Published:Updated:

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

ம.மாரிமுத்து

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

ம.மாரிமுத்து

Published:Updated:
வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே அமைந்துள்ள ஊர் வலையபட்டி. இவ்வூரின் எல்லைப்பகுதியான கோவிலூர் எனும் இடத்தில் கோயில் கொண்டு அருளாட்சி நடத்துகிறார், அருள்மிகு செந்தட்டி ஐயனார்.

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

முன்னொரு காலம், இந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்த பாண்டிய மன்னர்  ஒருவர்,  குதிரையில் இருந்து  இறங்கியபோது, செந்தட்டி முட்கள் அவர் பாதங்களைப் பதம்பார்த்தன! பாதத்தில் தைத்த முட்களை அகற்றும்பொருட்டு மன்னர் கீழே குனிந்தபோது, அருகில்  சுயம்பு மூர்த்தமாக இருந்த ஐயனார் சிலையைக் கண்டார். அதனால் பரவசம் அடைந்தவர், இந்தப் பகுதியைச் சுத்தம் செய்து ஐயனாருக்கு ஆலயம் எழுப்ப ஆணையிட்டார்.  செந்தட்டி முட்புதர்களுக்கு மத்தியில் இருந்து கண்டெடுக்கப் பட்டதால், ‘அருள்மிகு செந்தட்டி ஐயனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டதாம் இந்த ஸ்வாமிக்கு. இந்தக் கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதற்கு அத்தாட்சியாக, மீன் சின்னமும் பாண்டியர் கட்டட பாணியில் அமைந்த கல் மண்டபமும் திகழ்வதாக தொல்லியல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

பாண்டியர்களின் ஆட்சிக்குப் பிறகு, சிவகிரி ஜமீன்தார் ராணி வீரம்மாள் நாச்சியார் காலத்தில் திருப்பணிகள் கண்டிருக்கிறது இக்கோயில். மேலும், சிவகிரி ஜமீன்தார் சங்கிலி வீரபாண்டியன் தலைமையில், 1877-ம் வருடம் குடமுழுக்கும் நடைபெற்றதாம். தொடர்ந்து, அவர்களது சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்டுள்ளது, அருள்மிகு செந்தட்டி ஐயனார் கோயில். பிற்காலத்தில், தாது வருட பஞ்சத்தின்போது, இவ்வூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி புலம்பெயர்ந்த மக்கள், மூலவரின் பிடிமண் எடுத்துச்சென்று அங்கும் கோயில் எழுப்பி வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

தற்போது, தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையினரால் நிர்வகிக்கப்படும் இந்தத் திருக்கோயிலில் விநாயகர், முத்துவீரப்ப சுவாமி, பாதாளகண்டி, ராக்காயி அம்மன், பேச்சி அம்மன், வனப்பேச்சி, லாட சன்னாசி ஆகிய பரிவார தெய்வங்களும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

பன்னெடுங்காலத்துக்கு முன், பஞ்சம் பிழைப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து, தன் மகன் முத்து வீரப்ப னுடன் இங்கு வந்த பாதாளகண்டி எனும் அபலைப் பெண், இப்பகுதியின் காவல் தெய்வ மான செந்தட்டி ஐயனாரிடம் அடைக்கலம் கேட்டாள். ஐயனார் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், தமக்கு மக்கள் காவல் காணிக்கையாக அளிக்கும் பொருள் மூலம் உணவும் வழங்கிவந்தாராம். ஆனால், பாதாள கண்டியும் முத்துவீரப்பனும் அசைவப்பிரியர்கள். ஆகவே, சைவப்பிரியரான ஐயனாருக்கு சிரமம் கொடுக்க விரும்பாத இருவரும் வேறு இடத்துக்குச் செல்ல அனுமதி கேட்டார்களாம்.

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

அவர்களைத் தடுத்து நிறுத்திய ஐயனார், ``எனக்கு வேண்டிய உணவு வருவது போல், என்னுடன் இருந்து காவல் காக்கும் பட்சத்தில் உங்களுக்கும் மக்கள் வேண்டியதைக் கொடுப்பார்கள்'' என்று அருள்புரிந்தார். அதன்படியே ஐயனாருடன் இணைந்து இந்தப் பகுதியை காத்து வந்த பாதாளகண்டியும் முத்து வீரப்பனும்  பிற்காலத்தில் மக்களின் கண்கண்ட காவல் தெய்வங்களாகிவிட்டார்கள் என்கிறது தல புராணம். இந்தக் கோயிலில் அருளும் முத்துவீரப்ப சுவாமியை வழிபட்டுச் சென்றால் குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. அப்படி குழந்தை வரம் கிடைத்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு முத்தையா, முத்துவீரப்பன் எனும் பெயர்களையே சூட்டுகின்றனர். 

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐயனாருக்கும், பரிவார மூர்த்தங்களுக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு ஐயனாரைத் தரிசிக்க துன்பங்கள், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோயிலில் மகா சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இக்கோயிலுக்கு வந்து, ஐயனாரைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்; புதுமனை, வாகன யோகம் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப மாலை அணியும் பக்தர்கள், செந்தட்டி ஐயனாரின் சந்நிதிக்கு வந்து மாலை அணிந்து விரதம் துவங்குவதை பெரும் வரமாகக் கருதுகிறார்கள்.

வாழ்வு செழிக்க வரம் தருவார் - செந்தட்டி ஐயனார்

இதோ, கார்த்திகை மாதம் துவங்கிவிட்டது. பக்தர்களும் சபரிக்குச் செல்லவிருக்கும் ஐயப்ப மார்களும், ஒருமுறை இந்த செந்தட்டி ஐயனாரின் சந்நிதிக்குச் சென்று அவரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை செழிக்கும்!

படங்கள்:  வீ. சக்தி அருணகிரி

உங்கள் கவனத்துக்கு...

மூலவர்  - அருள்மிகு செந்தட்டி ஐயனார்

அம்பாள் - பூரணை, புஷ்கலை தேவியர்

தல விருட்சம் - செந்தட்டி

பிரார்த்தனைச் சிறப்பு: ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாசி மாதம் மகா சிவராத்திரி புண்ணிய தினத்திலும் ஐயனாரின் சந்நிதிக்கு வந்து, அவரை வழிபட்டு வேண்டிக்கொண்டால், வேண்டியது கிடைக்கும்; புது மனை, வாகன யோகம் ஸித்திக்கும். இங்கு அருள்புரியும் முத்துவீரப்ப சுவாமியை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நடை திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில், இரவு 8 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் எனும் ஊருக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண துரத்தில் அமைந்துள்ளது, வலைய பட்டி. ஆலங்குளத்தில் இருந்து வலையபட்டிக்குச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism