விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பரளச்சி என்ற இடத்துக்கு கிழக்கில், சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ப.வாகைக்குளம் என்ற கிராமம்.

இந்த கிராமத்தில் அம்பிகை அருள்மிகு ஆதித்யநாயகி சமேதராக எழுந்தருளி இருக்கிறார் அருள்மிகு பாதாள ஈஸ்வரர். இந்தக் கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப் பட்டதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் அந்தக் கல்வெட்டுகளில், பரமனை `பரம்பை நகரத்தில் எழுந்தருளிய வித்தகன்' என்றும், `கொன்றை மலர்கள் அணிந்தானின் தாள் பணிவோம்' என்றும் போற்றும் வரிகள் வட்டெழுத்துகளிலும் பிராமி எழுத்துகளிலும் உள்ளதாக தொல்லியல்துறையினர் கூறி இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருகாலத்தில் மிகப் பெரிய சிவ ஸ்தலமாக இருந்த கோயிலில், மேற்குப் பார்த்து அருளும் சிவபெருமானுக்கு தென்புறத்தில், அம்பிகைக்கு தனிச் சந்நிதி இருந்தது. பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது அம்பிகையின் சந்நிதி சிதைக்கப் பட்டதுடன், அம்பிகையின் திருவுருவமும் பின்னப்படுத்தப்பட்டது. நீண்டகாலமாகவே பராமரிக்கப்படாமல் இருந்த கோயிலைப் புதுப்பிக்க எண்ணிய கிராம மக்கள், 1994-ல் அம்பிகையின் திருவுருவத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்நியர் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்ட பழைமையான தீர்த்தக் கிணறு வறண்ட நிலையில் கோயிலுக்கு அருகில் உள்ளது.

விநாயகர், மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் முருகன் ஆகியோரையும் இந்தத் தலத்தில் தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் வடமேற்கு வாயு மூலையில் நவகிரகங்கள் அமைந்திருப்பது சிறப்பு. பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தியும் விஷ்ணுதுர்கையும் காட்சி தருகின்றனர்.
திருமணம் ஆகி நீண்டகாலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பிரதோஷ நாளில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், அதீத கவலையினால் மனம் குழம்பிய நிலையில் இருப்பவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து நீராடி மூன்று முறை அங்கப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால், குழப்பங்கள் நீங்கி மன அமைதி பெறுவதாகவும் ஐதீகம்.
திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மாதாந்திர பிரதோஷம் முதலான வைபவங்கள் சிறப்புற நடைபெறும் இந்த ஆலயத்துக்கு, ஒருமுறையேனும் சென்று சிவதரிசனம் செய்து வாருங்கள்; உங்கள் வாழ்க்கைச் சிறக்கும், சந்ததி செழிக்கும்!
- சி.சிங்கராஜ், படங்கள்: கா.அசோக் பால் ராஜன்
உங்கள் கவனத்துக்கு...
ஸ்வாமி: ஸ்ரீபாதாள ஈஸ்வரர்
அம்பாள்: ஸ்ரீஆதித்ய நாயகி
தலசிறப்பு: சிவபெருமான் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தலம்.
பிரார்த்தனைச் சிறப்பு: பிரதோஷ நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எப்படிச் செல்வது?: அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சுமார் 32 கி.மீ தொலைவில் உள்ளது பரளச்சி கிராமத்துக்கு, அருப்புக்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. பரளச்சியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்து, கோயிலை அடையலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 8 மணி வரை; மாலை 5 முதல் 6 மணி வரை.