
திருமகளே வருக!
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும் திசை யானைகள் எட்டும், எண் திசையிலிருந்தும் பொற்குடங்களில் தூய நீரை ஏந்தி வந்து நீராட்டின என்கிறது விஷ்ணு புராணம். இங்ஙனம், யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால், இவளை கஜலட்சுமி என்று அழைக்கின்றனர்.

இவளை விளக்கில் நிலைப்படுத்தி வணங்குவது, நெடுங்கால வழக்கம். விளக்கில் திருவாசிக்கு (பிரபைக்கு) நடுவே கஜலட்சுமி வடிவத்தை அமைக்கின்றனர். இவளைச் சாந்த லட்சுமி, தயா லட்சுமி, சுதந்திர லட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர்.

சங்க இலக்கியங்களில் கஜலட்சுமியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பழங்காசுகளில் அவள் கஜலட்சுமியாகப் பொறிக்கப்பட்டுள்ளாள். வடநாட்டில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகளில், மேற்கரங்களில் சங்கு, பறவை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறாள் கஜலட்சுமி. யானைகள் சங்கின் மீதும் பறவையின் மீதும் நீரைப் பொழிகின்றன. தென்னிந்தியாவில் உள்ள பல ஆலயங்களில் லட்சுமியின் மேற்கரங்களில் உள்ள தாமரை மலர்களில் கிளிகள் வீற்றிருப்பதைக் காண்கிறோம்.
எண்திசை யானைகளும் இவளை நீராட்டுவதாக புராணங்கள் சொன்னாலும், நடைமுறையில் இரண்டு யானைகள் நீராட்டுவது போல் அமைத்துள்ளனர். மேற்கரங்களில் தாமரை மலர்களையும் கீழ்க் கரங்களில் அபயவரத முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறாள் கஜலட்சுமி.
ஸ்ரீசூக்தம் அவள் யானைகளின் பிளிறலால் மகிழ்வதாகக் கூறுகிறது. யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜ பூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகின்றனர்.
கஜலட்சுமி திருவடிவை வீட்டின் நிலைப்படிகளிலும் அமைப்பார்கள். இதனால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, அந்த இல்லத்தில் சகல செளபாக்கியங்களும் செல்வ வளத்தையும் பெருகச்செய்வாள் திருமகள்.
இதோ... இந்த இதழுடன் 2017-ம் ஆண்டு தினசரி காலண்டர், பின்னணியில் பூரண கும்பம் திகழ, செல்வகடாட்சம் அருளும் கஜலட்சுமியின் திருவடிவைத் தாங்கி வருகிறது.
தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது. அவ்வகையில், தீபங்கள் ஜொலிக்கும் திருக்கார்த்திகை மாதத்தில், பூரண கும்பத்துடன் கஜலட்சுமியாக உங்கள் இல்லம் தேடி வரும் திருமகளை வரவேற்று, பூஜித்து வரம் பெற்று மகிழுங்கள்.
மாயனாம் மலருக்கு மணமே போற்றி
மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி
நேயமுற் றவனை நீங்காய் போற்றி
நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி