`தவமும் சாந்தமுமே இயல்புகளாகக்கொண்டிருக்கும் முனிவர்களுக்கு கோபம் வரலாமா... கோபத்தின் விளைவாக அவர்கள் வாயில் இருந்து சாப மொழிகள் வெளிப்படலாமா?' என்ற கேள்வி நம் மனதில் எழுந்தது. மனதில் தோன்றிய கேள்விக்கு பதிலும் கிடைத்தது. அந்த பதில் என்ன என்று பார்ப்பதற்கு முன்பு நாம் ஓர் ஆலயத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தொண்டை மண்டலத்தின் கோட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பெருமைக்கு உரியது மணவூர். சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்திருக்கும் மணவூரில் மிகவும் தொன்மையான ஆலயம் என்னும் சிறப்பினைப் பெற்றுத் திகழ்கிறது, அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை அருள் மிகு கற்கடேஸ்வரர் ஆலயம்.
`நண்டினால் பூஜிக்கப்பட்ட ஆலயம் இந்த ஆலயம்' என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடக ராசி அன்பர்கள் வழிபடவேண்டிய கோயில் என்றும் இந்தக் கோயிலைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.
மேலும் அந்தக் கோயிலைப் பற்றி அவர் களிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் சொன்னவரலாறுதான் நம் கேள்விக்கான பதிலாக அமைந்தது. அந்த வரலாறு...
இந்திரனின் மகன் ஜயந்தன். `தான் இந்திரனின் மகன்' என்ற தருக்கு அவனுக்கு நிறையவே இருந்தது. ஒருமுறை அவன் செல்லும் வழியில் அத்ரி முனிவர் எதிரில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு முறைப்படி நமஸ்காரம் செய்ய ஜயந்தனின் அகந்தை இடம் கொடுக்கவில்லை. நமஸ்காரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அத்ரி முனிவருடைய நடை நண்டு ஊர்ந்து செல்வதுபோல் இருக்கிறது என்று கேலி பேசிச் சிரிக்கவும் செய்தான். அவனுடைய அகந்தையே அப்படி பேசச் செய்கிறது என்பதை அறிந்த அத்ரி முனிவர், அவனை நண்டாக மாறும்படி சபித்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முனிவர் சாபமிட்ட அந்தக் கணமே ஜயந்தன் நண்டாக மாறிவிட்டான். மனம் வருந்தி தன் பிழையைப் பொறுக்குமாறு முனிவரிடம் வேண்டிக்கொண்டான்.
ஜயந்தனிடம் இரக்கம் கொண்ட அத்ரி முனிவர், ‘‘ஜயந்தா, கவலைவேண்டாம். நீ என்னை கேலி பேசியதும், நான் உனக்கு சாபம் கொடுத்ததும் எல்லாமே நன்மைக்குத்தான். திருஆலங்காடு திருத்தலத்துக்கு அருகில் மணவூர் என்ற தலம் அமைந்திருக்கிறது. அந்தத் தலத்தில் சிவபெருமான் உமை அன்னையை மணம் புரிந்துகொண்ட திருநந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நீ அங்கு சென்று ஐயன் திருநந்தீஸ்வரரை வழிபடு. பிறகு அந்த ஊரின் எல்லையில் நீ சிவலிங்க பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்டால், சாப விமோசனம் கிடைக்கும்'' என்று கூறினார்.
ஜயந்தனும் இங்கு வந்து திருநந்தீஸ்வரரை வழிபட்டுவிட்டு, ஊரின் எல்லையில் சிவபெருமானைக் குறித்து பிரார்த்தனை செய்தான். அப்போது சிவபெருமான் பூமியைப் பிளந்துகொண்டு பிரகாசமான தோற்றத்துடன் வெளிப்பட்டார். சுயம்புவாகத் தோன்றிய ஐயனை பிரதிஷ்டை செய்த ஜயந்தன், ஐயனின் அபிஷேகத்துக்காக தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினான். நாள்தோறும் அந்தத் தீர்த்தத்தால் ஐயனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, விரைவில் சிவபெருமானின் தரிசனத்துடன் சாப விமோசனமும் கிடைக்கப்பெற்றான். பின்னர் ஐயனைப் பணிந்து வணங்கி, ‘‘ஐயனே, நண்டின் வடிவில் நான் தங்களைப் பூஜித்ததால், தாங்கள் கற்கடேஸ்வரர் என்னும் திருப்பெயருடன் இங்கே எழுந்தருளி, நாளும் தங்களை தரிசிக்கும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை வேண்டியபடி அருளவேண்டும். இங்குள்ள தீர்த்தமும் கற்கட தீர்த்தம் என்று அழைக்கப்படவேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றான். ஆக, மக்கள் நாளும் இறைவனை வழிபட்டு அருள் பெறவேண்டும் என்பதற்காகவே முனிவர்கள் ஜயந்தனைப் போன்றவர்களைக் கருவியாகக் கொண்டு எண்ணற்ற திருத் தலங்கள் தோன்ற அருள்புரிந்திருக்கிறார்கள்.

அப்படி, அத்ரி மகரிஷியின் ஆசிகளுடன் ஜயந்தன் நிர்மாணித்து வழிபட்ட ஐயன் கற்கடேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலைமையை நேரில் சென்று பார்த்தபோது, நம்மை அறியாமலேயே நம் இதயத்தில் சோகம் பாறையாய் அழுத்தியது.
ஆண்டாண்டு காலமாக அண்டி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு, வேண்டும் வரம் தந்து அருளிய ஐயன் கற்கடேஸ்வரர், வெட்டவெளியில் சிறு கல் மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.அதுவும்கூட எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கிறது. எத்தனை காலம்தான் இப்படி சிதிலம் அடைந்த நிலையில் வழிபாடு இல்லாமல் இருப்பது?
இறையருளால் தற்போது ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து திருப்பணிக் குழுவை அமைத்து, திருப்பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். திருப்பணிக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான அன்பர் சுந்தரத்திடம் பேசினோம்.
‘‘இந்தக் கோயில் பல வருஷங் களாகவே இப்படியேதான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கோயி லைப் பற்றிக் கேள்விப்பட்ட குடியாத்தம் தமிழ்வேதம் சிவ ஆ.பக்தவத்சலம் இங்கு வந்து தரிசித்தார். அவர்தான் இந்தக் கோயிலுக்கு
திருப்பணி செய்யவேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் என்று கூறி, தம்முடைய பங்காக ஒரு கணிசமானதொகையையும் தந்து சென்றார். அவர் அப்படிச் சொன்னதை கற்கடேஸ்வரர் சொல்லியதாகவே நினைத்து, ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு திருப்பணிக் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தி திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். விரைவிலேயே திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’’ என்றார்.
ஊர்ப் பெரியவர் கிருஷ்ணசாமி, ‘‘ஜயந்தன் நண்டின் வடிவத்தில் இறைவனை வழிபட்டதால், இந்த ஆலயம் கடக ராசியைச் சேர்ந்தவர்கள் அவசியம் வழிபடவேண்டிய கோயில். அதேபோல் சுயம்புவாகத் தோன்றிய சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, அந்த அபிஷேகப் பாலை அருந்துவதால் எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை’’ என்று ஆலயத்தின் மகிமையைப் பகிர்ந்துகொண்டார்.
ஐயன் கற்கடேஸ்வரர் கோயிலின் திருப்பணிகள் நிறைவுபெற்று, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். கடக ராசி அன்பர்களுக்கு உகந்த இந்தக் கோயிலின் திருப்பணிக்கு கடக ராசி அன்பர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ராசி அன்பர்களுமே பொருளுதவி செய்யவேண்டியது, நம்முடைய கடமை மட்டுமல்ல, நாளும் நம்மைக் காத்து அருள்புரியும் ஐயனுக்கான நன்றிக்கடனும்கூட. ஐயன் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து, ‘உடலின் வினைகள் அறுப்பானும், போகாது நம் உள்ளத்து இருப்பானும்’ ஆகிய சிவனாரின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
உங்கள் கவனத்துக்கு...
தலத்தின் பெயர்: மணவூர்
இறைவன்: கற்கடேஸ்வரர்
தீர்த்தம்: கற்கட தீர்த்தம்
அம்பாள்: காமாட்சி அம்பிகை
வழிபட்டவர்: இந்திரன் மகன் ஜயந்தன்
பிரார்த்தனைச் சிறப்பு: கடக ராசி அன்பர்கள் வழிபடவேண்டிய கோயில். சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்தினால், எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
எப்படிச் செல்வது?: சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்திருக்கிறது மணவூர். ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே ஆலயம் அமைந்திருக்கிறது.