Published:Updated:

அருணையில் கண்டேன் அன்னையை!

அருணையில் கண்டேன் அன்னையை!
பிரீமியம் ஸ்டோரி
அருணையில் கண்டேன் அன்னையை!

அண்ணாமலையிலிருந்து நீளும் பரிவின் கரங்கள்...பவாசெல்லதுரை

அருணையில் கண்டேன் அன்னையை!

அண்ணாமலையிலிருந்து நீளும் பரிவின் கரங்கள்...பவாசெல்லதுரை

Published:Updated:
அருணையில் கண்டேன் அன்னையை!
பிரீமியம் ஸ்டோரி
அருணையில் கண்டேன் அன்னையை!

‘ஆன்மிகம்’ என்ற ஒற்றைச் சொல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுகிறது. ஒரே மனிதனின் வாழ்விலும்கூட அது ஒவ்வொரு காலத்துக்கும் வேறுவேறு விதமாக வெளிப்படுகிறது.

அருணையில் கண்டேன் அன்னையை!

நம்மைக் கடந்துபோகும் ஒரு மனுஷனோ, மனுஷியோ தங்கள் உடலில் ஏறிய அனுபவச் செறிவுகளின் அடர்த்தியில், ஏதோ ஒரு நாளில் ரகசியமாகவேனும் ஆன்மிகவயப்பட்டவர்கள்தான்.

இரண்டுக்கு இரண்டு கிலோமீட்டர் விஸ்தீரணத்தில் அடக்கி விடலாம் திருவண்ணாமலை என்ற இச்சிறு நகரத்தை. அதன் வளர்ச்சியென்பது கான்க்ரீட் கட்டடங்களை வைத்து மதிப்பிடப் படுவதல்ல. பன்னாட்டு வங்கிகள், உணவு விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என வளர்ச்சியின் அடையாளங்கள், உடலின் மேலெழும் பெரும் கொப்புளங்கள்போல எழலாம்.


ஆனால், இவை அனைத்துமே மனிதர்களைச் சார்ந்தவை. அவர்களை எதிர்பார்த்து, அவர்களை நம்பி உருவாகும் சித்திரங்கள்தான். அவர்களே இல்லாமல் போகும்போது, இவை கேலிச் சித்திரங் களாகக்கூட மாறுவதில்லை. மாறாக, கலைந்து போகின்றன. மனிதர்களே எதையும் தீர்மானிக்கும் சக்தியாக வரலாற்றின் எப்பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

அருணையில் கண்டேன் அன்னையை!

திருவண்ணாமலையின் ஒரு பக்கமாக மனிதனின் இதயம்போல ஒரு பசுமையற்ற மலை வியாபித்திருக்கிறது. கரும்பாறைகளும், அதனிடையே கசியும் சிறு ஊற்றுகளும், சுனை களும், குகைகளும் நிறைந்த இதன் மேலோங்கிய வளர்ச்சி, விலங்குகளையும், பறவைகளையும் தன் பரிவுமிக்க கரங்களை நோக்கி அழைக்கலாம்.

மாறாக, இம்மலை உலகமெங்கிருந்தும் மனிதர் களை, அதிலும் கலைஞர்களை, ஓவியர்களை, எழுத்தாளர்களை, சிற்பிகளை தன்னில் புதைத்துக் கொள்ள அழைத்த வண்ணமிருக்கும் விந்தைதான் யாராலும் புரிந்துகொள்ள முடியாததாயிருக்கிறது.

நான் கதை சொல்லிக்கொண்டிருந்த ஓர் இரவில், கடைசி வரிசையிலிருந்த அந்த மூதாட்டி யைப் பார்த்தேன். தூய வெள்ளாடையில், முதுமையேறியிருந்த உடல்வாகில் அவர் மனதால் துள்ளிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். அங்கிருந்து அகல முடியாத அவஸ்தை அது.

நிகழ்ச்சி முடிந்து நான் அவரை நோக்கியும், அவர் என்னை நோக்கியும் ஒரு புள்ளியில் குவிந்தோம். அம்முதிய கைகள் தானாக என்னைப் பற்றிக்கொண்டன. அக்கைகள் நடுங்கியதை உணரமுடிந்தது. எனக்குப் புரியாத ஆங்கிலத்தில், அவர் சற்றுமுன் கதை கேட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார்.

பகிர்ந்தாரென்றா சொன்னேன்?

இல்லை. அழுதார்.

மொழி தெரியாத இம்முதியவளுக்கு அப்படி என்ன புரிந்துவிட்டது? மீண்டும் என் அறிவின் துள்ளல் மீது பலத்த அடி விழுந்து அடங்கியது. அங்கிருந்த பலர் அவர்களை ‘ஜோதி அம்மா’ என்று அழைத்ததையும், சிலர் அவர்களிடம் ஆசி வாங்கி அவர்களின் பாதம் தொட்டதையும் கவனித்தேன். அந்த இரவில் அவர்கள் என்னோடு மட்டுமே இருந்தார்கள். ஆங்கிலமல்லாத மொழியில் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார்கள். குவாவாடீஸ் கேட்டில் நின்று மறுபடியும் என் கைப்பற்றி, “உன் கதைகளைப் படிக்கவாவது நான் தமிழ் கற்றுக்கொள்வேன்” என்றார்கள்.

அருணையில் கண்டேன் அன்னையை!குரல் கலைவதற்குள் நான் ஜோதி அம்மாவைத் தேடினேன். சற்று முன் நின்றுபோன மழை மாதிரி, அவர்கள் காணாமல் போயிருந்தார்கள். ஈரத்தையும் குளுமையையும் மட்டும் மனதால் உணர முடிந்தது. அதன் நீட்டிப்பு அடுத்த நாள் விடியும்போதும் கூடவே இருந்தது.

ஜோதி அம்மாவின் சொந்தப் பெயரென்ன?

ஹைக் ஹில்டெபிராண்ட் (Hike Hildebrand)

அவர்களின் சொந்த நாடு எது?
 
ஜெர்மனி.

இப்போது அவர்களுக்கு என்ன வயதிருக்கும்?

எண்பது.

இத்தனை வயதைக் கடந்து, அவர்கள் ஏன் தன் தேசத்தைவிட்டு இங்கு வந்தார்கள் என்ற அபத்தத்தின் உளறல் என்னிடமில்லை.

இந்த ஆஸ்ரமத் தெருவில் நம் பார்வைக்கு அர்த்தமற்றும், அவர்களுக்கு ஏதோ வாழ்வின் முழு அர்த்தமும் இங்கு மட்டுமே முகிழ்ந்திருப்பதாக உலவும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய மனிதர் களை தினம் தினம் பார்த்துவிட்டு, அப்படி ஒரு கேள்வியை நான் மனதால்கூட எழுப்பிவிட முடியாது.

ஜோதி அம்மா என்பதைத் தொடுமுன் ‘ஸ்நேக ஜோதி’ என அறியப்பட்டவர். இப்போது அவர்களுக்கேகூட ‘ஹைக் ஹில்டெபிராண்ட்’ எனத் தன் பெயரை பாஸ்போர்ட்டில் படிக்கும் போது ‘யார் இவர்?’ எனக் கேட்கத் தோன்றலாம்.அவரின் பூர்வீக தேசம், இறந்தும் உயிர்த்துமிருக் கிறது. ஐந்து குழந்தைகளையும், அவர்களின் குடும்ப நலன்கள் எதையும் தனக்குள் சேமித்துக் கொள்ளவில்லை ஜோதி அம்மா. உறவுகளைக் கடந்துவிடுவது அத்தனை சுலபமானதல்ல. ஆனால், தன் குஞ்சுகளுக்கு இறக்கைகள் துளிர்த்து விட்டன என்பதை அறிந்த தாய்ப் பறவை ஏழு கடல் தாண்டி வந்து, ஒரு வறண்ட மலையின்கீழ் கூடடைந்துவிட்டது.

தன் சொந்த நாட்டிலும், வந்த இடத்திலும் யாரையாவது தத்தெடுத்துக்கொள்வதென்பதை ஜோதி அம்மா தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

தன் ஐந்து வயதில் புளியங்குடியிலிருந்து ரயில் தவறி ஆலப்புழைக்குப் போய், ஐம்பதாவது வயதில் அங்கிருந்து வந்து, வாழ்வின் விசித்திர சித்திரங்களில் ஒன்றாக ஸ்நேக ஜோதி அம்மாவை அடைந்த ஹனீபா, அவர்களின் எத்தனையாவது தத்துப்பிள்ளையென்பது அவர்களுக்குத் தெரியாதது.

‘பியோனோ, ரிக்கார்டர் என இசைக்கருவி களோடும், இசையோடும் ஒரு தூய நதியின் நீர்த் துள்ளலைப்போல இருந்தது என் இளமைக் காலம்’ என நினைவுகூரும் ‘ஹைக்’கை அவரின் அம்மா திருண்ணாமலையிலிருந்து மனதாலும், கடிதங்களாலும் அழைத்துக்கொண்டேயிருந்தாள்.

மகளின் தொடர் நிராகரிப்பு அந்தத் தாய்க்கு ஒரு பொருட்டல்ல. அவர் ரமணர் அருகிலேயே இருந்து, அவரின் சொற்களை உண்டு வாழ்ந்தவர்.

ரமணாஸ்ரம வரலாற்றில் ரமணரின் சமாதிக்கு அருகிலேயே இன்னொரு சமாதி, அதுவும் ஒரு வெளிநாட்டு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெண்ணுக்கு என்பது அபூர்வமானதுதான். தன் மகளின் நிராகரிப்புகளினூடே அத்தாயின் சமாதி மூடப்பட்டது. தன் பியோனோவிலிருந்து மேலெழுந்து வரும் இசையின் நிரம்பலில், தூரத்திலிருந்து அழைத்த தன் தாயின் குரல் தனக்கு சரியாகக் கேட்கவில்லையென்கிறார் ஜோதி அம்மா.

எனக்குத் தெரிந்து, திருவண்ணாமலை என்ற ஒற்றை நகரம் மட்டுமே தன்னிடம் விருந்தினர் களாக வரும் மேற்கத்திய மனிதர்களை அப்படியே இருத்திக்கொள்கிறது. இதன் அன்பில் அகப்பட்டு மீளமுடியாத பலபேரை நான் சந்தித் திருக்கிறேன்.
`எதனால் இங்கு வரத் தோன்றியது மைக்கேல்? '

`எங்கள் நாட்டு நூலகத்தில், ஓர் இரவு புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்த ஓர் ஒற்றைப் படம்.'

`என்ன மாதிரியான படம் மைக்கேல் அது?'

`இந்த மலையின் படம். மலையிலிருந்து ஒரு தாயின் பரிவான இரு கரங்கள் என்னை நோக்கி நீண்டு, அப்படியே என்னை வந்து அணைத்துக் கொண்ட அனுபவத்தை அடைந்தேன். என் வாழ்நாள் முழுக்க அந்த அன்பின் அரவணைப்பி லேயே கிடக்க விரும்புகிறேன்.'

இப்படி ஒரு கனவு, ஓர் ஓவியம், ஒரு புகைப் படம், ஒரு சிற்பம், ஒரு புத்தகம், ஒரு வரி, ஒரு சொல், ஓர் உறவின் உதாசீனம் என நீள்கிறது அவர்களுக்கான அழைப்பின் குரல்.

தன் இசை வாழ்வில் ஏதோ ஓர் அபூர்வ விநாடி யில் ரமணருக்கு அருகிலிருந்த தன் அம்மாவைப் புகைப்படத்தில் புதிதாய்ப் பார்க்கிறாள் ஹைக். எப்போதும் பார்த்த அம்மாதான். ஆனால், அன்று அவர் மனநிலைக்கு வேறு மாதிரி தெரிகிறாள்.

‘‘என் தொடர் அழைப்புகளை தாட்சண்யமின்றி ஏன் நிராகரித்தாய் மகளே?’’ புகைப்படத்திலிருந்த அம்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது.

அழுகை தன் கண்களில் இருந்தல்ல; தன் பியோனோவிலிருந்து வழிந்ததாக அந்த நிமிடத்தை மீட்டெடுக்கிறார் ஹைக்.

அப்புகைப்படத்தின் அழைப்பு எல்லா வற்றையும் உதறவும் நிராகரிக்கவும் வைத்தது. தன் மக்கள், தன் ரிக்கார்டர் கருவி, தன் பியோனோ எல்லாமும் ஒரு ஜெப அறைக்கு முன் அர்ப்பணிக் கப்படுகின்றன. அதன் பின்பே ‘ஹைக்’கின் முழு துறத்தலும் நிகழ்கிறது.

‘ஹைக்’ என்ற அந்த ஜெர்மானிய இசைமகளை ரமணாஸ்ரமம் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொள்கிறது. தன் பெயரை உதிர்த்து `ஸ்நேகஜோதி' என இம்மலைக்கும், அதன் சுடருக்கும் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறாள் ஹைக்.

மலை, ஆஸ்ரமம், தாயின் சமாதி இவையே தனது வாழ்விடம் என உணர ஆரம்பிக்கிறார் ஸ்நேகஜோதி. அவரும் அங்கேயே நின்றிருந்தால், அங்கிருக்கும் பெயர் தெரியாத பல நூறு வேற்று மனுஷிகளில் ஒருத்திதான் எனக்கு அவர்.

அருணையில் கண்டேன் அன்னையை!

தன் தாயின் கைகளும், இம்மலையின் கைகளும் பல ஆயிரம் மைல் கடந்து தன்னை நோக்கி ஆதூரத்துடன் நீண்டதுபோல, ஸ்நேகஜோதி அம்மாவின் முதிய கரங்கள் சாதாரண மனிதர் களை நோக்கி எப்போதும் நீள்கின்றன.

அந்தக் கைகளை, தன் சக மனிதர்களுக்குத் தர எதுவுமற்ற வெற்றுக் கைகளென யாரும் எப்போதும் நினைப்பதில்லை. உலகின் மிகப் பெரும் கருணையும் தாய்மையும் சுரக்கும் அக்கைகளில் அடைக்கலமாகவே பலரும் விரும்புகிறார்கள்.

சமீபத்தில் ஒருநாள், நான் திடீரென உடல் நலிவடைந்தபோது, அடுத்த அரை மணி நேரத்தில் என்னருகிலிருந்து என் தலையைக் கோதிக் கொடுத்த கைகள் அவை. 

மருத்துவமனையிலிருந்து என் வீடு திரும்பலை எதிர்நோக்கிக் காத்திருந்து, என்னை அணைத்து, என் நெற்றியில் முத்தங்கள் தந்து, ‘உன் கதைகளை மொழிப்பெயர்க்கத் தமிழ் கற்றுக்கொள்கிறேன். பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன் மகனே!’ எனத் ததும்பிய அத்தாயின் சொற்கள் என் அம்மாவின் இடத்தை அவர்களுக்குத் தந்திருந்தது.

நவீன உலகில் சக மனித அன்பை முற்றிலும் இழந்தவர்களாக, சுயத்தின் மிக பலஹீனமான பலத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். ஒரு பலமான தள்ளுதலில், காற்று வீச்சில், சீண்டலில் நாம் உலர்ந்த நண்டுகளின் ஓடுகளைப்போல உதிரப்போகிறவர்கள்தான்.

ஆனால், அன்பினால் களிம்பேறிப்போன இத்தாயின் முதிர்ந்த வலுவான கரங்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் வீழ்தல் அத்தனை எளிதல்ல யாருக்கும்!