Published:Updated:

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...
பிரீமியம் ஸ்டோரி
திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

க.சீ.சிவக்குமார், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

க.சீ.சிவக்குமார், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...
பிரீமியம் ஸ்டோரி
திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

கொடைக்கானலில் இருந்து மேலும் மேல் நோக்கிய திசையில் சில மைல்கள் பயணித்தால், பூம்பாறையை அடையலாம். சில்லென்று பூத்த சிலிர்ப்பான குளிர்த் தலம் அது. பூம்பாறையில் உள்ள கோயிலில் முருகன் குழந்தை ரூபம் ஆதலால் ‘குழந்தை வேலப்பர்’ என்று பெயர்.

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

முதன்முறை பூம்பாறை போயிருந்தபோது, நான் அந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கவில்லை. அடுத்த பயணத்தில் மனைவியும் குழந்தைகளும் உடனிருந்தனர். காட்டுக் கோழிகள் கத்தும் அந்த ஊரின் பாதையில் பகல் பொழுதுகள் இப்போது தான் விடிந்திருக்கிறது, அல்லது சீக்கிரத்தில் இருட்டப் போகிறது என்பது போன்ற பாவனை யிலேயே இருக்கும்.

அத்துடன், பூம்பாறை என்பது அதன் பெயரில் தொனிக்கிற முரண்பாட்டால் மிகவும் ஈர்ப்புத் தருவதாக இருந்தது. பூக்களால் ஒரு பாறை என்பது கற்பனைக்கு எட்டாதது.

ஐந்து திணைகளுக்கும் எட்டுத் திசைகளுக்கும் தெய்வங்கள் உண்டு நம்மில். கொடைக்கானலின் குறிஞ்சி ஆண்டவர் மற்றும் பூம்பாறையின் குழந்தை வேலப்பரை நாடிச் செல்லும் பயணமானது `சேயோன் மேய மைவரை உலகமும்’ என்னும் அறுதியை உறுதிப்படுத்துகிற பயணம்.   
 
மையைப்போல இருண்டிருக்கிற மலைத் தலமாக இருந்தாலுமே, மூங்கில்கள் உரசிக் கொண்டால் ஏற்படும் தீயின் செம்மையிலிருந்து வாழ்நிலத் தொடுப்பாக சிவப்பு, செம்மை, சிவம், செவ்வல் (சேவல்) என்னும் பெயர்கள் ஏற்படுகின்றன.

அடுத்தடுத்து இரண்டு முறைகள் குறுகிய இடைவெளியில் பூம்பாறை செல்ல நேரிட்டபோது, கோயிலின் அர்ச்சகரும் எனது நண்பருமான மோகன் சொன்னார். “இங்க பாருங்க! நீங்க அவனைப் பார்க்கணும்னு நினைச்சிட்டீங்கன்னா எங்கே இருந்தாலும் வந்திடுவீங்க. நீங்க  பார்க்க வேண்டியதில்லைனு அவன் முடிவு பண்ணிட்டான்னா, பக்கத்துல  வந்தாக்கூட அவனப் பார்க்க முடியாமப் போயிடும்” என்றார். மோகன் ‘அவன்' என்று குறிப்பிட்டது முருகனைத்தான் குமரனைத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

இது எனக்கு மெத்தவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் அடுத்தும் பூம்பாறைக்  கோயிலுக்குப் போகிற நாளின் மீதான விருப்பத்தில் இருந்தேன். மலைக் கிராம அமைப்பில், படிக்கட்டு அமைப்புகளை ‘பேடு’ எனச் சொல்வார்கள் அங்கே. பேடுகளில் அடுக்கப்பட்டிருக்கும் விறகுக் கட்டு களை ‘அரக்கர்களின் அம்புகள்' எனக் கற்பனை செய்துகொள்வேன். விறகுக்கட்டின் கச்சா வடிவம் பதினைந்து அடிக்கும் மேற்பட்ட நீளம் கொண்ட தடிகளின் கற்றை. கேஸ் அடுப்பு எரிக்கிறவர்களுக்கு இதைப் புரியவைக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை.

அரக்கர்களின் அம்புகள் என்பது போன்ற கற்பனைகள் அன்றியும் முருகனின் மயில்கள் குன்றுகளிலிருந்து இறங்கி கீ(ழ்)காட்டுக்கு தானியம் மேய வந்துவிட்ட காலக் கொடுமை அல்லது காலநெடுமை பற்றிய கேள்விகளும் என்னிலிருந்தன.

அடுத்து பூம்பாறை போகிற தினத்தில், போவோம் என்றிருந்த நாளில் மனைவி  சாந்தி ராணி திருச்செந்தூர் பயணத்தை உறுதி செய்து விட்டுச் சொன்னார்.

“இந்த வருட சஷ்டிக்கு திருச்செந்தூர் போகிறோம்...”

இப்போது  போலவே நாளென்பது திட்டத்துள் அடையாத ஒரு காலத்தின் ஒருநாளில், நானும் திருச்செந்தூர் சென்று வந்திருக்கிறேன். சஷ்டிக்குப் போகிறோம் என்றதும், எனக்குள் உற்சாகம் மேலிட்டது. என் தம்பி விஜயபாஸ்கரன்  கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக சித்திரை முதல் நாளில் செந்தூர் சென்று வருவான். அவனது சகாக்களோடு செல்லும் வேன் பயணத்தில், பதினைந்தோடு பதினாறாகச் செல்லும் வாய்ப்பு நேர்ந்ததில்லை எனக்கு. பங்குனிக் கடைசி நாளில் ஊரில் இருக்க வேண்டும் என்பது அதற்கு முதலாவது நிபந்தனை.

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

மனைவி சாந்தி விரதம் இருக்க ஆரம்பித்தார். உணவுக் கட்டுப்பாடு. விரதம் என்பது உணவு முறையில்  சில  ஒழுக்கங்களைக் கைக்கொள்ளுதல், வாய் கொள்ளுதலே ஆகும். கிடையாததைத் தவிர்ப்பதல்லால் எனக்கு விரத அனுஷ்டானம் கிடையாது. பட்டினி அதுவாகவே நேர்ந்தால்தான் உண்டு.

சாந்தி விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்தபின், வீட்டின் காலை நேரத்தில் குழந்தைகளின் புறப்பாடு, மனைவியின் அலுவலகப் புறப்பாடு ஆகியவற்றில் மாற்றம் நிகழ்ந்தது.

தொலைக்காட்சியின் வான்வழி வாய்க்கால் களில் மாற்றம் சஞ்சலித்தது. செய்திச் சேனலும் குழந்தைகள் சேனலும் தவிர்க்கப்பட்டு கந்த சஷ்டிகள், சண்முகக் கவசங்கள், முருகு கூறு திரைப்படப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மகள் சுவேதா சிவசெல்வி, “ஏப்பா! `காக்கக் காக்க’, ‘தடையறத் தாக்க’ எல்லாம் இதுல இருந்து வந்ததா?” எனக் கேட்க ஆரம்பித்தாள். கவச வரிகளுக்கும் காட்சித் திரைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

குழந்தைகள் சேனல் ஓடாதது பற்றி, சின்ன மகள் ரிதன்யா யூ.கே.ஜி வெகுண்டிருந்தாள்.

பன்னிரு தோள்கள் = பன்னிரண்டு உயிரெழுத்து என ஒப்புமை உபன்யாசங்களும் 6.30 – 7.30 காலை நேரங்களுக்குள்ளாக  எம் சின்னக் குடும்பத்துக்கு கிடைத்து வந்தன.

த-மி–ழ் என்பதில்  வல்லினம், மெல்லினம் இடையினம் இருக்கிறதல்லவா? அதேபோல, மு-ரு-கு என்பதில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருக்கிறதல்லவா? ஆகவே, தமிழுக்கு முருகென்று பேர் என வ்யாசங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

உரைகளில் முகை முறுக்கவிழ்ந்து முருகு கொப்பளித்தாலும், வீட்டின் அறைகளில் அடுப் பிலும் குளியலறையிலுமான வெந்நீர்க் கொதிப்பு அன்றாடத்துக்காக கொப்பளித்துக்கொண் டிருக்கும்.

நாளின் செயல்பாடு தற்காலிக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் குளிர்வித்தது. சாந்தி ஒருவாரம்தான் விரதம் இருந்தார்.

செந்தூர் செல்வதற்கான நாளின் இரவு வந்தது.

குழந்தைகளை மாமியாரின் வசம் காப்புக் கொடுத்துவிட்டு, சஷ்டிக்கு முதல்நாள் இரவு நானும் சாந்தியும் பேருந்து ஏறினோம். முன்பதிவு செய்யப்பட்ட பயணம் அது.

நீண்ட பயணம் அல்லது வீட்டிலேயே ஒரு பிறைப் பொழுது கிடப்பதென்றால், சொப்பனா வஸ்தை, அசமந்தம், அறிதுயில், அருந்துயில், மென் மயக்கம், அடையாப் பொருண்மை மீதான உத்வேகம் அவ்வளவும் எனக்கு வந்துபோகும். பேருந்தில் படுதாக்கள் சூழ்ந்த மேலிருப்புப் படுக்கை அசதி. இவ்வகையான பயணத்துக்கு என்னளவில் ஆங்கிலத்திலும் பெயரில்லை. தமிழிலும் பெயரில்லை. பேருந்து போய்க் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல்லுக்குத் தெற்கே போனால் வேலிகள்; கட்டாப்புகளற்ற நிலப்பரப்பு.  வேலி என்பதை இயற்கை அரண் எனப் புரிந்து கொள்ளாமல் கம்பி வேலி எனப் புரிந்துகொண்டால் நான் பொறுப்பில்லை.

தாவரங்களாலும் வேலி அமைக்கப்பெறாத காடுகள் – அங்கு வாழும் மக்கள் பற்றிய சித்திரத்துக்கான கற்பனையைக் கோருகின்றன.

ஆம்னிப் பேருந்துப் பயணங்களுக்கும் இலக்கணம் உண்டு. இவ்வளவு விரைவா? என்னும் ஆச்சர்யத்தையும், இந்த இடத்தில் இவ்வளவு நேரம் ஏன் போட வேண்டும் என்னும் கேள்வியையும் ஒருசேர உற்பத்தி செய்யும் அது. அந்த இலக்கணங்கள் பயணிகளின் விசர்ஜன வேட்கைகள் இவற்றோடே வண்டி தூத்துக்குடியை அடைந்தது.

தூத்துக்குடியில் சரக்குகளை – அன்றைக்குக் கிருஷ்ணகிரிப் பகுதியில் பூத்த பூக்கள் தென் பகுதியில் விலைபடுகின்றன – இறக்குவதற்காக முக்கால் மணி நேரம் ஆனது. ஆனாலும், மனிதர் கள் பூக்களினால் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை. நின்று தயங்கியும் நின்றேங்கியும் பின் ஏகுகிறது பேருந்து.

நினைத்த நேரத்துக்கு நாங்கள் செந்தூர் போக முடியவில்லை.

கடலுக்கு அருகே வந்துவிட்டோமென்றாலும், கப்பல்கள் பார்வைக்குக் கிடைக்க வில்லை. எப்போதும் கடல்கள் மலைகளைவிட உயரம் குறைந்தவையே. எனினும், நில மட்டத்தை அளக்க கடல்தளத்தின் உயரமே அலகாகக்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடியில் இருந்து செந்தூருக்கான பாதையில் பக்கவாட்டில் உப்பளங்கள் விரிகின்றன. கப்பலும் உப்பும் இல்லாமல் மனிதம் வாழ்ந்துவிட முடியுமா? அடுத்து பனைகள் பார்வைக்குப்படுகின்றன. பிறகு வாழைத் தோப்புகளைப் பார்த்து வியந்தால், இந்தப் பக்கத்தில்தான் தாமிரபரணி கடற் சங்கமம் கொள்ளுகிறது என்கிறார்கள். திருச்செந்தூரில் இறக்கிவிடுவார்கள் என நம்பித்தானே பயணிக்க முடியும்.

சஷ்டி தினத்தன்று  திருச்செந்தூரின் எல்லை விரிவடைந்துவிடுகிறது.

விடுதலை வரலாற்றின் வீரக்கதை பேசும் வீரபாண்டியபுரத்தில் நாங்கள் இறக்கிவிடப்பட்டு, 24 ரூபாய்ச் செலவில் கிட்டத்தட்ட கோயிலுக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம்.

சூரியனை அண்ணாந்து பார்க்கத் தெம்பில்லாமல் நண்பர் உறுதிப்படுத்தி வைத்திருந்த லாட்ஜுக்கு வழி விசாரிக்க ஆரம்பித்தோம்.

“மணி ஐயர் லாட்ஜுக்கு எப்படிப் போகணும்?”

“மணி ஐயரா? மூர்த்தி மணி ஐயரா?”

``மணி ஐயர்.”

நாங்கள் வழி கேட்டு விடுதியை நோக்கி நடந்தோம். எனக்கு அன்றைய ராசியில் அல்லது தசாபுத்தியில் `நகைச்சுவை சம்பவங்கள் மந்தம்’ என இருந்திருக்க வேண்டும். யாதொருவரும், ‘வெறும் மணி ஐயரா? மூர்த்தி மணி ஐயரா?’ என்று கேட்கவேயில்லை. எங்களது காலதாமதம் கருதி,  `இவர்கள் சம்ஹாரத்துக்கு வந்து சேரமாட்டார்கள். ஒருவேளை மறுநாள் விசுவரூபத்துக்கு வந்து சேர்வார்கள்' என முடிவுசெய்துவிட்டிருந்தார் நண்பர். வழிகேட்டலின் மூன்றாம் விசாரணைக்குப் பின், நாங்கள் திரும்பிய வளைவில் எனக்கு முதலில் தட்டுப்பட்டது ‘சுபமணி’ என்னும் பெயர்ப் பலகைதான். எனது வழிதேடும் லட்சணங்களும் இலக்கணங்களும் நான் அறிந்ததே.

மணியில் இத்தனை மணிகளா? `மணியே மணியின் ஒளியே' என அபிராமிபட்டர் எனப் படுகிற சுப்பிரமணி பாட ஆரம்பித்தார்.

சாந்தி, “அதுக்கு அடுத்து ஒரு போர்டு தெரியுது பார்!” என்றார். சாந்திக்கு அபிராமி பட்டர் தெரியாவிட்டாலும், அடுத்து எங்கே போகவேண்டும் என்று தெரியும். விடுதிக்குப் போனோம். அறையில் நண்பர் கருணாகரன் வரவேற்றார்.

அவர் அறிவிக்கப்பட்ட பக்தர். `சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்கிற உலகாயதப் பழமொழிக்குக்கூட, ‘சஷ்டியில் (விரதம்) இருந்தால் `அக’ப்பையில் வரும்’ எனப் பொருள் சொல்கிற பக்தர். கோயிற் சுற்றுமதில் சுற்றுமிடைவெளியில் ஒரு செவ்வகம் விண்ட இடைவெளியில் ‘இங்கிருந்து கோபுர தரிசனம் பார்க்கலாம்’ எனக் காட்டியவர். பிராகாரம் சுற்றி வருகையில் செந்தூரில் இப்படி ஒரு கூர்வெளி இருக்கிறது. இத்தகைய பரவசங்களுக்காகவே கோபுரத்துக்கு விமானம் எனப் பெயராகிறது.

மணி ஐயரின் விடுதிக்கு வந்த பிறகு, ஓய்வுபெற்றுச் சீரமைத்துக்கொண்டு சூரசம்ஹாரம் பார்க்கப் போவதற்கான ஏற்பாடு.

மாலை ஐந்து மணிவாக்கில் சூர சம்ஹாரம் என்பதால், அதற்கு முன் ஒரு முறை குமரனைப் பார்த்துவிட்டுவர விரும்பினால், பக்த கோடிக் கூட்டம் எக்கித் தள்ளியது. நல்லவேளை திருச்செந்தூருக்கு கடற்கரையே பிராகாரம்.

செந்தூரில் முருகனை ஸ்தாபித்த மூவருக்கும் தனிக்கோயில்கள் உண்டு. அதைப் பார்ப்பதற்கு முன்னரே எனது விருப்பத்தை சாந்தியிடம் சொன்னேன்...

“நான் மொட்டையடித்துக்கொள்கிறேன்”

அழகியல் ரீதியாக சாந்திக்குப் பிரச்னை இருக்கும் என அஞ்சினேன். தவிர, எனக்கும் மொட்டையடித்துக்கொள்வதில் தயக்கம் இருந்தது. பகைப் புலம் அதாவது பேக்ரவுண்டு இல்லாத நிலையில் என் மொத்தக் குரூரமும் கண்களில் வெளிப்பட்டுவிடும் என்பது தலை யாயது. முடியின் எண்ணிக்கையை முகப்பருக்கள் ஈடு செய்ய எத்தனிக்கும்  மூஞ்சி அமைப்பு தனி நடுக்கம். ஆனாலும், நான் விரும்பிவிட்டேன். ‘அகோரம்’ என்பதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் உலகம் என்பதால், எனக்கும் சிந்தனை ரீதியாகத் தடையில்லை.

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

தலை மழிக்கும் இடத்துக்குப் போயாகி விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக மொட்டைத் தலையனாக என்னை நான் பார்த்ததேயில்லை.  சொட்டையை மொட்டை ஆக்குவது பெரிய சாதனை இல்லையென்றாலும் இதனன்னியில் சடங்கார்த்தமான பயங்களும் அதன் உள்ளிலிருந்தன.

மொட்டை அடிக்கக்கப்படும்போது படீர் எனச் சத்தம் கேட்டது. என் முதுகுக்குப் பின்னால் அரவங்களையும் சலசலசலப்பையும் உணர்ந்தேன். மழித்துக்கொண்டிருப்பவரிடம், ``என்னங்க சத்தம்?'’ என்றேன்.

‘‘டியூப் வெடிச்சிருச்சிங்க” என்றவாறு என் முகுளத்தின் மேற்தோல் மீது பிளேடுக் கத்தியை வைத்திருந்தார். எனக்கானால் மொட்டை மழித்து இரண்டு நிமிடம் வரை குழப்பமான குழப்பம். ‘என்னதிது! இங்க ஆட்கள் வர்றதே இவ்வளவு இடைஞ்சலாச்சே. பைக் ஏதும் வந்திச்சா… எப்படி டியூப் வெடிக்கும்?’ என்று காணாத மேனிக்கு யோசித்துக்கொண்டிருந்தேன்.

அங்கே  மொட்டை போடுகிறவர்களுக்கு நீள் திண்ணையில் எண்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். எனது எண் 6 எனக் கண்டு உவகையடைந்தேன். ஆறு முகமான பொருள்… அறு படை… எனச் சிந்தனைகள் என்னுள் அறுபடாமற் கிளர்ந்தன. ஆற்றுப்படவும் இல்லை எனச் செய்தி நிரூபித்தது.

‘‘இவரு டியூப்… டியூப்புன்னாரே  என்ன அது?’

அருகிலிருந்த நண்பர் அமைதி காத்து அமத்தலாகச் சிரித்தார். சாந்தியின் பதில் அசத்தலாக இருந்தது. “டியூப் லைட்”

மொட்டை அடித்த பின்பு ஸ்தாபித மூவரைப் பார்த்த பின்பு குளியல் நாழிக் கிணறில். நாழிக் கிணறில் இப்போது நவீனம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஷவர்க் குளியல் போன்றதான ஏற்பாடு. நாம் செய்யவேண்டியது இங்கே என்ன வென்றால், உச்சந் தலையில் நீரொழுக்குக்குப் பின் மூன்றாம் விநாடியில் அடுத்த பக்தருக்கு வழி விடுவது ஒன்றேதான். அறைக்கு வந்தபின் தலையில் சந்தனத்தை கருணாகரன் தடவினார்.

உவமைகளால் எதையும் நம்பிவிடக் கூடாது. சந்தனம் குளிரென்றால் அது கொஞ்ச நேரம் கழித்துத்தான். புது மொட்டைத் தலையில் பத்து நிமிஷம் எரிச்சல். மெல்லிய எரிச்சல். நான் விரும்பிய எரிச்சல். சந்தனம் அதன் இடத்துக்குத் தக்கவே செயல்புரியும். சந்தனமும் எந்த ஒன்றும்.  நல்ல எரிச்சலில் பத்து நிமிடமாவது வைத்துவிட்டு மனதின் யதாஸ்திதிக்கு - இயல்பு நிலைக்கு கொண்டு வருவதாக அது இருந்தது. மனசுக்கு யதாஸ்திதி – இயல்பு (பேயான உறுதி)  நிலை  என ஒன்றிருக்கிறதா என்ன?

சூர சம்ஹார வைபவத்தைக் காண்பதற்கு எங்களுக்கு நேரமிருந்தது. கல்நார்க் கூரை வேய்ந்த நீள் பந்தலிற்கீழ் நாங்கள் தேங்காய்த் துருவியும், கைலியும், முறுக்குப் பிழி கருவியும், கருப்பட்டி முட்டாசும் வாங்கிக்கொண்டிருந்ததில், கடற்கரை யில் இடம்பிடிக்க முடியாமற் போனது. காலம் தாமதித்ததால் கும்பலுக்குள் அகப்படவேண்டிய தாயிற்று. பெருங்கூட்டத்தின் விலாப் பகுதியில் நாங்கள் நின்றோம். பக்கத்திலிருந்தவர் ஆற்றுப் படுத்தினார். “கூட்டம் நகர்ந்தா அப்படியே போங்க! இல்லீனா கம்முன்னு அப்படியே நில்லுங்க!”

‘கோயிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா…. மனித அலையா?’

இவ்வளவு கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏதோவொரு தொழில்நுட்பம் இருக்கிறது.  முண்டுகிற பார்வையாளர்களுக்கு பொதிகை தொலைக்காட்சியில் பார்க்கிற ஒரு ஏற்பாடு பக்கவாட்டில் இருந்தது. சிறிதொரு மூங்கில் மேடை முகப்பில் மாவட்டத்தின் அதிகாரி சில நிமிடம் செலவிடுகிறார். (அவர் எனது பிராந்திய அளவில் அவர் வடநாட்டவராகவும் இருக்கலாம்.)

தென்னாடுடைய சிவனே போற்றி!

பக்தப் பெருவெளிக்கு கால் கைகளில் கீறல்கள். மயக்கங்கள், எலும்பு முறிவுகளும் கூடத்தான். அறுதியிட்டு அலகு குத்தி கந்த கோலம் காண வரும் பக்த உயிர் தனி. ஆவேசம் எனும் சொல்லை ‘ஆசம்’ என முகநூலில் புகழுவதில்லையா நாம்.

பெருகும் பெருங்கூட்டத்தை அனுசரித்து முறியடிக்க காவல் துறையினர் கைக்கொண்ட உத்தி ஆச்சர்யப்படுத்தியது. ஆங்காங்கே மணலிற் பொதித்த கயிறுகளைத் தூக்கிக் கட்டுப்படுத்து கிறார்கள். கண்ணிவெடி ஏற்பாடுகளை காவல் துறை அறியும்.

சூரனின் முகத்தையும் முருகனின் முகத்தையும் அந்தரக் காற்றாடியிலிருந்து க்ளோஸ்அப்புகள் காண்பிக்கப்படுவதும், கை கூப்புவதை விட்டுவிட்டு முப்பத்தி ஐந்தாயிரம் செல்போன்கள் (அது செல்போனா கேமராவா?) ஆறடிக்கு மேலாக உயர்வதுமென்றால், காவல் துறைக்கு அடுத்த ஆண்டு இன்னும் சவால்கள் அதிகம்தான். 

திருச்செந்தூருக்கு செல்லத் திட்டமொன்றில்லை...

சம்ஹார தலத்துக்குக் கிட்டே, சீக்கிரம் ஆறும் காயத்துடன் சாந்தியும், சிறு மூச்சுத் திணறலுக்குப் பின் நானும் கடற்கரைக்கு வந்தோம். நண்பரும் அருகிலிருந்தார்.

சூரன் வருகிறார். முருகன் எதிர்கொள்கிறான்.

நான் ஒரு சூரனைத்தான் எதிர்பார்த்தேன். மாமரத் தோகை சூடி அரக்கர்கள் வருகிறார்கள். `அந்த சம்ஹாரத்தில் அழிவது ஓர் அசுரன் அல்ல. கண்மம் மாயை என எவ்வளவோ இருக்கின்றன' என்றார் நண்பர்.

மாயை இல்லாமல் உலகமும் இல்லை. சம்ஹாரத்தின்போது வானில் கழுகு வரும் என்றார் நண்பர். கழுகுகள் வந்தன. மாமிசத்தைக் கொய்யும் என்பது கழுகு வாழ்வின் இரை உணர்ச்சியும் அழகுணர்ச்சியும் ஆகும். ஏவப்பட்ட கேமராக்களுக்கு அகப்படாத கழுகுகள் வானில் படம் வரைந்துகொண்டிருந்தன. வட்டமிடுவது அவற்றின் வேலையல்ல – மீண்டும் உவமைகள் மீது ஆவலாதி.

சம்ஹாரத்துக்குப் பின் விசுவரூபம் பார்ப்பதோ, மறுநாள் திருப்பரங்குன்றத்தில் கல்யாணக் கோலம் பார்ப்பதோ என பல திட்டங்கள் பக்தர் நெஞ்சில் இருக்கின்றன.

நானும் சாந்தியும் மறுநாள் காலை விசுவரூப தரிசனம் பார்த்தோம். ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்கிற வகையில் அது நேர்ந்தது. சஷ்டிக்கு முன்பதாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) பகலில் உணவு உண்ணாது சாயங்காலத்தில் பானகத்தில் விரதம் துறக்கிற அடியார்கள், மூலவருக்கு அருகே கூட்டிப் போனார்கள். அபிஷேக நேரத்தில் இமை திறக்கும் நேரமும் திரை விலகும் நேரமும் கணங்களில் இடை வெளி யில் சொல்லொணா அழகை மேவிக் கவிகின்றன.

திருச்செந்தூர்ப் பயணம் முடிந்து இப்போதிருக் கும் வீட்டுக்கு வந்தாயிற்று.  இந்த இடைவெளியில் ஏழோ எட்டோ முறை பேருந்துக்குக் கட்டணம் கொடுத்துவிட்டேன்.  கண்மம், மாயை ஆகியவற்றை அழிக்கும் எழிற் குறியீட்டு நேரத்தில் வானிற் பறந்த கழுகுகளுக்கு  டிக்கெட் எடுக்கும் அவசியமில்லை என நினைக்கிறபோது சிரிப்பாகத்தான் இருக்கிறது.

‘சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரிகொள்கைப் புலம்புரிந்துறையும்
செலவு நீ நயந்தனையாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே!

 
- என்கிறது திருமுருகாற்றுப்படை.

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism