்...உற்சாகத்தோடும் பரவசத்தோடும் நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார்,  ஐயப்பப் பாடகர் `கலைமாமணி' வீரமணி ராஜூ:

``ஐயப்பசுவாமியின் தீவிர பக்தரான நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான் சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர். இவர் நடத்தி வந்த மதுரை தேவி பால விநோத சங்கீத சபையில், நடிகராக 12 ஆண்டுகள் நடித்தவர் நம்பியார்சாமி. அப்போது ஐயப்பன் குறித்த பக்தி நாடகங்களில் நடித்து வந்தார். அவரது நாடகக் குழுவில் இருந்தபோதுதான், ஐயப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்ததுள்ளது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைதான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, நம்பியார்சாமியையே மாலை போடவைத்தவர். அவருடைய நாடகக்குழுவில் இருந்து சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். அதைத் தாண்டி உறங்கினால் குச்சியால் அடித்துத்தான் எழுப்புவாராம். அப்படி, `ஐயப்பன்... ஐயப்பன்’ என ஒரு பயம் கலந்த பக்தியை நம்பியாரின் இளம் வயதிலேயே விதைத்துவிட்டார் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை.

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

நம்பியார்சாமியுடன் சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் எப்போது பூஜை, எங்கு பூஜை என்பதை அவர்தான் தீர்மானிப்பர். ஓர் ஆண்டில் 250 பேர் அவருடன் செல்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக யார் வீட்டில், எப்போது பூஜை என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுவிடும். இதில் என் சித்தப்பா வீரமணி உட்பட சில முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டும் விலக்கு உண்டு. அவர் ஐயப்ப பக்திப் பாடகர் என்பதால்,  அந்த நாட்களில்தான் கச்சேரிகள் இருக்கும். எனவே, அவர்களுக்குத் தோதான நாட்களைத் தேர்ந்தெடுக்க அனுமதி கொடுப்பார் நம்பியார்சாமி.  அதேபோல், யார் வீட்டில் பூஜை என்றாலும், முதல் ஆளாக வந்துவிடுவார். பெயர் பட்டியலைக் கையில் வைத்திருப்பார். வந்திருப்பவர்களை பள்ளி மாணவர்களை அட்டெண்டென்ஸ் எடுப்பதுபோல பெயர்களை வாசித்து, சரிபார்த்துக்கொள்வார். பூஜைக் காலங்களில் அவர் வீட்டுக்கு யார் சென்றாலும், சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார்.

ஐயப்ப மாலையின் முக்கியத்துவம்

சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும்’ என்றெல்லாம் வலியுறுத்துவார் நம்பியார்சாமி.

`மலைக்குச் செல்ல மாலை போடுவது என்பது சாதாரண மானது அல்ல. ஓர் அரசருக்கு கிரீடம், முத்திரை மோதிரம் என்பவை எல்லாம் எப்படி தனி அடையாளமோ... அதுபோல சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் அடையாளமே அவர்கள் அணியும் மாலைதான். நாம் எப்போது மாலை போட்டுக்கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோடு வந்துவிடுகிறார். `மாலை’ என்ற வடிவில் நம்மோடு இருப்பவர் சாட்சாத் அந்த ஐயப்பன்தான். நாம் எதைச் சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்;  நம்மோடுதான் நடக்கிறார்; நம்மோடுதான் தூங்குகிறார் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டால், நமக்கு எந்தக் கெட்ட எண்ணமும் வராது.  தீய பழக்கங்கள் அடியோடு ஒழிந்துவிடும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான்  இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார் நம்பியார்சாமி. ஆனால், இன்றைக்கு ஐயப்ப பக்தர்கள்  பலரும் நினைத்த போதெல்லாம் மாலைகளை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்!

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

பழைய மாலை அறுந்துவிட்டால்கூட அதையே சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பார் நம்பியார்சாமி. அதே போல், பாதயாத்திரை செல்லும்போது ஐயப்பனுக்குத் தொடர்பில்லாத எந்த விஷயத் தையும் பேச மாட்டார். `ஐயப்பனைப் பற்றி மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும்’ என்பார். சபரிமலைக்கு கிளம்புகிற நேரம் தொடங்கி, வீட்டுக்குத் திரும்பும் நேரம் வரை அனைத்தும் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பார் நம்பியார்சாமி.
 
ஒருமுறை சபரிமலைக்குச் சென்று திரும்பும்போது, இரவு 9 மணிக்கு சென்னையை அடைய வேண்டும் என முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், நான்கு மணிக்கே செங்கல்பட்டை அடைந்துவிட்டோம்.  `இன்னும் ஒரு மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம்’ என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நம்பியார் சாமியோ, டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னார். 

சபரிமலைக்குச் செல்லும்போது நாங்கள் ஒரு பிள்ளையார் கோயிலில் நின்று வழிபட்டுச் செல்வது வழக்கம். பஸ்சை நிறுத்திய பகுதியின் அருகேதான் அந்தக் கோயில் இருந்தது. எனவே, பஸ்ஸை அந்தக் கோயிலுக்கு விடச் சொன்னார். அங்கே விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு பஜனை நடத்தினோம். பஜனையின்போதும், பஸ்ஸில் போகும்போதும் என்னையும் என் சித்தப்பா வீரமணியையும் பாடச் சொல்வார் நம்பியார்சாமி. பஜனைக்குப் பிறகு, நாங்கள் சமைக்க எடுத்துச் சென்ற காய்கறிகள், பொருட்களில் மீதம் இருந்தவற்றை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டோம். அவர் குறித்த நேரத்தில்தான் வீட்டை அடைந்தோம்.

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

`நாம்தான் முன்னதாக வந்துவிட்டோமே... சீக்கிரமே வீட்டுக்குச் சென்றிருக்கலாமே...’ என்று கேட்டார் ஒரு பக்தர். அதற்கு நம்பியார் சாமி, நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாக பதில் சொன்னார்... `நாம் ஐயப்பனுக்காக ஒதுக்கிய நேரம் அவருக்கானது. அதை நாம் வேறு விஷயத்துக்காகச் செலவிடக் கூடாது.’
 
அதுதான் நம்பியார் சாமி!

41 நாள் விரதம் எதற்கு?

புலிப்பால் கொண்டுவர ஐயப்பன் கிளம்பி, மகிஷியை வதம்செய்த நாட்களின் எண்ணிக்கை ஒரு மண்டலம்... அதாவது 41 நாட்கள் என்பார்கள். ஆனால், நம்பியார்சாமி தனது பாணியில் வேறு மாதிரி விளக்கம் சொல்வார்...

`ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு.  ஒரு நோயாளி சிகிச்சைக்காகச் செல்லும்போது, ஒரு மண்டலம் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்... அதற்கான பத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதுபோலத்தான் ஒரு செயலில் முழுமையான வெற்றி வேண்டும் என விரும்புபவர்கள் ஒரு மண்டலம் விரதமிருப்பது சிறந்தது. அப்படி விரதம் இருந்தால், ஐயப்பன் என்ற மெக்கானிக், உடம்பு எனும் வண்டியை சகல நோய்களில் இருந்தும் விடுவித்து, குணப் படுத்திவிடுவார். 41 விரத நாட்கள்,  நம்மை  தீய பழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல அது. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்.

‘ஐயப்பனும் நம்பியார்சாமியும்!’

சபரிமலை யாத்திரை வெறும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மாரும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருக்கவேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் சபரிமலை பயணம் மட்டுமல்ல... வாழ்க்கைப் பயணமும் நன்றாக அமையும்.

இதையெல்லாம் எங்களுக்கு அரிச்சுவடியில் இருந்து சொல்லிக் கொடுத்தவர் நம்பியார்சாமி. அவர் காட்டிய வழியில்தான் நாங்கள் ஐயப்பனை இன்றும் காணச் செல்கிறோம். நம்பியார்சாமியின் வாக்கைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஐயப்பனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.’’

`அரச மர தரிசனம்!'

- கலைமாமணி  வீரமணி ராஜூ

``எனக்கு சமீபத்தில்தான் ஒரு செய்தி தெரிய வந்தது. ஏற்கெனவே ஒருசிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு குருசாமியும் கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது. சபரியில் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறுவதற்கு முன்பு அங்கே ஒரு அக்னி குண்டம் இருக்கும். அங்குதான் தேங்காய்களைப் போடுவார்கள். அதன் அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. அது விசேஷமானது. ஐயப்பன், மகிஷியை வதம்செய்த பின்னர்தான் அவருடைய அவதார காரணம் பூர்த்தியானது. அதன் பின்னர் சபரி மலையில் தவம் இருப்பதற்காக, அங்கிருந்து ஓர் அம்பை எய்ததாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார் ஐயப்பன். அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம்தான் அந்த அரச மரம். எனவே, அந்த மரத்தின் முன்னால் நின்று  நாம் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக ஐயப்பன் அருளால் நிறைவேறும்...’’