
சக்தி விகடனும் தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை, திருத்துறைப்பூண்டி- அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத பிறவி மருந்தீசுவரர் திருக்கோயிலில், 29.11.16 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. உள்ளூர் மட்டுமின்றி நாகப்பட்டினம், தலைஞாயிறு, பட்டுக்கோட்டை, திருவாரூர், வேதாரண்யம் போன்ற வெளியூர்களில் இருந்தும் திரளான வாசகியர் வந்து விளக்குபூஜையில் கலந்துகொண்டனர்.
சுமார் 6 மணியளவில் திருவிளக்கு பூஜை துவங்கியது. ‘‘அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு மிக உவப்பான திருத்தலம் இது. இங்கே அருள்பாலிக்கும் பிறவிமருந்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தி. அவர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். அம்பாளும் சிறந்த வரப்பிரசாதி. பாம்பு தீண்டி இறந்த கணவன் உயிர்ப் பிழைக்க வேண்டி சல்லிகேசுவரி என்ற அபலைப்பெண், அம்பாளை வேண்டிக்கொண்டு மாங்கல்ய பலம் பெற்ற தலம் இது. இத்தகைய புண்ணிய தலத்தில் திருவிளக்கு பூஜை செய்தால் தீர்க்க ஆயுள் மற்றும் மாங்கல்யபலம் உண்டாகும்’’ என்று திருக் கோயிலின் மகிமையை எடுத்துச்சொல்லி, விளக்கு பூஜையைத் துவங்கி நடத்தி வைத்தார் கோயிலின் குருக்கள் பாலு.
‘சக்திவிகடனின் திருவிளக்கு பூஜையில் மூன்றாவது முறையாக கலந்துகொள்வது எனது பாக்கியம். எத்தனையோ விளக்கு பூஜைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும் சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் கலந்து கொள்வது தனிச்சிறப்புதான். திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் மனம் நிறைந்துவிடும்’’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார் திருத்துறைப்பூண்டி வாசகி ரமா.
‘‘எங்கள் குடும்பத்தில் எவ்வளவோ பிரச்னைகள். தீப வழிபாடு செய்தால் நல்லது நடக்கும் என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள். அதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது, இந்த விளக்கு பூஜை. அம்பாள் பெரியநாயகி அருளாலும், பிறவி மருந்தீஸ்வரரின் அனுக்கிரகத்தாலும் எங்கள் பிரச்னைகள் எல்லாமும் தீரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இன்றோடு எனது மனக்குறைகள் எல்லாம் நீங்கியது என்றே சொல்லலாம்’’ என்று நம்பிக்கையும் பரவசமுமாக பகிர்ந்துகொண்டார் திருவாரூர் வாசகி கல்யாணி.நம்பினோர் கெடுவதில்லை. விளக்குபூஜையில் கலந்துகொண்ட வாசகியர் அனைவரது குடும்பத்திலும் இறையருள் சூழும்; அனைவருக்கும் நல்லதே நடக்கும்!
த.அழகுதங்கம்
படங்கள்: க. சதீஷ்குமார்.